Wednesday, March 24, 2004

நனைதலின் தேடல்

அறியாமலே விட்டுச்செல்கிறது

ஒவ்வொரு நனைதலும்

பிறிதொரு மழைக்கான தேடலை ...

நன்றி:லக்ஷ்மி சகம்பரி


எப்போதும் மழை என்பது ரம்யம், சுகந்தம், சந்தோசம் தான். மழை எத்தனை சுகமென்றாலும், நனைத்தல் என்னவோ எல்லா மழையிலும் கிடைக்க கூடியதன்று. எப்போதும் எதாவது ஒரு காரணமிருக்கும் மழையில் நனைதலை தவிர்ப்பதற்கு. கையில் முக்கியமான அலுவல் சம்மந்தப்பட்ட தாள்களோ இல்லை அதிகப்படியான பண நோட்டுகளோ இருக்கலாம். நாம் நனைய நினைத்த இடத்தில் நிறைய மக்கள் கூடி இருக்கலாம். நமக்கு நம் ஆடை பற்றிய கவலை இருக்கலாம். வீட்டிலே இருக்கும் பட்சத்தில் கூட காய்ச்சல் பயமிருக்கலாம்.
காரணம் எதுவாயினும் மழையில் நனைதல் மண்ணுலகில் கிடைக்க கூடிய ஒரு மிக சிறந்த சந்தோசமான இழக்க கூடாத தருணம். அத்தருணத்தின் இழப்பை சொல்ல வார்த்தைகள் கிடையாது. நனைந்து பழகியவர்க்கு, நனைய பிடித்தவர்க்கு மட்டுமே புரிந்த ஒன்று இம்மழை நனைதல். அது வார்த்தையில் அடக்கவியலாத அனுபவம். அப்படிப்பட்ட மழை நனைதல் மீண்டும் மழை தேடலை தூண்டி செல்வது ஒரு ஆச்சரியமற்ற விசயமன்றோ. இங்கே நனைதல் என்ற உணர்விற்கு ஒத்த ஒரு சில உணர்வுகளை பார்க்கலாம்.


வன்மம்:

----------


வேம்புண்ட வாய்க்கு எதை தின்றாலும் கசக்கும். அதைப் போல என் நண்பர் ஒருவர் அலுவலக அரசியலில் பெயர் போனவர். நல்ல பேச்சுதிறன் கொண்டவர். அலுவலக நிர்வாகிகளிடம் பெரும் செல்வாக்குள்ளவர். அவருக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் எப்படியாவது சில சிக்கல்களை உருவாக்கி அந்நபரை பழி வாங்கி விடுவார். அவர் என் தோழியின் மேல் ஏதோ காரணத்தால் வன்மம் கொண்டு விட்டார். பின் அவள் செய்யும் சின்னஞ்சிறு தவறுகளை கூட பெரிது படுத்தி அனைவரின் முன்னிலும் அவளுக்கு அவபெயரை ஏற்படுத்திக் கொண்டு இருந்தார்.

ஒரு முறை அவள் தன் பணிக்காக ஒருவர் உதவியை நாடியதை மிகைப்படுத்தி அந்நபரை அடிமைபடுத்தி கொடுமை செய்கின்றார் என்பது போல பெயர் ஏற்படுத்தி விட்டார். இதைவிட கொடுமை அப்பெண்ணின் நடவடிக்கை, மற்றவரிடம் பழகும் தன்மை சரியில்லை என்று மேலிடத்தில் சொல்லி அவளுக்கு கிடைக்க வேண்டிய சம்பள உயர்வையும், பதவி உயர்வையும் இல்லாமல் செய்து விட்டார். இதனால் அப்பெண் அந்த அலுவலகத்தேயே விட்டுச்சொல்ல வேண்டிய நிலை வந்து விட்டது.

அப்போது புரிந்தது. எப்போதும் வன்மம் தன்னை அறியாமலே மேலும் வன்மத்தை வளர்க்கின்றதென்று. இதே போல எதிர்பார்ப்பு இன்னும் எதிர்பார்ப்புகளை தூண்டும். ஏமாற்றம் மேலும் சில ஏமாற்றங்களுக்கு வித்திடும். சந்தேகம் சந்தேகங்களை வளர்க்கும்.


