Saturday, March 12, 2022

Feb 2022 - சில கதைகள்

 கதை: அடிகுச்சி

ஆசிரியர்; சு சரவணன்
இதழ்: யாவரும்.காம்

கலையும் சாதி அமைப்பும் இணையும் நுட்பமான முடிச்சை தொட்டிருக்கிறது. ஆசிரியரின் இரண்டாவது கதை என்ற குறிப்பும் இருக்கிறது. மௌனமாய் உணர்த்தப்பட வேண்டியவை வார்த்தைகளிலும் வெளிப்பட்டிருக்கிறது என்பது மட்டும் சிறு குறை

*

கதை: இடுக்கண்
ஆசிரியர்: அசோக்ராஜ்
இதழ்: யாவரும்.காம்

கதை ஆரம்பித்த முதல்வரியிலேயே உள் இழுத்துக்கொள்ளும் கதை நண்பரிடம் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த கதை. மிக இயல்பாக வெளிப்பட்டிருக்கிறது. கதையில் புதுமை என்று எதுவுமில்லை ஆனால் மிக எதார்த்தமான நிஜம் போலிருப்பது இந்த கதையின் பலம்.

*

கதை: சூலி
ஆசிரியர்: வைரவன்
இதழ்: வனம்

பிரசவத்துக்கு மனைவியை ஊருக்கு அனுப்பி விட்டு வீட்டின் தனிமை கொடுக்கும் ஆசுவாசுவசத்தையும் பயத்தையும் கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார். பெங்களூரில் புறாக்கள் அதிகம் ஆனால் அவை ஏப்ரல் மே மாதங்களில் தான் இனப்பெருக்கம் செய்யும். இந்த கதையில் பெங்களூர் குளிர் வீட்டு பால்கனியின் புறாக்கூடு அதன் முட்டை என்பது புனைவுக்காக சரி என்று எடுத்துக் கொள்ளலாம். அந்த காலத்தில் வீட்டில் குளவி கூடு கட்டும் சகுனத்தை வாரிசை எதிர்பார்த்திருக்கும் வீட்டுக்கு நல்ல செய்தியை தரும் என்ற நம்பிக்கையுண்டு அதை புறாக்கூடு அதன் முட்டையோடு ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். வாசிக்க சிக்கல் இல்லாத கதை. ஆனால் கரு மிகவும் பழையது. சொல்லிய விதமும் பல புறாக்கதைகளில் வந்திருப்பது தான்.

*

கதை: ஈய உயிரியின் பாடல்
ஆசிரியர்: செந்தூரன் ஈஸ்வரநாதன்
இதழ்: அகழ்

அதிகாரத்துக்கு எதிர்க்கும் குரல் எவ்வளவு ஒடுக்கப்படுகிறதோ அதே விட வேகமாக ஒலிக்கிறது. அதை மௌன சாட்சியாக பார்க்கும் கோணத்தின் கதையின் காட்சி வரைவுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த கதையின் முக்கிய அம்சம் இதன் வடிவம். சில காட்சிகளையும் ஓசைகளையும் நாடகபாணியில் அல்லது திரைகதை வடிவில் சொல்லியிருப்பது. முழுகதையை சொல்லாமல் சில புள்ளிகளை ஆங்காங்கே வைத்து நீங்களே கதையை புனைந்து கொள்ளுங்கள் என்ற வாசகர் மேல் பெரும் நம்பிக்கை வைத்து எழுதியிருக்கும் கதை. ஓரிரு வரிகளில் வரும் கதாபாத்திரங்கள் கூட மனிதில் நிற்கும் படி எழுதிருப்பது கதையின் பலம். ஆனால் இதன் மொழியிருக்கும் இதனுள்ளே பகடிக்காக சொன்ன விஷயத்தை கூட மிக சீரியஸான விஷயம் போல வாசகர்களை ஏமாற்ற வாய்ப்புள்ளது.

*

No comments: