Thursday, June 24, 2004

படித்ததில் பிடித்தது : மனுஷ்யபுத்திரனின் ‘நீராலானது‘

ஆட்களற்ற நீண்ட மலைப்பாதையில் தனிமையில், சூழலின் ரம்மியத்தோடு, பிடித்த பாடலைக் கேட்டு இரசித்தபடியிருக்கும் நிலையை சில புத்தகங்களின் வாசிப்பனுபவம் நமக்கு தருகிறது. நான் வாசித்தவற்றில் இப்படியான அனுபவத்தை எனக்களித்த சில புத்தகங்களைப் பற்றிய பகிர்தலே இப்பதிவு.

---

எத்தனை முறை வாசித்தாலும், ஒவ்வொரு வாசிப்பிலும் புதுப்புது அனுபவங்களை தருகின்ற கவிதைகளை எழுதியிருக்கும் என் மானசீக குரு மனுஷ்யபுத்திரனின் நீராலானது தொகுப்பை சமீபத்தில் மீண்டும் வாசித்தேன். அதில் நான் ரசித்தவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.

மனுஷ்யபுத்திரனின் ‘நீராலானது‘ தொகுப்பு, உன்னோடிருத்தல் தன்னோடிருத்தல் மற்றும் பிறரோடு இருத்தல் என்று மூன்று பிரிவுகளாக கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. சிக்கலற்ற மிக எளிமையான மொழி மனுஷ்ய புத்திரனுடையது. ஆனால் அவை அழைத்து செல்லும் தூரம் மிக அதிகம்.

உன்னோடிருத்தல் பகுதியின் கவிதைகளில் பிரியம் நிரம்பி வழிகிறது. பல கவிதைகளில் எந்த எதிர்ப்பார்ப்புமற்ற நேசம், ஈரம் தென்றலாக பகுதி முழுவதும் வீசிக்கொண்டு இருக்கின்றது. ஒவ்வொரு கவிதையிலும் சில வரிகள் குறிப்பிட்டு சொல்லும் வண்ணிமிருக்கின்றன.


"இன்றிலிருந்து உனது
எல்லா பரிசுகளையும்"


இங்கே பரிசுகள் என்பது ஒரு உணர்வு அல்லது அனுபவம் என்றே கொள்ள வேண்டும்.
அந்த பரிசுகளை தரையில் விட்டு விடுவதாகவும் அவை ஈரம் காயாத நாய்க்குட்டிகளைப் போல

தம் திசைகளை
தாமே அறியட்டுமென்று


அவ்வுணர்வுகளுக்கு உணர்வின் வயப்படாமல் இருப்பதையோ அல்லது அவை தன்வசம் தன் கட்டுபாட்டில் இல்லை என்பதையோ குறிக்கின்றது.

பற்றிக் கொள்ள
ஒரு பிடி நிலமில்லை
தனது ஈரத்தைத் தவிர
அதற்கு ஒன்றுமேயில்லை


இங்கே ஒரு இயலாமையையும், எதிர்ப்பார்ப்பற்ற பிரியத்தையும் ஒரு சேர பார்க்கலாம்.

தவித்து அருந்திய
தண்ணீரில் ஒரு திவலை சிந்தியதில்லை

வந்ததற்கும் போனதற்கும் நடுவே
எதுவும் இடம் மாறியிக்கவில்லை


என்னால் பாதிப்பு உனக்கோ உன்னாலான பாதிப்பு எனக்கோ என்றுமில்லை நம்மிடம் மிஞ்சுவது எல்லாமே நம் நினைவுகள் மட்டுமே என்று குறிக்கும் வரிகள். அழகு வரிகள்.

உன் தாவரங்களின் மேல்
உன் நிழல் விழாத போது
சின்னஞ்சிறு பூச்சிகளுக்கு
தாம் அளித்த நிழல்களைத்
திரும்ப எடுத்துக் கொள்கின்றன.


பிரியம் மேலும் பிரியத்தை வளர்க்கும் பிரியமின்மை மேலும் பிரியமின்மையை தொடரும் என்பதை இதை விட அழகாய் உணர்த்த இயலுமா என்ன?

குகை மூடிய பாறை
ஒரே ஒரு கணம் திறந்து
சாத்திக் கொண்டது.


குகை மூடிய பாறை என்பதிங்கே நமக்குள் தங்கிய இருக்கும் இறுக்கம். கண நேரம் திறந்து மூடுகையில் பிரியம் ஒரு நம்பிக்கை நுழைய போதுமானது. பிரியத்தின் பட்டியலை சொல்லிய கவிதை நம்பிக்கையை


குகையின் தீராத இருளுக்கு
பயப்படவுமில்லை


என்ற வரிகளில் சொல்லி இருக்கின்றார்.

