Wednesday, October 7, 2015

குற்றம்(ஆக்கப்பட்டதை) கடிதல்



குற்றம் கடிதல் சமீபத்தில் பார்த்த படம். குற்றம் எது என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்?   நாடகத்தன்மையோடு கிசுகிசுப்பு பரப்பும் பொதுஜனமும், அதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு தன் வாழ்வாதாரத்திற்கென எதை வேண்டுமானாலும் தீப்பிடிக்க செய்யும் ஊடங்களும் நடுத்தர வாத்தியார் வர்க்கத்தை என்ன செய்ய முடியும் என்பதை தெளிவாக காட்டி இருக்கிறது குற்றம் கடிதல். ஏழை கணக்கு வாத்தியாரின் மூன்றாவது மகள், அம்மாவும் விளையாட்டு ஆசிரியை. மேலும் பெரியம்மா, பெரியப்பா, மாமா, மாமி, அத்தைக்கள், அத்தைகளின் கணவர்கள், சித்தப்பாக்கள், அக்காக்கள், அண்ணாக்கள் என்று எல்லோரும் ஆசிரிய வர்க்கம், நடுத்தர ஆசிரிய வர்க்கம். இவர்கள் யாரும் மாணவர்களை கண்டித்தற்காக பல பஞ்சாயத்துக்களால் பாதிக்கப்பட்ட என் சிறு வயதின் வாழ்க்கை பல்வேறு விதமாக நினைவில் நிறைந்திருக்கிறது. அதுவும் ஒரு விளையாட்டு ஆசிரியையாக அம்மாவுக்கு கண்டிப்பை காட்ட வேண்டியது கட்டாயம், கடமையும் கூட. பின்னர் பிரச்சனைகளாலும்பல்வேறு காரணங்களுக்கான குற்றவுணர்வாலும் அலைக்கழிக்கப்படுவது  அன்றாட நிகழ்வாக இருந்தது எங்களுக்கு. அதனாலேயே இந்த படம் எனக்கு இன்னும் நெருக்கமாக இருக்கிறது. அப்பாவி நடுத்தர வர்க்க ஆசிரியை மெர்லினை, ஒன்றுமறியாத சிறுவன் செழியன் ஒன்றுமே செய்யாமல் தனது பிரியத்துக்குரிய ஆசிரியையை தற்கொலை செய்யும் அளவிற்கு குற்றவுணர்விற்கு ஆளாக்கும் கதை, திரைக்கு புதிது. நடுத்தரவர்க்கத்தில் மனச்சாட்சி என்ற மண்ணாங்கட்டியை கட்டுக் கொண்டு குற்றத்தை கடிதல் மிகவும் கடினமே. அதை அழகாக கதையாக்கி இருப்பது மிகவும் பாராட்டக் கூடிய ஒரு விசயம்.

இந்த அழகான கதையை திரைக்கதை ஆக்கியவிதத்தில் எனக்கு சில கருத்துகள் உண்டு இதற்கு கிடைக்க வேண்டிய சில நட்சத்திரங்களை அது பறித்துக் கொண்டதோ என்ற ஐயமும் உண்டு. இயக்குனர் ஒரு நாடகபாணியில் திரைக்கதை அமைத்திருப்பது வித்தியாசத்திற்காக செய்தாரா அல்லது வேறு விதமாக சொல்ல முடியாது என்று நினைத்து செய்தாரா தெரியவில்லை. கதைக்குள் வரும் எல்லா கதாப்பாத்திரங்களின் குணாதிசியம் என்னவென்று தெரிவிக்க ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காட்சியை அமைத்திருப்பது திரைப்படம் போல் தோன்றாமல் ஒரு நாடகம் பார்க்கும் உணர்வை தருகிறது. அறிமுக காட்சி மட்டுமல்லது இடையிடையே பல்வேறு இடங்களில் இந்த நாடகம் போன்ற தோற்றம் தெரிகிறது. மெர்லின் தோழி அவள் திருமணம் முடிந்து முதல் நாளே பள்ளி வந்ததும் பேசும் விதமும், பின்னர் தான் அனுமதி விடுப்பில் செல்வதால் மெர்லினை ஏழாம் பிரியட்டை எடுக்க சொல்லி பேசுவதும் நிஜமாய் ஒரு மேடை நாடகபணியே. மெர்லினின் தோழியாக வரும் அந்த ஆசிரியை ஒரு நடனக்கலைஞராக இருக்க வேண்டும். தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் கூட இந்த நாடகத்தன்மையை பார்க்க முடியாது. குற்றம் நடந்ததை விளக்கிச்சொல்லும் குழந்தையின் உடல்மொழியும் மற்றும் நிகழ்வை கதையாக்கி கற்பனை சுவாரஸ்களுடன் பேசும் திறனும் அதனை ஊக்குவிக்கும் அக்குழந்தையின் பெற்றோரும் இந்த நாடகத்தன்மையின் உச்சம் எனலாம். அந்த குழந்தையின் பேச்சில் குழந்தைத்தனத்தை தேடிப் பார்த்தாலும் கிடைக்கவில்லை. மெர்லின் செழியனின் தாயாரை மருத்துவமனையில் சந்திக்கும் காட்சியும் இதே அளவிற்காக நாடகமாகவே தோன்றியது. இன்னும் அருமையாக வந்திருக்க வேண்டிய காட்சியது

