Monday, April 27, 2009

தொலைந்து போதல்

தொலைந்து போவதும் மீண்டு வருவதும் வாழ்கைத் தத்துவம் பூமாவின் கவிதை போல.

ஒருத‌ர‌ம் காத‌ல்
என்னை மீட்டுத் த‌ந்த‌து
ஒருத‌ர‌ம் புல்லாங்குழ‌ல்
என்னை மீட்டுத் த‌ந்த‌து
ஒரு வ‌ண்ண‌த்துப்பூச்சியும்
என்னை மீட்டுத் த‌ந்த‌து
நான்தான் அடிக்க‌டி
தொலைந்துவிடுகிறேன்!

-- பூமா ஈஸ்வரமூர்த்தி

ஆனால் என் அனுபவம் ஒரு வித்தியாசமான தொலைந்து போதல்.

அன்னியதேசத்தில் தனிமையோடு இருத்தல் மிக கொடியது. அதனால் கிடைத்தவர்களை எல்லாம் தோழமையாக்கி கொண்டு ஒன்றாய் உண்பதும் வார இறுதியில் கூட்டமாய் வெளியே செல்வதும் வித்தியாசமான அனுபவங்களே. அதுவும் ஒரே மொழி பேசும் நண்பர்கள் வாய்த்துவிட்டால் மிக சீக்கிரம் தோழமையும் உரிமையும் பாராட்ட ஆரம்பிப்பது மிக இயற்கை. அதுவும் ஒரு தாய்க்கு உண்டான பரிவோடு அனைவர்க்கும் உணவை சமைப்பதிலும், பரிமாரி விடுவதிலும், கூட்டத்தை கூட்டுவதிலும் பிரசித்தி பெற்றவள். எல்லோர்க்கும் என் மேல் பிரியம் என்றே நினைத்திருந்தேன். ஒரு சுபயோக சுப வார இறுதியில் மதிய உணவிற்கு பிறகு வெளியே எங்கும் போவதற்கான ஆயத்தம் எதுவும் தெரியாத காரணத்தால் அறைக்கு சென்றேன். கொஞ்ச நேரம் சென்று தமிழ் பேசும் அந்த நண்பரின் அறை எண்ணை அழைத்தேன் பதில் இல்லை. இன்னும் ஒரு தோழியின் அறையையும் அழைத்தேன் அங்கும் பதில் இல்லை. அவளுடைய செல்லிடைபேசியில் அழைத்தேன் எல்லோரும் வெளியில் கிளம்பி நீண்ட நடை சென்றிருப்பதாக சொன்னாள். சட்டென மனதை மேகம் திரையிட்டது. தனிமை போன்ற வெறுமையொன்று கூட வந்தமர்ந்தது. ஏதுவும் செய்ய தோன்றவில்லை.

வெளியே கிளம்பி கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தேன். ஒன்றையொன்று கொஞ்சிக் கொள்ளும் கிளிகளும், அழகிய மலர்களும், பூனை போலிருந்த சுவீடன் தேசத்து முயல்களும் என் வெறுமையை போக்கி கொண்டிருந்தன. தனிமை கூடக்கூட நடக்க ஆரம்பித்தது. நிறைய தெருக்களை கடந்து, சில பூங்காக்களை கடந்து ஒரு ஏரியை கடந்து ஒரு பாலமேறி நீண்ட தொலைவு சென்று பின் திசை புரியவில்லை. வளைந்து வளைந்து நடக்கின்றேன் வந்த வழி புரியவில்லை. எந்த வளைவில் திரும்பி நடந்தால் வந்த இடம் போகலாம் என்பது தெரியவில்லை. அருகே நடந்து வந்த ஒருவரிடம் கேட்டேன். அவர் பேசிய பாஷை புரியவில்லை. சட்டென தெரிந்தது தொலைந்து போய்விட்டேன் என்று. கையில் காசு கூட எடுக்கவில்லை. செல்பேசியும் இல்லை. வசிக்கும் தெருவின் பெயர் மட்டும் தோரயமாக தெரியும். சற்றே பயத்தோடு நடந்தேன். எப்படி எப்படியோ அலைந்து ஒரு பிராதான சாலையை அடைந்தேன். எங்கள் விடுதி வழி செல்லும் பேருந்து அவ்வழியில் செல்வதை கண்டேன். சற்றே நம்பிக்கை பிறந்தது. ஆயினும் எந்த திசையில் செல்ல வேண்டும் என்ற குழப்பம் இருந்தது. ரங்கனை நொடி நேரம் மனதில் நினைத்து ஒரு திசையில் நடக்க ஆரம்பித்தேன். ஐந்தே நிமிடத்தில் நான் செல்ல வேண்டிய வழி எனக்கு புலப்பட்டது. விடுதி சென்றதும் எதிர்பட்டாள் தோழி எங்கே சென்றிருந்தாய் உன்னை மிக தேடினோம் உன் கைப்பேசியை கூட அழைத்தேன் என்றாள். எந்த சமாதானத்துக்கும் இடம் தராத கலகக்காரியின் வேடமணிந்து அறையை தாளிட்டு கொண்டேன். மனதுக்குள் சிரித்துக் கொண்டேன். மனித்தில் இருந்த வெறுமை குழப்பம் மறைய இந்த தொலைதல் உதவி இருந்தது.

Friday, April 24, 2009

பொம்மலாட்டம்

வாழ்க்கை என்பதே ஒரு பொம்மலாட்டம் தான். இங்கு பிரச்சனை நூல் யார் கையில் என்பதே. பல சமயங்களில் நம் ஆட்டத்தை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் தான் தீர்மானிக்கின்றார்கள். ஆனால் இது ஆடுகின்ற பொம்மையை ஆட்டி வைத்ததவர் யார் என்ற ஆராய்ச்சியைப் பற்றிய நீள்பதிவு.

பொம்மைகள்

ஆடும் பொம்மைக்கு
தான் சாவி கொடுக்கவில்லை என்றான் என் மகன்
பொம்மைக்கும் தனக்கும்
சம்மந்தமே இல்லை என்கிற பாவனையில் என் மனைவி
அம்மாவிடம் கேட்டால்
தான் அந்த பொம்மையை கண்டதே இல்லை என்பாள்
எப்போது நம் வீட்டிற்கு வந்தது என்று
எதிர்கேள்வி கூட கேட்கலாம்
மூன்று பேரும் சத்தியம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள்
அப்பா ஃபோட்டோவில் இருப்பதால்
அவரை கேள்விகள் கேட்க நியாயம் இல்லை
நானே என்னைச் சந்தேகப்பட முடியாது.
மௌனச் சிரிப்புகளுக்கிடையில்
சத்தமெழுப்பி
ஆடும் பொம்மைகள் ஆடிக்கொண்டிருக்கின்றன.

- ஹரன் பிரசன்னா.

பொம்மை ஆடிக்கொண்டு இருக்கின்றது. பார்ப்பவருக்கு இதை ஆட்டி வைத்தவர் யாராக இருக்கும் என்ற சந்தேகம். இந்த சாதாரண விசயத்தை இவ்வளவு அலச வேண்டிய காரணம் என்ன என்று நாம் ஆச்சரிய படலாம். ஆனால் இங்கே ஆடும் பொம்மை ஒரு இறுதி விளைவு.(End result) அந்த இறுதி விளைவின் தாக்கம், எப்படி நடத்திருக்கக் கூடும் என்ற ஆச்சரியம் அல்லது ஆர்வம் எதுவேண்டுமானாலும் காரணிகளை ஆராய காரணமாக இருக்கலாம்.

