Saturday, January 24, 2015

நீர்க்கோல வாழ்வை நச்சி - ஒரு விம‌ர்ச‌ன‌ம்


திருமதி.லாவண்யாவிற்கு ,

தங்களின் 'நீர்க்கோல வாழ்வை நச்சி' படிக்கக் கிடைத்தது.முதலில் கவர்ந்தது அந்த தலைப்பு. படிப்பதில் சாதாரண வாசகி எனினும் தெரிவு என் பிடிவாதம் என்பதால் அதிகமாக படிக்க முடிவதில்லை. உங்கள் தொகுப்பு படித்தது பாக்கியம். மனம் சார்ந்த எழுத்துக்கள் என் இஷ்டம்.அற்புதமாக இருந்தது. ஒரு நாள் முழுவதும் மனம் அலைந்தது.

மனவெளியின் இருள் நினைவுகளை உங்கள் தொகுதியின் கடைசி கவிதையால் அனாயாசமாக கடந்தேன். அதற்காக உங்களுக்கு நன்றி. பல நூறு விஷயங்களை மனமுதிர்ச்சியால் கடந்து விடுகிறோம். கடக்க முடியாத சிலவற்றை வலி மிகுந்த தருணமாக காலம் மாற்றிவிடும். அப்படிப்பட்ட தருணங்களை உங்கள் கவிதைகள் சொல்லியது. கவிதை வாசிப்பவர்களே லாவண்யாவாக நிற்கும் தருணத்தை உணர முடிந்தது.

எழுதும்போது எழுத்துக்காரன் நிற்கிற உணர்வுபூர்வமான தளத்தில் இருந்து அவனாலேயே போற்ற முடியாத, வாசிப்பின் மூலமாக வாசகன் பெற்றுக்கொள்ளும் அபூர்வமான தளம். இதில் எழுதினவன் கூட சிலசமயம் அன்னியனே. பொது வெளியில் உணர்வு பாரம் நிறைந்த எழுத்துக்காரனோடு , அதைவிட மென் இயல்பு கொண்ட வாசகனுக்கு என்ன வேலை? ஒரு கூடல் பற்றிய கவிதை அற்புதமாக இருந்தது லாவண்யா. மனம் நிறைந்த கூடலை உங்கள் கவிதை சொல்லியது.

ஒவ்வொரு சொட்டாக அமிலம் இடப்படும் தவறான புரிதல் கொண்டுவிட்ட, நம் தரப்பு வாதங்கள் கேட்கப்படாத , நட்பின் பிரிவுக்குப்பின் , 'பறத்தல் என் சுதந்திரம்' என்று பறந்த உங்கள் கவிதை எனக்கு தந்தது ஒரு பறத்தலை. பறத்தலுக்கான சுதந்தரத்தையும் ,அதற்கான நியாயத்தையும். சொல்ல இடம் தராத, முடிந்துபோன நட்பு ஒரு கசப்பை நிரந்தரமாக நம்மீது வீசி விடுகிறது . பறப்பது என் சுதந்திரம், பறக்க வைத்ததற்கு என் நன்றி தோழி

பிரியங்களின் பிரியத்தை பிரியமாக சொல்லி இருக்கிறீர்கள். தனிமையின் வயிறு அழுந்தி படுத்துக்கிடக்கும் ஓரிரவு, கூட படிக்காமல் கிடக்கும் புத்தகம், ப்ரியம் ப்ரியத்துக்காகவே என்று வண்ணதாசன் சொல்வார். வந்துவிட்டு போகும் பிரியங்களையும், அதை கொண்டாடுவதையும் பார்த்தால் லாவண்யாவின் உறவும் , நட்பும் இன்னும் கிராமத்தின் வேர்களில் உண்டு.

வாழ்க்கையை மீள் நோக்க பயணம் ஒரு படிமம் என்று அபிலாஷ் எழுதி இருந்தார். பயணம், நெடுஞ்சாலை, ரயில் போன்றவை உங்களில் ஏற்படுத்தும் துல்லியமான அதிர்வுகள், அதுகுறித்தான பதிவுகள், பயணம் தரும் நினைவுகள்தான் நம் வரமும் , சாபமும்.

எத்தனை முறை பயந்தாலும் பயம் மட்டும் பழகுவதேயில்லை, என்று லாவண்யா சொல்வது எத்தனை பயங்கள், சடன் ப்ரேக் போடும் வாகன அதிர்வு, தானியங்கி கதவு, எப்போதும் என்னையும் பதட்ட மேற்படுத்தும் அடையாள அட்டைகள் போன்ற மெல்லிய பயங்கள் .பயம் மனம் சார்ந்தது என்று சொல்கிறபோதே, இருப்பை பதிவிக்கும் அடையாள அட்டைகள் இல்லாத பொது அமைதியின் நெற்பயிர் தானே விளைந்திடுமா என்கிறபோது , அதைத் தள்ளிநின்று பார்க்கும் எழுத்துக்காரியின் கர்வமும்.

