Sunday, February 16, 2014

பண்ணையாரும் பத்மினியும்:பெயரை பார்த்ததும் ஏதோ வித்தியாசமாக தோன்றினாலும் மிக அழகான படம். பாரதிராஜா முதற்கொண்டு அறிமுகம் செய்து வைத்த வில்லத்தனமான பண்ணையார்களையே இதுவரை கண்டிருந்த தமிழ் திரையுலகிற்கு ஒரு நாற்பதாண்டுக்கு முன்னர் இருந்திருக்க கூடிய நல்ல மனம் கொண்ட பண்ணையாரை(என்ன தான் இவ்வளவு நல்லவராக இருந்தாலும் காரில் பிணத்தை கொண்டு போக சொல்வது எல்லாம் ஓவர்) காண இப்போது தான் கொடுத்து வைத்திருக்கிறது.

கார் அது கண்டசாவாயினும், பத்மினியானும் யாருக்கும் மோகம் குறைவதில்லை. பதினொன்னாம், பணிரெண்டாம் வகுப்புக்கு மட்டும் தான் உதவும் என்பதற்காக ஒரே செட் யுனிபார்ம் வைத்து எனது +1 , +2 முடித்த(அவ்வளவு சிக்கனம்) எனக்கு இருந்த பெரும் கனவு, திருமணத்திற்கு பின் சொந்த ஊருக்கு வரும் போது காரில் தான் வந்து செல்ல வேண்டும் என்பது. மிடில் க்லாஸ் மக்களுக்கு தன்னுடைய லட்சிய கனவாக இருப்பது சொந்த வீடும், சொந்தமாய் சின்ன காரும்.

முதன் முறை கார் வாங்கும் ஒவ்வொருவரும் அதனை மிகவும் நேசிப்பார்கள் முதன்முறை கார் ஓட்ட கற்பதும், அப்போது பயம் கொள்வதும், கற்று தருபவரின் திட்டுகளை பெறுவதும், அப்போது காருக்கு சின்ன அடியோ, கோடோ விழும் போது மனம் பதறுவதும், வீட்டில் ஒரு ஆள் போல் ஆகிவிட்ட கார் ஏதோ காரணத்திற்காக எங்கோ வைத்துவிட்டு வந்து அது திரும்ப வந்து அது நின்ற இடத்தை நிறப்பும் வரை அவ்விடத்தின் தனிமையை நுகர்வதும் என்று சிற்றுந்து வைத்திருக்கும் ஒவ்வொருவரின் தனித்தனி மென் அனுபவத்தை, நல் நிகழ்வுகளை, அதன் பொருட்டு அனுபவித்தை மன வேதனையை, சிறு சண்டைகளை கிளறிப் போகிறது.

வித்தியாசமான கதைக்களம், ஒரு காருக்கு ஊருக்குள் வரும் மினி பஸ்ஸை வில்லன் போல சித்தரித்திருப்பது அழகு. பின்னணி இசை அசத்தல், காரை பண்ணையாரும், பண்ணையார் மனைவியும், டிரைவர் முருகேசன் ஸ்பரிசத்து உணரும் பல்வேறு தருணங்களில் இதயத்துடிப்பு போல அமைத்திருப்பதும், மேலும் மினி பஸ் வரும் போது வில்லத்தனமான ஒரு இசை அமைத்திருப்பதும் அருமை. மொத்தத்தில் பின்னணி அற்புதம்.

நடிப்பில் எல்லா பாத்திரத்தங்களும் கன கச்சிதமாக செய்து இருக்கின்றார்கள். ஜெய்பிரகாஷ் ஆகட்டும் விஜய் சேதுபதியாகட்டும்(தனது முக்கியத்துவம் போய்விடுமோ என்று முகபாவம் காட்டுவதில் ஆகட்டும், காதல் காட்சிகளில் ஆகட்டும், பண்ணையாருக்கு காரோட்ட கற்று தருவதில் ஆகட்டும் மனிதன் அசத்துகிறார்), பண்ணையாரின் மனைவியாக(ஜெய் பிரகாஷ்க்கு அக்கா போல் இருக்கிறார் ஆயினும் முகபாவம் படு நேர்த்தி) வருபவரும், சிறு சிறு பாத்திங்களில் வருபவரும்(கார் மெக்கனிக், காரில் ஏற விரும்பும் சிறுவன், பெருச்சாளி என்கிற பீடை) அனைவரும் மிக அழகாக நடித்திருக்கின்றார்கள். படம் முழுக்க நல்லது சொல்லி கெடுத்தலாக விளைவிக்கும் பீடை பின்னர் கார் சாவியாகி முக்கியத்துவம் பெற்றுவிடுகிறார்,

இந்த கதைக்கு காதநாயகனின் காதல் அதனால் ஒரு கதாநாயகி, அதை சார்ந்த சில பாடல்கள் இடைச்சொருகலாக இருப்பது ஒரு சிறு குறை. மகள் காரை கேட்டு வாங்கிக் கொண்டு போக இருக்கிறார் என்பதை காட்ட முன்னிரண்டு காட்சிகளில் அவள் வந்து தொலைபேசியும், மறுபடி வானொலி பெட்டியும் எடுத்து செல்வது போலவும், அதற்கு அம்மாக்காரி பொருவது போல வருவது கொஞ்சம் பொருத்தமில்லாமல் இருந்தது, மகளுக்கு எதுவும் தருவதில் தாய்க்கு எப்போதும் அலாதி இன்பமே இருக்கும்.

படம் பார்த்து விட்டு வந்த போது ஒரு நல்ல நாவல் படித்தது போலிருந்தது. மொத்தத்தில் நல்ல படம், அவசியம் பார்க்கலாம். இது ஒரு குறும்படமாக வந்து பேர் பெற்றதாக கூகுளில் தகவல் இருக்கிறது. மொத்தத்தில் தமிழ் சினிமா ஒரு நல்ல கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது புரிகிறது. அறுதலாக இருக்கின்றது. வாழ்த்துகள் பண்ணையாரும் பத்மினியும் குழு.

4 comments:

'பரிவை' சே.குமார் said...

நான் குறும்படமாகப் பார்த்து ரசித்திருக்கிறேன். திரைப்படத்தில் அதில் ஒரு சுவை குறையாமல் அருமையாகக் கொடுத்திருக்கிறார்கள்.
நல்ல விமர்சனம்.

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான படம் தான்...

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விமர்சனம்.....

படம் பார்க்கவில்லை. பார்க்கவேண்டும்.