குற்றம் அறிதல்
-----------------------------

அலுவ‌ல‌க‌த்திலிருந்து த‌லைவ‌லியோடு வீட்டுக்கு வ‌ரும் பெண்ணிட‌ம், உணவின் சுவை சரியில்லை என்று கணவன் குறை கூறினால், பெரும் சண்டை தான் விளையும். அவள் எரிச்ச‌லுக்கு காலையில் இரண்டு நிமிடம் தாமதத்தில் தொட‌ங்கி அதை தொட‌ந்த‌ அலுவலக பேருந்தை தவறவிட‌ல், நெரிசல் மிகுந்த நகர பேருந்தில் பய‌ணித்தல் அதனால் வேலையில் கவனம் செலுத்த முடியாம‌ல் த‌லைவ‌லியில் முடித‌ல், ச‌க‌ ப‌ணியாள‌ர்க‌ளின் அல‌ட்சிய‌ம், உய‌ர் அதிகாரியின் தேவையில்லாத‌ கோப‌ம் இதில் எது வேண்டுமானாலும் கார‌ண‌மாக‌லாம்.

பிறிதொரு நோக்கில் சென்னையிலிருந்து திருச்சி சென்ற‌டைய‌ வேண்டிய‌ மிக முக்கியமான ஒரு கோப்பு சென்ற‌டைய‌வில்லையாயின், மேலாள‌ர் க‌ண‌க்க‌ரையும், க‌ண‌க்க‌ர் ப‌ணி பைய‌னையும், ப‌ணி பைய‌ன் அலுவ‌ல‌க‌ விதிமுறைக‌ளையும் ம‌ற்றும் சில‌ர் வேறு சில‌ரையும் கை நீட்டுவ‌ர். எவரின் த‌வ‌றாக‌ வேண்டுமானாலும் இருக்க‌லாம். கோப்பு சென்ற‌டைய‌ வேண்டிய‌ இட‌ம் செல்ல‌வில்லை.

சரி இங்கே காரணிகளை பட்டியலிட்டாற்று. அதனால் ஆட்டம் நிற்கவா போகின்றது. எந்த பிரச்சனைக்கும் தீர்வை தேட வேண்டும். பிரச்சனை வந்ததன் காரணம் தேடுவதால் ஒரு பலனும் இல்லை. காரணிகள்(குற்றம்) அறிவதால் பொம்மையின் ஆட்டம் நிற்க போவதில்லை.

மாற்றங்களை மறுதலித்தல்
--------------------------------------------------

ஒரு பெண் குழந்தையின் தாய் த‌ன் தோற்ற‌ம் கார‌ண‌மாக‌ அவள் க‌ண‌வ‌னுக்கு த‌ன்னை பிடிக்க‌வில்லை என்று தெரிந்து தாய் வீடு வ‌ந்தும் விவாக‌ர‌த்து பெற‌ த‌ய‌ங்குகின்றாள். மாற்று வாழ்க்கையை ஏற்க மறுக்கின்றாள். இதன் காரணம் சமூகத்தின் மேல் இருக்கும் பயமா, மனத்தின் தெளிவின்மையா அல்லது பெண் என்பதால் சார்புடைமை அதிகம் என்பதாலா?

க‌ணினி துறையில் ப‌ணி புரியும் மிக‌ க‌டுமையான‌ உழைப்பாளி ஒருவ‌ர், வேலைக்கு தகுந்த சன்மானமுமில்லாத‌ போதும், பணி எப்போது வேண்டுமானாலும் போய்விடுமோ என்ற பயமிருந்த‌ போதும் வேறு வேலைக்கு முயற்சிக்கவில்லை. இதற்கு காரணம் தன்னம்பிக்கை இன்மையா? வாய்ப்பு வசதிகள் பற்றிய கவலையா? இங்கே இருக்கும் அளவு நண்பர் கூட்டம் திரட்ட முடியுமா, என்ன தான் கஷ்டம் என்றாலும் பழகிய இடமாகிவிட்டது என்பதா?

பணி இடம் குடி இருப்பிருலிருந்து மிக தொலைவில் இருந்தும் ஒருத்தி வீடு மாற்றிக் கொள்ள யோசிக்கின்றாள். அங்கே இதை போன்ற வசதியா வீடு கிடைக்குமா? வேலையாட்கள் கிடைப்பார்களா? குழந்தைக்கு பள்ளி சரியாக அமையுமா? மருத்துவம் பிற வசதிகள் எல்லாம் இங்கே ஓரளவு கைப்பட்டு விட்டது அங்கு அப்படி வாய்க்குமா?

எல்லோரிடத்திலும் எத்தனை கேள்விகள்? எத்தனை தயக்கங்கள்? மாற்றங்களை முயற்சிக்கும் வரை தான் துயரமெல்லாம். மாற்றத்திலும் அதற்குண்டான நன்மைகள் விளையத் தான் செய்யும் என்பதை அனுபவம் கொண்டு தெளியவேண்டும். மாற்ற‌ங்க‌ளை ம‌றுக்கும் வ‌ரை பொம்மைக‌ளின்(பிர‌ச்ச‌னைக‌ள்) ஆட்ட‌ம் நிற்க‌வா போகின்ற‌து

மடமை போற்றுதல்
-----------------------------------

மாத‌வி எப்பேர்ப‌ட்ட‌ பெண். இவள் பிறப்பால் வரைவின் மகள்; ஆனால் நடப்பில் அவள் குலமகளாகத் தான் இருந்தாள். கோவ‌ல‌ன் பல ஆண்டுகள் மாதவி வீட்டில் கிடக்கவில்லை. மாதவியோடு களித்துக் கிடந்ததும், மணிமேகலையைப் பெற்றதும் ஓராண்டுக்குள் நடந்ததே. ஓராண்டிற்குள் ஓர் இல்வாழ்க்கையே ஓய்ந்து போகிறது. இதன் பின்னர் மாதவி துறவு வாழ்க்கை தான் வாழ்கிறாள்.

சிலப்பதிகாரத்தில் கானல் வரிகள் மாதவி கூறுவதாவது

தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்
எம்மை நினையாது விட்டாரோ விட்டுஅகல்க
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்

கோவ‌லன் மாத‌வியோடு கொண்டிருந்த‌து வெறும் உட‌ல் இச்சை. மாத‌வியின் மேல் இருந்த‌ ஈர்ப்பு குறைந்த‌தும், மாத‌வி அந்நாட்டு ம‌ன்னனை புக‌ழ்ந்து பாடினாள் என்ற‌ சிறு காரணத்திற்காக த‌ன்னை விட்டக‌ன்ற‌ கோவலனை, தான் தன் மனை என்று போனவன் போனானடி என்று விடாமல் "நம்மை மறந்தாரை நாம் மறக்கலாமா?" என்று வினவும் மாதவிக்கு கோவலன் மேல் இருந்தது காதலா, காமமா, இதை எல்லாம் தாண்டிய ஏதோ ஒன்றா? இப்படிப்பட்ட மாதவிகளின் மடமை போற்றுத‌லால் கோவலன் போன்ற பொம்மைகள் இன்றும் ஆடிக்கொண்டுதான் இருக்கின்றன.


கோதை ஒரு அற்புத‌ பிற‌வி. அவ‌ள் தோன்றிய‌தே ஒரு துள‌சி செடி அருகில் தான். சிறு வயதிலிருந்தே கண்ணனைப் பற்றி தன் தந்தையார் பாடிய பாடல்களையும் அவனின் பாலலீலைகளையும் அவர் மூலமாய் கேட்டு, அந்தக் கண்ணனையே தன் காதலனாய் வரித்துவிட்டாள் கோதை. க‌ண்ண‌ன் மேல் அவ‌ளுக்கு எத்த‌னை பிரிய‌ம். திருமாலுக்கு சார்த்த‌ வேண்டிய‌ மாலையை தான் அணிந்து கொடுத்து "சூடிக் கொடுத்த‌ சுட‌ர்கொடி" பெய‌ர் பெற்று கோதை ஆண்டாள் ஆனாள்.

