"தில் ஹே சோட்டாஷா சோட்டிசி ஆஷா" தமிழில் "சின்னச் சின்ன ஆசை" பாட்டின் ஹிந்தி மொழியாக்கம் முன்னர் சொன்ன பாடல். இளங்காலைத் தென்றல் முகம் தடவும் வேளையில் விரையுமொரு பயணத்தில் இந்த பாடல் கேட்டால் யாருக்குத்தான் மனம் துள்ளாது. அந்த பாடல் வரிகளில் பொருள் மிகச்சிறிய இதயம் அதில் பொத்தி வைத்த ஆசைகளும் சிறிய சிறியன".
இதயம் என்பதை இங்கே மனம் என்றும் கொள்ளலாம். மிகச்சிறிய மனதில் கடலளவு எண்ணங்கள் நல்லவை கேட்டவை ஆசைகள், கோபம், சோகம், இன்னபிற என்று எவ்வளவோ. மனதின் சக்தி மிக வலியது. மனமார நினைத்தால் காற்றில், நீரில் கூட நடக்க முடியும்.
எங்கள் தோட்டத்தில் மூன்று மல்லிகை செடிகள் உண்டு. அவற்றில் ஒன்று ஜூலை மாதம் வரை பூக்கும் மற்றது ஆகஸ்ட் பாதி வரையும், ஒன்று மட்டும் மிக அதிக பிரியத்தோடு செப்டம்பர் இறுதி வரை இரண்டு அல்லது மூன்று மலர்களையாவது தரும். நேற்று அதில் பூத்திருந்த ஏழு பூக்களை ஆசையோடு பறித்தெடுத்தேன்.
"ஒரே ஒரு பூவையாவது விட்டு வையேன்" என்றார் என்னவர். பறித்த ஏழு பூக்களையும் அவர் கையிலேயே கொடுத்துவிட்டு "நீங்க உங்க சாமிக்கே போட்டுக்கோங்க" என்று சொல்லிவிட்டு அலுவலகம் கிளம்பி விட்டேன்.
என்னவருக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். எந்த எதிர்பார்ப்பும் அற்றது அவர் பிரியம். அன்னையின் நேசத்திற்கு அடுத்தது அவரது. என் விருப்பங்கள் எல்லாம் தன் விருப்பங்களாக்கிக் கொள்ளும் தூய மனம் படைத்தவர். எனக்கு மல்லிகை மிகவும் பிடிக்கும் என்றுதான் அவர் மூன்று செடிகளை வளர்க்கின்றார். இன்று பூஜையின் போது எங்கள் வீட்டு கடவுளர் முகம் இருண்ட புன்சிரிப்பிழந்து காணப்பெறுமா? ஒருவேளை நான் ஒரு பூவையேனும் சூடிக் கொண்டு வந்திருந்தால் அவர் காணும் போது எம் வீட்டு கடவுளர் மகிழ்ந்திருப்பார்களோ?
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி தினம்தோறும் தானணிந்து அழகு பார்த்த மாலையை பெருமாளுக்கு கொடுத்தனுப்பிக் கொண்டிருந்தாள். ஒருநாள் இதைக் கண்ட விஷ்ணுசித்தர் இது அபச்சாரமல்லவா என்று அந்த மாலையை எடுத்துச் செல்லாமல் இருக்க பெருமாள் முகம் இருண்டு போனதை போலவும் பின் கோதை சூடிக் கொடுத்த மாலையை அணிவிக்க பெருமாள் புன்னகைப்பதை போலவும் கண்டார். விஷ்ணுசித்தர் கோதையின் தந்தை அவர் மனத்தில் கோதையையும் பெருமாளையும் தவிர வேறு யாருமில்லர்.