இவை மட்டுமல்ல மேலும் சில காட்சிகள் திரைக்கதைக்கு சற்றும் ஒட்டி வரவில்லை. குறிப்பாக சொன்னால் பாலியல் கல்வி தேவையா என்ற விவாதமாகட்டும், ஒரு ஊடகவியல் பெண்ணும் அவர் தோழனும் நடந்த குற்றத்தை ஒரு காபிக்கடையில் விவாதிப்பதாகட்டும் திரைப்படத்தின் ஓட்டத்தின் இடைச்சொருகல் போன்ற உணர்வையை தருகின்றன. ஆனால் இவ்விரு உரையாடல்களுமே குற்றம் கடிதலுக்கும் மிகவும் முக்கியமான விவாதங்கள். அது திரைக்கதையாகாமல் தொலைக்காட்சியில் வரும் ரியாலிட்டி ஷோ விவாதம் போலவே இருப்பது இயக்குனரின் திரைக்கதையின் கலவையின் குறைப்பாடாகவே எனக்குப்பட்டது. மேலும் ஒரு ஆசிரியை/யர் தன் மாணவர்/மாணவிகளை அடிப்பது கூடாது கடுமையாக கண்டிப்பது கூடாது. அன்பாக நடத்த வேண்டும் என்ற கருத்தை சொல்ல வந்த இடத்தில், இறுதிவரை  எவரேனும் ஒருவர் பாலியல் கல்வி குறித்த கருத்தை கூறிக்கொண்டோ, கேட்டுக் கொண்டோ இருப்பது இயக்குனர் தன் கருத்தை திணிக்க முயன்றிருப்பதை போலவே காணவியல்கிறது. மேலும் பாலியல் கல்வி வேண்டுமென்று ஆதரிக்கும் எல்லோரும் பெண்களாகவும் அதனை ஏற்க தயங்குவது அல்லது தத்தி போல் பேசுவது ஆண்களாகவும் காட்டி இருப்பது தற்செயலாக நடந்த விசயமாகவே நான் எடுத்துக் கொள்கிறேன்.

எந்த படைப்பும் நேரடியாக சொல்லும் விஷயங்களை விட மௌனமாக உணர்ந்த்தும் விஷயங்களே மிக ஆழமாக மனதில் பதியும். அப்போது அந்த படைப்பின் வெளிப்பாடு இன்னுமொரு வடிவெடுக்கும். ஒரு சிறந்த படைப்பு தன் படைப்பிடையே வாசகர்கள்/பார்வையாளர்கள் உணர வேண்டிய மௌனத்திற்கு இடம் வைக்க வேண்டும். சில காட்சிகள் இந்த மௌனத்திற்கு இடம் தந்திருக்கிறது. மெரிலின் பள்ளியிலிருந்து வெளிவரும் சமயம் கால் செருப்பில் மாட்டி கூடவே வரும் கருப்புநிற பாலிதீன் பையை கூட எடுத்து எறியாமல் செல்வது, மேலும் பைக் கண்ணாடியில் சிலுவையை அதுவும் சிவப்பு நிறம் உறுத்தும் சிலுவையை கண்பது எல்லாம் அவள் தேவையற்ற உணர்வுகளால் குழப்பிய மனநிலையில் சூழ்நிலையை கையாளாத் தெரியாமல் இருப்பதை உணர்த்துகிறது. அவள் அந்த சர்சில் கேட்பது ஒரு திருமண நிகழ்விற்கான அறிவிப்பு, தனது திருமணம் மதம் மீறி நடந்தால் இவ்வாறு பிரச்சனையில் சிக்கி கொண்டேமோ என்று அவள் நினைப்பதாக குறிப்பால் உணர்த்தியது மிகவும் புத்திசாலிதனமான காட்சியமைப்பு. இதைப்போல் மேலும் சில காட்சிகள் இருந்தாலும் மௌனமாக உணர்த்த வேண்டிய இன்னும் பல முக்கியமான காட்சிகள் இப்படி இல்லாமல் போனதில் எனக்கு சின்ன வருத்தமுண்டு.