நாச்சியார் திருமொழியில் ஒரு பாடல்

வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் தரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப,
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க் என்று
உன்னித்து எழுந்த என் தடமுலைகள்
மானிடர்வக் கென்று பேச்சுப் படில்
வாழ்கில்லேன் கண்டாய் மன்மதனே

திரும‌ண‌ வ‌ய‌தில் திருமாலை ம‌ண‌க்க‌ வேண்டும் என்று வ‌ட்ட‌மிட்டு பார்த்த‌ல், கூட‌ல் கூடிய‌தா என்று பார்த்த‌ல், ம‌ன்ம‌த‌னை வேண்டுத‌ல், பாவை நோன்பிருத்த‌ல்,க‌ன‌வு காணல் என்ற‌ ப‌ல‌ ம‌ட‌மைக‌ளை ஆண்டாள் போன்றினாலும் அவை எல்லாவ‌ற்றிர்க்கும் முத்தாய்ப்பாக‌ "என் மார்பகங்கள் திருமாலுக்கேய‌ன்றி மனிதர்களுக்கு அல்ல‌" என்று கூறும் ஆண்டாள் தன்னிலை மறந்தவளா? கடவுளை கண்டவளா? அல்லது தானே கடவுள் என்ற அக‌ங்காரம் பிடித்தவளா? காரணம் எதுவாயினும் ஆண்டாள் மடமை போற்றியதால் திருப்பாவை, திருமொழி என்ற பொம்மைகள் ஆடி எழுந்தன.

Tuesday, March 24, 2009

ஒல்லென‌ ஒலிக்கும் புன‌லென‌ புல‌ம்பும் தலைவியும்

ச‌ங்க‌ கால‌த்தில் பெண்க‌ள் ம‌டைமை போற்றிய‌த‌ற்க்கு ப‌ல‌ ஆதார‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌. இங்கே நாம் பார்க்க‌ இருக்கும் ஐந்திணை ஐம்ப‌து பாட‌ல்க‌ளில் ம‌ருத‌த் திணை பாட‌ல்க‌ள் அனைத்திலும் த‌லைவ‌ன் த‌லைவிகிடையேயான‌ உய‌ர்ந்த‌ப‌ட்ச‌ ஊட‌லும், த‌லைவியின் வேத‌னையும் புல‌ப்ப‌டுகின்ற‌ன‌.

கோலச் சிறு குருகின் குத்து அஞ்சி, ஈர் வாளை
நீலத்துப் புக்கு ஒளிக்கும் ஊரற்கு, மேல் எல்லாம்,
சார்தற்குச் சந்தனச் சாந்து ஆயினேம்; இப் பருவம்
காரத்தின் வெய்ய, என் தோள்! 24

கோலம் - அழகு
குருகு - நாரை
"பாணனே! அழகிய சிறிய நாரையினது குத்துதலுக்கு அஞ்சிக் குளிர்ந்த வாளை மீன்கள் நீல மலர்க் கூட்டத்தில் புகுந்து மறைந்து கொள்ளும்படியான மருத நிலத்தூர்த் தலைவனுக்கு முன்பெல்லாம் கூடும்போது எம்முடைய தோள்கள் அவருக்குச் சந்தனக் குழம்பு போன்று குளிர்ச்சியாக இருந்தன. ஆனால் இப்போதோ புண்ணிற்கு இடும் மருத்துவக் காரத்தைப் போல வெப்பமாய் உள்ளன" என்று தலைவி கூறினாள்.


இப்படி த‌லைவ‌னுக்கு தன் வெறுப்பிருக்குமோ என்ற‌ அய்ய‌த்துக்கும் அத‌ற்கு முன் பின்வ‌ரும் பாட‌ல்க‌ளில் ஆதார‌ம் இருக்கின்ற‌ன‌ த‌லைவ‌ன் ப‌ர‌த்தை வீட்டுக்கு செல்கின்றான் அவ‌னை த‌ட்டி கேட்க‌ கூடாதா என்று அவ‌ன் ந‌ண்ப‌ரான‌ பாண‌றிட‌ம் கேட்கின்றாள்.


பெய் வளைக் கையாய்! பெரு நகை ஆகின்றே -
செய் வயல் ஊரன் வதுவை விழவு இயம்ப,
கை புனை தேர் ஏறிச் செல்வானைச் சென்று இவன்
எய்தி, இடர் உற்றவாறு! 26

வதுவை - திருமணம்
"வளையல்கள் அணிந்த கைகளையுடைய தோழியே! திருத்தப் பெற்ற மருத நிலத்து நன்செய் வயல்கள் சூழ்ந்த ஊர்க்குத் தலைவன், பரத்தையர் புதுமண விழாக் கொண்டாடும் பொருட்டுத் தேரின் மீது அமர்ந்து பரத்தையர் பால் செல்லும் போது, என் புதல்வன் எதிரே போய்ப் நின்றதால், தலைவன் பரத்தையரைப் புதுமணம் செய்ய முடியாது துன்பம் அடைந்த நிலையானது எனக்கு மிகுந்த நகைப்பினையுண்டாக்குகின்றது" என்று புதல்வனை முனிந்து தலைமகள் மறுத்தாளைப் போலத் தோழிக்கு வாயில் நேர்ந்தாள்.


இந்த‌ நிலையில் வெளிப்ப‌டும் சிரிப்பு விர‌த்தியாலா அல்ல‌து அப்ப‌டியாவ‌து அந்த‌ திரும‌ண‌ம் நின்ற‌து என்ற‌ ச‌ந்தோச‌மா? இந்த‌ த‌லைவியின் நிலை எவ்வ‌ள‌வு வேத‌னை இல்லையா?
இப்ப‌டி இருந்தாலும் இந்த‌ த‌லைவியின் ம‌டைமையை பாருங்க‌ள்.

'ஒல்லென் ஒலி புனல் ஊரன் வியல் மார்பும்
புல்லேன் யான்' என்பேன்; - புனையிழையாய்! - புல்லேன்
எனக்கு ஓர் குறிப்பும் உடையேனோ, ஊரன் -
தனக்கு ஏவல் செய்து ஒழுகுவேன்? 29

வியல் - அகன்ற
இழை - அணிகலன்
"அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தோழியே! 'ஒல்' என்று ஒலிக்கும்படியான ஒலி புனல்(அருவி) சூழ்ந்த மருத நிலத்தூர்த் தலைவனது அகன்ற மார்பினைத் 'தழுவ மாட்டேன்' என்று அவனைக் காணுவதற்கு முன் நினைத்திருப்பேன். ஆயினும் என் தலைமகனுக்கு ஊழியம் புரிந்து நடக்கக் கூடிய தன்மையுடையவள் ஆதலால் அவனைக் கண்டபின்னும் 'தழுவமாட்டேன்' என்று கூறி மறுக்கவா முடியும்?" என்று தோழியிடம் தலைமகள் கூறினாள்.


:) என்னென்று சொல்வ‌து இந்த‌ த‌லைவியை. இது தான் காத‌ல் என்ப‌தா? இப்ப‌டிப்ப‌ட்ட‌ காத‌ல் அவ‌ளுக்கு தேவை தானா? ஒல்லென் ஒலிக்கும் புன‌ல் எவ்வ‌ள‌வு அழ‌கான‌ காட்சிப‌டுத்துத‌ல் இந்த‌ பாட‌லில் இருக்கின்ற‌து.

