Tuesday, September 2, 2014

லஷ்மண ராஜா மேனகா கல்யாண வைபோகமே....

சில பொழுதுகள் விடியும் போதே இனிய நிகழ்வுகளைக் கொண்டு வரும். அப்படிப்பட்ட ஒரு தினமே 31.8.2014. அது லஷ்மணராஜா என்கிற இரவணன் தன்னுடைய நீண்ட நாள் சகியுடன் கரம் கோர்த்த நற்தினம். அன்று அதிகாலை முதல் இரவு கருமையை போர்த்திக் கொள்ளும் வரை பல்வேறு மகிழ் தருணங்கள் என்னிடம் வந்து சேர்ந்தது. எனது நாத்தனாரின் புதுமனையில் தொடங்கியது அன்றைய தினம். அங்கிருந்து காலை 7 மணிக்கெல்லாம் கள்ளக்குறிச்சி கிளம்பினோம். ரம்யமான காலைப் பொழுதில், காற்று கடலலை போல் அடித்து கூந்தல் கலைக்க, "சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது" போன்ற சுந்தர கானங்களை கேட்டுக் கொண்டு, தம்மப்பட்டிக்கு சற்று முன்னர் தொடங்கி ஆத்தூர் வரை நானே சிற்றுந்தை ஓட்டி சென்றது என் வாழ்வில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத மிக மகிழ்வான தருணம். பக்கத்து இருக்கையில் ஒருவேளை அவர் பயந்து கொண்டே வந்திருக்கலாம். 

தற்சமயம் நினைத்துப் பார்க்கிறேன், நான் விழியன் திருமணத்திற்கும் 7 மணிக்கு தான் கிளம்பினேன். வேலூரில் 9 மணி திருமணத்திற்கு காலையில் 7 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பினேன். (ரசிகவ் அதனை மிகுந்த நகைச்சுவையோடு தனது பதிவில் கூட எழுதி இருந்தார்). அன்று மணமகளும் மணமகனும் திருமண மண்டபத்திலிருந்து கிளம்பி வீட்டுக்கு செல்ல வெளியில் வந்த தருணம், வாழ்த்தி விட்டு திரும்பினேன். தற்சமயம் அப்படியில்லாமல் இந்த திருமண வரவேற்ப்பில் முன்னரே சென்ற காரணத்தால், மணம் முடிந்து வந்த மணமகனையும் மணமகளையும் மணக்கோலத்தில் மண்டபத்தின் வாயிலில் வரவேற்க்க முடிந்தது.





   லஷ்மண் பெரும்பாலும் பெயர் மாற்றி அழைக்கும் வரம் பெற்றிருந்தார். அவருடைய திரைக்கதையை வடிவமைக்கும் போது என்னை தொலைபேசியில் அழைப்பார், சில பல சந்தேகங்கள் என்பார், இடைஇடை கேள்வி நடுவில் என்னை அனிதா(ஆம் அதே அனிதா ஜெயகுமார் தான்) என்று அழைப்பார். அனிதா லஷ்மணின் சிறந்த தோழி, லஷ்மண் அனிதாவை பற்றி அடிக்கடி சொல்லி இருந்தார். பெங்களூர் வந்ததும் நான் முதலில் சந்திக்க நினைத்தது அனிதாவை தான். (லஷ்மணின் திருமண வரவேற்பில் தான் அனிதாவை சந்திக்க கிடைத்தது. அது எனக்கு பேரானந்தம், இன்னும் சற்று முன்னரே இந்த வரவேற்ப்பை நடத்தி இருக்கலாம்). அதே போல் திருமண பத்திரிக்கையை எங்கள் இல்லத்தில் வந்து கொடுத்த தினம் தொலைபேசியில் அனிதா அழைத்த போது, இடையில் இல்லை லாவண்யா என்றார். :)

  மேலும் பத்திரிக்கையை நேரில் தர வேண்டும் என்று பெங்களூரின் மூம்முனைகளில் இருக்கும் லாவண்யா, கார்த்திகா மற்றும் முகுந்த் மேலும் அனிதா என்று சிரமம் பாராமல் வந்த போது, லஷ்மனுடன் சற்று அளவளாவ நேரம் கிடைக்குமென்று, அவருடன் சென்ற காரணத்தால் கார்த்திக்கா, முகுந்த் மற்றும் நேயமுகிலையும் சந்திக்க முடிந்தது. இதையே லஷ்மண் தனது திருமண வரவேற்ப்பு பாதாகையில் "மரம் அழைக்கிறது, மரத்தடியில் கூடும் அனைவரும் தோழமை பூண்கிறோம்" என்று எழுதி வைத்திருந்தார் போலும். அவருடைய திருமணத்தில் சொந்தங்களுக்கு இணையான எண்ணிக்கையில் தோழர்/தோழியர் வந்திருந்தது அவரின் உன்னதமான நட்புக்கு சாட்சி.