அதற்கு ஒருவேளை திரைப்படத்தில் இயக்குனருக்கு தான் சொல்ல வரும் கருத்து மக்களுக்கு புரியுமா என்ற பதட்டம் இருந்து இருக்கலாம், அதனால் காட்சியை விளக்க மேலும் ஒரு சில காட்சிகளையோ அல்லது சில வசனங்களையோ சேர்த்திருத்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.  உதாரணத்துக்கு மெர்லின் கொஞ்சம் பைத்தியக்காரனத்தனமாக கொசுவர்த்தி மெசினை ஏதோ செய்வாள்(அது ஒரு தற்கொலைக்கான முயற்சியாக கூட இருக்கலாம்) பின்னர் சம்மந்தமே இல்லாமல் கத்துவாள். இதை இத்துடன் நிறுத்தி இருந்தாலே அவள் குற்றவுணர்வில் சாகுமளவுக்கு தவிக்கிறாள் என்று புரிந்திருக்கும். அப்படி புரியாதவர்க்கு அடுத்து சேர்க்கப்பட்ட கூத்துக்காட்சி வசனமான “குற்றஉணர்ச்சியில் தவித்தாள் குந்திதேவி” என்ற வசனத்திற்கும் முன் வந்த காட்சிக்கும் இருக்கும் பொருத்தமும் புரியாது. அதே போல் செழியனுக்கு ஏதோ முன்பிருந்தே வியாதி இருக்கிறது என்ற விஷயத்தை சில காட்சிகளில் காட்டி இருந்தாலும் பின்னர் மீடியாவிற்கு வெளிப்படையாக சொன்னதும் இதே வகையை சேர்ந்தது தான். மேலும் மெரிலினில் பிரின்ஸிபாலும் அவர் மனைவியும் தன் ஆசிரியர் மற்றும் மாணவர் மேல் இவ்வளவு அக்கரை ஏன் எடுத்துக் கொள்கிறார்கள் என்று விளக்கும் காட்சியும் இது போல தான்.  

படத்தின் பிண்ணனி இசை சில இடங்களில் ஒட்டவில்லை. ஒருவித வெறுப்பின்னை தந்தது போல் இருந்தது. மெர்லினில் பயம் மற்றும் குற்ற உணர்வை காட்டும் பிண்ணனியாக ஒரு உடுக்கை சத்தம் வரும். அது அவள் செழியனை அடித்த அடுத்த கணத்திலிருந்து வர ஆரம்பிக்கும்அந்த பிண்ணனி இசை, "இவ எதுக்கு இவ்வளவு பயம் கொள்ளனும். ஒவர் ஆக்டிங் போல இருக்கே" என்று தோன்ற வைக்கிறது  அந்த உணர்வு அந்த இசையில் பொருட்டு வந்தது என்று இப்போது உணர்கிறேன்இந்த படத்திற்கு பாடல்களே தேவையில்லை இருந்தாலும் பள்ளிக்கூடத்தில் பல்வேறு வகுப்பில் நடக்கும் காட்சிகளை கொண்ட ஒரு பாடலும், சின்னங்சிறுகிளியே என்ற பாரதியின் பாடலும் அருமையாக காட்சிபடுத்தப் பட்டிருப்பதாக பலரும் சொல்லக் கேட்கிறேன். ஆனால் அவ்விரு பாடல்களிலும் இயக்குனர் சொல்ல வேண்டிய நிறைய விசயங்களை ஒன்றுபட சொல்லி அந்த பாடல்களுக்கு கிடைக்க வேண்டிய இன்னும் சில பாராட்டுக்களை அவரே பிடுங்கி வைத்துக் கொண்டார் என்றே நினைக்கிறேன். பாரதியின் பாடலுக்கு கதைக்கு சம்மந்தப்பட்ட எல்லோருடைய  மலரும் நினைவுகளை திணித்திருப்பது, இத்தனை அருமையான பாடலில் ஏன் இதெல்லாம் என்றே நினைக்க வைக்கிறது. உதாரணத்துக்கு செழியனின் அப்பா இறந்து போனது இந்த கதைக்கு தேவையில்லாத பின்புலம் அதை அந்த அருமையான பாரதி பாடலின் ஏன் வைக்க வேண்டும்.

