Friday, February 21, 2014

பிழை பொறுத்தருள்க

கடந்த ஏழு வருடங்களாக இணையத்தில் எழுதி வருகிறேன். கிட்டதட்ட 380 பதிவுகள் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதை, புத்தக விமர்சனம், திரை விமர்சனம், பயணக் கட்டுரை, பக்தி இலக்கியம், சங்க இலக்கியம், இவை எதிலும் வகைபடுத்த இயலாதவை என்று என்னென்வோ எழுதி இருக்கிறேன். முத்தமிழ் என்ற இணைய குழுமத்தின் மூலமே நான் எழுத வந்தேன். எழுத ஆரம்பித்த போது தமிழில் தட்டச்சு செய்யும் போது நிறைய பிழைகள் விடுவேன். (தற்சமயமும் அப்படியே, பிழைகள் குறைந்திருந்தாலும் அறவே அற்று போகவில்லை). இன்று கூட தொலைந்து போதல் என்ற என்னுடைய பழைய பதிவு ஒன்றில் மூன்று பிழைகளையும், பண்ணையாரும் பத்மினியில் ஒரு பிழையையும் திருத்தினேன்.

  தமிழில் எழுதும் போது மட்டுமல்ல ஆங்கிலத்தில் எழுதும் போதும் கூட பிழைகள் செய்வது சர்வ சாதாரணம். நான் வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு விசயமாக(area to improve) அலுவலகத்தில் ஓரிரு முறை பிழையின்றி மடல் எழுத வேண்டும் என்று கூட குறிப்பிட்டு இருந்தார்கள். எனக்கு எழுத்து வடிவமாய் எழுதும் ஆங்கிலத்தில் தான் பிரச்சனை (written english) ஆனால் பேச்சு வழக்கு(spoken english) மிக அற்புதமாக வரும். அதுவும் அலுவலக பணி நிமித்தம் யாரிடம் பேசினாலும் மிக சரளமாக என்னால் பேச முடியும். ஒரு ஒலிபெருக்கியை கையில் கொடுத்து விட்டால் போதும் மணிக்கணக்கில் பேச முடியும். இத்தகைய பிரச்சனைக்கு காரணம் எனக்கு பில்டிங் ஸ்ரான்ங் ஆனா பேஸ்மெண்ட் வீக். 

  நான் பனிரெண்டாம் வகுப்பு வரை பயின்றது தமிழ் வழி கல்வியில் அதனால் எனக்கு ஆங்கில அறிவும் மேலும் ஆங்கில வார்த்தைக் கலனும் மிகக் குறைவு. ஆங்கில வார்த்தைக்கு இந்த எழுத்து வருமா அந்த எழுத்து வருமா என்ற குழப்பமும் அதிகம் வரும். அது மட்டுமில்லாமல் ஐந்தாம் வகுப்பு வரை நான் படிக்கவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அம்மா, அப்பா இருவரும் ஆசிரியர்கள், அதனால் சிறு வகுப்புகளில் எல்லோருக்கும் செல்லப் பிள்ளை. இந்த காலத்தில் கொடுப்பது போல வீட்டுப்பாடம் எங்கள் அன்னை, பிதாவிற்கு அப்போதெல்லாம் எங்கள் மூலம் கொடுக்கப் படவில்லை, அதனால் வீட்டிலும் படிப்பதில்லை, பள்ளியிலும் படிப்பதில்லை. ஆறாம் வகுப்பு வந்த பின்னர் மற்ற குழந்தைகளில் அறிவும் மேலும் அன்னை, தந்தை வேலை பார்க்கும் பள்ளியில் அனைத்து ஆசிரியரிமுடம் புத்திசாலி என்று பெயர் வாங்க வேண்டும் என்ற சித்தியும் உந்தி தள்ள தத்தி தடவி ஏதோ படிக்க ஆரம்பித்தேன்.  

  நான் ஏழாம் வகுப்பு  படிக்கும் போது என்னுடைய ஆங்கில ஆசிரியர் ஒரு முறை தந்தை எழுதுவது போல விடுமுறை விடுப்பு எழுதி வரச் சொன்னார். எனக்கு தெரிந்து முதல் வீட்டுப்பாடம் அது தான் என்று நினைக்கிறேன். அப்பாவிடம் இதை சார்ந்து கேட்க மறந்து போயிந்தேனோ அல்லது தயக்கமோ நினைவில்லை. வீட்டில் கடிதம் எழுதாமல் பள்ளிக்கூடம் போய் சேர்ந்து, அவசர அவசரமாக என்ன எழுதினேன் என்று தெரியாது, ஒவ்வொரு வார்த்தைக்கு கீழும் சிவப்புக் கோடு, உச்சகட்டம் என்னவென்றால் என் தந்தையின் பெயர் சுந்தரராஜன், R.சுந்தரராஜன், அவர் படித்த பள்ளியில் இரண்டு R.சுந்தரராஜன்கள் இருந்ததால் உப்பலியபுரம் R.சுந்தரராஜன். அதாவது U.R.சுந்தரராஜன், அந்த பெயரை கூட முழுதாக எழுத தெரியாமல் yours sincerely, URS( அப்பாவை பள்ளியில் அனைவரும் URS Sir என்றே அழைப்பார்கள்) என்று எழுதி வைத்திருந்தேன். ஆங்கில ஆசிரியர் மிகுந்த கோபத்துடன் "எவ்வளவு திமிர் என்றால் URS என்று எழுதுவாய் அது நாங்கள் எங்க வசதிக்காக அழைக்கும் பெயரல்லவா?" என்று அனைவர் முன்னிலையில் திட்டியது மட்டுமில்லாமல் அந்த கடிதத்தை அம்மாவிடம் கொடுத்து விட்டார். அம்மா விளையாட்டு ஆசிரியை, அனைவர் முன்னிலையிலும் ஓங்கி ஒரு அறை விட்டார். அன்றிலிருந்து ஒழுங்காக படிக்க ஆரம்பித்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

 எழுதும் போது பிழையின்றி எழுத இயலாமல் போவதற்கு கவன குறைவும், அவசர புத்தியும் மிக முக்கியமான காரணம். மேலும் சில இடங்களில் ஒற்றுப்பிழையும் ரகர, றகர மயக்கமும் எனக்கு மிக அதிகமாக உண்டு. பல முறை படித்து பார்த்தாலும் என் கண்களுக்கு சில பிழைகள் தென்படுவதே இல்லை. இவ்வாறு பிழையோடு எழுதும் காரணத்தால் பல முறை அவமானமும், பிழையோடு எழுதினால் கவிதை தெரியாமல் பிழை தான் கண்ணுக்கு தெரிந்து கவிதையின் அழகு கெடுகிறது என்ற சாடலும், பிழையின்றி எழுத தெரியாமல் ஏன் எழுத வந்தீர்கள் என்ற வசையும், பெருங்குற்ற உணர்வும் என்னை ஏகத்துக்கு ஆட்டி படைக்கும். எழுதவே வேண்டாமே என்று கூட அடிக்கடி நினைப்பேன்.

  முத்தமிழில் எழுதிக் கொண்டிருந்த சமயம் மஞ்சூர் அண்ணா என்னுடைய எல்லா பதிவுகளுக்கு பிழை திருத்தித் தருவார். நதியலைடாக்டர். சிவசங்கர், டாக்டர். சங்கர், நிலாரசிகன் அவர்களும் அந்த உதவியை செய்து இருக்கின்றார். பண்புடனில் எழுதும் போது சில சமயம் ஐயப்பன் கிருஷ்ணன் உதவி இருக்கிறார். சா. முத்துவேல் வலைச்சரத்தில் சில பதிவுகளுக்கு பிழைத் திருத்தி தந்திருக்கிறார். கவிதை தொகுப்புகளுக்கு அகநாழிகை பொன்.வாசுதேவன், தயாளன், கவிஞர் சுகுமாரன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் என்று பலரும் பிழைகளை நீக்க உதவி இருக்கின்றார்கள். இதே உதவியை செய்த வேறு சிலரை நான் மறந்து விட்டிருக்கலாம். அனைவரையும் நன்றிகளுடன் நினைவு கூர்கிறேன். மேலும் என்னுடைய பிழைகளை பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

ஆகவே என் சகோதர சகோதரியரே நட்புகளே அன்போடு உங்களிடம் நான் கேட்டு கொள்வதெல்லாம் ஒன்று மட்டுமே. அறியாமல் தெரியாமல் நான் "பேயானாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே" இது எழுத்துப்பிழைக்கு மட்டுமின்றி என்னுடைய ஏனைய எல்லாப் பிழைகளுக்கு சேர்த்ததாகவே இருக்கட்டும் அது.

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவருக்கும் இது நடப்பது தான்... yours sincerely சுவாரஸ்யம்... அதுவும் பதிவு எழுதும் போது - Translate செய்யும் போது இப்படித் தான் அனைவருக்கும் வரும்... பதிவு எழுதுவதை விட திருத்த நேரம் ஆகும்... பழைய பதிவுகளைப் படிக்கும் போது, இன்னும் நிறையக் கண்ணுக்குத் தெரியும்...! நேரம் கிடைக்கும் போது மாற்றி விடுவேன்... "எழுதவே வேண்டாமே" என்பதை முடியடித்து தொடர்வதற்கு வாழ்த்துக்கள்...

அகநாழிகை said...

நல்ல பதிவு. சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள். தொடர்ந்து சிரத்தையுடன் எழுதி வந்தால் போகப்போக சரியாகி விடும். ஈடுபாடும் கவனமும் அவசியம். சரியாக எழுத வேண்டுமேயென்ற அக்கறையில் பிழைகளைச் சுட்டிக் காட்டினால் நெருங்கிய நண்பர்கள் கூட மன வருத்தமடைகிறார்கள். அதனால் எதையும் சொல்லவும் முடிவதில்லை. கற்றுக் கொள்வதில் ஆர்மிருந்தால் பிழைகள் தொடர்ந்த பயிற்சியில் குறைந்து விடும்.

'பரிவை' சே.குமார் said...

இது எல்லாருக்கும் வரும் சாதாரண தவறுதான்... தொடர்ந்து எழுதிவரும் போது தவறுகள் தானே திருத்தப்படும்...

இராய செல்லப்பா said...

வருந்தாதீர்கள் லாவண்யா! உங்கள் மீது எந்தத் தவறும் இல்லை.முன்னோர்கள் சொன்ன பழமொழிகளுக்கு உயிர் கொடுக்கவேண்டிய கடமை உங்களுக்கு உண்டல்லவா? அது என்ன பழமொழி என்கிறீர்களா? அடிக்க வராதீர்கள்!('வாத்தியார் பிள்ளை மக்கு')

வெங்கட் நாகராஜ் said...

பல சமயங்களில் இது நடந்து விடுகிறது. நாம் செய்யும் தப்பு நமக்குத் தெரிவதில்லை!

தட்டச்சு செய்வதிலும் சில பிரச்சனைகள்!