Saturday, May 7, 2022

சொல்லில் மலரும் தீ

  

 கடந்த இருபதாண்டுகளாகக் கவிதைகள், புனைவு, அபுனைவு எனத் தொடர்ந்து எழுதி வரும் நந்தாகுமாரன், பெங்களூரில் மென்பொருள் நிறுவனமொன்றில் பணிபுரிகிறார். இவரது முதல் தொகுப்பு ‘-1’ வெளியாகிய பிறகு எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்தப் ‘பாழ் வட்டம்’. காலச்சுவடு வெளியீடான இந்தத் தொகுப்பில் 69 கவிதைகள் இருக்கின்றன. சில கவிதைகளுக்கு நந்தாவின் மகன் படம் வரைந்திருக்கிறார்.  நந்தாகுமாரனின் கவிதைகள் பிரம்மாண்டமானவை. இவர் தேடித் தேடித் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள் காட்டும் காட்சிகள் வித்தியாசமானவை. மிக இயல்பானவை என்று நாம் நினைக்கும் அனுபவங்களுக்கு இவர் காட்டும் கோணங்கள் விசித்திரமானவை. அவ்வாறாக இவர் கவிதைகள் புரியும் ரசவாதம் அது தரும் கவிதானுபவம் சார்ந்து சில வார்த்தைகளை வாசகர்களுக்குக் கடத்த முடியுமென்றால் இந்தக் கட்டுரை அந்த கவிதைகளுக்க்ச் செய்யும் நியாயம் அதுவே.

 

நந்தாவின் கவிதைகள் மாயம் நிகழ்ந்துபவை. பெரும்பாலான கவிதைகளில் அந்த மாயாஜாலம் இருளில் நடக்கிறது. அந்த இருட்டு பிரகாசமான இருள். அது நிசியின் மசியாகி கையெங்கும் வழியும் போது அதனை சிறுபிள்ளை போலத் தன் தலையில் தடவுகிறது கவிதை. அப்போது அதன் கருமையால் மேலும் இருட்டின் அடர்ந்தி கூடுகிறது. அப்போது அந்த இருளைப் பிடித்துப் பிள்ளையார் செய்கிறது கவிதை. இங்கே நடந்த மாயத்தின் மீதியில் கவிதை அந்தகாரமாய் மலர்கிறது. “பட்டுத் தெரிக்கும் பிரகாச இருள்” என்பது மேல் சொன்ன கவிதையின் தலைப்பு.

 

நந்தாவின் கவிதைகள் தலைப்பிலிருந்தே தொடங்கி வாசகரோடு உரையாடத் தொடங்கிவிடுகின்றன. ‘எதிர்மழை’ என்ற கவிதையில்,

// தூக்கி எறிந்த துண்டு பீடி எரித்த பாதி இருளில்

சிலையாகும் சிகரெட் புகை // என்கிறார்.

 

சிகரெட் புகை சிலையைப் பார்த்துச் சொக்கி நிற்கும் போது மீதமுள்ள கவித் தருணம் தானாகவே நிகழ்கிறது. இந்த மாயத் தருணம் சில கவிதைகளில் பிரகாச வெளிச்சத்திலும் நிகழ்கிறது. தாத்தாவின் கைத்தடியை கொண்டு கூடு கட்டும் மஞ்சள் மூக்கு நாரை (‘மந்திர கோல்’), கைத்தடியை கொண்டு கூடு கட்ட முடியுமா என்ற தர்கத்தைத் தகர்க்கிறது. கூட்டில் பக்கவாட்டில் நிற்கும் கவிதை, தாத்தா வானில் நடப்பது போன்ற சித்திரத் தீட்டலில், அவர் வான்லோகம் செல்கிறார் என்பதை அவ்வளவு எளிமையாக உணர்த்துகிறது.

 

நந்தாவின் கவிதைகளில் அலட்டலே இல்லாமல் அறிவியல் எட்டிப்பார்க்கிறது. இருள் என்பது குறைவான வெளிச்சம் என்ற தத்துவத்தை திருப்பிப் போட்டு தர்க்கம் செய்கிறது.

// இருளின் வேகம்

ஒளியின் வேகத்திற்கு

நிகரானது //

 

என்று சொல்லும் வரிகளில், லைட் இயர் தியரி மட்டுமல்லாமல், இருளும் ஒளியே என்றப் புது புரிதலும் அடங்கியிருக்கிறது. பல கவிதைகளில் அறிவியல் தொழிற்நுட்பத்தின் தடங்கள் வரையப்பட்டிருக்கின்றன. ஓரிரு கவிதைகள் அணு அறிவியலை ஆராய்ச்சி செய்கின்றன.