பாட‌ல்க‌ளும் விள‌க்க‌ங்க‌ளும் சென்னை லைப்ர‌ரியில் இருந்து எடுக்க‌ப்ப‌ட்ட‌து.

Saturday, January 24, 2009

யூரோவே இல்லாமல் ஃப்ரான்க்போர்டில் ஒரு வலம்

சுவீடனில் இருந்து திரும்பி ஒரு மாதத்தில் மீண்டும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லுவதற்கு விசா கிடைத்தது. ஆனால் இந்த முறை கிடைத்தது ஜெர்மன் விசா. அதனால் ஒரு ஜெர்மனிய நகரத்தில் தரையிறங்கி பின் சுவீடன் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த காரணத்திற்காக ஃப்ரான்ங்போர்ட் வழியாக ஸ்டாக்ஹோம் செல்ல விமான சீட்டுகள் கொடுக்கப்பட்டன அலுவலகத்தில். அதுவும் ஃப்ரான்க்போர்டில் எட்டு மணி நேர இடைவெளி வேறு. அதனால் நானும் என்னுடன் வந்திருந்த நண்பரும் ஃப்ரான்ங்போர்ட் சுற்றி பார்க்க முடிவு செய்தோம். ஒரு நாள் முழுவதும் எந்த போக்குவரத்தில் வேண்டுமானாலும் செல்ல ஏதுவான பயணசீட்டு பதினாலே யூரோவிற்கு கிடைக்கின்றது ஃப்ரான்ங்போர்டில். அதில் அதிகபட்சம் ஐந்து நபர்கள் பயணிக்கலாம். கடனட்டையில் அந்த பயணசீட்டை வாங்கிக் கொண்டோம். விமானநிலைத்தில் இருந்து ஒரு நுழைவாயில் வழி வந்தால் மேட்ரோ ஏறும் வசதியுள்ளது ஜெர்மன் நாட்டு நகரில். ரயில் நிலையத்தில் சந்தித்த இந்திய நண்பர்களிடம் எங்கே செல்லலாம் என்று கேட்டுக் கொண்டு. ஃப்ரான்ங்போர்ட்டின் வரைபடத்தை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு ரயில் ஏறினோம்.

விமான நிலையத்திலிருந்து சென்ரல்(சென்னை இல்லைங்க) நிலையல் அடைந்து அங்கிருந்து இன்னுமொரு மெட்ரோ ரயில் ஏறி டாம் ரூமர் என்ற நிலைத்தில் இறங்கி அங்கே ஒரு நதியும் நிறைய அருங்காட்சியகங்களும் இருப்பதாக அந்த இந்திய நண்பர்கள் சொன்னதால் அதை பார்க்க கிளம்பினோம். ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்தால், மெயின் நதி(பேரே மெயின் நதி தானுங்க) வருகின்றது. அதன் அக்கரையில் நிறைய அருட்காட்சியங்கள் இருந்தன. அதை பற்றிய விபரங்கள் எழுதி வைக்கப்பட்டு இருந்தன. அதில் ஒரு மிக புராதனமான அருங்காட்சியகத்தை தேர்தெடுத்து சென்றோம். நுழைவு கட்டணமாக பத்து யூரோ கேட்டார்கள். எங்களிடம் இருந்தது அமெரிக்க டாலர்களும் கடனட்டையும் தான். அங்கே கடனட்டை ஏற்று கொள்ளபடாத காரணத்தாலும் டாலர்களை மாற்ற வசதி அந்த இடத்தில் இல்லாததாலும் மேலே நடந்தோம். தொழில்நுட்ப அருங்காட்சியகத்திலும் அதே நிலையே.

ஃப்ரான்ங்போர்டில் என்னை மிக கவர்ந்தது அந்த நதிகரையோரமே. வசந்த கால மகழ்ச்சியில் மலர்ந்து பூத்திருந்தது அந்த நதிகரை. சற்று தொலைவில் இருந்து பார்த்தால் கிடைத்த இடமெங்கும் தன்னை நிறைத்து பூத்திருந்த மரங்கள் பார்க்க அதிசியமாக இருந்தன. இலைகளே இல்லாமல் வெறும் பூக்கள் மட்டுமிருந்தது அந்த மரங்களில். மஞ்சள்,உதா, இளம்சிவம்பென்று இலைகளற்ற அந்த மரங்கள் பார்க்க கொள்ளை அழகாக இருந்தது. அந்த மரங்களின் மிக அருகில் சென்று தேடினால் மட்டுமே சில இலைகளை காணமுடிந்தது. எனக்கு பிடித்த மஞ்சள் நிற பூ(ஏன் மஞ்சள் நிற பூக்கள் பிடிக்கும் என்று பின்னொரு பதிவில் :) ) ஒன்று இங்கே இரண்டு அடுக்காக இருந்தது.








லில்லி பூவிற்கும் அல்லி பூவிற்கும் இடைப்பட்ட வடிவாய் சந்தன கலந்த வெள்ளை நிறத்தில் அழகாய் பூத்திருந்தது மற்றொரு மரம். நம் ஊர் வெள்ளை செவ்வந்தி பூக்களுமிருந்தன ஆங்காங்கே. நுனி முழுதும் இளம் சிவப்பை பூசிய, செவ்வந்தி பூ போன்ற ஒரு மலரும் படர்ந்து மலர்ந்திருந்தது தரைகளெங்கும். பச்சை நிற மலர்கள் பார்க்கும் புண்ணியம் வாய்த்தது மெயின் நதிகரையில். இளம் பச்சை நிறத்தில் சிறு சிறு பூக்களை பூத்திருந்தது அந்த அதிசய மரம். பார்த்ததில் மனம் கொள்ளை கொண்ட நாயகி இளம்சிவப்பாய் பூத்திருந்த அந்த மரம் தான். மிக அழகாய் இருந்தது. நிறைய வண்டுகளை ஈர்த்து வைத்திருந்த அந்த மலர்களை கண்ட போது "பொறிவண்டு கண்படுப்ப" என்று திருப்பாவையில் கோதை பறைந்ததே நினைவில் ஆடியது.








இப்படியாக பலவித நிற மரங்களை, விதவிதமான மனிதர்களை, குழந்தைகளை மகழ்வித்தபடி நகிழ்ந்து கொண்டிருந்த அந்த நதிகரையில் ஓடும் தண்ணீர்க்கு மிக அருகில் அமர்ந்து, அதில் கால் நனைத்தபடி, அங்கே படக்கோட்டி தங்கள் நேரம் கழித்துக்கொண்டிருந்த ஆண்கள் பெண்களை பார்த்தபடி இந்தியாவில் இருந்து கொண்டுவந்திருந்த உணவுப்பொருள்களை உண்டுவிட்டு, நதி நிறைய தண்ணீர் இருந்தும், கையில் ஒரு யூரோ இல்லாத காரணத்தால் குடுக்க ஒரு பாட்டில் தண்ணீர் கூட வாங்க முடியாமல் தாகத்தோடு நடந்து, மீண்டும் ரயில் நிலையம் ஏறி, ஜூ என்ற நிலையத்தை அடைந்தோம்.

