உரைநடை
வடிவில் எழுதப்படும் நீளமான புனைகதையே நாவல்.
WiKipedia
நாவல்
என்றால் என்ன என்பதை அதன் உள்ளடக்கம் சார்ந்து வரையறை செய்ய இயலாது.உள்ளக்கம் தொடர்ந்து
வளர்வது, மாறிக்கொண்டிருப்பது.வடிவம் சார்ந்தும்
வரையறை செய்ய இயலாது.வடிவங்கள் தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருக்கின்றன.
இது தான் நாவலின் வடிவம் என்று சொல்லும் முன் அதை உடைத்த படி அடுத்த
நாவல் வந்துவிடுகிறது.
நாவல் - ஒருசமையல்குறிப்பு
(ஜெயமோகன்)
அப்படித்தான். விடம்பனம்
உள்ளடக்கம் சார்ந்தோ வடிவம் சார்ந்தோ நாவல் என்று சொல்ல முடியாத ஆனால் நாவல் தான் என்று
சொல்ல வைக்கும் ஒரு பிரதி. எங்கிருந்து வேண்டுமென்றாலும் தொடங்கி
எந்த வரிசையிலும் படிக்கலாம் என்ற பெரிய வாசக சுந்திரத்தை இந்த நாவல் கொடுத்திருக்கிறது. சொல்லப்பட்ட கதையோட்டம் ஒரளவுக்கு தொடர்ச்சி கொண்டதாக இருந்தாலும் அப்படிப்பட்ட
வாசிப்பைச் சாத்தியமாக்கி இருக்கிறது. இதில்
வரும் கதை தொடக்கமும் முடிவும் அற்றது. ஒருவேளை இதனை
நாவலாசிரியரின் வாழ்வின் நான்கு வயதிலிருந்து தற்காலம் வரையிலான கண்ட, கேட்ட, அனுபவித்த நிகழ்வுகளின் தொகுப்பு என்றும்
சொல்லலாம். சுந்தர ராமசாமியின்
"ஒரு புளியமரத்தின் கதை" நாவலின் தொடக்க
அத்தியாயங்களில் வரும் சிறுசிறுகதைகளின் தொகுப்பினைப் போலவும், ஜே.ஜே சில குறிப்புகளில் வருவவை போன்று கதையிடைக் குறிப்புகளையும் கொண்டது. மேலும் சில கவிதைகளும், சினிமாப் பாடல்கள் இரண்டும்,
பக்தி இலக்கியப் பாடல்கள் பலவும் என்ற கலவையான கலைடாஸ்கோப் தன்மை
கொண்டது. விதவிதமான வடிவங்களை வாசகர்களே உருவாக்கிக் கொள்ள இயன்ற கலைப்பிரதியாகவும்
இதனைச் சொல்லலாம்.
கதையிடையே
குறிக்கிடும் பல்வேறு குறிப்புகளுக்கு கதை ஓட்டத்தோடு தொடர்ப்பு அறவே இல்லை என்று சொல்ல
முடியாது. இங்கே இது சொல்லப்பட்டிருக்கிறது அது எங்கே கதையோடு தொடர்ப்புடையதாகிறது என்று
தேடிப்பார்க்கத் தூண்டும்படிக் குறிப்புகளை நாவலாசிரியர் திட்டமிட்டே நிர்மானீத்திருக்கலாம்.
அவ்வாறு தேடிப் பார்க்க்கும் ஆவலை வாசிப்பினிடையே உருவாக்கித் தந்திருப்பது
மிக ஆச்சரியப்பட வேண்டிய விஷயமே. பாத்திரங்களின் உரையாடலில்,
பொத்தாம் பொதுவாகப் பகடியாகச் சொல்லப்பட்ட விஷயம் பின்னர் வரலாற்று நிகழ்வாக நாவலில்
பதியப் பட்டிருப்பதற்கு முன்னோட்டமாக இதைக் காணலாம். உதாரணத்துக்கு
தேசநேசன் குரலாகப் பதியப்படும் அரசியல்மாற்றம், பின்னர் காவேரியில்
தண்ணீர் இன்றி போனத்தற்கு இந்த அரசியல் மாற்றமும் காரணம் என்று கதாபாத்திரத்தின்
வழியாக மறுபதிவு செய்கிறது. அதன் மூலம் சமூகமடைந்த சீரழிவுகளை தீர்க்க தரிசனமாகக் குடிகாரன்
சொல்வதாக்க் காணமுடிகிறது. இப்படி, பக்கம் 32க்கும் பக்கம் 291க்கும் இருக்கும் நுண்தொடர்பை நுட்பமான
வாசிப்பில் கண்டறிய முடியும். சில குறிப்புகள் அடுத்த
பக்கத்தில் வரும் அத்தியாத்திக்கு முன்னறிவிப்பாகவோ கட்டியம் கூறுதல் போலவோ அமைந்திருக்கின்றன. உதாரணமாக, “எல்லாம் ஏசுவே எனக்கெல்லாமே
ஏசுவே” என்ற பாடலோடு தொடங்கி கிருஸ்துமஸ் கொண்டாங்களை
விளக்கும் அம்மாஞ்சியின் குறிப்பும், அதை தொடரும் அத்தியாயத்தில்
கிருஸ்துவ பாதிரியார்கள் எளிய வெகுளியான மக்களை மதம் மாற்ற மேற்கொள்ளும் உத்தியும்
விவரிக்கப்படுகின்றன. நாவலாசியர்
திட்டமிட்டே இதைச் செய்திருக்க வேண்டும்.
சில
காட்சிகள் நிலைத்த சித்திரமாகவும் சில
காட்சிகளுடன் பின்னணி
இசை அல்லது ஒலியுடன் சலனம் கொள்ளும் நிலக்காட்சிகளாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.
“ஒரே அலைவரிசையில் முறத்தை உயர்த்தி தூற்றும் நெல் அலைஅலையாய்க் களத்தில்
விழும் அதே நேரத்தில் பதர்கள் தூசியாய்ப் போய்ப் படிவதைப் போல, வயல்களை கடக்கும் சிறுவர் கூட்டத்தின் இரைச்சல்” கிராமத்தில்
நான் அடிக்கடி காணும் காட்சி நெல் தூற்றுதலை நினைவூட்டின. இந்த வரிகள். அதே சமயம்
பதர் பிரிவதுபோல பனம்பழம்
பொறுக்க ஓடும் சிறுவர் கூட்டத்தையும் அவர்களின் சத்தத்தையும் உணர அனுபவிக்க முடிந்தது. மௌன வாசிப்பு எப்படி ஒலியை, ஒளியை உணர்த்த முடியும்?
ஆனால் முடிகிறது. அதே போன்றதொரு கலவை தான் அதிர்வேட்டை
வர்ணிக்கும் கவித்துவ வரிகள். அதிர்வேட்டும் அதனால் அதிரும் கடற்கரையும்
அப்போது அதிர்ச்சியில் பறக்கும் நூற்றுகணக்கான பறவைகளும் மனவெளியில் காட்சியாய் காதில்
மோதும் ஓசையோடு பதியப்பட்டிருப்பது. இந்த வரிசையில் சிறவி தாங்குதலை
பற்றி வர்ணிக்கப்பட்டிருக்கும் காட்சிகளும்,முதல் விதைப்பு கொண்டாங்களை
சித்தரிக்கும் காட்சிகளும், பொங்கல் திருவிழாவிற்கு பண்ணை வேலையாட்களும்
பண்ணையும் தயாராகும் காட்சிகளும், சிறுவர்கள் அய்யா வீட்டில்
கண்ணாமூச்சியாடும் ஆடும் காட்சிகளும் எல்லாமே ஒலி/ஓளி சித்திரமாய்
கணவொளியாய் விரிவது அழகு.மூச்சூறு ஆச்சியிடம் உணவு வாங்கி அதனை
காட்டி எடுத்துச் சென்று கிணற்றடியில் உண்ணும் சித்திரமும் அப்படியே.
விடம்பனத்தில்
சீனிவாசன் நடராஜனின் சித்தரித்ததிருக்கும் பெண் உலகம் விசித்திரமானது. முக்கிய கதாபாத்திரங்களாக வரும் அவள்,
இவள் (ராணி மார்க் அடுதன் ராணி), மணிமொழி போன்ற பெண்கள் தங்களுடைய வாழ்க்கையை கொண்டாடுபவர்களாக இருக்கின்றனர்.
இவர் நிர்மாணிக்கும் சமூகத்தில் பெண்களுக்குகான பாலியல் சுதந்திரம் கட்டற்றதாக
இருக்கின்றது. திருமணம், சமூக ஒழுங்கு போன்ற ஆதார முடிச்சுகளை எதிர்ப்பவர்களாக
உள்ளனர். ஒருத்தி அறிவின் கூர்மையோடு ஆயிரம் வேலி நிலத்தை நிர்வாகிக்கிறாள். பண்ணை நிர்வாகத்திற்கான எல்லா முடிவுகளையும் தன்னிச்சையாக எடுக்கிறாள்.கிருஷ்ண பருந்தினை வளர்க்கிறாள். இன்னொருத்தி பெண்ணிக்குறிய
அத்தனை அழகியல் அம்சங்களோடு பாவாடை நாடாவில் கொலுசைச் சிணுங்க விடுபவளாக, ஆடை அலங்கார ஸ்வரூபியாக, மலர்களை மிகவும் விரும்புவளாக,
பார்த்தாலே பத்திக் கொள்ளும் அழகோடு அழகாய் வாசனையாய் மணக்க மணக்க வாழ்கிறாள்.
மனம் கவர்ந்த ஒருவனை எப்படியெல்லாம் பசியாற்ற வேண்டும் என்ற நினைவிலேயே
திளைக்கிறாள். பண்ணையில் சேவகம் செய்யும் காலில் செருப்பும் சட்டையும்
அணியும் வாய்ப்பில்லாத சமூகத்திலிருந்து வரும் மணிமொழி அழகும் அறிவும் கூடவே சாதியற்ற
சமூகத்தை புரட்சிகரமாக நிர்மானிக்கும் கனவும் தெளிவும் கொண்டவளாகவும் சிற்றிலக்கியம்,
செவ்விலக்கியம் எல்லாம் தெரிந்தவளாகவும் இருக்கிறாள். இந்த பெண்கள் பொதுப்புத்தியோடு நிறுவப்படும் பெண்குணங்களை முற்றிலும் தலைகீழாக
கவிழ்பவர்களாக இருக்கின்றார்கள். அதை குறீயீடாக காட்டவே அவள்
தலைகீழாய் மரம் ஏறுபவளாகவும், கிருஷ்ணபருந்தை வளர்ப்பவளாகவும்
நாவலில் பதிவுகள் இருக்கின்றன.வரலாற்று பரிமாண வளர்ச்சியில் பண்ணையை
நிர்வகித்தவள் நிலத்தை கூறாக்கி விற்கும் நிறுவனத்தின் முதலாளியாகிறாள். அடுதன் ராணி சினிமா கதாநாயகியாகிறாள்.மணிமொழி மாவட்ட
ஆட்சியாளர் ஆகிறாள். அதே போல எங்கோ ஒரு அத்தியாத்தில் வரும் முனியின்
அம்மா சரோஜா பின்னர் வரும் அத்தியாத்தில் ஊர் பிரசிடெண்டாக உருமாறுகிறாள். ஆனால் அய்யாவீட்டு ஆச்சி மட்டும் மௌனமாய் மூச்சுறுக்கு உணவளிக்க மட்டும் வந்துவிட்டு
அதே சடுக்கில் திரும்பிவிடுகிறாள்.
புனைகதையின்
சிறப்பே,
நிஜமும் புனைவும் பின்னிப் பிணைந்து,
நிஜமோ புனைவோ என்ற மயக்கத்தை தருவதே இன்னும் ஒரு படி உயர்ந்து இந்த நாவல்
நிகழ்கால குறிப்பீடுகள், சம்பவங்கள், சகபடைப்பாளிகள்,
நிஜ வாழ்வில் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்ந்த இலக்கிய முன்னோடிகள் போன்ற
வாழும் நிஜங்களை கொண்டொரு புனைகதை உருவாக்க உத்தியை கையாண்டிருக்கிறது. புனைகதை கதைக்குள் வரும் புனை கதையை நிகழ்காலத்துக்கு நகர்த்த, பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் தன்னுள் இருக்கும் எழுத்தாளர் மரித்து போனதாக
அறிவிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்ட சமூக அவலத்தை, மொத்த இலக்கிய உலக முழுதும் தலைகுனிய வேண்டிய சம்பவத்தை மிக திறமையாக பயன்படுத்தி
இருக்கிறார் நாவலாசிரியர். கலைடாஸ்கோப் உருவாக்கும் பிரதியில் மொத்த நாவலுமே பெருமாள் முருகனுக்கு
நிகழ்ந்த கொடுமையைக் கேள்வி கேட்க கட்டி எழுப்பப்பட்டதோ
என்றே தோன்றுகிறது. இமையத்தின் எங்கதே நாவலாசிரியர் சொல்வது போல
கசடை அழகாக்கி காட்டும் கதை. அதில் ஜாதியை தெளிவாக அறிய முடியாமல்
போனதால் அதை சர்ச்சைக்கு உள்ளாகவில்லை என்பதை போன்ற வாசக பிம்பத்தை அம்மாஞ்சி குறிப்பின்
வழி குறிப்புணர்த்துகிறார் குறிப்பிட்ட சில பக்கங்களை குறிப்பிட்டு ஒரு சமூகத்தை குறிப்பாக
அச்சமூகத்தின் பெண்ணின் கற்பொழுக்கத்தை களங்கப்படுத்தியதாக நடத்தப்பட்ட அரசியல் - சமூகக்
கொந்தளிப்பை ஏளனம் செய்யும் விதமாக இதில் வரும் முக்கிய பெண் கதாபாத்திரங்கள் கட்டற்ற
பாலியல் சுதந்திரம் கொண்டவர்களாக வெளிப்படையாக காமத்தில் திளைப்பவர்களாக காமத்தை கலையாகக்
கொண்டாடுபவர்களாக திகழ்கின்றனர். மீன் விற்கும் பெண்ணிலிருந்து,
பண்ணை முதலாளி வரை காமத்தை எவ்வித ஒளிவும் மறைவுமின்றி அனுபவிக்கின்றனர்.முக்கிய கதா பாத்திரங்களான அவளும் இவளும் ஓயாது காமம் சார்ந்தே பேசுகின்றனர்.
அதை சித்தரிக்கும் எல்லாவித வெளிப்பாடுகளையும் நுகர்கின்றனர்.
ஒன்றரை பக்கம் கட்டற்ற காமம் பற்றி எழுதியதற்கு நாவலை எரித்தீர்களே சமூக
காவலர்களே எம் பெண் பாத்திரங்கள், ஆண் பாத்திரங்கள் எல்லாம் நாவல்
தொடக்கதிலிருந்து முடியும் வரை அதனை அப்பட்டமாக பேசுவார்கள் அதிலேயே ஊறிக் கிடப்பார்கள்
என்ன செய்வீர்கள் என்பது எகத்தாளமாக கேட்கும் தொனியில் கட்டமைக்கப்படிருக்கிறது.
நாவலின்
கதாபாத்திரம் தமிழ்வாணன் சொல்வது போல் படிப்பறிவில்லாத மக்களிடம் இந்த இலக்கியங்கள்
எல்லாம் பயனற்ற குரோட்டன்ஸ் போலவே என்று பரிதவிக்க வைக்கிறது நாவல். படிப்பறிவில்லாத
என்பதை கலையை கலையென பார்க்க தெரியாத என்றே என்னால் பார்க்க முடிகிறது..
ஆனால்
அது மட்டுமே இல்லை இந்த நாவல் பல்வேறு நிலக்காட்சிகளை வரலாற்று துன்பியல் நிகழ்வுகளை, சமூக சீரழிவுகளை,
சமூக மேம்பாடுகள் போன்று மயக்கம் தரும் பேரழிவுகளை தெளிவாக பதிவு செய்கிறது
தமிழகத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளில் நிகழ்ந்த அரசியல், சமூக
மாற்றங்களையும் பகடியாக பதிவு செய்கிறது. நாவலில் “இவனுகளுக்கு பிரிட்டிஷ்காரங்களே தேவல” என்று நாவலின்
கதாபாத்திரம் சொல்வது போல, பஸ்ஸெல்லாம் அரசுடைமையாயிட்டா பஸ்ஸே
விட வேண்டாம் ஆனா சம்பளம் வரும் என்று இன்னுமொரு கதாபாத்திரம் சொல்வது எப்படி தமிழக
அரசியல் சமூக சூழலை மக்களின் சிந்தனையை மாற்றி இருக்கிறது. இதனை
அரசியல் சமூக பரிமாண வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்று சொல்ல முடியுமா என்ற கேள்வியை
எழுப்புகிறது. ஆயிரம் வேலி நிலம் அரசாங்கத்தால் ஊர் மக்கள் அனைவர்க்கும்
பகிர்ந்தளிக்கப்பட்டுது, ஆனால் அவற்றை விலைநிலங்களாக காக்க முடிந்ததா
இந்த அரசால் என்ற கேள்வியை பூடமாக எழுப்புகிறது . நாவல். ஆயிரம் வேலி பசுமை,
கட்டாத்தரையாய் மஞ்சள், சிவப்பு, வெள்ளை பெயின்ட்
அடிக்கப்பட்ட கற்கள் பிரிக்கும் வீட்டு மனைகளாக கண் முன்னே சோக காட்சியாய் விரிவதை
பதை பதைப்போடே படிக்க முடிகிறது. சுடுகாட்டில் ஏதோ ஒரு இணையோடு
கிறங்கி கிடந்தவள், தன்னுடைய நிறுவனத்தின் துணையோடு அதே சுடுகாட்டை
விற்பனை செய்கிறாள், விமானத்தில் பறந்து ஜக்குவார் காரில் செகுசாய்
பயணிக்கிறாள். சினிமா எடுக்க முயல்கிறாள். நாவலின் தொடக்க அத்தியாங்களில் மாட்டை
காதலிப்பவனாக வரும் முனியும், அவன் சமூகமும் முதல் முதலில் ட்ராக்டர்
ஊருக்குள் இறங்கும் போது அதனை எதிர்த்து புரட்சி செய்கின்றனர். ஆனால் பிற்காலத்தில் ஊரில் இருக்கும் கடைசி மாட்டையும் விற்று விட்டு ட்ராக்கர்
வாங்கும் முனி அந்த ட்ராக்டர் முகப்பில் மாடு பொறித்த செம்புப்பட்டையை வைக்கிறான்.
மாட்டுக்கே தீவனம் விளையாத பூமியில், ட்ராக்டரை
வைத்துக் கொண்டு என்ன மாராடிக்க முடியும் என்ற கேள்வி சற்று அழுத்தமாகவே எழுகிறது.
விலைநிலங்கள் குடியிருப்புகளாக மாறிப் போன அதே நேரம் வருடத்திற்கு லட்சகணக்கில்
பொறியாளர்கள் உருவாக்கப்படுவதும், பெருநகரங்களில் தொழில் நிறுவனங்கள்
பெருகி உருவாக்கி வைத்திருக்கும் கலாச்சாரத்தையும் சமூக மேம்பாட்டிற்குள் சேர்க்க முடியுமா
என்ற கேள்வியையும் எழுப்புகிறது
இந்த
காட்சிகள் எல்லாம் எனக்கு சாயாவனத்தை நினைவூட்டின. சாயவனத்தில் அழிக்கப்பட்ட சிறுவனம்
சக்கரை ஆலையாக ஆகிறது.
சாயாவனம் தந்த உளவியல் அதிர்ச்சியை, மேல் சொன்ன
காட்சிகளும் தருகின்றன. கண்ணீரோடு கடக்கும் போது வாசக மனம் மரத்து
போய் நிகழ்கால அவலங்களை ஏற்கவும் மறுக்கவும் முடியாமல் தவிக்கிறது. வீட்டுமனைகளை விற்கும் விளம்பரத்திற்காக நிறுவனம் அமைத்த செயற்கை நீருற்றை
போல எங்களுக்கும் வேண்டுமென்று போராடும் அப்பாவிகள், தமிழகத்தில்
வாழும் மக்களில் தொலைநோக்கின்மையும் அவர்களை எல்லாவிதத்திலும் ஏமாற்றும் அரசியல்வாதிகளையும்
குறிக்கும் குறீயிடுகளே அவர்களுக்கென அமைத்து
தரப்பட்ட செயற்கை நீருற்றும் அதன் நடுவில் இருக்கும் இரண்டு கொக்கு சிலைகளும் மூன்றே
மாதத்தில் தண்ணீரில்லாமல் காய்ந்து போனவதும் ஒரு குறியீடே. தங்களின்
வாழ்வாதாரங்களை எல்லாம் விற்று விட்டு, செய்கை நீருற்றுக்கு தண்ணீர்
வேண்டி ஒவ்வொரு குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு போடும் அவல நிலையிலே தமிழகம் இருக்கின்றது.
சிறவி தாக்குதல் சில காலம் மட்டுமே பட்டினி போட்டது.இந்த அரசியல், சமூக சீரழிவுகள் இனி வரும் எந்தனை காலங்களுக்கு
நம்மை பட்டினியில் கிடத்துமோ தெரியாது.
நாவலில்
வாகசர்களின் வாசக கூர்மையை சந்தேகிக்கும் சில இடங்களும், மிக நீண்ட
அம்மாஞ்சி அறிவு சார் குறிப்புகள் சிலதும் எரிச்சலை தருகின்றன.சமகால, சக படைப்பாளிகளையும், தன்னையும்
பகடி செய்து கொள்ளும் விதம் சில இடங்களில் சலிப்பினை ஊட்டுகின்றன. எதற்காக இந்த குறிப்பு வந்தது என்பதை கண்டறிய பல முறை நாவலை வாசிக்க வேண்டிய
இருப்பதும்,மேலும் சில குறிப்புகளின் மொழி மிக சிக்கலாக அமைக்கப்பட்டிருக்கிறதும்
நாவலாசிரியரின் மேதமையை பறைசாற்றுகிறதோ என்ற அய்யமும் எழுகிறது. கட்டற்ற பாலியல் சுதந்திரம் என்ற போக்கினை முதலிருந்து தெளிவாக பதிக்கும் இந்த
நாவல் மணிமொழியும் தமிழ்வாணனும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்த வாழ முடிவெடுக்க
மிக நீண்ட விவாதங்களில் ஈடுபடுவதும் ,
இவர்களுடை காதல் உரையாடல்கள்
எல்லாமே போதனை செய்வது போல அமைந்திருப்பதும் மிகவும் அலுப்புட்டுவதாக இருக்கின்றது. இவற்றை விடுத்து சிறப்பானதொரு அனுபவத்தை பல்வேறு தகவல்களை, நமது பாலிய வயது அனுபவங்களை நினைவுபடுத்தும் பதிவுகளை இந்த நாவலோடு நாமும்
கடந்து போகலாம். நிச்சயம் வாசிக்கப்பட வேண்டிய நாவல் சீனிவாசன் நடராஜனின் விடம்பனம்.
3 comments:
புத்தக விமர்சனம் அருமை.
நல்லதொரு அறிமுகம். நன்றி.
நன்றி பரிவை சே. குமார், வெங்கட் நாகராஜ். நாகேந்திர பாரதி.
Post a Comment