நம் கல்வி திட்டமே சரியில்லை அடிப்படை வாழ்வியல் விசயங்களை கற்றுத் தருவதில்லை, ஒரு அடிமை குமாஸ்தாவை உருவாக்கும் திட்டமட்டுமே இருக்கிறது என்று எத்தனையோ குறைபாடுகளை கல்வித்துறை சார்ந்து நாம் பேச வேண்டிய சமயத்தில் பாலியல் கல்விக்கான தெளிவு வேண்டும் என்ற கருத்தினை மட்டும் கையாண்டிருப்பது கொஞ்சம் வருத்தம் தரக்கூடியது. ஆயினும் இது வரை வந்த திரைப்படங்கள் சாடி இருப்பது போல கல்வி நிறுவனங்கள் வியாபார நோக்கில் செயல்படுகிறது. கடினமான மன அழுத்திற்கு மாணவர்களை உள்ளாக்குகிறது. மனனம் செய்தலை மட்டுமே ஊக்கிவிக்கிறது என்ற பழைய கத்தரிக்காய்களை மீண்டும் வதக்காமல் இருந்தது மிகப்பெரிய ஆறுதல். எது எப்படியானாலும் கொஞ்சமும் வியாபாரத்தனமில்லாத, எதார்த்தமான, எல்லோரும் ஏதோ ஒரு கட்டத்தில் தங்கள் வாழ்வில் கடந்து போன ஒரு அனுபவத்தை முற்றிலும் மாறுப்பட்ட பாணியில் திரைக்கதையாக்கி இருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. தமிழ் சினிமாவை இன்னொமொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் திரைப்படங்களில் ஒன்றுகுற்றம் கடிதல்” என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. இயக்குனர் பிரம்மா திரைகதையாக்கத்திலும் பிண்ணனி இசையிலும் அடுத்தடுத்த படத்தில் மேலும் கவனமாக இருப்பார் என்று நம்புகிறேன். நல்ல படத்தை தந்ததற்கு அவருக்கு எனது நன்றியும் பாராட்டுகளும்.

Thursday, September 24, 2015

நிபந்தனையற்ற வரவேற்பு....!!! - கலாப்ரியா

நீர்க்கோல வாழ்வை நச்சி தொகுப்பிற்கான கலாப்ரியா அவர்களின் அணிந்துரை

அன்பு, பிரியம், சினேகம் ஆகியவற்றுடனும் அவை போன்றவற்றுடனும், அவற்றைப் போற்றுகின்றவற்றுடனும் தீராத உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஒருவரின் நல்ல கவிதைகள் பலவற்றை உள்ளடக்கியிருக்கிறது லாவண்யாவின் இந்தத் தொகுப்பு. அதனால் தான் அது ஒவ்வொரு வாசகனுடனும் தன் இயைபான கவித்துவத்துடன் எளிதாக ஒரு உரையாடலை நிகழ்த்தி விடுகிறது. இவை மூன்றுக்கும் எதிரான ஒருவகை புறக்கணிப்பு சார்ந்தும் அவருடைய கவிதைகள் இயங்குகின்றன.

சினேகிதத்தின் ‘உடனிருப்பு‘ அவருள் பல வசீகரம் மிக்க படிமங்களை உருவாக்குகிறது.

“இப்போதுதான் கழுவிய
கண்ணாடிக் குவளை மேல்
தண்ணீர்ப் படலமென
வசீகரம் கொண்டது
உன் இருப்பு.”

என்னுடைய சின்னஞ்சிறு வயதில் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைக்கு ராஜவல்லிபுரம் என்ற எங்கள் கிராமத்தில் போய் இருப்போம்.அங்கே மின்சாரம் கிடையாது. சூரியன் மேற்கில் மறையத் தொடங்குகிற சாயுங்காலம் வந்து விட்டால். அம்மா நாலைந்து ஹரிக்கேன் லைட்டுகளை எடுத்து வைத்துக் கொண்டு துடைத்து எண்ணெய் விட்டு, திரிகள் திருத்தி, அதன் கண்ணாடிச் சிம்னிகளை கழுவிக் காய வைப்பாள். சிம்னியின் வளைவுகளில் ஒரு தண்ணீர்ப் படலம் அழகாய் இறங்கி வட்ட வடிவமாய் செங்கல்த் தரையில் ஒரு கோலமிடும். நீண்ட நாட்களாக, கிட்டத்தட்ட 55 வருடமாக, நான் இதைச் சுமந்து கொண்டிருக்கிறேன். இன்று லாவண்யாவின் கவிதையில்வாசித்து அந்நினைவை மீட்டுக் கொள்கிறபோது மகிழ்ச்சியாய் இருக்கிறது.

இப்படி நினைவையும் அனுபவத்தையும் வலியையும் கால,வெளி அலகுகளைத் தாண்டி மீள் நினைவாக்குவதே ஒரு நல்ல கவிதையின் செயல்.

புறக்கணிப்பின் வலியைப் பற்றி புலம்பல்கள் இல்லாமல் நிதர்சனமான வரிகளை நிறையவே காணமுடிகிறது .

கவிதை போலும் – என்றொரு கவிதை.

காலம் காலமாய் வாழும் அது
என்றாய் நகைத்திருந்தேன்.
....... ............. .................

