Friday, January 13, 2017

Let us break up


சமீப காலமாக ஹிந்தித் திரையுலகில் பெண்களை முன்னிலைப் படுத்தும் கதைகள் மிக அதிகமாக திரையாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. கஹானி, இங்கிலீஷ் விங்கிலிஷ், குயின், என்.ஹெச் 4, பின்ங் என்று நீளும் அந்த பட்டியலில் அடுத்து வந்திருக்கிறது டியர் ஜிந்தகி. அன்பான வாழ்க்கையே என்று தலைப்பிடப்பட்ட இந்த படம்  நம்மில் பலரையும்  "உங்களில் எத்தனை பேர் உங்கள் வாழ்கையை அன்புக்குரியதாகப் பார்க்கிறீர்கள்?  அதைக் காதலிப்பவர்களாக இருக்கின்றீர்கள்" என்று கிண்டலாக கேட்கிறது. ஆம், நாம் தேவையற்ற துக்கம், சோகம், பொறாமை, கோபம், துவேஷம் என்ற எண்ணற்ற குப்பைகளைச் சுமந்து கொண்டிருக்கிறோம். அடுத்தவர்கள் மேல் கொண்டுள்ள பல்வேறு தேவையற்ற உணர்விலும் நம்முள்ளேயே எத்தனை மன அழுத்தங்களை, வேண்டியோ வேண்டாமலோ தேவையற்ற பயங்களைச் சுமந்து திரிகிறோம். அவற்றை எல்லாம் விட்டொழித்து கடலலைகளோடு கபடி ஆட வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறது டியர் ஜிந்தகி.

இந்த தலைப்பினை திரைப்படத்தின் நாயகி (ஆல்யா பட்) சிறுவயதில் நூற்றுகணக்கான கடிதங்களை தன்னை பெற்றோருக்கு எழுதுபவளாக சித்திரித்தப்பதால் அந்த கோணத்தில் வாழ்க்கைக்கு ஒரு கடிதம் என்று எடுத்துக் கொண்டு பார்த்தால்,  நாயகி தன் வாழ்க்கைக்கு தானே எழுதிக்கொள்ளும் கடிதம். அந்த கடிதத்தை எழுத அவள் தன் வாழ்வின்  ஒரு பகுதியோடு நடத்தும் பயணமே இந்த திரைப்படம். அது நம் அனைவருக்கும் வாழ்க்கையின் வேறொரு கோணத்தை சித்தரிப்பது சிறப்பானது. நாம் எதை சிந்திக்கிறோம் எதன் பின்னால் நம் அனைத்து நம்பிக்கையையும் வைக்கிறோம். எதற்காக எல்லா உழைப்பையும் கொட்டி அதன் பின்னர் அலைந்து திரிகிறோம். அத்தனை உயர்வாக எந்த விசயங்களும் இல்லை. வாழ்க்கை சுமக்கப்பட வேண்டியது அல்ல நேசிக்கப்பட வேண்டியது என்று காட்சிப்படுத்தி இருக்கின்றார்கள் திரைப்படக் குழுவினர். ஹிந்திபடங்களில் நான் எப்போதும் காண்பது சிறப்பான தொய்வற்ற திரைக்கதை. இந்த படத்திலும் அப்படியே அமைந்திருப்பது கூடுதல் பலம். பின்னணி இசை காட்சியமைப்பு என்று எதிலும் மிகையற்ற திரையாக்கம். 

