Friday, September 24, 2004

உயிரில் கலந்தவனுக்கு…


um5 முதன் முதலாக கொஞ்சம் தூரத்திலிருந்து உன்னை நான் கண்ட போது எனக்குள் ஒரு ரோஜா பூத்திருந்தது. உனக்கும் அப்படித்தான் என்று பின்னொரு தினம் நீ சொல்லி நான் அறிந்து கொண்டேன்.
உன் நண்பனோடு வந்திருந்த என்னை வரவேற்கவும் மறுநாளே நான் வேறிடம் செல்ல இருந்த போது என்னை வழியனுப்பவும் நீ வந்திருந்தாய். உன்னை அறியாமல் என் மேல் உனக்கும் என்னை அறியாமல் உன் மேல் எனக்கும் ஈர்ப்பு வந்திருந்தது என்னவோ உண்மை.
அதன் பின் நாம் மீண்டும் சந்தித்தது கிட்டதட்ட ஆறு மாதத்திற்கு பிறகுதான். அதற்குள் உனக்கு நான் நூறு மடலாவது இட்டிருப்பேன். அதில் ஒன்றுக்கு கூட நீ பதிலிட்டதே இல்லை.
நீ எப்போதும் பேசுவது மிக குறைவு. அத்தனை மடல்களுக்கும் நீ சொன்ன ஒரே பதில் என் மேல் இவ்வளவு ஈடுபாடும் அன்புமா.. என்னால் அப்படி இருக்க முடியவில்லையே.. என்றதுதான். அதில் உண்மையான ஒரு ஏக்கமும் பாசமும் இருந்தது.
um1 அந்த இரண்டாம் சந்திப்பின் போது நான் மிக முக்கியமான கட்டத்தில் இருந்தேன். என் வாழ்வை தீர்மானிக்கும் தருணமது. உன்னோடு சென்றதாலே என்னவோ அன்று நடந்த நேர்முக தேர்வில் நான் தேர்ந்திருந்தேன்.
அன்று கிட்டத்தட்ட நான்கைந்து மணி நேரம் நீ எனக்காக காத்திருந்தாய். மிகவும் மகிழ்வுடனும் நெகிழ்வுடனும் நாம் நடந்த கடந்த பாலத்தை இன்றும் கடக்கும் போது உன் நினைவால் நெகிழ்கிறேன்.
எனக்கு கிடைத்த மூன்று வேலைகளில் உன் இருப்பிடத்துக்கு அருகான ஒரு வேலையில் தேர்ந்தெடுத்து அங்கே வந்திருந்தேன். எனக்காக வீடு தேடினாய். என் வீட்டிற்கு தேவையான பொருட்களை பார்த்து பார்த்து வாங்கி தந்தாய்.
உடல் நலம் சரியில்லாமல் மருத்துவ மனையில் இருந்த பத்து நாட்கள் நீ சம்பளமில்லாத விடுப்பெடுத்தாய். இன்னும் என்னென்னவோ செய்திருந்தாய் எனக்காக. உன் மீது எப்போது எனக்கு காதல் வந்தது என்று இன்னும் என்னால் சரியாக சொல்ல முடியவில்லை.
um2 உனக்கும் என் மீது காதல் என்று எனக்கு நன்றாக தெரியும் இருந்தாலும் ஆரம்பத்திலிருந்தே நீ தெளிவாகத் தான் இருந்தாய் உன் குடும்பம் என்னை என் சாதியை ஏற்காதென்று. எனக்கும் அம்மா மேல் பயம் எப்போதும். அவர்களுக்கும் உன் சாதி ஆகாதென்று தெரியும். ஆயினும் காதலித்தோம் அதுவும் உயிர் உருக.
அதற்கு முந்தைய காதலால் நான் கேவலப்பட்டு, வலியால் துடித்திருந்த என்னை எப்படியெல்லாம் தேற்றினாய். "கசங்கினாலும் நூறு ரூபாயின் மதிப்பு நூறு ரூபாயே" என்றாய். நான் அசிங்கமானவள் என்னை உனக்கு பிடிக்குமா என்ற போது நீ என் உள்ளங்கையில் முத்தமிட்டாய். You are lovable dear என்றாய். அப்போது முன்னொரு நாள் உன்னோடு மகிழ்வாக கடந்த அதே பாலத்தை நாம் மீண்டும் கடந்து கொண்டிருந்தோம்.
நினைவிருக்கிறதா... ஒரு நாள் மஞ்சள் நிற சட்டை ஒன்றணிந்து நாம் வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு, வழக்கம் போல் என்னை நீண்ட நேரம் காத்திருக்க வைத்து வந்து நான் உன்னிடம் காட்டிய கோபத்திற்கு கன்னம் கிள்ளி "நீ எவ்வளவு செல்லம் தெரியுமா?" என்றதும் கோபம் எல்லாம் தீர்ந்து சிரித்திருந்தேன்.
um3 எப்போதும் இப்படித்தான் உனக்கான காத்திருத்தலின் உன் மீது கடல் அளவு கோபம் இருந்தாலும் உன் புன்னகை கண்ட நிமிடம் அது காணாமல் போய்விடும். அதன் பின் எந்த மஞ்சள் பூக்களை பார்த்தாலும் அன்று நீ சொன்ன "நீ எவ்வளவு செல்லம் தெரியுமா" என்ற வார்த்தைகளே நினைவுக்கு வருகின்றது.
பின்னொரு நாள் ஒரு நவம்பர் மாதம் கடற்கரை சென்ற போது சட்டென பிடித்த மழைக்கு நான் நனைய கூடாதென்று உன் தலைக்கவசத்தை தந்திருந்தாய். இருந்தும் பெரும் மழை நம் காதலை இன்னும் மகிழ்விக்க கொட்டியதில் நனைந்திருந்தேன்.
நீ நீண்ட நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாய். நாம் நின்றிருந்த புன்னை மரம் தன் மஞ்சள் மலர்களை நம் தலை மீது கொட்டி ஆசிர்வதித்தது. உன் தலையிருந்த மலரை நான் மகிழ்வோடு கண்டு கொண்டிருந்தேன். என் தோள் தங்கிய மலரை நீ கொண்டாடினாய்.
மிக உற்சாகமாக பிடித்த பாடலை விசிலடித்து கொண்டும் சில கவிதைகளை சொல்லியபடியும் வந்து கொண்டிருந்தாய்.
um4 "என்னடா ரொம்ப சந்தோசமா இருக்கே இன்னிக்கு" என்றதற்கு "மழையில் நனைந்த ரோஜாப் பூவை பார்த்து இருக்கியா ரொம்ப நாளைக்கு அப்பறம் இன்னிக்கி பார்த்தேன்" என்றாய்.
"என்னையா சொல்றே?" என்றதற்கு, "ஹும்ம்ம் இல்லையே" என்ற உன் எள்ளலோடு கலந்த துள்ளலான பதிலில் உணர்த்தி இருந்தாய் அது எனக்காக நீ சொன்னதென்று.
கொஞ்ச நாள் அலுவல் காரணமாக உன்னை பிரிந்து வேறிடம் செல்ல வேண்டி இருந்தது. அன்றும் மழை பெய்து கொண்டிருந்தது. என்னை வழியனுப்ப வந்த நீ கிளம்பும் போது என்னிடம் இருந்த குடையை கேட்டாய் என்று தந்தேன்.
சென்று சேர்ந்த பின் தொலைபேசிய போது "குடையை என்னிடம் கொடுத்து விட்டு மழையை உன்னோடு கொண்டு போய்விட்டாய்" என்று கவிதை பேசினாய்.
11 அழுக்கேறிய ஒரு கம்பி உடைந்த அந்த குடை பிறந்த பயன் அடைந்தது. இப்படி நான் நெகிழ்ந்தது பல முறையடா... என் உயிர் தின்ற பிரியமானவனே..
அதன் பின் ஒரு நாள் திடிரென நீ சொன்னாய், ரயிலில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று. அது நம் தேன்நிலவு பயணமென்றாய்.
திட்டமிட்டபடி உன்னோடு பைக்கில் சென்று கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை சென்று அங்கே ஒரு உணவகத்தில் உணவருந்தி விட்டு திரும்பும் போது ரயில் யன்னலோரம் அழகாக காய்ந்த பௌர்ணமி நிலவைக் காட்டி அதோ பார் தேன்நிலவென்றாய்.
உன்னருகே நான் இருந்த போது இந்த உலகமே அழகானதாக இருந்தது மட்டும் தான் உண்மை. உன்னை மணக்காமல் போனது என் வாழ்வின் மிக பெரும் துயரம்.
"உன்னை காதலித்தேன் நாம் இணைய முடியவில்லை. நான் ஒரு பெண்ணை மணந்து மிக நன்றாக வாழ்வேன் அது தான் நம் காதலுக்கு நான் செய்யும் மரியாதை" என்றாய்.
இன்று நீ நன்றாக இருப்பாய் என்ற நம்பிக்கையோடு நானும் உன் காத‌லோடு.