எனது கட்டுமானங்களின்
விரிசல்களில் நீர் கசிந்துகொண்டிருக்கிறது



ஒரு காயத்தை இவ்வளவு அழகாக வெளிப்படுத்த இயலுமா?

விடை கொடுக்கும் போது
உன் அசையும் கைகள் உறுதியிழப்பதேயில்லை


பிரியம் பிரிவின் வலி இயலாமை இந்த வரிகள் சொல்லாத உணர்வுகள் தாம் ஏதும் உண்டோ?


ஆயிரம்
இலை நுனிகளால்
வேர் நுனிகளால்
புறக்கணிப்பின் துக்கம் ததும்பி


ஒரு செடியின் வெளியுலக தொடர்ப்பிர்கான குறியீட்டை குறிப்பிட்டு என் சிந்தனையின் எல்லா துகள்களும் கொள்ளும் கடுந்துயரை இப்படி தானே சொல்ல இயலும்.

உன் எடையற்ற குரலின்
எடையற்ற துயரங்கள்


என்ன ஒரு சொல் ஆளுமை... குரலுக்கும் எடையில்லை, துயரக்கும் எடையில்லை ஆனால் துயர் கொண்ட மனம் மட்டும் கனத்திருப்பது விந்தையா, வியப்பா என்ன ஒரு சிந்தனை இந்த வரிகளில்.


எளிய பிரியத்தின் கண்ணீர்
முதலில் ஒரு மணல் துகளாகிறது.


எந்த பிரியமும் கண்ணீர் வரவலைக்குமெனில் அது பெரிய உறுத்தலாகத் தான் இருக்க இயலும். அதற்கு மணல் துகள் என்று உறுத்தலின் படிமம் சொல்லி இருப்பது அழகு. மிக பொருத்தம்.

நீயும் கொண்டுவராத
ஏற்கனவே இருந்துமிராத
அந்த இடம்.


பிரியத்தின் நீட்சியை, அது அந்த அனுசரனையை, அன்பை நேசத்தை இன்னும் சிலதை சொல்லி தீர்க்கின்றன இந்த வரிகள். என்ன ஆழமான வரிகள் அதே போல் இன்னும் சில வரிகள்

இல்லாதபோதும்
இருந்துகொண்டிருக்கும்
உன் நிழல் படர்ந்த முற்றங்களுக்கு

மேசைகள் திரும்பத் திரும்ப
துடைக்கப்படுகின்றன
அப்புறமும் நீ
அவற்றின்மீது படிந்துகொண்டேயிருக்கிறாய்


உணர்வுகளை இவ்வளவு படிய எளிமையாக சொல்லி இருப்பது அருமை.

சொல்லப்படாதவை
சொல்லப்படாதவையே

உன்னைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன
அழித்து முடியாத சுவடுகள்


பிரிவின் வலியை பின்வரும் வரிகளை விட நுணுக்கமாக உணர்த்த இயலுமா


இன்று
ஓர் இலை உதிர்ந்தபோது
ஒரு மரம் அதிர்ந்ததைப் பார்த்தேன்

ஒரு குருவி
திடீரென பறந்தபோது
காற்றில் ஒரு விரிசலைக் கேட்டேன்


சேர்ந்திருக்கவியலாத பிரியத்தின் ஏக்கமாக பின் வரும் வரிகளில்

ஏதோ ஒரு கனவின் விழிப்பில்
தோன்றிவிடுகிறது
உன்னோடிருப்பது
உன்னோடிருப்பது போல்
இல்லாமல்

நெருங்கவியலாதென விதிக்கப்பட்ட மலர்களை
முடிவில்லாமல் நெருங்கியபடி

3 comments:

Kannan said...

நன்றி உயிரோடை. என்னை உலுக்கிய கவிதை தொகுப்பு...ஒரு நூறு முறையாவது வாசித்து இருப்பேன், ஒவ்வொரு முறை படிக்கும் போது புதிதாய் படிக்கும் பரவசத்தை கொடுக்கும். இந்த தொகுப்பில் எனை மிக வதைத்த கவிதை "மிக பெரிய அவமானத்திற்கு பின்பு" .

புலவன் புலிகேசி said...

நல்லா இருக்கு.....

உயிரோடை said...

வாங்க கண்ணன். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

வாங்க புலவன் புலிகேசி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.