அங்கே இருக்கும் மிருககாட்சி சாலை இருப்பதால் அந்த ரயில் நிலையத்திற்கு பேரே ஜூ. வனவிலங்குகள் இருக்குமிடம் அதனால் பார்க்க வனம் போல் இருக்கும் என்று நினைத்து சென்றோம். ஆனால் வெளியே இருந்து பார்க்க ஒரு மாளிகை போல இருந்தது. உள்ளே ஒரு வேளை வனம் போல இருக்குமோ என்னவோ. இங்கே மட்டுமல்ல இன்னும் ஒரு இடத்தில் ஒரு பெருமை வாய்ந்த தோட்டம் இருப்பதாக சொன்னார்கள் அங்கேயும் நுழைவு கட்டணம் இருந்ததால் உள்ளே சென்று பார்க்கவில்லை. மிருகக்காட்சி சாலையின் வெளியே இருந்த நீருற்றை மேலும் பலவித மலர்கள் குழந்தைகளை ரசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி ஃப்ரான்ங்போர்டின் சிறந்த கட்டங்கள் இருக்குமிடம் சென்றடைந்தோம்.







அங்கே நிறைய வர்த்தக மையங்கள் இருந்தன. யன்னல் வழி வாங்கல்(window shopping) செய்துவிட்டு அங்கிருந்த ஒரு சில கட்டிடங்களை கண்டு கழித்துவிட்டு, ஐந்து மணி நேரம் கழிந்திருந்தாலும் அங்கிருந்து விமான நிலையம் அடைய இன்னும் மேலும் ஒரு மணி நேரம் ஆகும் என்பாதாலும் ரயில் ஏறி சென்ரல் வந்து ரயில் மாறி விமான நிலையம் அடைந்து, அதே சுவீடன், அதே விடுதி, அதே நண்பர்கள் உண்டு உறங்கி மறுநாள் அலுவலகம் அடைந்தால் "Welcome back to sweden" என்ற இனிய மொழி கேட்டு அலுவல் தொடங்கி தொலைந்து போனேன்.

Wednesday, September 24, 2008

ஒரு சூட்கேஸ் நிறைய அழுக்கு மூட்டையும், ஒரு கவிதையும்.

என்னோட எல்டிஎ இரண்டு வருசமா டூயூ இந்த வருசம் அவைல் பண்ணலேன்னா எக்ஸ்பெயர் ஆயிடும் என்று அடிக்கடி நச்சரித்தார் என் கணவர். நான் இப்போ தானே புது வேலை சேர்ந்திருக்கேன் என்று தட்டி கழித்து வந்தேன். தினமொரு முறை 5 ஸ்டார் ஹோட்டலில் வேற தங்க எலிஜிபிலிடி இருக்கு.. இப்படி அடிக்கடி புலம்பலுக்கு முடிவு கட்ட மார்கழி திங்கள் மதி நிறை நன்னாளில் நான்கு நாள் மும்பை போகலாம் என்று முடிவாயிற்று.

ஒரு வழியாக மும்பை கிளம்ப வேண்டிய சுபயோக சுபதினத்தில் சாயுங்காலம் 4.45க்கு அலுவலகத்திலிருந்து கிளம்பி, ஒரு சேர் ஆட்டோவில்("என்னது ஏர்போர்ட்க்கு ஆட்டோவில் அதுவும் சேர் ஆட்டோலயா?" அப்படீங்கிறவங்களுக்கு எங்க அலுவலகம் இருப்பது ஹரியானாவில் நான் போக வேண்டியதோ தில்லி ஏர்போர்ட்க்கு. நேரடியாக ஆட்டோ கிடைக்காது. ஹரியானா தில்லி பார்டரில் தான் தில்லி செல்லுவதற்கான ஆட்டோ கிடைக்கும். சென்ற முறை சென்னை செல்லும் போது அழகா என் அலுவலகத்திலேயே சொல்லி ஒரு டாக்ஸி புக் செய்து எளிதாக 25 நிமிடத்தில் ஏர்போர்ட் அடைந்து விட்டேன். இந்த முறை மறந்தது மட்டும் அல்லாமல் கிள‌ம்பும் போது தான் பார்த்தேன் கையில் இருந்தது 150 ரூபாய் மட்டும். அது பாருங்க இந்த ஏடிஎம், டெபிட் கார்ட் எல்லாம் வந்ததிலிருந்து கையில் காசு வைத்திருப்பதென்பது மிக குறைவு. அதனால் ஆட்டோவில் போகலாம் என்று கப்பசடா பார்டரில் ஒரு ஆட்டோகார‌ரிடம் எனக்கு 6.15 ஃப்ளைட் சீக்கிரம் போக வேண்டும் என்றது தான் குறை அவர் டைம் அவுட் வைத்து ஓட்டுகின்றேன் பேர்வழி என்று, ஆட்டோவை ஓட்டோ ஓட்டென்று ஓட்டி 5.40க்கு விமான நிலையம் சேர்த்தார். ஏனோ அன்று விமான நிலையம் வரும் வழி, விமான நுழைவாயில் என்று என்றுமில்லாத வாகன கூட்டம். அது மட்டுமில்லாது உள்ளே செல்ல வெளியிலிருந்தே பெரிய பெருமாளை சேவிப்பதற்கு நிற்பதை விட பெரிய கூட்டம் நின்று கொண்டு இருந்தது. நல்ல வேளையாக அவர் முன்னமே போய் போர்டிங் பாஸ் வாங்கி இருந்தார். மேலும் வாயில் அருகே வந்து காவலரிடம் கேட்டு என்னை வரிசையில்லாமல் உள்ளே அழைத்து சென்று விட்டார். அப்புறமும் க்யூ விட்டபாடில்லை. செக்குரிட்டி செக்கிலும் அவ்வளவு பெரிய வரிசை. திருச்சி பஸ் நிலையத்தில் 3 அல்லது 4 நாள் விடுமுறைக்கு பின் சென்னை திரும்ப நிற்கும் கூட்டம் போலிருந்தது அந்த கூட்டத்தையும் கூச்சலையும் கேட்கும் போது. ம்ம் இந்தியாவின் சராசரி மனித வாழ்வின் தரம் உயர்கின்றது. :) ஒரு வழியாக 30 நிமிட தாமத‌த்துடன் மட்டும் மும்பை வந்திருங்கியது விமானம். விமானத்தில் பயணம் செய்த ஒருவர் சொன்னார் நாம் மிகவும் அதிஷ்டம் செய்தவர்கள் பெரும்பாலும் எவ்வளவு நேரம் விமானம் பயணிக்கின்றதோ அதை விட அதிக நேரம் தரையிறங்க ஆகுமென்றார். அங்கிருந்து ஹோட்டல் வந்து இரவு விருந்துண்டு உறங்கி விட்டோம்.