கதையின் நாயகி கதைப்படி ஒரு கேமிரா உமன்(நன்றி: கௌரி ஷின்டே) முதலிரு காட்சிகளுக்குள்ளேயே, அவள் காட்சி வழி உணர்வை கடத்தும் கலையை கொண்டவள் என்பதை பார்வையாளர்கள் உணரும் வண்ணமும் திரைக்காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவ்வளவு திறமையான, முக்கியமாக தன்னுடைய திறமையை முழுமையாக உணர்ந்த நாயகியின் வித்தியாசமான நடவடிக்கைகள் ஆரம்ப காட்சிகளிலேயே பதிவு செய்யப்படுகிறது. வீட்டில் எந்த பொருட்களிலும் ஒழுங்கின்மையையே அவள் ரசிக்கிறாள். அவளே ஒரு ஒழுங்கின்மையின் அடையாளம் போல் காட்சியளிக்கிறாள். மிகவும் கிழிந்த ஜீன்ஸ் போட்டுக் கொள்கிறாள், பிறர் சரி செய்ய செய்ய அலங்கார பொருட்களை கவிழ்த்தி வைக்கிறாள். நாற்காலியில் படுத்துக் கொள்கிறாள். தான் ரசிக்கும் போட்டோக்களை தலைகீழாக வைத்திருக்கிறாள்.(படுத்துக் கொண்டுப் பார்க்கும் போது அவை நேராக தெரியலாம்) பெற்றோரிடம் பேசவே பிடிக்காத கசப்புணர்வோடு இருக்கிறாள். அவள் மிகவும் கலை உணர்வு மிக்கவள். ஆனால் உள்ளுக்குள் மிகவும் தன்னைத் தானே அசிங்கமாய் தான் ஒழுங்கற்றவள் என்று நினைக்கிறாள் என்பதை உணர்த்தும் பல காட்சிகள் அமைந்திருக்கிறது.

இத்தனையாக ஜீனியஸ் மற்றும் வியேர்ட் தன்மைகளின் கலவையான நாயகி பார்க்கவும் மிக அழகாக இருக்கிறாள். மேலும் அந்த அழகில் பலர் மயங்கி சரிகின்றனர் என்பதையும் கூடவே அறிந்திருக்கிறாள். எல்லாரையும் ஆண் நண்பர்கள் ஆக்கிக் கொள்கிறாள். ஆனால் அவர்கள் நெருக்க நினைக்கும் போது தானே விட்டு விட்டு ஓடிவிடுகிறாள். தன்னுடைய திறமையும் அழகையும் மிக துல்லியமாக கணித்திருந்தாலும் அவள் முக்கியமான தருணங்களில் உளறுகிறாள். தன்னால் நினைத்ததை சொல்ல முடியாமல் தவிக்கிறாள். காரணமெல்லாம் ஒரு ப்ரேக் அப். அது காதல் தோல்வியிலிருந்து, அவளுடைய வாழ்க்கையின் வேறு ஒரு பயத்தை, தெளிவின்மையை எப்படி ப்ரேக் அப் செய்கிறது என்பதே திரைக்கதை. டியர் ஜிந்தகி வாழ்க்கையின் சில முக்கிய கூறுகளை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது. 

சில சமயங்களில் எளிதான வழியை விடுத்து மிக கடினமான வழியை ஏன் தேர்ந்தெடுக்கிறோம். முக்கியமாய் அந்த கடினப்பாதையில் செல்ல தேவையான ஆயத்தங்கள் இல்லை என்றே நமக்கே தெரிந்தாலும் அப்படி செய்வதன் மூலம் நம்மை நாமா தண்டித்துக் கொள்வதாக குரூர திருப்தி அடைகிறோமோ? அதனை நியாயப்படுத்த லட்சியம் அதற்காக தானே இந்த நாள் முயற்சியும் உழைப்பும் என்று பிதற்றுகிறோம். பின்னர் அதன் சுமையை சுமக்க முடியாமல் கடக்க முடியாமல் தவிக்கிறோம். சில இடங்களில் அன்பின் பொருட்டோ அல்லது வேறு எந்த காரணத்தின் பொருட்டோ அல்லது காயப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணத்திலோ மௌனமாக துயரப்படுகிறோம். அப்படி நம்மை நாமே வருத்தி கொள்வதிலும் ஒரு முறையாவது துயரப்படுகிறோம் என்று ஏன் சொல்ல மறுக்கிறோம். இதெல்லாம் எந்த கட்டாயத்தால் செய்கிறோம். தேவையே இல்லாத பயங்கள் தவறான புரிதல்கள் இன்னும் என்ன என்ன குழப்பங்களை கொண்டிருக்கிறோம். இவை அனைத்தும் ஒரு மனநோயின் கூறுகள் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