பத்ராட்சி பூக்களை அந்த பேரில் சொல்லவேண்டும் என்று எப்படி தோன்றியது ?அந்தி மந்தாரை என்று அதன் பேரை மாடர்ன் ஆக்கி விட்டார்கள். ஊமத்தை பூக்களையும் , ஸ்ப்பீக்கர் போனையும் சேர்த்து நினைக்கிற பால்யம் உங்களுக்கும் உண்டா ? பூவரசம் பூக்களை ஏன் விட்டுவிட்டேர்கள் ? ஆரஞ்சு சுளைகளுடன், வாசனையை உள்ளே வைத்திருக்கும் ரசனையையும் ,வெள்ளையுடன் வயலட் பூக்களை கொடுக்கும் எருக்கங்செடிகளை சொல்லும் உங்களை பிடிக்கிறது.

தனிமையும் பிரியமும் சேர்ந்தது. அதீத பிரியங்களின் தடயங்கள் விலகி வெறும் ப்ரியங்களாக மாறுவது நுணுக்கமான இடம்.அதை கவனிக்கும் நுண்மனம் கொண்டவர்கள், அந்த வினாடி இறந்து போய்விடுவார்கள். அந்த மனசுதான் வார்த்தைகளில் ஆன பிரியத்தையும் மனசை தொடும்படி எழுதி இருக்கவேண்டும். மன முதிர்வு கொண்ட அறிவு சார் மனம், தினப்படி வாழ்வை திட்டமிட்டு வாழ்கிறது. அதற்கு எதிர் பக்கத்தில் உன்மத்தம் கொண்ட மனம் ஒன்று பிரியத்தின் பாற்பட்டவர்களிடம், பேசிக்கொண்டே இருக்கவும், வார்த்தைகளிலேயே மனசு நிறையவும் விழைகிறது. இந்தக்கவிதையும் முதலில் இருந்து கடைசி வரி வரை என்னை அதிர்வித்தது. லாவண்யா என் அடி மனசின் வார்த்தைகளை திருப்பிக்கேட்டால் சொல்ல வராது.

மனம் காயப்பட்டு விடும்போது பதில் சொல்லதோன்றாது. அது வேதனையின் உச்சம். உனக்கான உன் நிலையில் இருந்து கவிதையில் உனக்கான எப்போதும் கிடைக்கப்போவதில்லை பதில்கள் என்பது அற்புதமான வெளிப்பாடு லாவண்யா.
உடலோடு மறைந்திருந்த உணர்ச்சிகளை ஒவ்வொன்றாய் புரட்டினாய். பேசிக்கொண்டே வரும்போது இணையிடம் இருந்து திடீரென பெறப்படும் எதோ ஒன்றில் ,சட்டென நுணுக்கமான தள மாற்றம். உடம்பெங்கும் முத்தப்பூவை பூக்கச் செய்பவன். அந்த மாறுதலை கவனித்து கவிதையில் கொண்டு வந்த ரசனைககாரியே நீங்கள்.

விடை அறியா கேள்விகளில் இரண்டாவது பத்தி நெருடுகிறது. அதே போல காற்றும் கனமான அட்டைகளும் மூன்றாவது பத்தி.என்ன என்று சொல்ல தெரியவில்லை.

வழிபோக்குவில் ஒரு பிரிவின் துல்லியமான தருணத்தை சொல்லியுள்ளீர்கள்.ஒரு ப்ரியம் முடியும்போது ஏதோ ஒரு அசட்டு எதிர்பார்ப்பில் காத்திருப்போம். அவ்வளவுதான் என்று நாம் ஏற்றுக்கொள்ளும் தருணம் [உணரும் தருணம் வேறு ,ஏற்றுக்கொள்ளும் தருணம் வேறு] வலியை தாண்டிய வெறுமை வரும்.அந்த தருணம் அதில் பதிவாகியுள்ளது. லாவண்யா எல்லாம் தெரிந்து கொள்வது சுலபம். என்னை மாதிரி. உங்களை போல் பதிவது ,அதுவும் துல்லியமாக பதிவது கஷ்டம்.