மறுநாள் எழுந்து காலையில் சாண்டகுரூஸ் ரயில்நிலையத்திற்கு ஒரு ஆட்டோவில் சென்று இறங்கினோம் மீட்டரில் 18 ரூபாய் வந்திருந்தது. ஆட்டோகாரர் மீட்டரில் 18 என்றால் 17 ரூபாய் தான் வாங்குவோம் என்றார், அட இவ்வளவு நல்லவங்களா இருக்காங்களே என்று வியந்து போனேன்.(முதல் நாள் விமான நிலையத்திருலிருந்து ஜுகுவிற்கு 140 ரூபாய் வாங்கிட்டான் அந்த டாக்ஸிகாரன் என்று என் வீட்டுகாரர் புலம்பியதில் ஆச்சரியமில்லை என்று தெரிந்தது, எனக்கு மும்பை முதல் முறை அவர் ஐந்தாறு முறை வந்திருக்கின்றார்.) கேட் வே ஆப் இந்தியா போக சர்ச்கேட் ரியல் நிலையத்திலிருந்து டாக்ஸியில் 15 ரூபாய் தான் மீண்டும் வியப்பு தான்.(சென்னை ஆட்டோகாரர்கள் நினைவு வந்தால் வியப்பாக இருக்காதா என்ன) இது தான் கேட் வே ஆப் இந்தியா, அது தான் தாஜ் ஹோட்டல் போகலாமா என்றார். அப்படியே இரண்டு, மூணு போட்டோ எடுத்துட்டு மீண்டும் ரயில் ஏறினோம். அங்கிருந்து தாதரில் இறங்கி ஆரோரா தியேட்டர் போனோம். அங்கே தமிழ் படம் ஓடுமாம் போனால் சிலப்பாட்டம் ஓடிக்கொண்டு இருந்தது ஓடியே வந்துட்டோம். "ரத்னா அவங்க இங்க தான் இருக்காங்க அவங்க வீட்டுக்கு போகலாமா" என்றார். சரி என்றதும் ஹோட்டல் சென்று கொஞ்சம் புதிதாகி(fresh ஆகி) மீண்டும் ரயில், கந்திவெளி சென்று தக்கூர் கிராமம் என்ற மும்பை புறநகரில் மிக பணக்கார கிராமத்தை அடைந்தோம். அங்கே செலென்ஜர் டவரில் ரத்னா மனோகர்(எங்க குடும்ப நண்பர்கள் நீண்ட நாட்களாக ஃபரிதாப்தில் இருந்தார்க‌ள் கொஞ்ச நாள் முன் மும்பை மாற்றலாகி வந்தார்கள்) வீட்டுக்கு சென்றோம். வழக்கம் போல உபசரிப்பு, பேச்சு, சிரிப்பு என்று கொஞ்சம் நேரமில்லை கிட்டதட்ட ஐந்து மணி நேரம் போனதே தெரியலை. அவர்களோடு டின்னர் முடித்துவிட்டு மீண்டும் ஜுகு கிளம்பினோம். ரத்னா கொஞ்சம் என்னை போலவே நகைச்சுவையாக பேசுவார்கள். உதாரணத்துக்கு ஒரு சில, "என்ன ரத்னா செல்ப்ல ஒரே இன்கிலிஸ் புக்ஸா இருக்குன்னு" கேட்டதுக்கு "க‌வுண்ட‌ம‌ணி ஒரு ப‌ட‌த்தில‌ சொல்லுவாரு நாங்க எல்லாம் எஹுகேட்டு ஃப்மலின்னு அதை காட்டிக்க‌ தான்", என்றார்கள். இன்னுமொன்று "பாம்பேல வேலைகாரி ரொம்ப நல்லா வேலை செய்வாங்க ஒரு ஒரமா யாராவது உக்கார்ந்து இருந்தா அவங்களை கூட சூப்பரா துடைச்சி சுத்தம் செய்துட்டு போயிடுவாங்க." மேலும் ஒண்ணு "ஃபரிதாபாதிலிருந்து வரும் போது நிறைய சாமான்களை டிஸ்போஸ் செய்து விட்டு வந்தேன். இவரை(அவர் கணவரை) தான் ஒன்னும் செய்ய முடியல"(டைமிங்கோட சொல்லி பாருங்க கண்டிப்பா சிரிப்பு வரும்)

இரண்டாம் நாள் காலையில் எழுந்து அதே ரயில்(அதெப்படின்னு மொக்கை போடாதீங்க, அதேன்னா அதே இல்லை), அதே தாதர் நிலையம், மீண்டும் டாக்ஸி இப்போது போனது சித்தி விநாயகர் கோவில். அங்கே அருகம்புல் ஒரு கொத்தோடு ஒரு செம்பருத்தியை வைத்து கட்டி ஒரு சிறு பொக்கே போலவோ விற்று கொண்டிருந்தார்கள். அதே மாலையாகவும் கிடைத்தது. பார்க்க மிக அழகாக இருந்தது. இரண்டு மாலை வாங்கி விநாயகருக்கு கொடுத்து, வணங்கி விட்டு அங்கிருந்து மஹாலஷ்மி கோவிலுக்கு போனோம், பெரிய வரிசை(கிட்டதட்ட 2 கிமி தூரம் மக்கள் வெள்ளம்) அதனால் அங்கிருந்து அப்படியே யூ ட்ர்ன் அடுத்து மடுங்காவுக்கு தமிழ் சாப்பாடு கிடைக்கும் என்று சொன்னதால் வந்தோம். அங்கே நிறைய தமிழ் கோவில்களும் இருந்தது. ஆனால் மதிய வேளை என்பதால் எல்லாம் மூடி இருந்தது. மதிய சாப்பாடு சாப்பிட்டு விட்டு மீண்டும் கேட் வே ஆப் இந்தியா போய் எலிபெண்டா கேவ் போகலாம் என்று முடிவெடுத்து அங்கே போய் ஒரு படகில் கிட்டதட்ட ஒன்ற‌றை ம‌ணி நேரம் கடலில் அங்கே மிதக்கும் கப்பல்,படகுகள் இதெல்லாம் பார்த்தபடி போய் ஒரு தீவில் இறங்கி அங்கே விற்கும் இலந்தை பழம்,மாங்காய் இத்தியாதி இத்தியாதியை வாங்கி உண்டு இரண்டு நிமிடம் ரயிலில்(மாதிரி) போய், 20 நிமிடம் நடைபாதை கடைகளை ரசித்தவாறு ஒரு மலை மேல் ஏறி அங்கே இருக்கும் குரங்குக‌ளின் அட்டகாசத்திலிருந்து தப்பி அங்கிருக்கும் சுமாரான ஒரு குகை கோவிலை தரிசித்துவிட்டு இஷ்டபடி புகைப்படம் எடுத்துவிட்டு, மீண்டும் வந்த வழியே வந்து விடுதியை அடையும் போது இரவு உணவிற்கான நேரம் வந்திருந்தது. அதனால் உண்டு விட்டு ஜூகு கடற்கரை (கடற்கரைக்குறிய எல்லா அடையாளங்களும் கூடாவே நிறைய‌ குப்பைக‌ளும் இருந்த‌து, மும்பை மாநகராட்சி இதை கொஞ்சம் சுத்தம் செய்ய முயற்சி செய்தால் நன்றாக இருக்கும்) சென்று வந்து உறங்கியாகிவிட்டது.

