கலாப்ரியாவின் வனம் புகுதல் சமீபமாக வாசித்தேன். பல கவிதைகள் மிகவும் பிடித்திருந்தது. வனம் புகுதல் கவிதை தொகுப்பில் நான் ரசித்த சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.
//துணைத் தலைப்புகளையே
பார்த்துக் கொண்டிருந்ததில்,
வாசிக்க முயன்று தோற்றதில்,
படவிழா சினிமாவின்
மற்ற நல்ல பரிமாணங்களை
தவறவிட்டது போல்
நம் சந்திப்பு
நிகழாமல் போனது
நாம் சந்தித்த அன்று//
என்ற இக்கவிதை மனதில் அழுத்தமாக பதிந்தது. பல எதிர்பார்ப்புகளோடு சிலரை சந்திக்கச் செல்கிறோம். ஆயினும் அந்த சந்திப்பு நம் எதிர்பார்ப்பை நிறைவேற்றாவிடினும் ஒரு அவநம்பிக்கை வளர்க்கும் வித்தாக ஆகிவிடுவதுண்டு அல்லது எதிர்ப்பார்த்தை விட மிக பல நல்ல விசயங்கள் நடந்துவிட்டிருக்கலாம். இவ்விரு சமயங்களிலும் சந்திக்கும் நேரம் சந்திப்பு நிகழ்வதில்லை. துணைத்தலைப்பு என்ற கவிதை தலைப்பும் அந்த உவமானமும் அழகு.
‘விதை‘ என்ற மற்றுமொரு கவிதையில், எதையாவது கற்று தரும் நண்பர்களோ, கதை சொல்லி பாட்டிகளோ, நீச்சலோ இன்ன பிறவோ கற்றுத் தந்தவனை அந்தந்த விசயங்கள் செய்யும் போது நினைத்து பார்ப்பதில்லை. எதையும் கற்று தராத, காதலிக்க கூட செய்யாத நீ கவிதையின் முற்றுப்புள்ளிக்கு பின் கண்ணீர்ச் சொட்டாக ஏன் இருக்கின்றாய் என்று வினவும் இவருக்கு கவிதைகளை தந்தவள் அவள் என்பதே என் விடையாகும்.
//சந்தேகமே இல்லை அதே தீக்கோல் தான் அருகில் கிடந்தது//
ருசி என்ற கவிதையில் மேல் வரும் வரிகளை சொல்லி இருக்கின்றார். அதில் இறந்தவளையும் வெட்டியானையும் அவன் பிணமெரிக்க உதவும் தீக்கோலையும் மட்டும் பேசவில்லை. மனிதனுக்குள் எப்போதுமிருக்கும் மரணம் என்ற பயத்தை ஒரு விரத்தியை பேசுகின்றது. "காயமே இது பொய்யடா" என்ற பட்டினத்தார் வரிகளை நினைவூட்டிய கவிதையிது. “அதே தீக்கோல் தான் எனக்கும்“ என்று சொல்கிறது.
தொகுப்பின் தலைப்பில் வந்திருக்கும் கவிதை மனதை அள்ளும் வண்ணமிருக்கின்றது. உவமைகள் கிட்டாமல் கவிதை எழுத முடியாத வேதனையை ஒரு மரத்தில் பூக்கள் உதிர்தலோடு ஒத்திருப்பது அழகு.
//கிளைகள் மாறிக்கொண்டன
வேர்களில்
வேறு வேறு என்ற
பிரக்ஞையில்லாமல் //
என்று அன்பை, பிரியம் பலரிடம் வளர்வதை ஒரு குறியீடாக சொல்லி இருக்கின்றார்.
//ஒரு தீக்குச்சி
கிழிப்பது போல
வாக்களிப்பது போல்
அம்புகுறி வரைவதெளிது//
என்று தொடங்கும் இந்த கவிதையில் நாட்டின் வன்முறையை இலங்கை போன்ற இடத்தில் நடந்த வன்முறையை அனாயசியமாக சொல்லியிருக்கின்றார். ராம ஜென்ம பூமி போன்ற இடத்தில் அம்பு குறிகளை ஆயுதமென பயன்படுத்த கூடும் என்று சொல்லுமிடத்தில் நம் பக்தி எதை நோக்கி என்ற சிந்தனை விளைக்கின்றது.
“ஒரு நாள்“ என்ற கவிதையில் மனிதனின் நினைவுகளை ஒரு புதிய ஊரில் விசாலம் தேடிய படி பஸ்ஸிலிருந்து இறங்கும் அன்னியன் போல என்ற வித்தியாசமான உவமையை கூறி இருக்கின்றார். “வீதி விளக்குகள்” கவிதையில் நிழலுக்கு வெற்று கையில் வீடு திரும்புவன் என்ற வேறுபாடு இல்லை என்று வித்தியாசமான சிந்தனையை சொல்லி இருக்கின்றார். பிரம்மராஜனுக்கு என்று எழுதி இருக்கும் சில கவிதைகள் புரிய கடினமாக இருக்கின்றன. அந்த கவிதைகளில் “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்” என்ற வாக்கியம் என்னை மிக கவர்ந்தது. அதே போல் கதை என்ற தலைப்பிட்ட கவிதையில் சொன்னபின் கதை யாருக்கு சொந்தம் என்கின்றார். மிக அழமான சிந்தனை இது. கதை மட்டும் அல்ல சொல்லப்பட்ட, ஏன் வெளி உலகத்திற்கு வந்துவிட்ட எந்த விசயமும் நாமே நமக்கு மட்டும் தான் சொந்தமா என்ன?