..................... ..................... ......

சாவிலும் கூடவே வரும் அது
என்றாய் இறுகிய முகம் கொண்டிருந்தேன்.

இறுதியில் நீ உமிழ்ந்து விட்டுப் போன
எச்சில் மிதக்கும் சாக்கடையில் நிலவொன்று
கலங்கியது எனக்காக.

இதில் கலக்கம் இருக்கிறது. ஆனால் சாக்கடை நிலவுப் படிமம் அதன் தொனியையே மாற்றி விடுகிறது.இதில் முக்கியமாக கவிஞர் ”அது” என்று குறிப்பிடுகிறர். அது நட்பா, காதலா, எதிராளி ஆணா, பெண்ணா என்றெல்லாம் துலங்காமல் இருப்பது முக்கியமானதாகப் படுகிறது.

செவ்வியல்ப் படிமங்கள் என்றில்லை... இன்றைய தாராளமயப் பொருள் உலகின் பலவும் இவரது கவிதையில் படிமங்களாகப் பதிவாகின்றன.

இப்போதெல்லாம் எங்கள் கிராமங்களைச் சுற்றி கற்றாலைகள் நிறைய வரத் தொடங்கி விட்டது. இதற்கான, நிறுவப்பட்ட பின் உயரமாகும் உபகரணங்கள், நீஈஈளமான லாரிகளில் அடிக்கடி வருகிறது. அவற்றை இரு சக்கர வாகனத்தில் வேகமாகக் கடக்கும் போது ஒரு படபடப்பு ஏற்படும்.(இது போல கண்டெயினர்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள்.)

லாவண்யாவின் கவிதை வரிகள்:

வாகன அடர் சாலையில்
நீளும் கன வாகனமொன்றை
கடக்கும் படபடப்போடு
எத்தனை அவமானங்களை
கடந்தாகி விட்டது....

என்கிற படிமம் அந்தக் கவிதையின் மையத்தோடு அற்புதமாகப் பொருந்தி வருகிறது.

அவருடைய பல கவனிப்புகள் நம்மைச் சுற்றி நொடியில் நிகழ்ந்து விடுபவை. “கண நேரம் கொரிக்க கை கோர்த்து கங்காரு போலாகும் அணில்கள்....”என்பது அதில் ஒன்று. ஒரு நல்ல கவிஞரின் பார்வை இப்படி நுணுக்கமாக இருக்க வேண்டும். இருக்கிறது இவரிடம்.

கண்ணாடிக் கோப்பைகளும் சில பிரியங்களும். என்கிற கவிதை முழுக்க ஒரு நவீன வரிகளுடன் நகர்கிற கச்சிதமான முழுமையான கவிதை. இதைப் போன்ற கவிதைகள் இவருக்கு நிச்சயம் பேர் வாங்கித் தரும்.

பயம் பற்றி நான் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறேன்.

”எத்தனை முறை பயந்தாலும்
பயம் மட்டும் பழகுவதேயில்லை”

என்கிற லாவண்யாவின் வரிகள் என்னை இன்னும் பயப் படவைத்தது, ஒரு சின்ன ஆசரியத்தோடு.

மழைக்கு விரித்திருக்கிற தார்ப் பாயின் குழிவுகளில் தேங்கி இருக்கும் நீரையும், காற்றுக்கு அது அசைகிறதை அதன் கீழிருந்து பார்த்தும் ரசித்திருக்கிறேன்.”நீர்க் கோல வாழ்வை நச்சி” என்கிற தலைப்புக் கவிதையில் இது போலொரு அழகான படிமம். இப்போதெல்லாம் கட்சி விழாக்களுக்கும் கல்யாணங்களுக்கும் வைக்கிற வினைல் போர்டுகள் பல, சேரிக் குடிசைகளுக்கு கூரையாகி இதே போல் நீர்க் கோல வாழ்வை வழங்கிக் கொண்டிருக்கிறது. (நான் பார்க்க நேர்ந்த ஒரு குடிசையின் வினைல் கூரையில், வானம் பார்த்துக் கொண்டிருந்த சினேகாவின் ”க்ளீவேஜில்” தண்ணீர் தேங்கி இருந்தது.)

சில கவிதையின் வரிகளிடையே தொடர்பின்மை தென்படுகிறது.”அமைதியை விளைவித்தல்” என்கிற கவிதை. இது நல்ல கவிதையாக்கப் பட்டிருக்க வேண்டும். எங்கேயோ இடறுகிறது.

