மல்லிகை இந்த பெயருக்கே அப்படி என்ன ஒரு மயக்கும் குணம். மல்லிகை இந்த பெயர் கேட்டாலே ஏன் மலர்ந்த அதன் அழகும், மனம் அப்பிக்கொள்ளும் மணமும் நினைவுவில் வருகின்றது. முன்னொரு பதிவில் சொல்லி இருந்தபடி, எனக்கு மல்லிகை என்றால் கொள்ளை பிரியம். என் வீட்டு தோட்டத்து மல்லிகையை அழகாக நெருங்க தொடுத்து எடுத்து தலையில் சூடிக் கொள்வது என் தினப்படி வேலை. உணவு உண்பதை கூட சில வேளை மறப்பதுண்டு ஆயினும் மல்லிகை தொடுப்பதையோ அதை சூடிக்கொள்வதையோ மறப்பதில்லை.
அலுவல் காரணமாக நேரம் சென்று வீடு திரும்பினால் கூட இருண்ட இரவிலும் விளக்கொளியின் உதவியோடு மல்லிகை மலர்களை கொய்து எடுத்து மாலையாக்கி கொள்வது என் விடாத பணி. அதுவும் ஒரு மலர் கூட செடியில் விடாது கொய்து கொள்வதென் வழக்கம். கணவர் தினம் கூறுவார் சில மலர்களை மட்டுமாவது விட்டு செல், அல்லது நீ தொடுக்கும் மாலையில் சிறிதேனும் தினம் ரங்கனுக்காவது இட்டு செல் என்று. ஆயினும் அவனோ நானோ வேறுவேறு அல்லர், யாமும் அவனும் ஒன்றே என்றெண்ணி நானே சூடிக்கொள்வது வழக்கம். இருப்பினும் என் வீட்டு மல்லிகை செடிகள் சற்றே குறும்பானவை எனக்கு தெரியாமல் சில மலர்களை காலையில் அவர் கையால் ரங்கனுக்கு சூட தன்னோடு மறைத்து வைத்துக் கொள்ளும்.
சரி இப்படியாக மல்லிகை எனக்கு மட்டுமல்ல ஏனையர்க்கும் பிடிக்கும். நம்மாழ்வார் தன்னை நாயகியாக(உலகில் பெருமாள் ஒருவனே ஆண்மகன் என்பது வைணவர் ஐதீகம்) உருவகித்து கொண்டதுமே மல்லிகைக்கு மயங்க ஆரம்பிக்கின்றார் பெண் போலவே. தென்றல் தடவுகின்றதாம் அவர் மேனியை அதுவும் மல்லிகை மலர்கள் நிறைந்த வனத்தில் இருந்து வரும் தென்றல். அடடா பாருங்கள் என்னவொரு ரசனை இந்த மனிதருக்கு. அந்த தென்றல் தடவுதல் இவர் மேல் தீயிட்டு கொளுத்துவது போல் இருக்கின்றதாம்.
மேலும்
இனிமையான குறிஞ்சி இசை இனிமையானதாக இல்லை, அந்தி சாயும் அழகிய மாலை நேரமும் என்னை மயங்கச் செய்கிறது. செவ்வான மேகங்கள் என் உடலைச் சிதைப்பது போல் உள்ளன. அன்றலர்ந்த தாமரை போன்ற கண்களை உடைய கண்ணபெருமான், ஆயர்குலத்து ஆண்சிங்கத்தை ஒத்த என் மாயவனின் பிரிவுத்துயரால என் மார்புகளும், தோள்களும் விம்ம புகலிடம் தெரியாத பேதையாக தவிக்கின்றேன்.
ஆஹா ஆஹா... என்ன ஒரு காதல் பாருங்கள்.
மல்லிகை கமழ்தென்றல் ஈரு மாலோ
வண்குறிஞ் சியிசை தவழு மாலோ
செல்கதிர் மாலையும் மயக்கு மாலோ
செக்கர்நன் மேகங்கள் சிதைக்கு மாலோ
அல்லியந் தாமரைக் கண்ணன்
எம்மான்ஆயர்கள் ஏறரி யேறெம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமிய மாலோ
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.
3 comments:
மிக நல்ல பதிவு,
//நம்மாழ்வார் திருவடிகளே சரணம்//
manakkuthunga...
நன்றிங்க இரசிகை
Post a Comment