மனநோய் என்பது தவறான கற்பிதங்களோடு, கற்பிக்கப்பட்ட கோட்பாடுகளோடு இருப்பதே இப்படித் தான் எனக்கு தெரிந்த மன நல ஆலோசகர் ஒருவர் சொல்வார். இந்த படத்தின் மிக முக்கியமான திருப்பம் என்ற பார்த்தால், அது நாயகி மனநோய்க்கு ஆலோசனை வழங்கும் ஒருவரின் பேச்சினால் ஈர்க்கபடுவதே. "ஒருவருக்கு கிட்னி பழுதாகி விட்டது அதை மாற்றிக் கொள்ள மருத்துவமனையில் இருக்கிறேன் என்று சொல்வதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் மன அழுத்தத்தை தீர்த்து கொள்ள அல்லது மூளையின் வேதியல் மாற்ற நிலையை சீர் செய்ய ஒரு மனநல மருத்துவரிடமோ சென்றால் அதனை மறைக்கவே செய்கிறோம். அதாவது மூளை நமது உடலின் பகுதி இல்லை என்பது போல" என்று பேசப்படும் வசனம் எவ்வளவு முக்கியமானது. நாம் அனைவருமே அப்படித்தானே. யாரும் மன நல ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவர்கள் என்றால் அவர்களை பைத்தியங்கள் என்றே பார்க்கிறோம். மன நல ஆலோசகர்களிடம் (தெரப்பிஸ்ட்) செல்பவர்கள் எல்லோருமே மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றோ பைத்தியங்கள் என்றோ நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. அவர்களுக்குள் இருக்கும் மன அழுத்தம் அல்லது இயற்கைக்கு எதிரான விஷயங்கள் எல்லாமே ஏதோ ஒரு மனத்தடையின் காரணமாக அல்லது மிக சிறு வயது பாதிப்பாக இருக்கலாம். வளர்ந்து விட்ட பிறகும் அந்த சிறு வயது பாதிப்பானது அவர்களது பல்வேறு நடவடிக்கைகளில் வெளிப்படலாம். அந்த நடவடிக்கைகள் சம்மந்தப்படவர்களுக்கே புரியாத புதிராக இருக்கலாம். அந்த புதிர் நடவடிக்கைகள் இன்னும் பல்வேறு சிக்கல்களை அவர்களுக்கு கொண்டு வரலாம். 

உதாரணமாக இந்த படத்தில் நாயகி தன்னுடைய அம்மா, அப்பாவிடம் பேசுவதை மிகப் பெரிய சுமையாகவும், அம்மாவிடம் எப்போதும் சிடுசிடுப்பானவளாகவும், தன்னுடைய பெற்றோர் இருக்கும் ஊரான செல்வதற்கே பிடிக்காதவளாகவும் இருப்பாள். அதற்கான காரணம் அந்த மன நல ஆய்வின் மூலமாக தெரியவரும் போது அவளுக்கு அது மாபெரும் அதிர்ச்சியாகவும் பின்னர் அதுவே தெளிவும் ஆகும். இதனை தெரப்பியில் ப்ரேக் அப் என்பார்கள். அந்த "பிரேக் அப்" பிறகு தன்னுடைய சிறு சிறு முயற்சிகளால் அம்மாவிடமும் அப்பாவிடமும் அவள் மிகவும் நெருக்கமாகி விடுவாள். தன்னை தானே மாபெரும் சுமையாக நினைத்தவள் தன்னோடு அன்றாடம் போரிட்டு கொண்டிருந்தவள் தன்னுடைய வாழ்க்கையை இலவம் பஞ்சு போல உணர ஆரம்பிப்பாள்.