  லஷ்மணின் அனைத்து படைப்புகளும் மிக நேர்த்தியான, வித்தியாமான மற்றும் அழமான சிந்தனை பின்புலங்களை கொண்டது. "வெளிச்சம் பயத்தை ஏற்படுத்த தொடங்கும் முன்பு, இருளில் செய்த அனுமானமும் பாதையும் எளிதாக இருந்தது"  போன்ற கவிதையும், "நீர்வழி படூம்" போன்ற குறும்படமும் இவரின் நெடும் தேடல்களின் அடையாளம். அத்தகைய தேடல் அவருடைய திருமண அழைப்பிலும் இருந்தது. சங்க காலத்தில் திணை கடந்த காதல் உண்டா என்று தேடித் தேடி, திணை தாண்டிய காதல் சங்கத்தில் இல்லை என்று "மலையும் குகையும் அவள் கனவு, கடல் பார்த்தல் அவன் கொள்ளை ஆசை" என்று தனது சொந்த வரிகளில் வடிவமைத்திந்தார், (அனிதா தன் அழைப்பிதழில் குறுந்தொகை பாடலை தந்தது போல நினைவு. good friends think alike). லஷ்மணின் தேடலுக்கு மற்றுமொரு உதாரணம் திருமண வரவேற்பிலிருந்த மற்றுமொரு பாதகை. பாரதியின் பாடல் அது. அப்படி ஒரு பாடலை பாரதியார் கவிதைகளில் கேட்டு அறிந்தது இல்லை. இவருடைய கூழாங்கற்கள் நிறுவனம் மற்றுமொரு கலை நேர்த்திக்கான உதாரணம்.



  குறிக்கோளுக்கென்றும், எளிமைக்கென்றும், தன் சிந்தனை சரியென்றால் அதனை செயல்படுத்த பிறர் என்ன நினைக்ககூடும் என்ற தயக்கமற்ற பாசாங்கற்ற தெளிவே லஷ்மணின் தொடர் வெற்றிகளுக்கு காரணமென்று நினைக்கிறேன்.  புகைப்பட கலையில் கொண்ட பெரும் ஈடுபாடுகெனவும், சினிமா மேல் கொண்ட கொள்ளை கனவுக்கெனவும், ஒரு மென்பொருள் நிறுவனத்தில் இருந்து வெளியேறி, திருமண நிகழ்வுகளை சந்தோச தருணங்களை பதிவு செய்யும் வேலையை செய்ய எத்தனை அசாத்திய துணிவு வேண்டுமோ, அதே அளவிற்கான துணிவினை கொண்டிருந்தது லஷ்மணின் திருமண வரவேற்ப்பு. இத்தனை எளிமையான மிக அழகான ஒரு மணமேடையை சமீபமாய் எந்த திருமணத்திலும் நான் பார்க்கவில்லை. 



அதே போன்ற மற்றுமொரு முயற்சி தான், முற்றிலும் இயற்கை உணவுமுறை சிறுதனிய உணவு விருந்து. எல்லா நிகழ்வுகளிலும் அவர் தனித்துவம் மிளிர்ந்து கொண்டிருந்தது. ஓவியர் ஒருவர், வந்திருந்த அனைத்து குழந்தைகளில் ஒவியத்தை வரைந்து தந்த வண்ணமிருந்தார். பின்னர் குழந்தைகளுக்கு பனை ஓலையில் பின்னப்பட்ட கிலுகிலுப்பை கொடுக்கப்பட்டது. பாரம்பரிய முறையில் திருமணம், வரவேற்ப்பு மேடையில் திருப்பாவை என்று மொத்தத்தில் மிக நிறைவான நெகிழ்வான நிகழ்வு லஷ்மணராஜா மற்றும் மேனகாவின் திருமணமும் அவர்களது வரவேற்ப்பும். அவர் இருவரும் சுவாதிக்கா சொல்வது போல சின்ன சின்ன சண்டைகள் போட்டு உடனுக்குடன் பெரிய சமாதானம் ஆகி சந்தோகம் பொங்க வாழ வாழ்த்துகிறேன்.




பின்னர் இணைக்கப்பட்ட அறிமுகம்:
லஷ்மணராஜா 2006 முதல் தெரியும். முத்தமிழ் என்ற இணைய குழுமத்திலிருந்து அறிமுகம். விழியன், நிலாரசிகன், ப்ரியா, ரசிகவ், ஷைலஜாக்கா, மஞ்சூர் அண்ணா என்று எம் நட்பு குழுவில் என்றைக்கும் எந்த போட்டி பொறாமை வெட்டி பேச்சுக்கு  இடமில்லை. முதன்முதல் லஷ்மணை சந்தித்தது இந்திரா நகர் பறக்கும் ரயிலில். அந்த சந்திப்பு நான், லஷ்மண், நிலாரசிகன் அனைவரும் ஷைலஜா அக்கா வீட்டுக்கு சென்னையிலிருந்து பெங்களூருக்கு சென்ற போது நடந்தது. பார்த்ததும் மனவெளியின் ஆழத்திற்குள் வந்தமரும் ஒரு சிலரில் லஷ்மனும் ஒருவர். இந்த நேர்மையான நட்பை விவரிக்க தமிழில் வார்த்தைகள் குறைவு. சகதோழனாக என் வாழ்வில் துன்பமிக நாட்களையும், மிக இன்பம் தோய்ந்த நாட்களையும் கவனித்தவர் இவர். லஷ்மன் இல்லத்திற்கு பணி நிமித்தம் ப்ரிதாபாத்திலிருந்து வந்திருந்த சமயம் லஷ்மணின் அம்மாவின் கையால் ஒரு நாள் முழுதும் மூன்றுவேளையும் உண்டிருக்கிறேன். இந்த திருமணத்திலும் என்னை லஷ்மணின் அன்னை என்னை அன்புடன் கண்ணு என்று அழைக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். 

No comments: