எங்க வீட்டு தோட்டத்து மல்லிகைகள் சற்றே பெரிய குண்டு மல்லிகைகள். பார்க்க வெள்ளை டேபிள் ரோஜா பூப்போல இருக்கும். எனக்கு சிறு வயதிலிருந்தே மல்லிகைப் பூ மேலே தீராத காதல். திருவரங்கத்தில் இருந்த நாட்களில் மெனக்கெட்டு பூ மார்கெட் போய் மல்லிகைப் பூவை உதிரியாக வாங்கி நெருக்கமாக தொடுத்து, தலை நிறைய வைத்துக் கொள்வது வழக்கம்.
எனக்கு மல்லிகைப் பூ நிறம்ப பிடிக்கும் என்ற காரணத்தால் மல்லிகை பதியனிட்டு மூன்று மல்லிகை செடிகள் வளர்க்கப்படுகின்றன என் வீட்டில். தினம் காலையில் கிளம்பும் போது தோட்டத்தை வாஞ்சையோடு பார்ப்பதை தவிர நான் வேறு எதுவும் செய்வதில்லை அந்த மல்லிகைச் செடிகளுக்காக. தோட்டத்தில் மல்லிகை மட்டும் அல்லாது நிறைய ரோஜா செடிகளும் ஒரு வேப்ப மரமும், ஒரு சில வாழை மரங்களும், ஒரு நந்தியாவட்டை செடியும் இருக்கின்றது. இருந்தாலும் மல்லிகையின் பசுமையும் அடுத்தபடியாக வாழையுமே என்னை எப்போதும் கவரும்.
மார்ச் முடிந்து ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கும் தருணம் எனக்கு மிக பிடித்த காலம். எங்கள் வீட்டு தோட்டத்தில் மூன்று மல்லிகை செடிகளலும் ஒரு சில மல்லிகை மொக்குகளை தர ஆரம்பிக்கும். முதலில் ஒன்று இரண்டாக ஆரம்பித்து, மே மாதத்தில் தலை நிறைய வைத்துக் கொள்ளும் அளவு பூக்கும். அதை சாயுங்காலம் பறித்து தொடுத்து காலையில் தலையில் அணிந்து செல்வது என் தினப்படி செயல்.(இங்கே மகளிர் தலையில் பூக்களை பெரும்பாலும் அணிவதில்லை)
"ஏங்க ஏர்பின் இங்கே தானே வைச்சி இருந்தேன் எங்க போச்சு?"
"இரு வரேன்"
வந்து விளக்கை போட்டார். அதற்குள் எனக்கு பூக்குத்தி கிடைத்து விட்டது.
"பாரு ஒரு ஏர்பின் தேட கூட நான் தான் வர வேண்டி இருக்கு"
"என்னவோ ஒரு ஏரோபிளேனேயே தேடி தந்த மாதிரி சொல்லீங்க ம்ம்ம்"
"சரி வெட்டியா பேச்சு தான் டிபன் பாக்ஸ் யாரு எடுப்பா அதுக்கு ஒரு ஆளா அப்பாயிண்ட் பண்ண முடியும்"
"அதுக்கு தான் நீங்க இருக்கீங்களே வெட்டியா அப்பறம் இன்னோரு ஆளை வேற அப்பாயிண்ட் பண்ணனுமா?"
கிளம்பி சீருந்தில் கொஞ்ச தூரம் சென்ற இருப்போம். நான் எங்கே என் அலுவலக வாகனத்தை பிடிப்பேனோ அதே இடத்தில் தன் அலுவலகத்து வாகனதை பிடிக்க வேண்டி செல்லும் எங்கள் பக்கத்து வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவரை தினம் ஏற்றி செல்வது போல் இன்னும் ஏற்றி சென்றோம்.
"குட் மார்னிங் ஜி"
"குட் மார்னிங் கதவு சரியாக மூடவில்லை மூடி விடுங்கள்"
"எங்க வீட்டு பையன் கல்யாண ரிசப்சனில் உங்க போட்டோ அழகா வந்திருக்கு"
"ஓ அப்படியா?"
"ஆம் அப்ப மேடம் இங்கே இல்லையா என்ன?"
"ஆமா அவங்க அப்ப வெளிநாடு போயிருந்தாங்க."
"ஓ அப்படியா எங்கே..."
அவர்கள் உரையாடல் நீண்டது. நான் கிடைத்த சில நிமிடங்களை வெளியில் ஓடும் அனைத்தையும் பார்க்க உபயோகப்படுத்தினேன்.
பக்கத்து வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருப்பவர் இறங்கியதும்
"பாரு அவர் சொல்றாரு நான் போட்டோல அழகா இருக்கேனாம்"
"சும்மா தினம் வண்டில வரோமே ஏதாவது புகழ்ந்து வைப்போம்ன்னு சொல்லி இருப்பாரு இருக்கறது தானே வரும் போட்டோல"
"அதான் சொல்றேன் உண்மையாவே நான் அழகு அதான் அவரும் சொல்றாரு"
"அவருக்கு என்ன அவரா உங்களை கல்யாணம் பண்ணி இருக்காரு அந்த கொடுமைய நான் இல்லை பண்ணி இருக்கேன்"
"பக்கத்துல இருக்க பொருள் எப்போதுமே தெரியாது."
"அதுக்கு பேரு தூரப் பார்வை என் பார்வை சரியா இருக்குன்னு டாக்டரே சர்டிபிகேட் கொடுத்து இருக்காரு நீங்க தான் இந்த ஆபீஸ் ஜாயினிங் டைம் மெடிக்கல் செக்கப் கூட்டிட்டு போனீங்க"
அதற்கும் என் அலுவலக வாகனம் வந்து விட்டது.
*******
சில நாட்களுக்கு முன் ஒருவார இறுதியில் வெளியே கிளம்ப தயாரா இருந்தோம்...
"இன்னிக்கி வெளில சாப்பிட்டு அப்படியே சூப்பர் மார்க்கெட் போய் உங்க ஆபிஸ்ல கொடுத்த சோடாஸ்ஸோ பாஸ் கொடுத்து மளிகை சாமான் எல்லாம் வாங்கிட்டு வரலாம்"
"சாப்பிட போகலாம் ஆனா சூப்பர் மார்கெட் எல்லாம் வர முடியாது"
"அதுக்காக தனியாவா போக முடியும் அப்படியே போயிட்டு வந்திருலாம்"
"நான் வரலை. சாப்பிட மட்டும்ன்னா வேணும்ன்னா வரேன்"
"எங்கேயும் போக வேண்டாம் எனக்கு உன் கூட சாப்பிட போக பிடிக்கலை"
இதற்கு மேல் அங்கே அமர்ந்திருந்தால் இன்னும் வாக்குவாதம் தான் வளரும் என்று கோபத்தோடு வெளியே வந்தேன். தோட்டத்தில் இந்த வருடத்திற்கான முதல் மல்லிகை மலர்ந்திருந்தது. பறித்துக் கொண்டு உள்ளே வந்தேன். மணம் அதில் மனம் லயிக்க...
"ஹலோ சொல்லுங்க மோகன்"
"இன்னிக்கா... கொஞ்சம் டையர்டா இருக்கு"
"எங்க போகணும்"
"சரி இருங்க கேட்டு சொல்றேன்"
"மோகன்ட இருந்து போன் எஸ்.ஆர்.எஸ் போகணுமாம் அவருக்கு. அப்படியே சாப்பிட்டு வந்துறலாம்ன்னு சொல்றாரு. நீயும் கிளம்பி தானே இருக்க. போயிட்டு வந்திருலாம்"
தோட்டத்து முதல் மல்லிகை என்னை பார்த்து புன்னகைத்தது.
6 comments:
அட்டெண்டன்ஸ் போட்டுக்கிறேன்!
அது யாரு ஃபிரான்ஸ் கிருபா... ஃபிரான்சிஸ் கிருபாவா?
மல்லிகை மொக்கைகளை தருமா? பாவங்க நீங்க...! :) வழக்கமா ஊடல்னா மல்லிப்பூ கணவன்மார்களுக்குதான் உதவி செய்யும், இங்க உங்களுக்கு...!
ஆகா.. மல்லி.
படமும் புனைவும் சூப்பரு.
வாழ்த்துக்கள்!!!
நல்ல வாசமான பதிவு!!! படமே கும்னு வாசம அடிக்குது!
வாங்க நிஜமே நல்லவன். அப்படியே பின்னூட்டமும் போட்டு இருந்தா நல்லாக்கும்
வாங்க சுந்தர். ஆமாம் அது பிரான்சிஸ் கிருபா தான்.
வாங்க ஆர்விசி.
வாங்க ரங்கன்.
வாங்க அபி அப்பா.
அனைவருக்கும் நன்றி.
Post a Comment