எனக்கு தெரிந்த மன நல ஆலோசகருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவருடைய சில அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வார். அவரிடம் ஆலோசனை பெறும் ஒரு பெண் தன்னுடைய அம்மாவிடமும் கணவரிடமும் ஓயாமல் சிடுசிடுப்பவள். அதன் பின்னர் ஏன் இப்படி ஓயாமல் சிடுசிடுத்து துன்பப்படுத்துகிறோம் என்று குற்ற உணர்விலும் தவிப்பாள். ஒரு ஆலோசனையின் போது தன்னுடைய அம்மா தன்னை சிறுவயதில் வீட்டில் யாரிடமோ விட்டு விட்டு வேலைக்கு சென்றதும், மூன்றாவது பெண் குழந்தை என்று அவளை உதாசீனம் செய்துமே காரணம் என்பதை கண்டறிய உதவியதாகவும் அந்த ஆலோசனைக்கு பிறகு அவள் தன்னுடைய அம்மா மற்றும் கணவரிடம் சிடுசிடுப்பதில்லை என்றும் சொன்னார்.

இன்னொரு முறை வேறு ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த போது, அவரும் மன நல ஆலோசனை பெற்றும் தன்னுடைய அனுபவத்தை என்னுடம் பகிர்ந்து கொண்டார். அவர் தன்னுடைய மன நல ஆலோசகரிடம் என்னிடம் பிரச்சனை இருக்கிறதா என்று எப்படி அறிவீர்கள் என்று கேட்டதற்கு நீங்கள் பேசும் விதம், அதன் வேகம், அதற்குள் இருக்கும் படபடப்பு எல்லாம் உங்களுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று காட்டிக் கொடுக்கும் என்று சொன்னதாக சொன்னார். அப்படித் தான் இந்த படத்தில் முதலில் தன்னுடைய பிரச்சனை இன்னது என்று சொல்ல ஆரம்பிக்கும் போது மிக வேகமாக, படபடப்பாக, ஏதோ மாபெரும் தவிப்போடு நாயகி மனநல ஆலோகரிடம் பேசுவாள். பேசி முடிக்கும் முன்னரே பல்வேறு நாற்காலிகளில் மாறி மாறி அமர்வாள்.

அதே போல் மற்றவர்கள் தன்னை ஏதோ தவறாக நினைக்கிறார்கள் என்று நாயகி அவளாக நினைத்துக் கொள்கிறாள் என்று அவள் கண்ட கனவின் விளக்கமாக அவளே உணர்ந்து கொள்வது போலும், இந்த உலகில் தவறு சரி என்று எதுவும் இல்லை எல்லாம் சமூகம் கற்பித்ததே என்றும் மன நல ஆலோசகர் சொல்வார். மேலும் "why silently suffering? Speak out" என்றும் இந்த திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். இந்த எல்லா விஷயங்களுமே எனது நண்பர்கள் மூலம் நான் ஏற்கனவே அறிந்திருந்தேன்.

திரைப்படத்தில் பல காட்சிகள், மன ஆலோசனை வழங்கும் எனது நண்பரையும், கவிஞர் ஆனந்த் அதிகம் நினைவூட்டினாலும் ஒரே ஒரு காட்சி கவிஞர் இசை என்கிற சத்தியமூர்த்தியை நினைவுபடுத்தியது. அவருடைய லூஸ் ஹேர் கவிதையில் சில வரிகள் இந்த திரைப்படத்தில் காட்சியாகி இருக்கிறது. நாயகியின் மனம் கவர்ந்த ஒருவன் அந்த லூஸ் ஹேரை கொஞ்ச நேரம் கட்டி வையேன் என்பான். மேலும் நாயகியின் உடல் மொழி, திறமையான ஒளிப்பதிவாளர் ஒருவரின் உடல்மொழியை ஒத்திருந்தது. அவள் படம் எடுக்கும் விதம் மற்றும் ரெக்கார்டிங் செய்யும் விதம், ஒளி, ஒலியை கூட்டும், குறைக்கும் விதம் எல்லாம் அதி கச்சிதமாக இருந்தது. மன தடுமாற்றம் உள்ளவர்கள் அமர்ந்தால் கிரீச்சிடும் நாற்காலி படத்திலேயே எனக்கு மிக பிடித்த ஒன்றாக இருந்தது. மேலும் மனநல ஆலோசனையின் போது மனநல ஆலோசகர்கள் சொல்லும் Session, Pattern என்ற வார்த்தைகளும் திரைப்படத்தில் வருகின்றது. மேலும் moral of the story ஆக genius knows where to stop” என்ற வசனம் மிகவும் நறுக்கானது. வாழ்க்கையில் மிகவும் தேவைப்படுவது.

