Sunday, January 24, 2010

ஆதலினால் காதல் செய்வீர்

ஆண்டாள் சூடிக் கொடுத்தவள், நாச்சியார் திருமொழியில் காதலாகி கசிந்துருகி நூற்றி நாற்பத்தி மூன்று கவிதைகள் பாடியுள்ளார்.

நாச்சியார் திருமொழி ‘தையொரு திங்கள்‘ என்று தொடங்கும் முதல் பத்து பாடல்கள் மன்மதனுக்கு கோதை நோன்பிருந்து திருமாலை கேட்பது போல் வரும்.

‘நாமமாயிரம்‘ என்று தொடங்கும் இரண்டாம் பத்து பாடல்களில் மணல் வீடு கட்டி விளையாடும் சிறுமி போல திருமாலிடம் "எங்கள் சிற்றில்வந்து சிதையேலே" என்று உள்ளம் கொள்ளை கொள்ள பாடி இருப்பார். ஒரு ஐந்திணை ஐம்பதின் பாடலும் அதே விதமாக இருக்கின்றது.

கொடுந் தாள் அலவ ! குறை யாம் இரப்பேம்;
ஒடுங்கா ஒலி கடற் சேர்ப்பன் நெடுந் தேர்
கடந்த வழியை எம் கண் ஆரக் காண,
நடந்து சிதையாதி, நீ!

பார்க்கவே அச்சுறுத்தும் கால்களை உடைய வண்டே, உன்னை குறை கூறுவதாக கொள்ளாதே, வேண்டி இரங்கி கேட்கின்றோம், ஓயாமல் ஒடுங்காமல் ஒலிக்கும் கடலிருக்கும் நெய்தல் நிலத் தலைவனின் நீண்ட நெடுந்தேர் கடந்த வழியையானும் எங்கள் கண்கள் ஆர மனம் நிறைய காண வேண்டும். அதனால் அத்தேர் சுவடின் மேல் நடந்து சிதைக்காதே.

நண்டூரி எங்காவது தேர் சுவடு அழியுமா? அந்த தலைவியின் பிரிவுத்துயர் பாருங்கள்.

அவள் தலைவன் மேல் கொண்ட காதல் ஏக்கத்தை இதை விட நுணுக்கமாக மென்மையாக உணர்த்த முடியுமா ? அவன் சென்ற வழியை தன் மேல் விட்டு சென்ற சுவட்டை யாரும் சிறிதளவு கூட கலைத்திடக்கூடாது என்ற திண்ணம் பாருங்கள்.

ம்ம்ம்ம்ம்ம்..... என்ன சொல்ல.... சங்க காலத்தில் மிக சிறப்பாக காதலித்திருக்கின்றார்கள் ஆதலினால் காதல் செய்வீர்.

9 comments:

Vidhoosh said...

சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
பிணைமான் இனிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி.

இதையும் பார்த்தீர்களா?

கலைமான், பிணைமான் என இரு மான்கள் பாலை நிலத்து நீர்ச் சுனை ஒன்றின் முன்னே நிற்கின்றன. வரண்டு இருக்கும் நீர் இரண்டுக்கும் போதுமானதாக இல்லை. தான் அருந்தாவிட்டால் பெண்மானும் அருந்தாது என்று பெண்மான் அருந்தட்டும் என தான் அருந்துவது போல் பாசாங்கு செய்கிறதாம் ஆண்மான்.

உயிரோடை said...

படித்திருக்கின்றேன். இன்னிக்கி இதையும் சொல்ல நினைத்திருந்தேன்.

ஆனா இது கொஞ்சம் மிகை போல தோன்றியது தோன்றியது. இருந்தாலும் அந்த அன்பு அழகானது.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

குடந்தை அன்புமணி said...

Vidhoosh கூறியிருப்பதும் நன்று. மிகையில்லை என்பது என் கருத்து. அப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர், இன்றும்...

அகநாழிகை said...

அருமையான பகிர்வு.
தமிழின் மீதான காதலை இன்னமும் கூட்டுகிறது. சங்க இலக்கியங்கள் அனைத்தையும் நாம் ஆர்வத்துடன் படித்துணர முன்வரவேண்டும்.

பகிர்தலுக்கு நன்றி.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

யாத்ரா said...

அருமையான பகிர்வு.

"உழவன்" "Uzhavan" said...

செஞ்சிருவோம்..:-)

காமராஜ் said...

நல்ல பதிவு லாவண்யா.
ஆண்டாள் பெண் பாத்திரங்களில்
மீறலும் துணிச்சலும் நிறைந்த படைப்பு.
இந்திய பழங்கதையாடல்களில் தனித்துவம்
நிறைந்த நிஜப்பெண்.

உயிரோடை said...

வாங்க‌ குட‌ந்தை அன்பும‌ணி க‌ருத்துக்கு ந‌ன்றி.

வாங்க‌ அக‌நாழிகை. ந‌ன்றி.

வாங்க‌ யாத்ரா. ந‌ன்றி.

வாங்க‌ உழ‌வ‌ன். மீண்டும் வ‌ருக‌.

வாங்க‌ காம‌ராஜ். க‌ருத்துக்கு ந‌ன்றி‌.