மூன்றாம் நாள் மும்பை சுற்றி காட்டும் ஒரு பேருந்தில் சென்றோம். பேருந்தில் ஒரு வழிகாட்டி மிக நகைச்சுவையாக மும்பை மாநகரை பற்றி கூறிக் கொண்டு வந்தார். ஒரு கட்டிடத்தை காட்டி அது தான் சஞ்ஜய்தத்தின் மாமியார் வீடு என்றார், அப்புறம் அதை அப்படி தான் கிண்டலாக கூறுவோம் அது மும்பை உயர்நீதி மன்றம் என்றார். அடுத்து ஒரு விளையாட்டு மைதானத்தை காட்டி அதற்கு பெயர் காந்தி மைதானம் என்றும் காரணம் அதில் புல் இல்லாம‌ல் மொட்டையாக இருப்பதால் என்றார். :) நீங்கள் இறங்கும் போது பணம்,நகை, பாம்(வெடிகுண்டு) போன்ற விலை உயர்ந்தவைகளை கூடவே எடுத்து சென்றுவிடுங்கள், சாப்பிடும் ஐட்டம் ம‌ட்டும் விட்டு செல்லுங்கள் நான் பார்த்து கொள்கின்றேன் என்றார். :) மும்பை தரிசனில் பிடித்தவை தொங்கும் தோட்டம்(ஆனால் உண்மையாக தோட்டம் தொங்கவில்லை நீர்தொட்டி மேல் அமைந்து இருப்பதால் அந்த பெயர் காரணமாம்), பூட் ஹவூஸ், மெரைன் டிரைவ் சாலை, மஹாலஷ்மி கோவில், அட்ரா மாலில் காட்டப்பட்ட 4டி காட்சி, அனுஜன்யா அண்ணாவை சந்தித்தது.(பாவம் அனுஜன்யா, ஹேங்கிங் கார்டனில் இருந்து, மஹாலஷ்மி கோவில் வரை எங்கள் பேருந்தை தொடர்ந்து தொடர்ந்து ஒரு வழியாக‌ சந்தித்து, ஓட்டத்தோடு ஓட்டமாக மஹாலஷ்மியை தரிசித்து, கொஞ்சம் பேசி, மஹாலஷ்மி கோவிலிருந்து அட்ரா மால் வரை கொண்டு வந்து விட்டார். என்னிடம் பேசியதை விட என் வீட்டுகாரரிடம் அதிகம் பேசினார். அனு அண்ணியும் தொலைபேசினார்கள் என்னிடம்) 4டி சோவில் 3டியை விட கொஞ்சம் மிகைப்பட்டதாக இருந்தது. படத்தில் பனி பெய்யும் போது தலை மேல் பனி பொலிந்தது. அங்கே தீ எரியும் போது நாற்காலியிம் பின்பக்கத்தில் ஊதாங்குழல் ஊதுவது போல ஒரு வித சத்ததோடு என்னவோ வந்தது.(நல்ல வேளை நிஜபனி போல நிஜ தீ வைத்து சுடவில்லை.) ஆனால் அடிக்கடி நாற்காலி முன்னும் பின்னும் ஆடி யாரோ நம்மை அடிப்பது போல இருந்தது. மற்றபடி கண்டிப்பாக 4டி சோ பார்க்கலாம். நல்ல வித்தியாசமான பொழுது போக்கு. அங்கிருந்து நேரு அறிவியல் கூடம் சென்றோம் நிறைய விசயம் குழந்தைகளுக்கு அறிவியல் கற்பிப்பதை போல இருந்தது. சத்தம், சங்கீதம் பற்றிய தொகுப்பிடத்தில் வெர்சுவல் ரியாலிட்டி என்ற இடத்தில் நாம் நடனமாடினால் அதற்கு தகுந்த இசை ஒலிக்கிறது.(பெரிய கம்ப விசித்திரமில்லை எல்லாம் மென் பெருளே, ஒரு சில இசைகருவிகள் அந்த இசை கருவி மீது நம் நிழற்படம் விழந்தால் ஒலிக்கின்ற மாதிரி செய்து இருக்கின்றார்கள். ஆனால் ரசிக்கும் படி இருக்கின்றது) மேலும் சிலது அந்த பகுதியில் நன்றாக இருந்தது. ஒரு பியானா போன்ற கருவியில் நடந்தால் இசை வந்தது. அதன் பின் பேருந்து ஜுஹு கடற்கரை சென்றதால் நாங்கள் இடையில் இறங்கி மீண்டும் மடுங்கா சென்ற முதல் நாள் விட்டு போயிருந்த கோவில்களை பார்த்துவிட்டு இரவு உணவை முடிந்து ஹோட்டல் வந்து சேர்ந்தோம்.

நான்காம் நாள் காலை எழுந்து தில்லி திரும்பும் ஆயத்த‌த்தில் ஆழ்ந்தோம். வரும்போது இருந்த தில்லி விமான நிலைய நெரிசலை மனதில் கொண்டு இரண்டு மணி நேரம் முன்னமே விமான நிலையத்தை அடைந்தால் என்ன ஆச்சரியம், நுழை வாயிலில் கூட்டமே இல்லை. போர்டிங் பாஸ் வாங்க ஐந்தே நிமிடங்கள் தான் ஆயிற்று. செக்குரிட்டி செக் பத்தே நிமிடத்தில் முடிந்தது. நல்லவேளை கையில் சுஜாதாவின் ஓரிரு எண்ணங்கள் புத்தகம் இருந்ததால் பொழுது போனதே தெரியவில்லை. விமானமும் குறிப்பிட்ட நேரத்திற்கு ஐந்து நிமிடம் முன்னமே கிளம்பி சரியான நேரத்தில் தில்லி வந்திறங்கியது. ஒரு டாக்ஸி பிடித்து இல்லம் வந்து சேர்ந்தோம். கைபேசியை உயிர்யுட்டியில் இணைத்துவிட்டு, எஸ் எஸ் முசிக்கில் "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை" பாட்டை கேட்டதும் வீட்டிக்குள் வந்து விட்டது மனமும்.

பயணத்தில் திரும்பும் போது எடுத்து சென்ற சூட்கேஸ் நிறைய அழுக்கு துணிகளும்..., தினசரி சிடுசிடுப்பும்,சலிப்புமில்லாத‌ சற்றே அதிக நேரமும், தில்லி வந்திருக்கிய விமானத்திலிருந்து விமான நிலையத்திற்கு பயணித்த பேருந்தில் என் கையசைப்பிற்கு என்னை பார்த்து மலர்ந்து சிரிந்த ஒரு குழந்தையும், பக்கத்து இருக்கையில் பயணித்த என் சிறு சிறு உதவிக்கு அன்பான பதிலாக "எங்கு சென்றாலும் அழகான பேத்திகள் எனக்கு உதவ கிடைத்து விடுகின்றார்கள்" என்ற வயதான பாட்டியும் கவிதையாகி இருந்தன(ர்). :)

யானையின் மெல்லிய நடை

கொடு வரி வேங்கை பிழைத்து, கோட்பட்டு, -
மடி செவி வேழம் - இரீஇ, அடி ஓசை
அஞ்சி, ஒதுங்கும் அதர் உள்ளி, ஆர் இருள்
துஞ்சா, சுடர்த்தொடி கண். 16

வேழம் - யானை
தொடி - வளையல்

"வளைந்த வரிகளையுடைய பெரும்புலியினால் தாக்கப்பட்டுத் தப்பியோடிய மடிந்த காதுகளையுடைய யானையானது பின்வாங்கித் தன் நடையால் எழும் ஓசையானது புலிக்குக் கேட்குமோ என்று அஞ்சி, மெல்ல நடக்கக்கூடிய வழியில் நீ திரும்பிப் போக வேண்டும் என எண்ணியதால், ஒளிமிக்க வளையல் அணிந்த தலைவியின் கண்கள் நேற்று இரவு முழுவதும் தூக்கம் கொள்ளவில்லை. எனவே நீ விரைவில் தலைவியை மணம் செய்து காப்பாயாக" என்று தோழி தலைவனிடத்தில் கூறினாள்.

நன்றி:சென்னை லைப்ரரி.

இந்த பாடலில் இயற்கையான பெண்ணின் குணமான, பிரியமானவர் மீதான அதீத அக்கரையும், மிதமிஞ்சின கற்பனையில் அது நடக்குமோ இது நடக்குமோ என்ற பயமும், அவருக்கு எதுவும் நடந்து விடக்கூடாது என்ற கவலையும் சேர்த்து அவளை தூங்க விடாமல் வாட்டுவது போல் மேலோட்டமாக கொள்ளலாம்.

ஆயினும் அடிபட்ட யானையாக அவளையும், சினம் கொண்ட புலியாக அவள் இல்லத்தாரையும் பொருந்தி பார்க்கலாம். அவள் பசலை படர்ந்திருப்பது அவள் பெற்றோர்க்கு தெரிய கூடாதென்று மறைக்க பாடுபடுவதை தலைவனுக்கு குறிப்பாக உணர்த்த தோழி இவ்வாறு உரைத்ததாக கொள்ளலாம்.

எல்லாம் காதல் படுத்தும் பாடு.

