மணி காலை 6.52 இன்று இரண்டு நிமிடம் நேரமாகிவிட்டது வீட்டிலிருந்து கிளம்ப. சீருந்து ஓட்டுனரிடம் கொஞ்சம் சீக்கிரமாக ஓட்டச் சொன்னேன்.
அகநாழிகை பத்திரிகையில் "பாலை நில காதல்" எஸ்.செந்தில் குமார்.சிறுகதையை வாசிக்க ஆரம்பித்தேன்.
'பெருமாள் சாக்கை விரித்து போட்டு வாசலுக்கு அருகில் படுத்திருந்தான்.'
சீருந்து ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கியது. நேரம் காரணமாக கொஞ்சம் வேகமெடுக்க குறுக்கே வந்த ஒரு சிறுமிக்காக சட்டென பிரேக்கை அழுத்தினார் ஓட்டுனர். திடுக்கிட்டு கவனம் சிதறினேன்.
'வீட்டினுள் படுத்திருந்த குழந்தைகள் மேல் வெளிச்சம் உடையை போல் படர்ந்து நின்றது'
அட என்ன நல்ல உவமானம் இது எஸ்.செந்தில் குமார் ஒரு கவிஞரும் கூட அல்லவா? அது வறுமையை காட்டும் படிமாக கூட எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? எஸ்.செந்தில் குமாருக்கு சுந்தரராமசாமி விருது கிடைத்திருக்காமே இந்த வருடம்... அவர் கவிதைகள் சில மண்குதிரையின் வலையிலும் படித்தோமல்லவா, இந்த முறை சென்னை செல்லும்போது அவர் கவிதைத்தொகுப்பு வாங்க வேண்டும்.
'பெருமாள் எதிரேயிருந்த பொன்ராஜின் வீட்டைப் பார்த்தான்'
மணி 7.00 அடுத்த இலக்கை அடைந்திருந்தது எங்கள் சீருந்து. நித்தீஷ் ஏறியதும் “சந்தீபிற்கு என்ன ஆயிற்று இரண்டு நாட்களாக காணவில்லையே“ என்றேன். காலில் அடிப்படிருப்பதாக நித்தீஷ் சொன்னான். மீண்டும் வாசிப்பை தொடர்ந்தேன்.
'தான் இறந்த பிறகு பிள்ளைகளும் மனைவியும் என்ன செய்ய போகிறார்கள்'
எங்கள் சீருந்தை கடந்த ஒரு பள்ளிப் பேருந்தில் ஒரு குழந்தை அழகாக சிரித்தாள் கன்னத்தில் குழி விழுந்தது. அவள் பார்க்க விஜய் தொலைக்காட்சியில் வந்த கனாக்காணும் காலங்கள் ஹேமாவை போல் இருந்தாள். ஹேமாவை எனக்கு பிடிக்கும் அவள் நல்ல நடனக்காரி என்பது மட்டுமில்லை அவளுக்கு கர்வமில்லை. பிரியதர்ஷினி கூட அப்படித் தான். நல்ல பல திறமைகள் இருந்தும் அவளிடம் கர்வம் என்பது துளியும் இல்லை. இத்தனைக்கும் எல்லா தொலைக்காட்சி அலைவரிசையிலும் இருக்கின்றாள் அவள். திவ்யதர்ஷினி திறமை இருந்தாலும் கொஞ்சம் அலட்டல் அதிகம் போல் தோணுது. இருந்தாலும் இது என் எண்ணம் மட்டுமே.
'பெருமாள் ஒன்றும் பேசவில்லை. பேசினால் தான் ஏதாவது உளரிவிடுவோமோ என்று நினைத்தான்'
கதையின் ஓட்டம் நன்றாக இருக்கின்றது.
நாமும் எழுதனும். காலையில் நினைத்தோமே. அது என்ன இடம் மங்கலாக தான் நினைவிருக்கிறது. நான் சூட்கேஸை எதற்கு திறந்தேன் என்று தெரியவில்லை. ஆனால் அதில் நிறைய பெருட்களை திணறிக் கொண்டிருந்தது வெளியே விழுந்து விட்டது. சரி அக்கா எங்கே அவசரமாக சென்று விட்டாள். மாமா வந்திருந்தாரா கூட? அவர்கள் விமானத்திற்குள் சென்றிருக்க வேண்டும் இந்த நேரம்.
எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? இந்த அக்கா கொஞ்ச நேரம் கூட இருந்திருக்க கூடாதா? போர்டிங் பாஸ் வாங்கியாற்று. சரி எங்கே செல்ல வேண்டும் இந்த விமானம் அடைய. அதோ அனுராதா வந்திருக்கிறாள் அவளும் சென்னை தானே செல்ல இருந்தாள்.
விமானத்திற்கு எப்படி செல்வது? "நேரே சென்றால் கடைசி ஸ்கலேட்டர்." அவசர அவசரமாக ஓடினேன். ‘இந்த விமானம் சென்னை செல்லுமா?‘ என்று ஆங்கிலத்தில் கேட்டேன்.