 

மின்விசிறி படிமமாய் பல கவிதைகளில் வருகிறது. அது உறக்கமற்ற இரவின் நீட்சியாக இருக்கிறது. அறிவியல் கோணங்களைக் காட்டும் சாத்தியமும் அதிலிருக்கிறது. காலத்தின் சாட்சியாகவும், காலசக்கரமாகவும் அந்த மின்விசிறி சுழல்கிறது. ஒரு கவிதையில் ‘மின்விசிறி வானத்தில் பறக்கிறது’ என்ற மயக்கம் வரையப்பட்டிருக்கிறது. செயற்கை வானமும் நட்சத்திரமும் வரையப்பட்ட மின்விசிறி வானில் பறக்க வாய்ப்புகள் அதிகம் தான். இவரது மின்விசிறி சித்திரங்கள் சிலதை வியக்காமல் இருக்க முடியவில்லை.

// இரவின் தூரத்தைக் கடக்க

மின்விசிறிகளின் சிறகுகள் பறக்கின்றன

பறந்து கொண்டேயிருக்கின்றன //

(உரையாட வரும் எந்திர இரவு)

 

// மின்விசிறியின் குரல்வளையிலிருந்து

அதன் முதல் 360 டிகிரித் திகிரியில்

காலத்தின் நட்டாற்றில்

பிறக்கிறது அதன் முதல் சொல் //

(மொழி அழுத்தம்)

 

// மின்விசிறி

விடியலைத் துரத்திப் பிடிக்கும்

காலச் சக்கரமாகிறது //

(புதைக்குழியில் விளைந்த அசந்தர்பத்தின் மொழி விருட்சம்)

 

நந்தாவின் சில கவிதைகள் கோர்க்கும் வார்த்தைகள் முதலடிக்குத் தன்னையளந்து, இரண்டாம் அடிக்கு நம்மை அளந்து மூன்றடிக்கு உலகளந்து, நான்காம் அடியில் பிரபஞ்சத்தையே அளக்கத் தவிக்கும் வித்தையை செய்கின்றன. சில உதாரணங்களாக ‘இம்மை’, ‘புதைக்குழியில் விளைந்த அசந்தர்பத்தின் மொழி விருட்சம்’, ‘விளையாட வரும் எந்திர இரவு’ போன்ற கவிதைகளைச் சொல்லலாம். ‘இம்மை’ என்ற கவிதை ‘இச்சைக்கும் இயல்புக்கும் இருக்கும் இடைவெளியில்’ தொடங்கி, வாழ்வியல் அபத்த தருணங்களை சுட்டிக்காட்டியபடியே திடீரென ‘சித்தனுக்கும் சிவனுக்கும் இடையே நடக்கும் மாபெரும் மாய எதார்த்தமாய்’ தன்னை விரித்துக் கொள்கிறது.

‘புதைகுழியில் விளைந்த அசந்தர்பத்தின் மொழி விருட்சம்’ கவிதையில் வரும் இந்த வரிகள்

// பஞ்சு மெத்தை

நீச்சல் தெரியாமல் மூழ்குபவனின்

கடலாகிறது //

 

உறக்கம் தொலைதலின் வலியை விதமாய் சொல்லிக் கொண்டு போகும் போதே, இடையே  ‘சிவம் வந்து தன் மூன்றாவது கண்ணிலும் வேடிக்கை மட்டுமே பார்க்கிறது’ என்ற கையறு நிலையை அசாதாரணமாய் சொல்லிச் செல்கிறது.

அதே போல் ‘விளையாட வரும் எந்திர இரவு’ கவிதையிலும் உறக்கமற்ற ஒரு இரவில்

//வௌவால்கள் திட்டமிடும் பாதையில் தான்

இப்போது பூமி சுழல்கிறது

சுழன்று கொண்டேயிருக்கிறது//

என்று புவி ஈர்ப்புத் தத்துவத்தையே மாற்றி அமைக்கிறது கவிதை வரிகள்.