10 comments:

Mac said...

Ada ponga boss...old one.just u have changed the gender.

Beski said...

அட!

http://www.yetho.com/2009/07/blog-post_16.html

நர்சிம் said...

நல்லா எழுதி இருக்கீங்க.

ச.முத்துவேல் said...

/உன்னை மணக்காமல் போனது என் வாழ்வின் மிக பெரும் துயரம். /

படிக்கிற எங்களுக்கும் அந்த எண்ணம் ஏற்பட்டுவிடும் அளவுக்கு எழுதியுள்ளீர்கள்.

Vidhoosh said...

புது கள். இருந்தாலும் போதை தருகிறது உங்கள் எழுத்து நடை. :)

அகநாழிகை said...

லாவண்யா,
மறுபடியும் காதலிக்கணும்போல இருக்கு. அசத்தறீங்க.

\\ச.முத்துவேல் said...
/உன்னை மணக்காமல் போனது என் வாழ்வின் மிக பெரும் துயரம். /

படிக்கிற எங்களுக்கும் அந்த எண்ணம் ஏற்பட்டுவிடும் அளவுக்கு எழுதியுள்ளீர்கள்.\\

முத்துவேல்,
ரொம்பக் குறும்பு.
சின்ன வயசிலிருந்தே இப்படித்தானா..?


“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

காமராஜ் said...

நடை நல்லா இருக்கு லாவண்யா
வாழ்த்துக்கள்.

உயிரோடை said...

வாங்க Mac. நன்றி.

வாங்க எவனோ ஒருவன். உங்க பதிவையும் பார்த்தேன். ஆனா நான் இந்த புனைவை எழுதி கிட்டதட்ட இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. :)

வாங்க நர்சிம். நன்றி.

வாங்க முத்துவேல். நன்றி.

வாங்க வித்யா. நன்றி.

வாங்க அகநாழிகை. நன்றி.

வாங்க காமராஜ். நன்றி.

Sugirtha said...

ஒரே மூச்சில் படித்தேன். புனைவு என்றாலும் அனுபவித்து எழுதியதுபோல் மிக நன்றாக இயல்பாக எழுதி இருக்கிறீர்கள். நானும் அனுபவித்து வாசித்தேன்.

Anonymous said...

Hi neatly expressed your view. You tried to write it long back but finally expressed in a loveable way. Good work keep it up from One of your known one