ஆஹா விஷ்ணுசித்தர் தன்னை அறியாமல் தன் மனத்தில் கோதை சூடிக்கொடுத்த மாலையை விட்டு விட்டு வந்ததால் பெருமாள் முகம் இருண்டிருப்பதை போல கண்டார். அவர் மகள் மனம் புண்பட்டது. அவர் மனக்கண் முன் விரிந்து பார்க்கும் பார்வையில் பெருமாள் முகம் அவ்வாறே கண்டிருக்க முடியும். மேலும் மனதின் சக்தி எவ்வளவு பெரியது. சதா சர்வ காலமும் பெருமாளையே எண்ணி இருக்கும். அவருக்கு கனவும் வந்தது அன்றிரவு "அவள் சூடி மாலையே சார்த்த கொண்டு வாரும்" என்று.
இது கதையாக இருக்க முடியாது. நாமும் மன உலைச்சலில் இருக்கும் போது அதை பற்றிய சிந்தனையே இருக்கும் கனவுகளில் கூட அதுவே வரும். அப்படிப்பட்ட நிகழ்வே விஷ்ணுசித்தர் வாழ்வில் கோதை சூடி கொடுத்த போது நடந்தது. கோதை மேல் கொண்ட பேரன்பால் அவர் மனம் அவள் பொருட்டு சிந்திக்க அவள் மனஅலைகள் விஷ்ணு சித்தருக்கு உணர்த்தப்பட்டு இருக்கின்றன.
ஆரம்பத்தில் சொன்னது போல மனம் சிறியதே அதன் சக்தியோடு மிக பெரியது. அதன் செயல்பாடு சொல்லிற்கு அடங்காதது. மனதார நம்பினால் நம்பிய விசயம் கண்டிப்பாக நடக்கும். அதனால் எப்போதும் நல்லதை நினைக்க வேண்டும். ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு. "Think Big" பெரிதாக நினை. நல்லதை நினை. ஆண்டாள் போல அரங்கனை மணக்க கூட முடியும். மனம் அவ்வளவு வலிது.
மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை......
தென்றலை கொஞ்சம் மாலையிட ஆசை....
மேகங்களை எல்லாம் தொட்டு விட ஆசை...
சோகங்களை எல்லாம் விட்டுவிட ஆசை...
நன்றி வைரமுத்துவிற்கும்.....!
அதிகாலையிலேயே அலுவலகம் வரவழைக்கும்எங்கள் சேர்மன் ராஜிவ் மல்ஹோத்ராவிற்கும்…. !!
- உயிரோடை லாவண்யா
10 comments:
வாழ்த்துக்கள் லாவண்யா!
வாழ்த்துகள் லாவண்யா
படைப்பும் நல்லாயிருக்குது
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, வாழ்த்துகள்.
இன்னும் நிறைய எழுத என் அன்பான வாழ்த்துக்கள் தோழி.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
வாழ்த்துக்கள் லாவண்யா.. :)
உங்கள் எழுத்துக்கள் மல்லிகை போல் மணந்து எல்லோரையும் மேலும் மேலும் கவரவும் வாழ்த்துக்கள்!
150 பதிவுக்கு, வாழ்த்துக்கள் லாவண்யா.
உயிர் எழுத்தும் படித்தேன்.
அவரவர் ரயில் தூக்கலானது.
அழகான பின்னல்,லாவன்யா!பூக்களை எண்ணி பறிக்கவும்,உங்களவர்க்காக அவ்வளவு பூக்களையும் தருகிற அன்யோன்யமும்,மகள் வாழ்ந்துகொண்டிருப்பதை பார்ப்பதுபோல் நீங்கள் வாசிக்க தந்த மற்றொரு கவிதை!நூத்தம்பதுக்கு
வாழ்த்துக்கள் லாவண்யா!நிறைய வாசிக்க தாருங்கள்.
150 க்கும் வாழ்த்துக்கள்
தொடருங்கள்....
நன்றி சென்ஷி.
நன்றி தியா.
நன்றி உலவு.காம்
நன்றி யாத்ரா.
நன்றி வாசு.
நன்றி முத்துலெட்சுமி.
நன்றி உழவன்.
நன்றி காமராஜ்.
நன்றி பா.ரா. உங்கள் கூர்ந்த பார்வை என் எழுத்தை மேலும் வளம் பெற செய்யும்
நன்றி வேல்கண்ணன்.
Post a Comment