 

இந்த தொகுப்பில் விதவிதமாய் வடிவப் பரிசோதனை செய்யும் கவிதைகள் ஏராளமாய் இருக்கின்றன.  ‘ஏனெனில்’, என்ற கவிதை நட்போ இணையோ அல்லது வேறோர் உறவோ என்று இருவருக்கிடையில் நிகழும் பல உணர்வுக் கலவைகளை பட்டியிலிடுகிறது. மீண்டும் வாசிக்கையில் தலைப்பு வார்த்தைக்கு இன்னொரு அர்த்தம் பிறக்கிறது, போலவே அது தலைப்பையும் இறுதி வார்த்தையையும் மாலை போலக் கட்டிப் பார்க்க ஏதுவாயிருக்கிறது. ‘ரூப மோட்சம்’ என்ற கவிதையில் ஒரு எழுத்து வார்த்தை, ஈரெழுத்து வார்த்தை இரண்டு, மூவெழுத்து வார்த்தை, ‘ஃபிப்போனாக்கி சீரிஸ்’ (Fibonacci Series) போல முதல் வார்த்தையின் எழுத்துகளின் எண்ணிக்கையையும் அடுத்த வார்த்தை எழுத்துகளின் எண்ணிக்கையையும் சேர்த்த மூன்றாம் வார்த்தை என்று பல்வேறு வடிவ வார்த்தைகளை அடுக்கிக் கவிதையின் வடிவத்தில் புது மாதிரியைப் புகுத்துகிறது.  ‘எனக்கு எதிர் கவிதை முகம்’ என்ற கவிதையில் எதிர்கவிதை வடிவத்தையும், ‘தன்னெதிர்ப்பு கவிதை - பயமே பேரின்பம் / அச்சமே ஆனந்தம்’ என்ற கவிதையில் ‘(Autoimmune Poetry): தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் ஒரு கவிதை வகைமை’ என்ற புதிய கவிதை வகைமையையும் பரிசோதிக்கிறது.

 

நந்தாவின் கவிதைகளில் கவித்தருணம் ஒரு வித மயக்கத்தை ஏற்படும் வண்ணம் எழுதப்பட்டிருக்கிறது. நிஜமோ, மாயமோ இரண்டும் கலந்த வேறொன்றோ என்ற வெளியில் நிகழ்கின்றன அவை. ‘மாயப்புள்’ என்ற கவிதையில் ஒரு பறவை கவிதையின் ஒரு வரியிலிருந்து இன்னொரு வரிக்கு பறப்பது. அதை மாய எதார்த்தம் போல நினைத்து வாசிக்கும் இறுதி வரிகளில் நிஜ பறவை புகைப்படம் எடுக்கும் தருணத்தில் பறந்து மாயமாக கவிதைக்குள் வந்துவிடுவது என்பதில் இங்கே கவிதையை சொல்கிறாரா, புகைப்படத்தில் கவிதையாய் தெரியும் பறவையை சொல்கிறாரா என்பது வாசிக்கும் போது நமக்கும் நிகழும் கவித்தருணம்.  இந்த கவிதைக்கு எதிர்பதமாய் அமைகிறது ‘கவிதையில் நிகழும் கிரகணம்’. நிகழ் தருணத்தில் கவிதை சொல்லியின் சலிப்பானதொரு நாளை குறிக்கும் படிமமாக உயிரியல் பூங்கா மலைப்பாம்பு வருகிறது. அது அதற்கு பரிமாறப்பட்ட சுண்டெலியை உண்டுக் கொண்டிருக்கும் அபத்தம் அடுத்த வரியில் மாயத் தருணமாகிப் படீரென வெடிக்கிறது. கவிதையில் இது ஒரு புதுவித உத்தியாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

ரயில் ஒரு கொலை செய்தது’ கவிதையில் இரவும் உறக்கமும் இயல்பாக நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு மாய நொடியில்

// தண்டவாள தூக்கம் தெளிய

தடுக்கி விழும் ரயில்

மீண்டும் எழுந்து

என் மீது ஓடுகிறது

ஓடிக் கொண்டே இருக்கிறது //

என்று எழுதும் போது நமது கவிதானுபவம் திடுக்கிடுகிறது. இவரது சில கவிதைகளில் வரிகளை வெவ்வேறு விதமாய் சேர்க்கும் போது வேவ்வேறு திறப்புகளை காண முடியும். உதாரணத்துக்கு பின்வரும் வரிகளில் இருளில் சொற்ப வெளித்தத்தில் தெரியும் ஓவியம் ஒன்று துலங்குகிறது.