மேலும் வனம் புகுதல் கவிதை தொகுப்பில் இரண்டு இடத்தில் இரண்டு வேறு வேறு கவிதைகளில் ஒரே விதமான வரிகளை சொல்லி இருவேறு கருத்தை உணர்த்தி இருக்கின்றார். இதுவரை படித்திருக்கும் எந்த தொகுதியிலும் இந்த வித நுட்பத்தை நான் கண்டதில்லை. “தெரு விளக்கு” மற்றும் “வீதி விளக்குகள்” என்ற கவிதையில் ஒரே விதமான வரிகளை பொதுவாக உபயோகபடுத்தி வேறு வேறு கருத்தை சொல்லி இருக்கின்றார். அதே போல் “தொடர்பிலி” மற்றும் “முக வரி” கவிதையிலும் பொதுவான வரிகளில் வேறு கருத்து வருமாறு சொல்லி இருக்கின்றார்.
இறுதியாக ஒரு அழகான கவிதை. “திணைமயக்கம்“ என்ற இந்த கவிதையை நான் விகடனில் 75 முத்திரை கவிதைகள் இணைப்பில் 2001 ம் ஆண்டு படித்தேன். அந்த தொகுப்பில் என்னை மிக கவர்ந்த கவிதையில் இதுவும் ஒன்று ஆகும். ஒரு பேருந்து பழுதாகி மரத்தடியில் நிற்கிறது. குழந்தைகள் தயங்கி தயங்கி பேருந்தில் ஏறி பின் தயக்கும் நீங்கி அந்த பேருந்தில் விளையாடுக்கின்றார்கள். சற்று நேரத்துக்கு பின் அந்த பேருந்து சரி செய்யப்பட்டு சென்று விடுகின்றது. அதிலிருந்து வெளியேறிய டிசல் ஒரு கறையை கண்டு மரம் குழம்பி நிற்பது போல இருக்கின்றது அந்த கவிதை. இங்கே மரம் குழம்பியது என்பது அழகான படிமம். அந்த டிசல் சுவட்டை பேருந்தின் நிழல் என நினைத்து மரம் மயங்கியது என்றும், பேருந்து போய்விட்டதால் குழந்தைகளையும் பிரிந்துவிட்டோம் ஏக்கத்தையும், அந்த நிகழ்வு விட்டு சென்ற சுவட்டை நினைத்திருந்தபடியும் என்று பலவிசயங்களை சொல்லி போகிறது இந்த கவிதை.
இத்தொகுப்பிற்கு சுகுமாரன் எழுதியிருக்கும் முன்னுரை மிக வசீகரமாக இருந்தது. அதில் கலாப்ரியாவின் முந்தைய கவிதைத் தொகுப்பின் வந்த ஒரு கவிதையாக சுகுமாரன் அவர்கள் குறிப்பிட்டு இருந்த ஒரு கவிதை என்னை மிகவும் பாதித்தது. ஆண்டாள் திருப்பாவையில் தன் தோழிகளை அழைத்துக் கொண்டு கண்ணனை காண செல்வாள். எம்பாவாய் என்பது திருப்பாவையில் வரும் ஒரு மந்திரம் போல் ஒரு சொல் அந்த சொல்லை தலைப்பாக வைத்து, நகர்புறத்தில் குடிசைவாழ் பெண்ணொருந்தி காலைக்கடனை கருக்கலில் செல்வதை எழுதி இருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.
9 comments:
சுவரஸ்யமான விமர்ச்சனம் - பகிர்தலுக்கு நன்றி.. !! வாசிக்க தூண்டி விட்டீர்கள்..!!
அருமையான பகிர்தல்.புத்தகங்களை பத்திரபடுத்துங்கள் லாவண்யா.பார்க்கும் போது சுடவேணும்.
அருமையான சிலாகிப்பு லாவண்யா. நல்ல ரசனையோடெழுந்து நிற்கும் எழுத்து.
கலாப்ரியாவை அங்கங்கே படித்திருக்கிறேன் முழுமையாகப்படிக்கலாம்.
கவிதை எழுதுவது ஒரு கலை என்றால் அதை ரசித்து,புரிந்து சரியாய் சிலாகிப்பதும் ஒரு கலைதான்.இந்த இரண்டுமே உங்களுக்கு கைவந்த கலை போல.
கலாப்ரியாவின் ‘வனம் புகுதல்‘ வெகுநாட்களுக்கு முன்பு படித்தது. வாசிப்பவருக்கு ஒரு சுகானுபவத்தை கொடுக்கக்கூடிய கவிதைகள் கலாப்ரியாவுடையது. கவிதைகளைப் பற்றிய பகிர்தலும் அருமை.
- பொன்.வாசுதேவன்
அருமையான பகிர்தல்
ஆனால் கொஞம் சுருதி குறைந்துதான் இருக்கிறது இந்தத் தொகுப்பில்
:)
nice....
வாங்க முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் நன்றி
வாங்க பா.ரா அண்ணா. நன்றி. புத்தகம் பத்திரமாக இருக்கு. வாங்கிக்கோங்க.
வாங்க காமராஜ் நன்றி.
வாங்க பூங்குன்றன் வேதநாயகம் நன்றி.
வாங்க அகநாழிகை. நன்றி.
வாங்க நேசமித்ரன். நன்றி. எந்த தொகுப்பை சொல்கின்றீர்கள்?
வாங்க மண்குதிரை நன்றி.
/“எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்”/
இது மௌனியின் வரிகள்.
Post a Comment