”நாலாம் பிறையை நாய் கூடப் பாக்காது” என்று ஒரு சொலவடை உண்டு. பார்த்தால் நிறையக் குழந்தை பிறக்கும் என்றொரு தொன்ம நம்பிக்கையும் உண்டு. ஆனால் அதுதான் சோதனைக்கென்றே கண்ணில் பட்டுத் தொலைக்கும். அதைச் சொல்லுகிற ஒரு கவிதை நன்றாக வந்திருக்கிறது. இந்த சொலவடை , தொன்மம் எல்லாம் சொல்லப் படாமல் வேறொரு தளத்தில்.

நீரடியில் காத்திருத்தல்-என்றொரு கவிதை, நல்ல கவிதை. நீரினடியில் காத்திருத்தல்.....என்ற பொருளில் தலைப்பு இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். இதெல்லாம் பழக்கத்தில் சரியாகி விடும். மற்றப்படி வழக்கமான முதியோர் இல்லம் மாதிரியான எல்லோரையும் பாதிக்கிற விஷயங்களை எல்லோரையும் போல் தனித்துவமற்ற வரிகளில் பதிவு செய்திருக்கிற கவிதையும் இருக்கிறது.


இப்படி சின்னச் சின்ன விலகுதல்கள்( aberrations) இருந்தாலும் நிறைவான லாவண்யாவின் பிரியமும் நட்பும் திகட்டத் திகட்ட ஊடாடும் பல கவிதைகள் நன்றாக இருக்கின்றன.வீணை காயத்ரி, `ப்ரிய பாந்தவி’ என்றொரு புதிய ராகம் கண்டுபிடித்தது நினைவுக்கு வருகிறது. லாவண்யாவும் நல்ல கண்டு பிடிப்பாகலாம். இந்த நல்ல தொகுப்பை எந்த நிபந்தனையுமின்றி வரவேற்கலாம்.

-கலாப்ரியா

இடைகால்
29.11.2009

லாவண்யா சுந்தரராஜனின் "நீர்க்கோல வாழ்வை நச்சி" - பாவண்ணன்



ஊமத்தம்பூக்களும் தானியங்கிக்குழாய்களும்

பெருநகரத்தில் பெரிய நிறுவனமொன்றில் இணைந்து பணிபுரிந்து வாழும் வாய்ப்புப்பெற்றவராக உள்ளார் லாவண்யா. ஆனால் அவர் மனம் பள்ளிப் பருவத்துக்குச் சொந்தமான கிராமத்துடன் ஆழ்ந்த பிடிப்புடையதாக இன்னும் இருக்கிறது. மனத்தளவில் கிராமத்தையும் புறநிலையில் நகரத்தையும் சுமந்தபடி வாழ்கிற இரட்டை வாழ்க்கை இன்றைய தலைமுறையினருக்கு தவிர்க்கமுடியாத ஒரு நெருக்கடி. எதையும் உதறமுடியாத, எதையும் உடனடியாகப் பற்றிக்கொள்ளமுடியாத அவர்கள் மனத்தவிப்புகள் இக்காலகட்ட இலக்கியத்தின் பாடுபொருளாக மாறியிருக்கிறது. லாவண்யாவின் படைப்புலகத்திலும் அது சுடர்விடுகிறது. ஊமத்தம்பூ அவருக்குப் பிடித்திருக்கிறது. தானியங்கிக்குழாய் அவருக்குப் பிடிக்கவில்லை. அவரையறியாமலேயே அவருடைய விருப்புவெறுப்புகள் கவிதைகளில் தன்னிச்சையாக வெளிப்பட்டுவிடுகின்றன.

"ஏரி போலும் ஏரி" இத்தொகுப்பின் சிறந்த கவிதைகளில் ஒன்று. கவிதையில் சித்தரிக்கப்படும் ஏரி வறண்ட தோற்றத்துடன் உள்ளது. சற்று முன்பாக பெய்த மழையின் வரவால் எங்கோ ஒரு பள்ளத்தில் சின்னக் குட்டையாக தேங்கி நிற்கிறது நீர். ஒரு காலத்தில் நீர் தளும்பி நின்ற தோற்றம், இன்று ஒரு சின்னக்குட்டையையும் பெருமளவு கருவேல மரங்களையும் புல்வெளியையும் கொண்ட இடமாக உருமாறிவிட்டது. உயரமான தோற்றத்தோடு எழுந்து நிற்கும் கரைகள்மட்டுமே ஏரி என்கிற பெயரைத் தக்கவைத்துக்கொள்ளும் அடையாளமாக இன்னும் எஞ்சி நிற்கிறது. உருமாறி நிற்கிற ஏரியின் சித்தரிப்பதோடுமட்டுமே இக்கவிதை முற்றுப்பெற்றிருப்பின் அதை ஒரு காட்சிக்கவிதை என்ற அளவில் கடந்துபோய்விடமுடியும். ஆனால் கவிதை சற்றே நீண்டு, அந்த ஏரியைக் கடந்துபோகிற ஒரு பெண்ணின் சித்திரத்தைத் தீட்டிக் காட்டுகிறது. தன்னைப்போலவே அந்த ஏரி என அவள் மனம் எண்ணுவதையும் கண்டறிந்து சொல்கிறது. அக்கணம் ஏரி அழகான ஒரு படிமமாக விரிவாக்கம் பெற்றுவிடுகிறது. அவள் எப்படி ஏரியாக மாறமுடியும். நீர் தளும்பிநின்ற ஏரியைப்போல அவளும் ஒரு காலத்தில் இளமை ததும்ப நின்றவள். காலம் அவள் இளமையை விழுங்கிவிட்டது. வெவ்வேறு அடையாளங்களை அவள் உடலில் ஏற்றிவிட்டது. அவள் உருவம்மட்டுமே பெண்ணுக்குரிய தோற்றமாக எஞ்சி நிற்கிறது. அகத்தோற்றத்திலும் புறத்தோற்றத்திலும் எண்ணற்ற மாற்றங்களை உருவாக்கியபடி நகர்ந்துகொண்டே இருக்கிறது காலம். காலம்மட்டுமே, மாறாத உருவத்தோடு வலம்வர, அதன் கண்ணில்பட்ட எல்லாம் மாற்றமடைந்தபடியே இருக்கிறது.