// சுரங்கப்பாதை இருள் எரித்து

தீக்குச்சி தீபம்

காட்டும் ஓவியத்தில்

ஆதி மனிதன் வரைந்திருந்தான்

மீதி மனிதனை //

அதே கவிதையில் இந்த வரிகளுக்கு முன் இருக்கும் இன்னும் ஒரே ஒரு வரியை இந்த வரிகளோடு சேர்த்து வாசிக்கும் போது அது கொடுக்கும் வாசிப்பனுபவம் வேறு ஒரு தளத்தில் இருக்கிறது -

// வார்த்தையின் உள்ளே

சுரங்கப்பாதை இருள் எரித்து

தீக்குச்சி தீபம்

காட்டும் ஓவியத்தில்

ஆதி மனிதன் வரைந்திருந்தான்

மீதி மனிதனை //

வார்த்தையைப் பிளந்து அதன் அடிஆழத்தின் இருளை எரித்து உண்டான ஒளியில் வரைப்பட்ட ஓவியமாக இந்த கவிதை விரிகிறது. அதை வரைந்தது ஆதி மனிதன். இது மொழியின் தொடர்ச்சியை அது அடையும் பரிமாண வளர்ச்சியை குறிக்கும் படிமமாக மாறிப்போகிறது. இதைப் போன்று கவிதையில் பிற அடுக்குகளை திறக்கவல்ல கவிதை அமைப்பைக் கொண்டிருக்கிறது நந்தாவின் பல கவிதைகள்.

 

தற்கால சமூக வலைத்தள தாக்குதலில் தப்பிக்க முடியாத உலகம் பற்றியும் அதில் நிகழும் அரசியல் பற்றியும் இவரது கவிதைகள் பகடி செய்கின்றன. முந்தைய காலத்தின் டீக்கடையில் நிகழும் சமூக கூத்துக்களின் புதிய கூடாரமே சமூக வலைத்தளங்கள். அதைவிடவும் பயங்கரமானதும் குழுமனப்பான்மை கொண்டதும் என்றும் முகநூலில் எழுதவதைக் கூட கவிதைத் திரட்டுகளாக்கிவிடும் பகடியையும் மறக்காமல் பதிவு செய்கிறது. முகநூல் கவிதைகள் அல்லது கவிதைகளை எழுதித் தள்ளும் சமகாலத்தில் கவிதையின் தொகுதியா பணம் தரும் தகுதியா எது கவிதையாகிறது யார் கவிஞர் ஆகின்றனர் என்பதை அப்பட்டமா கோடிட்டு காட்டுகிறது ‘கவிதை தேறும் கணம்’.

 

// நினைவுகளை இப்பொழுது யாரும்/ மூளையில் சேமிப்பதில்லை // என்று சமகாலச் சமூகம் கருவிகளில் அடிமையான நிதர்சனத்தை சொல்லவும் இவர் கவிதை வரிகள் கூசவில்லை. // உரையாடக் கிடைத்த சாட்பாட் // இந்த வரியில் மனிதர்களுக்கு உரையாடல் கூட செய்யப்பட்ட மென்பொருளுடன் தான் நிகழ்கிறது என்ற வரிகள் தனிமைத் துயரை, சகிப்பின்மையைச் சுட்டும் தற்கால படிமம்.

 

ஸ்தலபுராணம்  கவிதைகளும் ரயில் கவிதைகளும் இவர் முந்தைய கவிதைத் தொகுப்பிலிருந்து தொடர்பவை. பிரசித்தி பெற்ற ஸ்தலங்களுக்கான புராணங்கள் பல பெருமையோடு உலவும் போது நந்தாவின் கவிதைகளில் அதுவேறு பல காட்சிகளை, பகடிகளை உள்ளடங்கியது. வழக்கமாய் ஆன்மீக நோக்கங்களுக்காக விஜயம் செய்யப்படும் புராதான புனித இடங்களில் லௌகீக அபுனிதங்களை மர்மமாய் தொடும் அசாத்தியாமனவை அவை. சற்றே சறுக்கினாலும் பழமைவாதிகள் அடித்து துவைக்க ஏதுவான வாய்ப்புகளை உள்ளடக்கிய கவிதைகள் அவை.