எந்த ஒரு கலையும் அனுபவத்திலிருந்து உதிப்பதே. அதே போல் அந்த கலையில் சொல்லப்பட்ட அனுபவத்தை நாம் உணர்ந்து பார்க்கும் அந்த தருணமே மிக நெகிழ்வானது. இந்த திரைப்படத்தில் ஆரம்ப காட்சி ஒன்றில் ஒரு பெண், தான் காயப்பட்டதாக, உடன் வரும் ஆணை மறுத்துக் கொண்டே வருவாள். எப்படியாவது சமாதானம் செய்து விட வேண்டும் என்ற செல்ல அணைப்பை, அவன் வழங்கும் தருணம், அவள் மிகவும் வெறுமையாக பார்ப்பது போலிருக்கும் காட்சியை, அந்த பெண் அவள் வேண்டாமென்று சொல்லும் இளைஞனின் அணைப்பிலிருந்தபடியே கடக்கும் மற்றுமொரு இளைஞனை கண்டு மித மிஞ்சிய புன்னகையை பரவவிட்டு பார்ப்பது போல் நாயகி மாற்றி அமைப்பாள். அந்த காட்சிக்கு பிறகு நாயகியிடம் இது உங்கள் வாழ்வனுபவத்திலிருந்து அமைக்கப்பட்ட காட்சியா என்று தயாரிப்பாளர் கேட்பான். அதே போல் அவர் எடுக்கும் குறும்படத்தில் வரும் போர்ச்சுகீஸ் முதல் பெண் கமாண்டோ தன் பாதுகாப்பை கருதி தான் பெண் என்பதை மறைத்து பதினான்கு வருடம் போரிடுவதும் அந்த சமயத்தில் எல்லாம் அவள் மிகவும் குற்ற உணர்வால்  தன்னிடம் தானே போரிட்டுக் கொண்டிருந்தாள் என்பது போல் காட்சி அமைத்து, பின்னர் ஒரு மருத்துவரின் ஆலோசனையும் அவர் தரும் மனதிடமும் அவளை பெண் கமாண்டோவாகவோ போரினை தொடர செய்வதாக எடுத்திருப்பாள். அதுவும் உங்களுடைய வாழ்க்கையிலிருந்து தானா என்று கேட்பான் மற்றும் ஒருவன். ஆம் வாழ்க்கையிலிருந்து உதிக்கும் கலை அதி அற்புதமாக இருக்கும். வாழ்க்கை அனுபவத்தை புரட்டும் கலை இன்னும் அற்புதமாக இருக்கும். அப்படி பல சந்தர்பங்களில் நான் பேசி கேட்டறிந்த விஷயங்களை, அனுபவங்களை, படித்த கவிதையை திரையில் கண்டதால் இந்தப் படம் எனக்கு மிகவும் நெருக்கமாக தோன்றியது.

4 comments:

ர. சோமேஸ்வரன் said...

//நாம் எதை சிந்திக்கிறோம்?
எதன் பின்னால் நம் அனைத்து நம்பிக்கையையும் வைக்கிறோம்?
எதற்காக எல்லா உழைப்பையும் கொட்டி அதன் பின்னர் அலைந்து திரிகிறோம்?
அத்தனை உயர்வாக எந்த விசயங்களும் இல்லை.
வாழ்க்கை சுமக்கப்பட வேண்டியது அல்ல நேசிக்கப்பட வேண்டியது.//

ஓவொருவரும் கேட்டுக்கொண்டு தெளிவு பெற வேண்டிய முக்கியமான கேள்விகள். படம் பார்க்க வில்லை ஆனால் உங்கள் விமர்சனமும் எழுத்து நடையும்,விளக்கங்களும் அருமை.

'பரிவை' சே.குமார் said...

படம் இன்னும் பார்க்கலை...
தங்கள் விமர்சனம் வாசித்தேன்...
இன்று இரவு படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.
நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு விமர்சனம். நன்றி.

படம் பார்க்கத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம்.

உயிரோடை said...

அனைவர்க்கும் நன்றி