"கண்ணாடிக்கோப்பைகளும் சில பிரியங்களும்" தொகுப்பில் உள்ள மற்றொரு நல்ல கவிதை. இரண்டு கண்ணாடிக்குவளைகளை முன்வைத்துப் பேசுகிறது கவிதை. அதன் தோற்ற ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு இரட்டையர்போல இருப்பதாகவும் சொல்கிறது. தோற்றம்மட்டுமே ஒன்றாகவே இருந்தாலும் அது பயன்படும் விதத்தில் துல்லியமான வேறுபாடு உள்ளது. ஒன்றில் பிரியம் நிரப்பப்படுகிறது. இன்னொன்றில் தனிமை அகப்பட்டுத் தவிக்கிறது. இது ஒரு தருணத்தின் காட்சி. இன்னொரு தருணத்தில் இக்காட்சி மாற்றமடையலாம். பிரியத்தின் குவளையில் தனிமை அகப்பட்டுவிடுகிறது. தனிமையில் குவளையில் பிரியம் நிரம்பி வழிகிறது. தருணங்கள் இப்படி மாறிமாறி அமைந்தாலும், எல்லாத் தருணங்களிலும் ஏதோ ஒரு குவளைமட்டுமே நிரப்பப்படுகிறது, மற்றொரு குவளையில் தனிமையின் வெறுமை சூழ்ந்து நிற்கிறது. மேசைமீது வைக்கப்பட்ட கண்ணாடிக்குவளைகள் சமூகத்தளத்தில் படிமமாக மாற்றமடையும்போது கவிதையின் வலிமை அதிகரிக்கிறது. நிரப்பப்பட்ட குவளை, எப்போதும் வாய்ப்புகளைத் துய்க்கிற வகுப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவதையும் வெற்றுக்குவளை, வாய்ப்புகளுக்கு வழியில்லாமல் புறக்கணிக்கப்பட்ட வகுப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவதையும் உணரமுடியும். பெறுவதும் புறக்கணிக்கப்படுவதும் தருணத்துக்குத் தகுந்தபடி மாறலாம். ஆனால் புறக்கணிப்பென்ற ஒன்றே இல்லாதபடி சூழல் ஏன் மாறவில்லை என்பது முக்கியமான கேள்வி.

"எத்தனைமுறை பயந்தாலும் பயம்மட்டும் பழகுவதில்லை" என்பது லாவண்யாவின் ஒரு கவிதையில் இடம்பெற்றிருக்கும் வரி. மனம் அசைபோட நல்ல வரி. சிலருக்கு எதிர்பாராதவிதமான ஓசைகளைக் கேட்டதும் பயம் அரும்புகிறது. சிலருக்கு எதிர்பாராத மனிதர்களைச் சந்தித்தால் பயம் உருவாகிறது. சில காட்சிகளைக் கண்டால் சிலருக்கு பயம் தோன்றுகிறது. ஏதோ ஒருவிதத்தில் ஒவ்வாமையால் அல்லது அதிர்fச்சியால் உருவாகிற உணர்வுதான் பயம். அதிர்ச்சி அல்லது ஒவ்வாமை இருக்கிறவரைக்கும் பயமும் இருக்கத்தான் செய்யும். பயத்தை ஒருபோதும் நம்மால் பழகிக்கொள்ளமுடிவதில்லை. பிறவிக்குணம்போல அது நம்முடனேயே தங்கிவிடுகிறது.