ரயில் கவிதைகளின் ஜன்னலோர படிமம் இவருக்கு பல அனுபவங்களைத் தருகிறது. ஜன்னலோர இருக்கை கிட்டியவன் கைபேசிக்குள் தஞ்சம் புகுகிறான். ஜன்னலிருக்கை கிடைக்காதவன் அது கிடைக்கப் பெற்றவன் செய்யும் அபத்தங்களில் மௌன சாட்சியாகிறான். இது வாழ்க்கைத் தத்துவத்தின் பல அடுக்குகளைத் திறக்கவல்ல கவிதை. இன்னொரு ரயில் கவிதையின் ஜன்னலோரம் என்ற படிமம் திரைகாட்சிகளாகிக் கவிதைக்குள் புகுகிறது. ரயில் அந்தத் திரைப் பிம்பத்தில் ஒரு கதாபத்திரமாகிறது. கவிதை சொல்லி மனிதப் பறவையாகிறான். அது ரயில் பயணம் பண்ணும் எல்லா காட்சிகளையும் பறந்து பறந்து காண்கிறது பின் கண்ட காட்சியெல்லாமே // கனவா என்கிறது வாழ்க்கை // என்ற சித்திரத்தோடு முடிக்கிறது.  

 

நந்தாவின் பெரும்பாலான கவிதைகள் செய்வது சொற்கள் மீதான ஆராதனை. அந்தச் சொற்கள் சிந்தையிலிருந்து நழுவி விழுந்து கவிதையாகிறது.  சொற்களைச் சீட்டுகட்டுகளாக்கி கலைத்துப் போட்டு விளையாடுகிறது.  கையிலிருந்த சொற்களை மாற்றி மாற்றி வைத்து புனைவின் பல வடிவங்களை துணைக்கழைத்துக் கொள்கிறது.  அதுவே உயிரணுவாகக் கவிதையில் ஒரு மந்திர உயிரை நீந்தச் செய்கிறது. சொற்கள் சிட்டுகளாகி ஏதோ ஒரு மரக்கிளையில் கண்ணுறுமாறு அமர்கிறது.  அது ஒரு மஹா வார்த்தையாகி மொத்த சொற்களையும் சிருஷ்டிக்கும் ஜீவ சக்தியாகிறது. இவர் எழுதும் கவிதைகளில் அவை ‘சொல்லில் மலரும் தீயாகி’ ஒளிர்கிறது.  இரண்டு ரொட்டித் துண்டுகளுக்கு இடையே வைத்து தின்னும் உணவாகிறது. மேலும் சில சொற்கள் நீதிக்கதை எழுதுகின்றன. சொற்களை இவர் எல்லாவிதமான ஆயுதமாகவும் பயன்படுத்துகிறார். சொற்களின் மீதே காமுறுகிறார். வாழ்க்கையின் தத்துவத்துவங்கள், அறிவியல் பாடங்கள் எல்லாமே சொற்களின் சித்திரமாக விரிகிறது. காமலீலைகளை விதவிதமாய் சொற்களை பூஜிக்கும் மொழியில் சொல்கிறார். உதாரணத்துக்கு சொல்வதென்றால் ‘வீதியில் கிடந்த சொல்’ என்ற கவிதையை சொல்லலாம். மேலும் பல கவிதைகளில் சொல்லையும் காமத்தையும் இணைத்து ஒரு வர்ணக் கலவை ஓவியம் போல வரைகிறார் நந்தா. //சலனச் சொற்களின் சதங்கை ஆட்டம்// என்ற சொற்றொடர் அதைப் போன்றது. அதுவே ‘கிருமி தொற்றிய சொல்லாகி’, ‘360 டிகிரிக்கும் தன் தலையைச் சுழற்றி’ சமகாலப் பிரச்சனையையும் பேசுகிறது. இவர் கவிதைகள் அவரே சொல்வது போல, ‘சொற்களின் உடற்பயிற்சிக் கூடம்’.

 

// விஸ்வரூப கணத்தில் சிலையானது அலை // என்ற வரியின் சொற் கோர்வையில் இருக்கும் வசீகரம் அற்புதமான ஒரு சிலையை எப்படி ரசிப்போமோ அதே அளவுக்கான பரவசத்தைக் கொடுக்கிறது. // வாகனச் சிறையில் நூற்று நாற்பது நிமிடங்கள் // என்ற வரி போக்குவரத்து நெரிசலை இப்படியும் சொல்லமுடியுமோ என்ற ஆச்சரியம் மேலோங்க நிற்கிறது.