அவனும் அப்படி தான் நினைக்கிறேன் என்றான். அப்படித்தான் என்றால் ‘அடங்கொங்யா‘. சடுக்கில் பார்த்தேன் என் கைப்பை கீழே விழுந்து விட்டது. யாராவது எடுத்து தாங்களேன். ஏன் யாருமே எடுக்க வில்லை.
நானே கீழே சென்றேன். சரி ஸ்கலேட்டர் ஏன் நின்று விட்டது. அய்யகோ ஏன் கதவடைத்து விட்டார். செக்யூரிட்டி போர்டிங் முடிவிட்டதாக சொல்கிறானே.
என்னிடம் போர்டிங் பாஸ் இருக்கிறது என்று சொன்னாலும் அவனுக்கு விளங்கவில்லையே. என்ன செய்வேன்? என்னைக் காணவில்லை என்று அக்கா என்ன நினைப்பாள்.
சட்டென விழிப்பு தட்டியது. காலை 3.20. அடச்சே கனவு. சரி இதை ஒரு கதையாக்க வேண்டும். அக்கா என்று எழுத கூடாது அக்கா கோபித்துக் கொள்வாள்.
'அரைக்கீரையை தோட்டத்திலிருந்து அறுத்துக் கொண்டு வந்து கடைந்து' காலை 6.00. சே.. அந்த கனவு வந்து விழிப்பு தட்டியதா?
மீண்டும் சரியா தூங்க முடியலை அப்பதான் கண்ணயர்ந்தது போல இருந்தது அலாரம் அடித்துவிட்டது. கொஞ்சம் சோம்பி குளிச்சிட்டு வந்தா ஆறாச்சு. சாப்பாடு வைச்சி கத்தரிக்காயை கடைந்து ரசத்துக்கு புளி கரைக்கும் போது மணி 6.30. இந்த நேரம் நாம் அவசரமாக இருக்கும் போது ஏன் இப்படி பறக்கிறது. நேற்று தலைவலி என்று வேலை ஓடாத போது மாலை நான்கிலிருந்து ஐந்தாக அதிக நேரமானதல்லவா? பூசை முடித்து அவரசமாக காபி குடித்து 6.49.
வீடு பூட்டி வெளியே வந்தால் “தண்ணீர் தாங்க தங்கச்சி“ என்ற ஓட்டுனருக்கு தண்ணீர் நிரப்பி காலை 6.52 கிளம்பியாச்சு அகநாழிகையில் படித்து முடிக்க வேண்டிய கடைசி கதையை இன்றைக்குள்ளாவது படிக்க வேண்டும்.
'பாக்கியம் அவனுடம் "மாமா அப்புகுயெத்தானும் எதினும் தீசீயினி ராஒத்தோ" என்றாள்'
காலை 3.20 சே.. என்ன இந்த கனவு தூங்கணும் இல்லாட்டி அலுவலகத்தில் தூக்கம் வரும். சரி அந்த கனவுக்கு காரணம் என்னவா இருக்கும்
ப்ரான்க்போர்டில் இணைப்பு விமானம் பிடிக்கும் போது அலுவலகத்தில் விமானசீட்டை மாற்றி தர தேவையான பணம் கட்டதால் கடைசி நேரம் வரை போராடி விமானத்தை பிடித்ததும் அந்த விமான நிலையம் மிக பெரியதாகவும் அங்கே பாஷையும் திசையும் விளங்காமல் அலைந்து பதட்டமாக விமானம் பிடித்ததும் காரணமாக இருக்கலாமோ...
இதை எப்படி எழுதலாம், அட இப்போதான் தூங்கினது போல இருக்கு அலராம் அடிச்சிடுச்சே. தண்ணீர் சுட வைச்சிட்டு மீண்டும் கொஞ்ச நேரம் படுத்திருப்போம். அய்யோ மணி ஆறாச்சு.
'இரண்டு மூன்று தினங்களுக்கு முன் பெருமாளுக்கு கடனுக்கும் பணம் தந்தவன் கூடுதலாக நாலு வார்த்தை பேசி'
அலுவலகத்தில் போனா அதே வேலை. நான் சொல்லும் காரணங்களை ஏற்பதில்லை மேலாளர். அதை நான் சொல்லி அவன் சொன்னால் ஏற்கிறார். எனக்கு எதுவும் தெரியாது என்று ஏன் எல்லோரும் முன் கூட்டியே தீர்மானிக்கிறார்கள். வேலை விசயத்திலும் சரி எழுதும் விசயத்திலும் முதல் முறை ஏதாவது தவறு செய்தால் அதே நிலையில் தான் அவர்கள் அறிவு என்றும் இருக்கும் என ஏன் மேதாவிகள் எல்லோரும் நினைக்கிறார்கள். எல்லோரும் எல்லாம் தெரிந்து கொண்டேயா வருகின்றார்கள். எல்லாம் கற்றால் தானே வரும் அல்லவா?
எனக்கு ஏன் இந்த அவமானம்.
'பாக்கியம் எல்லோருக்கும் பொதுவாக கஞ்சி காச்சினாள்.'
இரண்டு லாரிகளும் ஒரு சுவிப்டும் கடந்து போனது எங்கள் சீருந்தை. ஒரு இரு சக்கர வாகனம் மண் தரையில் புழுதியை கிளம்பியபடி சென்றது. சாலையோரம் தினம் பார்க்கிறேன் ரங்கனுக்கு வீசப்படும் வெண்சாமத்தை ஒத்திருக்கும் இந்த கதிர்களை. பார்க்க மிக அழகாக இருக்கின்றது.
ஒரு கவிதை எழுதவேண்டும் இதை பற்றி. சோளத்தட்டை போல் இருக்கும் தட்டை குறைந்தப்பட்சம் ஆறடி இருக்கும். அதன் மேல் மலர்ந்து விரிந்திருக்கும் இந்த கதிர்கள் மென்மையாக இருக்குமோ?
ஒரு விடுமுறை நாள் அவரோடு இந்த புறம் வந்து இவற்றை உணர வேண்டும். இதன் பெயர் என்னவாக இருக்கும்.நான் அந்த அளவு அறிவாளியில்லை சுவாரஸியமான பெயர்களை உருவாக்க.
அய்யனார் பெயர் தெரியாத பறவைக்கு அடர்தீறல் கொண்ட நீலப்பறவை என்றும், பெயர் சொல்லாமல் அரட்டையில் வரும் ஒரு பெண்ணுக்கு உரையாடலினி என்றும் பெயர் வைத்தார்.
'பெருமாள் பிள்ளைகளோடு இறந்து கிடந்தான்'
காலை 7.43 அட இரண்டு நிமிடம் தாமதத்திலும் சரியாக அலுவகலம் அடைந்துவிடுவோம் போல இருக்கே. வெளியில் ஒரு கூடையில் மஞ்சள் ரோஜா மற்றும் சிவப்பு ரோஜாக்கள் கொண்ட ஒரு சைக்கிள் கடந்து சென்றது. அவை எல்லாம் பெங்களூர் ரோஜாக்கள். ஆனால் விளையும் இடம் குர்கவுனாக தான் இருக்கும். பின் ஏன் அதற்கு பெங்களூர் ரோஜா என்று பெயர் வந்தது.
'அன்னலெட்சுமியை பார்க்கும் போதெல்லாம் மனதில் அழுகை கூடுவிடும். பொன்ராஜிக்கும் அன்னலெட்சுமிக்கும் தான் முதலில் கல்யாணம் நடப்பதாக இருந்தது'
காலை 7.45 அலுவலகம் வந்துவிட்டது. சீருந்தை விட்டு இறக்கும் போது கவனித்தேன். கதையின் ஒரு பக்கத்தை கூட வாசித்து முடிக்கவில்லை. பாதிதான் முடிந்திருந்தது.
'பொன்ராஜிக்கு டிவிக் டிவிக் மஞ்சள் மூக்கு மைனாவின் சப்தத்தை கேட்கிற போது அழுகை வந்துவிடும்'
ஏன் என்று மாலை படிக்கும் போது தான் தெரியும்.
சரி இந்த புனைவை முற்றம் என்பதா தொடரும் என்பதா?
000
6 comments:
how you can 'end' the waves?
skillfully written punaivu.
படிக்க சுவாரஸ்யமாத்தான் இருந்தது. ஆனா உண்மைய ஒத்துக்கிட்டே ஆகணும்...ஒண்ணுமே புரியல சாமி...நீங்க ஏதோ பஸ்ல பயணிக்கறீங்க..புத்தகம் படிக்கறீங்க...அதுல ஒரு கதை..கதைல ஒரு காரெக்டர்...அப்போ அப்போ கனவு...
வாங்க வேல்ஜி. ஓயாத அலைகளுக்கு முடிவென்பது எது அருமையான கேள்வி. கருத்துக்கு நன்றி.
வாங்க விஜயசாரதி. எழுதியதை அச்சுபிசங்காமல் புரிந்து கொண்டுவிட்டு புரியவில்லை என்றால் என்ன சொல்வது. தொடர்பில்லாமல் கதை சொல்லும் ஒரு முயற்சியாக இந்த புனைவு. ஒரு பயணம் அதில் படிக்க ஒரு சிறுகதை, அதை படிக்கும் போது மனமெங்கும் அலை மோதும் சிந்தனைகள். சில கதையோடு தொடர்புடையவை. சில தொடர்பில்லாதவையும் கூட. அவ்வளவே இந்த புனைவு.
அலைபாயும் மனதின் பின் ஓடியே புனைவை பிடித்து வந்திருக்கிறீர்கள்
நன்றாக இருக்கிறது.
இந்தப் புனைவுக்கு தொடரும் போட்டால்தான் நன்றாக இருக்கும் :))
வாங்க சங்கர். நன்றி.
அமித்து அம்மா வாங்க. நீங்க சொல்றது சரி தான் ஆனா மக்கள் எல்லாம் ஏன் இந்த கொலவெறின்னு கேட்டதாலே தான் அந்த டவுட்... :)
Post a Comment