காதல்:

----------


ஒவ்வொரு நனைதலையும் ஒரு காதல் உணர்வோடு ஒப்பிடலாம். மழையை காதல் புணர்தலின் குறியீடாக பார்ப்பது பல
கவிஞர்களின் வழக்கம். ஆனால் இங்கே ஒரு வித்தியாசமான காதல் உணர்வை பற்றி கூற எண்ணுகிறேன். என் சிறு வயதிலிருந்தே ஆண்டாள் மேல் ஒரு தனி பிரியம். அவளால் கவர்ந்து இழுக்கப்பட்ட நான் அரங்கனை தான் மணக்க வேண்டும் என்று நினைத்ததுண்டு. அதை வெளியே சொல்லி அவமானபட்டதும் உண்டு. ஆனால் ஆண்டாள் போல் தூயவளோ திடமானவளோ அன்றே. நான் அற்ப பிறவி தானே.

சில காலம் கழிந்து ஒருவரை பார்த்த பின் இவர் கிடைத்தால் அரங்கன் தேவைஇல்லை என்று எண்ணினேன். அவர் முகம் தவிர வேறு எந்த விவரமும் இன்றுவரை தெரியாதெனக்கு. அதன் பின் வீட்டில் பார்த்து மணமுடித்தனர். இப்படியாக அரங்கன் மேலான காதலை மற்றுமோர் காதல் மாற்றியது. அந்த காதலையும் கல்யாணம் மாற்றியது.

என் நண்பர் ஒருவர் ஒரு முறை தன் நண்பரை சந்தித்த போது, 'அவளும் ஏமாத்திட்டு போயிட்டாடா, இன்னொரு பெண்ணை தான் தேட வேண்டும்' என்று புலம்பியதாக என்னிடம் சொன்னார்.


நீந்த தெரியாமல்

கிணற்றை

ரசிப்பது தவறென்று

ஒவ்வொரு முறை கால் தவறி

உள்விழும் பொழுதும்

நினைத்துக் கொள்கிறேன்

நன்றி:லக்ஷ்மண ராஜா


நிறைவேறா காதல் எல்லாமே இன்னொரு காதலுக்கான தேடலை அறியாமலே தந்து விட்டுத் தான் நீங்குகிறது.


ஆசை:

-----------


தொட்டணைத்தூறும் மணற்கேணியைப் போல ஆசைக்கு அளவில்லை. ஆசையே துன்பத்திற்கு காரணம். ஆயினும் ஆசை யாரை விட்டது. உதாரணத்திற்கு என் எழுத்தார்வம். அதிகம் வாசிப்பதில்லை. ஏதோ எனக்கு புரிந்த ஒரு சில கவிதைகளை யான் பெற்ற இன்பம் பெறுக இந்த வையகம் என்றெண்ணி கவிதையின் பல கோணங்களை வடிக்க போக அதை ஒரு சிலர் வேறு வழியில்லாமல் நன்றாக இருப்பதாக சொல்லப் போக, அந்த போதை எனக்கு பிடித்துப் போக மீண்டும் ஒர் கவிதையை விவரிக்கும் கட்டுரை. இங்கே இப்படியாக ஆசை தன்னை அறியாமலே மேலும் ஆசையை வளர்த்து விட்டுவிடுகிறது. அதனால் பல நன்மைகளும் இருக்க தான் செய்கின்றது மழை நனைதலின் குதூகலம் போல, சுகந்தம் போல, சந்தோசம் போல.

2 comments:

narsim said...

//நிறைவேறா காதல் எல்லாமே இன்னொரு காதலுக்கான தேடலை அறியாமலே தந்து விட்டுத் தான் நீங்குகிறது//

மின்னல்..

இந்த வரிகளில் உடன்படுவதை தவிர்க்க முடியவில்லை..

அந்த வன்மம் மேட்டர் சிந்திக்க வைத்தது

நர்சிம்

உயிரோடை said...

ந‌ன்றி ந‌ர்சிம்.