எதிர்மறை ரசவாதம் என்ற கவிதையில் நான் புரிந்துகொண்டது ஒரு ஆளுமையை நீங்கள் சந்திகிறீர்கள். அவன் கவர்கிறான். அவனை புரிகிறது. தவறு சொல்ல முடியவில்லை.விலகவும் முடியவில்லை. ஈர்க்கிறான். அவனை அப்படியே ஏற்றுக்கொள்கிறீர்கள். நெருடவும் செய்கிறது. லாவண்யா ,என் பார்வை உங்கள் பார்வை அல்ல. தவறாய் எடுத்துகொண்டு விடாதீர்கள்.

காத்திருத்தல், அதுவும் பெண்களுக்கு எவ்வளவு தர்மசங்கடம். சிகரெட் பிடித்து, டி குடித்து, நான் காத்திருக்கிறேனாக்கும் என்று பெண்களால் காத்திருக்க முடியாது. மனம் சார்ந்த அவள் தவிப்புகளூடே கொஞ்சம் கொஞ்சமாக நெகிழ்ந்து கொண்டு வரும் தருணங்களை நீரடியில் காத்திருத்தலும், மழை தீர்ந்த பின் பொழுதில் என்று தலைப்பே கவிதை ஆனவற்றிலும் வைத்திருந்த நேசங்கள் எல்லாம் காற்று வந்து கலைத்தது போல் துடித்திருந்தேன் தூரத்தில் துயரங்கள் விழித்திருக்க.என் இருப்பை என்ற இடத்தில் காத்திருத்தல் இருப்பாகி விடுகிறது தலைவி ஏங்கி சொல்வது போல.

ஒரு வாழ்கை போல எல்லாம் இருந்தும் நகர்ந்து கொண்டு இருக்கிறது யாருமற்ற நதி. இந்த கவிதையில் வாழ்வது ,ஒரு சிநேகிதியின் மனம். சிநேகமாகவாவது நின்றிக்கலாம் என்ற ஏக்கம் , கைநழுவி போய்விட்ட நட்பு, தனிமை,குழப்பம் மனம் என்று அது ஒரு சிறுகதை.

திரும்பக்கிட்டாதவை கவிதையில் ”அவர் பிரியத்தில் மீண்டும் மீண்டும் தொலையும் நான்” அட போட வைத்த வரிகள் அவை தன்னை தொலைத்தல் என்பது சுயம் தொலைப்பது எவ்வளவு அருமையான வாழ்க்கை தத்துவமது. “எதைக்கொண்டும் நிரப்பமுடிவதில்லை யாரோவாகிப்போன நீ தந்த நிராகரிப்பின் ரணத்தை” வலி தரும் வரிகளிவை.

வரவேற்பறையே ஒரு இறுக்கமான இடம்தான். “நமதற்ற வரவேற்பறை” அழகான சொல்லாடல். உன் நான் ,என் நீ சொல்ல நினைப்பதும் சொல்வதுமாக அமைத்திருந்தது அழகு.

”பக்கத்துக்கு இருக்கையின் பார்வையை தவிர்த்திருந்தேன்”, “முத்தம் ஓசை களாய் நின்று விடுவது”, “என்னோடு பேசிக்கொண்டு இருந்தாய் துணையாக தனிமை மட்டும்” , “வாசல் தாண்டி உள் வருவதில்லை அழகிய கோலங்கள் கூட”, “கற்காலத்தில் சொல்வது கற்களையா மனிதர்களையா” போன்ற வரிகள் எல்லாம் அடிக்கோடிட்டு சொல்லப்பட வேண்டிய வரிகள். மிகவும் அனுக்கமாக உணர்ந்தேன் இந்த வரிகள் அனைத்தையும்.

வார்த்தைகளிலான ப்ரியம் ....முழுக்க பிடித்தது. என் தோழி ஒருத்தி பேசிக்கொண்டே இருப்பாள். அவள் கணவர் மௌனம். என்னுடைய மற்றுமொரு தோழியால் ,தன் கணவரின் மௌனத்தை தாங்க முடியவில்லை, மோனத்துடன் எப்படி தொடர்ந்து பேசுகிறீர்கள் என்பாள் ? அடி மனசு தெரிந்தால் போதாதா ?

உங்கள் புத்தகம் என் முன்னால் உள்ளது. நினைவில் இருந்து சொல்லவில்லை. என் நெஞ்சில் ஆடும் நினைவின் ரசனையை உங்கள் மூலமாக பார்கிறேன். மனசு கொண்டு பேசுபவரின் மொழி அது.

எல்லோரும் சொல்லிப் போவதுதான் அன்பு ,எல்லோரும் வாழ்ந்து பார்பதுதான் ப்ரியம். அதை எல்லோரும் சுமந்து திரிவதில்லை. அபூர்வமான மனிதர்களே அதை உணர்ந்தும்,தேம்பியும் திரிகிறோம். அந்த மொழியை உங்கள் தொகுப்பு பேசுகிறது. நம்மை போன்ற மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற ஆசுவாசத்தையும் தருகிறது.