// கிளம்பும் முன் கார் சக்கரம் மிதித்து

வழிந்த எலுமிச்சை சாறு

கவிழ்ந்த கமண்டல நீராகத்

திரும்பி வருகிறது

உன் அதிகாலை லெமன் டீயில் //

இந்த வரிகள் கிளர்த்தும் கலவை உணர்வு, எலுமிச்சை காவு கொடுக்கும் குற்றவுணர்ச்சி, அதன் உயிர்தெழுதல் போன்றோ பழி வாங்குதல் போன்றோ ஒருவிதத்தில் நம் வாழ்வுடன் இணையும் அதன் சாறு, ருசி ஆயினும் மறுபடி நம் வயிற்றில் மரித்து தானே போகிறது என்றொரு தத்துவம். இடையே ‘கவிழ்ந்த கமண்டல நீர்’ என்றொரு சித்திரம். இத்தனையையும் அடக்கி எழுதப்பட்ட ஐந்து வரிகள் ஒரு கவிதையின் பகுதி.

 

நந்தாவின் கவிதைகளில் தாள லயம் கொண்டு முடியும் வரிகள், அடுத்தத்தடுத்த வார்த்தைகளில் சந்தம் அமைப்பவை போன்ற வரிகள் , ஏராளமானவை. கவிதையின் தொடக்க காலத்திலும், மரபு கவிதைகளிலும், காணப்பட்ட விதிமுறைகளை மீறும் புதுக்கவிதைகளின் அடுத்த வடிவமான நவீன கவிதைகளில் சந்தம், தாள லயம் சேர்க்கும் மீறலை நந்தா செய்கிறார். // ஆதி மனிதன் வரைந்தான்/மீதி மனிதனை //, // உச்சிக் கிளை/பச்சைக் கிளி //, // அண்டத்தின் குண்டம் மீது //, // பரஸ்பரம் அபஸ்வரம் // போன்ற பல உதாரணங்களை இந்த தொகுப்பிலிருந்து காட்டலாம். பெரும்பாலான கவிதைகளில் இந்த வார்த்தை விளையாட்டு இருக்கிறது. அது சில இடங்களில் சலிப்பையும் கொடுக்கிறது. வார்த்தைகளில் இசையின் சாயலில் அமைத்த கவிதைகள் பல இருந்தாலும் ‘இசைக்கப்படும் சொற்கள்’ என்ற கவிதையில் சொற்களை இசைக்கருவியின் மீது இசைக்கச் செய்து கவிதையிலிருந்து ஒரு இசையை எழுப்புகிறார் நந்தா. ‘ஸ்வரபூதம்’ என்ற கவிதையில் // ஆலாபனைக் குமிழ் உடைந்து ஒழுகும்/மொழியற்ற இன்ப வாதையில் // என்ற வரிகளில் இசையை அது தரும் சொற்களால் விளக்க முடியாத பரவச நிலையை மிக அற்புதமாகப் பதிவு செய்கிறார்.

 

பத்திகள் எதுவும் பிரிக்கப்பட்டாமல் எழுதப்பட்டிருக்கும் கவிதைகள் எங்கே நிறுத்த வேண்டும் எந்த வாக்கியத்தை எந்த வாக்கியத்தோடு சேர்ந்து புரிந்து கொள்ள வேண்டும் என்று பலமான வாசக கவனத்தைக் கோரி நிற்கிறன. ஒவ்வொரு கவிதைக்குள்ளும் இவர் அடுக்கும் காட்சிகள் மிக அதிகமானவை. மிக கனமானவை. அவை வாகசர் மேல் ஏற்றும் பாரம் மிகப் பெரியது. கவிதைக்குள் சிதறிக்கிடக்கும் சொற்கள் அதிகமோ என்று சோர்வைத் தரவல்லவை. அவற்றைப் புரிந்து கவிதை சொல்லும் அனுபவத்தை எட்ட மறுபடி மறுபடி வாசிக்க வேண்டிய கட்டாயத்தைக் கேட்பவை. இந்தக் கட்டமைம்பே அக்கவிதைகள் மீதான ஆர்வத்தையும் தூண்டுபவை. இன்னும் சற்றே இலகுவான மொழியில் சொன்னால் இந்த கவிதைகள் பெரும் வாகசப்பரப்பை எட்டும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இந்த பரிசோதனையை யாரும் செய்து தானே பார்க்க வேண்டும். அந்த விதத்தில் நந்தாவின் கவிதைகள் பாராட்டபட வேண்டியவை.

No comments: