Thursday, September 24, 2015

நிபந்தனையற்ற வரவேற்பு....!!! - கலாப்ரியா

நீர்க்கோல வாழ்வை நச்சி தொகுப்பிற்கான கலாப்ரியா அவர்களின் அணிந்துரை

அன்பு, பிரியம், சினேகம் ஆகியவற்றுடனும் அவை போன்றவற்றுடனும், அவற்றைப் போற்றுகின்றவற்றுடனும் தீராத உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஒருவரின் நல்ல கவிதைகள் பலவற்றை உள்ளடக்கியிருக்கிறது லாவண்யாவின் இந்தத் தொகுப்பு. அதனால் தான் அது ஒவ்வொரு வாசகனுடனும் தன் இயைபான கவித்துவத்துடன் எளிதாக ஒரு உரையாடலை நிகழ்த்தி விடுகிறது. இவை மூன்றுக்கும் எதிரான ஒருவகை புறக்கணிப்பு சார்ந்தும் அவருடைய கவிதைகள் இயங்குகின்றன.

சினேகிதத்தின் ‘உடனிருப்பு‘ அவருள் பல வசீகரம் மிக்க படிமங்களை உருவாக்குகிறது.

“இப்போதுதான் கழுவிய
கண்ணாடிக் குவளை மேல்
தண்ணீர்ப் படலமென
வசீகரம் கொண்டது
உன் இருப்பு.”

என்னுடைய சின்னஞ்சிறு வயதில் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைக்கு ராஜவல்லிபுரம் என்ற எங்கள் கிராமத்தில் போய் இருப்போம்.அங்கே மின்சாரம் கிடையாது. சூரியன் மேற்கில் மறையத் தொடங்குகிற சாயுங்காலம் வந்து விட்டால். அம்மா நாலைந்து ஹரிக்கேன் லைட்டுகளை எடுத்து வைத்துக் கொண்டு துடைத்து எண்ணெய் விட்டு, திரிகள் திருத்தி, அதன் கண்ணாடிச் சிம்னிகளை கழுவிக் காய வைப்பாள். சிம்னியின் வளைவுகளில் ஒரு தண்ணீர்ப் படலம் அழகாய் இறங்கி வட்ட வடிவமாய் செங்கல்த் தரையில் ஒரு கோலமிடும். நீண்ட நாட்களாக, கிட்டத்தட்ட 55 வருடமாக, நான் இதைச் சுமந்து கொண்டிருக்கிறேன். இன்று லாவண்யாவின் கவிதையில்வாசித்து அந்நினைவை மீட்டுக் கொள்கிறபோது மகிழ்ச்சியாய் இருக்கிறது.

இப்படி நினைவையும் அனுபவத்தையும் வலியையும் கால,வெளி அலகுகளைத் தாண்டி மீள் நினைவாக்குவதே ஒரு நல்ல கவிதையின் செயல்.

புறக்கணிப்பின் வலியைப் பற்றி புலம்பல்கள் இல்லாமல் நிதர்சனமான வரிகளை நிறையவே காணமுடிகிறது .

கவிதை போலும் – என்றொரு கவிதை.

காலம் காலமாய் வாழும் அது
என்றாய் நகைத்திருந்தேன்.
....... ............. .................

..................... ..................... ......

சாவிலும் கூடவே வரும் அது
என்றாய் இறுகிய முகம் கொண்டிருந்தேன்.

இறுதியில் நீ உமிழ்ந்து விட்டுப் போன
எச்சில் மிதக்கும் சாக்கடையில் நிலவொன்று
கலங்கியது எனக்காக.

இதில் கலக்கம் இருக்கிறது. ஆனால் சாக்கடை நிலவுப் படிமம் அதன் தொனியையே மாற்றி விடுகிறது.இதில் முக்கியமாக கவிஞர் ”அது” என்று குறிப்பிடுகிறர். அது நட்பா, காதலா, எதிராளி ஆணா, பெண்ணா என்றெல்லாம் துலங்காமல் இருப்பது முக்கியமானதாகப் படுகிறது.

செவ்வியல்ப் படிமங்கள் என்றில்லை... இன்றைய தாராளமயப் பொருள் உலகின் பலவும் இவரது கவிதையில் படிமங்களாகப் பதிவாகின்றன.

இப்போதெல்லாம் எங்கள் கிராமங்களைச் சுற்றி கற்றாலைகள் நிறைய வரத் தொடங்கி விட்டது. இதற்கான, நிறுவப்பட்ட பின் உயரமாகும் உபகரணங்கள், நீஈஈளமான லாரிகளில் அடிக்கடி வருகிறது. அவற்றை இரு சக்கர வாகனத்தில் வேகமாகக் கடக்கும் போது ஒரு படபடப்பு ஏற்படும்.(இது போல கண்டெயினர்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள்.)

லாவண்யாவின் கவிதை வரிகள்:

வாகன அடர் சாலையில்
நீளும் கன வாகனமொன்றை
கடக்கும் படபடப்போடு
எத்தனை அவமானங்களை
கடந்தாகி விட்டது....

என்கிற படிமம் அந்தக் கவிதையின் மையத்தோடு அற்புதமாகப் பொருந்தி வருகிறது.

அவருடைய பல கவனிப்புகள் நம்மைச் சுற்றி நொடியில் நிகழ்ந்து விடுபவை. “கண நேரம் கொரிக்க கை கோர்த்து கங்காரு போலாகும் அணில்கள்....”என்பது அதில் ஒன்று. ஒரு நல்ல கவிஞரின் பார்வை இப்படி நுணுக்கமாக இருக்க வேண்டும். இருக்கிறது இவரிடம்.

கண்ணாடிக் கோப்பைகளும் சில பிரியங்களும். என்கிற கவிதை முழுக்க ஒரு நவீன வரிகளுடன் நகர்கிற கச்சிதமான முழுமையான கவிதை. இதைப் போன்ற கவிதைகள் இவருக்கு நிச்சயம் பேர் வாங்கித் தரும்.

பயம் பற்றி நான் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறேன்.

”எத்தனை முறை பயந்தாலும்
பயம் மட்டும் பழகுவதேயில்லை”

என்கிற லாவண்யாவின் வரிகள் என்னை இன்னும் பயப் படவைத்தது, ஒரு சின்ன ஆசரியத்தோடு.

மழைக்கு விரித்திருக்கிற தார்ப் பாயின் குழிவுகளில் தேங்கி இருக்கும் நீரையும், காற்றுக்கு அது அசைகிறதை அதன் கீழிருந்து பார்த்தும் ரசித்திருக்கிறேன்.”நீர்க் கோல வாழ்வை நச்சி” என்கிற தலைப்புக் கவிதையில் இது போலொரு அழகான படிமம். இப்போதெல்லாம் கட்சி விழாக்களுக்கும் கல்யாணங்களுக்கும் வைக்கிற வினைல் போர்டுகள் பல, சேரிக் குடிசைகளுக்கு கூரையாகி இதே போல் நீர்க் கோல வாழ்வை வழங்கிக் கொண்டிருக்கிறது. (நான் பார்க்க நேர்ந்த ஒரு குடிசையின் வினைல் கூரையில், வானம் பார்த்துக் கொண்டிருந்த சினேகாவின் ”க்ளீவேஜில்” தண்ணீர் தேங்கி இருந்தது.)

சில கவிதையின் வரிகளிடையே தொடர்பின்மை தென்படுகிறது.”அமைதியை விளைவித்தல்” என்கிற கவிதை. இது நல்ல கவிதையாக்கப் பட்டிருக்க வேண்டும். எங்கேயோ இடறுகிறது.

”நாலாம் பிறையை நாய் கூடப் பாக்காது” என்று ஒரு சொலவடை உண்டு. பார்த்தால் நிறையக் குழந்தை பிறக்கும் என்றொரு தொன்ம நம்பிக்கையும் உண்டு. ஆனால் அதுதான் சோதனைக்கென்றே கண்ணில் பட்டுத் தொலைக்கும். அதைச் சொல்லுகிற ஒரு கவிதை நன்றாக வந்திருக்கிறது. இந்த சொலவடை , தொன்மம் எல்லாம் சொல்லப் படாமல் வேறொரு தளத்தில்.

நீரடியில் காத்திருத்தல்-என்றொரு கவிதை, நல்ல கவிதை. நீரினடியில் காத்திருத்தல்.....என்ற பொருளில் தலைப்பு இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். இதெல்லாம் பழக்கத்தில் சரியாகி விடும். மற்றப்படி வழக்கமான முதியோர் இல்லம் மாதிரியான எல்லோரையும் பாதிக்கிற விஷயங்களை எல்லோரையும் போல் தனித்துவமற்ற வரிகளில் பதிவு செய்திருக்கிற கவிதையும் இருக்கிறது.


இப்படி சின்னச் சின்ன விலகுதல்கள்( aberrations) இருந்தாலும் நிறைவான லாவண்யாவின் பிரியமும் நட்பும் திகட்டத் திகட்ட ஊடாடும் பல கவிதைகள் நன்றாக இருக்கின்றன.வீணை காயத்ரி, `ப்ரிய பாந்தவி’ என்றொரு புதிய ராகம் கண்டுபிடித்தது நினைவுக்கு வருகிறது. லாவண்யாவும் நல்ல கண்டு பிடிப்பாகலாம். இந்த நல்ல தொகுப்பை எந்த நிபந்தனையுமின்றி வரவேற்கலாம்.

-கலாப்ரியா

இடைகால்
29.11.2009

9 comments:

பா.ராஜாராம் said...

அருமையான விமர்சனம்!வாழ்த்துக்கள் லாவண்யா!

கமலேஷ் said...

கவிதை தொகுப்பு நீர்கோல வாழ்வை நச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..


அணிந்துரை மிகவும் அழகு...

விஜய் said...

வாழ்த்துக்கள்

விஜய்

மண்குதிரை said...

அணிந்துரை அருமை

வாழ்த்துக்கள் லாவண்யா

Anonymous said...

நன்று

ராகவன் said...

Dear Lavanya,

need to read your neerkkola vaazhvai nachi... kalapriyavin anindhurai.. azhagaai irukkiradhu...

vaazhththukkal!

anbudan
raagavan

காமராஜ் said...

வணக்கம் லாவண்யா, நெடுநாள் திறக்காத வலைக்கதவின் பின்னே பல கதைகள் கிடக்கிறது.கவிதைப் புத்தகம் வெளி வந்துவிட்டதா ? என்றால். கிடைக்கும் இடம் தெரிவிக்கவும்.இல்லை என் விலாசத்துக்கு அனுப்ப இயலுமா?.

உயிரோடை said...

வாங்க பா.ரா அண்ணா மிக்க நன்றி.

வாங்க கமலேஷ் மிக்க நன்றி.

வாங்க கவிதை(கள்) மிக்க நன்றி.

வாங்க மண்குதிரை மிக்க நன்றி.

வாங்க அபராசிதன் மிக்க நன்றி.

வாங்க ராகவன் மிக்க நன்றி.

வாங்க காமராஜ் அண்ணா. ஆமாம் புத்தகம் வந்துவிட்டது. வாங்க அகநாழிகையை தொடர்ப்பு கொள்ளலாம்.

உயிரோடை said...

அகநாழிகை பதிப்பக புத்தகங்களை வாங்க

தொடர்பு கொள்க: பொன்.வாசுதேவன், தொலைபேசி எண்:+919994541010

ஐசிஐசிஐ வங்கி: A/c No. 155501500097 P.Vasudevan ICICI Bank, Madurantakam Branch.