ஒரு எழுத்து நல்ல எழுத்தா என்று பிரிக்க நான் இலக்கிய ஜாம்பவான் இல்லை. அது எனக்கு பிரியமாக இருக்கிறதா. பிடித்தது விலை மதிக்க முடியாதது. பிடிக்காதவையின் கூட ஒரு இலட்சம் குடுத்தாலும் வேண்டாம். மனம் பொங்கிக்கொண்டு இருக்கிறது. கண்களில் இருந்து ஒரு சொட்டு நீர் வழிந்து விட முடிந்தவர் பாக்யசாலிகள். அற்புதமான தருணம் ஒன்றை அடைந்தேன் உங்கள் கவிதைகளை வாசிக்கும் போது. லா.சா.ரா.சொல்வது போல தரிசன நிமிடம். வாழ்ந்தது போதும் என்ற நிறைவு. அந்த வினாடியின் பரவசமாக , ஒருசின்ன வெளிப்பாடு. கவிதை தொகுப்பிற்காக உங்களுக்கும் வாசிக்க அனுப்பியவர்க்கும் என் நன்றிகள்.

மிகுந்த ப்ரியங்களுடன்,
ந‌ந்தினி

9 comments:

Vidhoosh said...

வாங்கி வைத்திருக்கேன். இன்னும் வாசிக்க வில்லை. :(

அருமையாக இருக்கிறது விமர்சனம். நந்தினிக்கு நன்றி. உங்களுக்கு வாழ்த்துக்கள்.:)

அகநாழிகை said...

வாழ்த்துகள்.

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் லாவண்யா! இந்த விமர்சனமே கவிதையா இருக்கு!

பத்மா said...

படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டது விமர்சனம் .கட்டாயம் வாங்கி படிக்கிறேன் .வாழ்த்துக்கள் லாவண்யா

Unknown said...

வாங்கி வைத்திருக்கேன். படிக்க வேண்டும். வாழ்த்துகள்.

உயிரோடை said...

வாங்க‌ விதூஷ். ந‌ன்றிங்க‌.

வாங்க‌ அக‌நாழிகை. ந‌ன்றிங்க‌.

வாங்க‌ ச‌ந்த‌ன‌முல்லை. ந‌ன்றிங்க‌.

வாங்க‌ ப‌த்மா. ந‌ன்றிங்க‌.

வாங்க‌ செல்வ‌ராஜ் ஜெக‌தீச‌ன். ந‌ன்றிங்க‌.

எல்லோரும் என‌து க‌விதை நூலை வாசித்துவிட்டு விம‌ர்ச‌ன‌மும் செய்யுங்க‌ள்.

Thanks in advance.

தமிழ்நதி said...

லாவண்யா,

உங்கள் எழுத்தைத் துளித்துளியாக ரசிக்கும் ஒருவரை வாசகியாக அடைந்த நீங்கள் அதிர்ஷ்டசாலி.
கட்டாயம் உங்கள் புத்தகத்தை வாங்கிப் படிக்கவேண்டுமென்று தோன்ற வைத்த
பதிவு. நந்தினியின் எழுத்து ஆன்மாவின் தந்திகளை வருடும் இசை போல
இருக்கிறது. நுட்பமான உள்மன அதிர்வுகளை விமர்சனக் கடிதமாக வெளிப்படுத்திய அவருக்கு வாழ்த்துக்கள்.

உயிரோடை said...

வாங்க‌ த‌மிழ்ந‌தி. மிக்க‌ ம‌கிழ்ச்சி. ந‌ன்றியும் கூட‌. ந‌ந்தினிக்கு என் ந‌ன்றிக‌ள்.

பா.ராஜாராம் said...

முழுக்க வாசித்துவிட்டேன் லாவண்யா.

எனக்கு விமர்சனம் பண்ண தெரியாது சகோ. சிலாகிக்க மட்டுமே தெரியும். :-)

நான் எழுதி இருந்தால் கூட இந்த அளவு கொண்டாடி இருக்க முடியுமா, என வருகிறது நந்தினியின் இந்த விமர்சனம் பார்த்து.

நான், நீர்க்கோல வாழ்வை நச்சி- வாசித்து கிடைத்த சந்தோசத்தை, அனுபவத்தை நந்தினி பகிர்ந்து கொண்டது போல எடுத்துக் கொள்கிறேன்.

வரிக்கு வரி, மிக லயிப்பாக இருந்தது நந்தினி. மிகுந்த நன்றி!

லாவண்யா, மூலவரான உங்களுக்கும்.