Wednesday, June 24, 2009

முத‌ல் ம‌ழைக்கு

இன்றும் விடிந்திருந்தது வ‌ழ‌க்க‌ம் போல். தூக்க‌க‌லக்கமாக க‌ண்களிரண்டும் எரிந்து தொலைத்த‌து. தின‌ச‌ரி வேலையை ம‌ன‌துக்குள் ப‌ட்டிய‌லிட்டேன் அது நீள‌த் துவ‌ங்கிய‌து நான் ப‌டிக்க‌ நினைத்து ப‌டிக்காத புத்த‌ங்க‌ளின் ப‌ட்டிய‌ல் போல‌. தின‌ச‌ரி குளிய‌ல் தானே என்று அவ‌ச‌ர‌மாக‌ குளித்து, அவ‌ச‌ர‌மாக‌ உடுத்தி, அவ‌ச‌ரமாக‌ விள‌க்கேற்றி, அவ‌ச‌ரமாக‌ ச‌மைத்து ஹூம்ம் எல்லாம் வ‌ழ‌க்க‌ம் போல‌வே தானா?

கிள‌ம்பும் போது ம‌ழை பிடித்த‌து. அதுவும் நீண்ட‌ ப‌ய‌ண‌த்தின் நெடும் சாலை போல‌ விரிந்த‌ க‌டும் கோடைக்கு பின் பொழிந்த‌ முத‌ல் ம‌ழை. ப‌ருவ‌ம‌ழை ச‌ற்று தாமத‌மாக‌ வ‌ந்த‌ போதும் அதே பொலிவு. ஒவ்வொரு வ‌ருட‌மும் தான் ம‌ழை பெய்கின்ற‌து. ஆனால் எல்லா ம‌ழைக்கும் ஏன் ஒரே குண‌ம். ம‌ழைக்கென்ன‌ இந்த‌ மாய‌ குண‌ம். காலையிருந்த‌ சிறு சோம்ப‌லை கூட‌ விர‌ட்டி அடித்து விட்ட‌து. எப்போதும் அய‌ர்ச்சி ஏற்ப‌டுத்தும் ஹிந்தி பாட‌ல்க‌ள் கூட‌ இன்று இனிமையாக‌ ஒலித்த‌து போல‌ இருந்த‌து.

ம‌ழையோடு பய‌ணித்த‌ல் சுக‌ம். ம‌ழை நின்ற‌ பின் குளிர்காற்றோடு தொட‌ரும் ப‌ய‌ணத்தில் ம‌ழையோடான‌ ப‌ய‌ண‌த்தில் இருக்கும் சில‌ அசௌக‌ரிய‌ங்க‌ளுமில்லை. ம‌ழை பொழியும் போது கார் ஜ‌ன்ன‌ல் க‌தவுக‌ளை திற‌க்க‌ முடியாது. மேலும் ம‌ழைக்காக‌ முன் கண்ணாடியில் அசையும் வைப்ப‌ர்க‌ள் ந‌ம் க‌வ‌ன‌ம் சிதைக்கும். ம‌ழை நின்ற‌ பின் ஜ‌ன்ன‌ல் க‌த‌வுக‌ளை திற‌ந்து விட்டு, பிரிய‌ காத‌ல‌ன் ஸ்ப‌ரிச‌த்தை காற்றில் உண‌ர்ந்த‌ப‌டி விரைந்து ந‌க‌ர்வ‌து அப்பப்பா என்ன‌ ஆன‌ந்த‌ம்.

மழைக் காற்றோடான பயணத்தில் விரையும் எங்க‌ளை போல‌வே விரைந்து பின் ந‌க‌ரும் இந்த‌ ம‌ர‌ங்க‌ளும் செடிக‌ளும் இத்தனை ப‌சுமையை எங்கே ம‌றைத்து வைத்திருந்து இத்த‌னை கால‌ம்? வ‌ரும் ம‌ழையை ஆன‌ந்த‌த்தோடு வ‌ர‌வேற்று ந‌ட‌னமாடி க‌ளைத்திருந்த‌ வ‌ண்ண‌ ம‌யில் ம‌ழை நின்ற‌ பின், நீண்ட‌ கூந்த‌லை போன்ற‌ த‌ள‌ர‌ த‌ள‌ர‌ இருந்த‌ தோகையை ஒரு ம‌ர‌க்கிளையில் உல‌ர்த்திக்கொண்டு இருந்த‌து. சாலையெங்கும் த‌ண்ணீர் தெளித்திருந்த‌து விடிய‌ற்கால‌ வாச‌லை நினைவுட்டிய‌து. ம‌ழை கோல‌மும் போட்டால் எவ்வ‌ள‌வு ந‌ன்றாக‌ இருக்கும். க‌ட‌ந்த‌ எல்லா பூக்க‌ளும் த‌ம்மால் இய‌ன்ற‌ அள‌வு ம‌ழைநீரை சேமித்து வைத்திருந்த‌து த‌ன் இத‌ழ்க‌ளில். ம‌ழைநீர் சேக‌ரிப்பு திட்ட‌ம் இந்த‌ ம‌ல‌ர்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌து யாரோ?

ஒவ்வொன்றாய் ர‌சித்த‌ப்ப‌டி முடிந்திருந்த‌ ப‌ய‌ண‌த்தில் இற‌ங்கும் போது ம‌ற‌க்க‌ப்ப‌ட்ட‌ குடை அழுதிருந்தது ம‌ழை ந‌னைய‌ பெறாம‌ல் போன‌த‌ற்கு.

12 comments:

ச.முத்துவேல் said...

ரசித்து எழுதியிருப்பது ரசிக்க வைக்கிறது.

அகநாழிகை said...

ரசனையோடு நன்றாக இருக்கிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றாக இருக்கிறது

உயிரோடை said...

மிக்க நன்றி முத்துவேல்.

மிக்க நன்றி அகநாழிகை.

மிக்க நன்றி ராதாகிருஷ்ணன்.

தொடர்ந்து வாங்க

காமராஜ் said...

இரண்டரை பாராவும் மழை மணக்கும் இதமான காற்று வீசுகிறது நல்ல ரசனை

"உழவன்" "Uzhavan" said...

//இந்த‌ ம‌ல‌ர்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌து யாரோ?//
 
நல்ல கற்பனை வளம். அருமை

உயிரோடை said...

மிக்க நன்றி காமராஜ்.

மிக்க நன்றி உழவன்.

சதங்கா (Sathanga) said...

'ரசிகை நல்ல ரசிகை ... என்னைத் தெரியுமா ?'

என்று நீங்கள் பாடுவது போல இருக்கிறது. ரசனை மிகுந்த கட்டுரை !!

உயிரோடை said...

நன்றி சதங்கா.

மதன் said...

நீண்ட நாட்களாகி விட்டது உங்களுடன் பேசி.. பதிவை ரசித்தேன்.. நிறைய எழுதுங்களேன் சகோதரி..!

குடந்தை அன்புமணி said...

மழை பற்றி நினைத்தாலே ஆனந்தம்தான்.ஆனா அது சூப்பர் ஸ்டார் மாதிரி. எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்குமே தெரியமாட்டேங்குது. வரவேண்டிய நேரத்திற்கு வந்தால் மகிழ்ச்சி.

உயிரோடை said...

வாங்க‌ ம‌த‌ன். ந‌ல‌ம் தானே. க‌ருத்துக்கு ந‌ன்றி.

வாங்க‌ குட‌ந்தை அன்பும‌ணி. ந‌ன்றி மீண்டும் மீண்டும் வாங்க‌.