Sunday, August 24, 2008

குழ‌ந்தைக‌ளுட‌னான‌ அதிகாலை நேர‌த்து ப‌ய‌ண‌ம்

அன்று காலை புல‌ர்ந்த‌ பொழுது ஒரு இனிய‌ நாளில் தொட‌க்கமாக‌ இருந்த‌து. விடிந்தும் விடியாத‌ அதிகாலை பொழுதிலேயே தொட‌ங்கிய‌ ப‌ய‌ண‌ம‌து. குளிர் காற்று கூட‌வே வ‌ர‌, காவிரி க‌ரையோர‌ம் புற்கள், ப‌ற‌வைக‌ள், ப‌ட்டாம் பூச்சிக‌ள், ப‌ச்சை செழித்த‌ வ‌ய‌ல்வெளிக‌ள், இடையிடையே வெள்ளை நாரைக‌ள் எப்போது ப‌ற‌க்கும் என்று யுகிக்க‌ முடியாத‌ க‌ண‌த்தில் பற‌ந்து ம‌ன‌ம் ம‌கிழ்விக்கும். பெய‌ர் தெரியாத‌ பூக்க‌ளின் வ‌ண்ண‌ம் ம‌ட்டும் நுக‌ர்ந்த‌‌ப‌டி விரைந்து தோடிய‌ புகைவ‌ண்டியில் எப்போதும் த‌னிமை மட்டும் துணையாக‌ ப‌ய‌ணிக்கும் என‌க்கு இம்முறை வாய்த்த‌து குட்டி தேவதைக‌ளுட‌னான‌ பய‌ண‌ம்.

நான் ப‌ய‌ணித்த‌ அப்பெட்டியில் நிறைய‌ குழ‌ந்தைக‌ள் இருந்த‌ன‌ர். என் எதிர் இருக்கையில் இரு பெண் குழ‌ந்தைக‌ள். என‌க்காக‌ ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட‌ ஜ‌ன்ன‌லோர‌ இருக்கையில் ஒரு ஆண் குழ‌ந்தை. மேலும் அடுத்த‌ இருக்கையில் த‌ன் அப்பாவின் கையில் இருந்த‌ இன்னும் ஒரு பெண் குழ‌ந்தை என்ப‌தை விட‌... ஒரு க‌ண‌ம் மிர‌ண்டும் பின் ந‌ம் சிறு புன்ன‌கைக்கு ம‌ல‌ரும் சிரிப்போடு இருந்த‌ அந்த‌ குழ‌ந்தை கொள்ளை அழ‌கு. அத‌ன் சிரிப்பில் விரியும் க‌ன்ன‌க‌துப்புக‌ள் செல்லாமான‌ அழ‌கு. ஒரு நொடி உறைந்த‌ க‌ருப்பு நீரிருற்றை ஒத்திருந்த‌ அத‌ன் கொண்டையில் வெள்ளை ம‌ல்லிகைக‌ள் சிரிந்திருந்த‌ன‌. சின்ன‌ச்சின்ன‌ செல்ல‌ சிணுங்க‌லோடும் ம‌ல்லிகை சிரிப்போடும் இருந்த‌ அக்குழந்தை குட்டி தேவ‌தையின் சாய‌லில் இருந்த‌து. அப்ப‌ய‌ண‌த்தில் பார்த்த‌ பெய‌ர் தெரியாத‌ பூக்க‌ளில் இதுவும் ஒன்று.

எதிர் இருக்கையில் இருந்த‌ இரு பெண் குழ‌ந்தைக‌ளில் ஒன்றின் ம‌ழ‌லை கூட‌ மாற‌வில்லை, அம்மாவின் பொட்டும் கூந்த‌லும் மிக‌ விருப்ப‌ம் அத‌ற்கு. எதையும் உண்ண‌, த‌ண்ணீர் அருந்த‌ கூட‌ மிக‌வும் ப‌டுத்திய‌து த‌ன் தாயை. அத‌ன் தாய் பொம்மைக‌ள், வித‌ வித‌மான‌ ச‌த்த‌ம் எழுப்பும் க‌ருவிக‌ள், பொம்மை போல‌வே இருந்த‌ பேனா, உண‌வு வ‌கைக‌ள், ஆடைக‌ள் இன்ன்பிற‌வென்று அக்குழ‌ந்தையின் உல‌க‌த்தையே எடுத்து வ‌ந்திருந்தார். அப்ப‌டியும் அத‌ற்கு அவை எதுவும் போதுமான‌தாக‌ இல்லை.

எதிர் இருக்கையில் இருந்த‌ ம‌ற்றுமொரு பெண் குழ‌ந்தை ச‌ற்றே பெரிய‌ குழ‌ந்தை, இடைவிடாம‌ல் பேசிக் கொண்டே இருந்த‌து. த‌ன் அருகில் இருந்த‌ குழ‌ந்தையை அக்கா பாரு, அக்கா ம‌டியில் உட்கார்ந்துகோ என்ற‌வாரு அதை ம‌க‌ழ்விக்க‌ முய‌ற்சித்த‌து.(இக்குழ‌ந்தைக்கு அக்குழ‌ந்தை ஒரு ர‌யில் சினேகிதி ம‌ட்டுமே) இடையிடையே பாட்டு பாடிய‌து. வ‌ரும் போகும் எல்லாவ‌ற்றையும் வாங்கி த‌ர‌ சொல்லி த‌ன் த‌ந்தையை கேட்டுக் கொண்டிருந்த‌து. இருக்கையில் எண் வ‌ரிசைக‌ளை ச‌ரி பார்த்த‌து. என் இருக்கையில் அம‌ர்திருந்த‌ குழ‌ந்தைக்கு வாய்பாடு சொல்லி த‌ந்த‌து. ஏதோ புத்த‌க‌ம் எடுத்து எழுத‌ ஆர‌ம்பித்த‌து. சினிமா பாட்டை இயக்கி ந‌ட‌ன‌மாடிய‌து. இடைவிடாம‌ல் ச‌ல‌ச‌ல‌க்கும் நீரோடையாய் இருந்த‌து அத‌ன் ஒவ்வொரு செய‌ல்க‌ளும்.

என் இருக்கையில் அம‌ர்ந்திருந்த‌ ஆண் குழ‌ந்தை மிக‌ அமைதியாக‌ இருந்த‌து. இவ்வ‌ள‌வு அமைதியை எங்கிருந்து பெற்ற‌தோ என்று யோசித்தேன் பின் தான் புரிந்த‌து அது என் அருகே அம‌ர்ந்திருந்தால் அமைதியாக‌வும் பின் த‌ன் தாத்தா பாட்டியிட‌ம் சென்ற‌தும் இல்லாத குறும்புக‌ளையும் செய்திருந்த‌து. ஒரு ம‌ணி நேர‌ம் சென்ற‌தும் எல்லா குழ‌ந்தைக‌ளும் உற‌ங்கிவிட்ட‌ன‌. மீண்டும் வெளியே ப‌சும் புல்வெளி, ப‌ற‌வைக‌ள் எல்லாம் விரைந்தோடும் வ‌ண்டியோடு க‌ண்ணுக்குள் ஓடிக்கொண்டு இருந்த‌ன‌. மீண்டும் எல்லா குழந்தைக‌ளும் விழித்து உண‌வுண்டு த‌ங்க‌ள் சேட்டைக‌ளை ஆர‌ம்பித்த‌ நேர‌ம் நான் இற‌ங்குமிட‌ம் வ‌ந்திருந்த‌து. பிரிய‌ ம‌ன‌மின்றி என் ம‌ன‌தை கொஞ்ச‌ நேர‌ம் அந்த‌ குட்டி தேவ‌தைக‌ளளை கொஞ்ச‌ விட்டு நான் ம‌ட்டும் இற‌ங்கி சென்றேன்.