"அமைதியை விளைவித்தல்" நவீன வாழ்வின் பதற்றத்தைப் பகிர்ந்துகொள்ளும் நல்ல கவிதை. வேலையிடங்கள் இப்போதெல்லாம் பெருநிறுவனத்தன்மை கொண்டதாக மாறிவிட்டன. எல்லா இடங்களிலும் அடையாள அட்டை. கைவிரல் ரேகைப் பதிவு. வரும் சமயம், வெளியேறும் சமயங்களின் பதிவு. நுழைந்ததற்குப் பிறகு தானே அடைத்துக்கொள்ளும் தானியங்கிக் கதவுகள். எங்காவது ஓரிடத்தில் இடறிவிடுமோ என்கிற பதற்றத்தை மனம் எப்பொழுதும் சுமந்தபடியே இருக்கும். தவறே செய்யாத இயந்திரங்கள் பிறழ்ந்து செயல்படும் சமயங்களில் மனிதர்கள் சூழ்நிலைக் கைதிகளாக கைகட்டி நிற்பதைப் பலமுறை பார்த்த அனுபவத்தால், உள்ளிருக்கும் வரை பதற்றமும் துணையாக இருக்கிறது. அமைதியான வகையில் வாழ்வை அமைத்துக்கொள்ளத்தான் வேலையைத் தேடுகிறோம். ஆனால் வேலைசெய்யப் போன இடத்தில் பதற்றத்தில் உழல்fகிறோம். எவ்வளவு பெரிய முரண்.

காட்சிகளையும் அனுபவங்களையும் எண்ணங்களையும் வகைப்படுத்தி கவிதைகளாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் இளையதலைமுறைக் கவிஞர் லாவண்யா. அவருடைய ஆர்வத்துக்கு சொல்லிக்கொள்ளும்படியாக வெற்றி கிடைத்திருக்கிறது என்பதற்கு இத்தொகுப்பைச் சாட்சியாகச் சொல்லலாம். அவர் மேற்கொள்ளும் இடைவிடாத புதிய முயற்சிகள்மட்டுமே இனி அவரை அடுத்த கட்டத்தைநோக்கி நகர்த்திச் செல்ல உதவும்.

( நீர்க்கோல வாழ்வை நச்சி - கவிதைத்தொகுதி. லாவண்யா சுந்தரராஜன், அகநாழிகை பதிப்பகம். 33, மண்டபம் தெரு, மதுராந்தகம்- 603 306. விலை.ரூ40)

Monday, June 22, 2015

நீர்க்கோல வாழ்வை நச்சி - நூல் விமர்சனம் - நிலாரசிகன்







நீர்க்கோல வாழ்வை நச்சி - நூல் விமர்சனம்

-----------------------------------------------------------------------
நூலின் பெயர் : நீர்க்கோல வாழ்வை நச்சி
வெளியீடு : அகநாழிகை பதிப்பகம்
விலை : ரூ.40
பக்கம்: 64
நூலாசிரியர் : லாவண்யா சுந்தரராஜன்
-----------------------------------------------------------------------

சிறு குழந்தையின் வெள்ளை மனதை ஒத்த இவ்வாழ்வின் அற்புத கணங்களை ரசிக்கவும்,வாழவும் விடாமல் துரத்தியடிக்கும் இயந்திர உலகின் கோரப்பிடியிலிருந்து நாம் தப்பிக்க துணைபுரிவது கவிதையுலகம். அங்கே நமக்கான வாழ்வை,தேவைகளை,துணையை
அழகியலை நாமே சிருஷ்டித்துக்கொள்ள முடியும். எதைப் பற்றிய கவலையுமின்றி,வாழ்தல் குறித்தான பிரக்ஞையின்றி கவிதைக்குள் வாழ்தல் நம்மை ரசனைகளில் குவியலாக்கிவிடுகிறது.
நினைத்தவுடன் பட்டாம்பூச்சியாக,தேன்சிட்டாக,முகிலாக,நிலவாக,தூறல்மழையாக உருமாறிக்கொள்ள கவிதையுலகில் மட்டுமே சாத்தியப்படுகிறது.மனம் கனக்கின்ற போதெல்லாம் கவிதைத்தோள் தேடி அலைவது ஒரு வகை இன்பத்தையே தந்தாலும் யதார்த்த வாழ்க்கையை விட்டு கவிதை வாழ்வு புறம் தள்ளியே எப்போதும் இருக்கிறது. கவிதை வாசித்தல் தருகின்ற சொற்ப நேர சந்தோஷங்களில்தான் தொக்கி நிற்கிறது மிச்ச வாழ்க்கை.

நீர்க்கோல வாழ்வை நச்சி கவிதை நூல் மூலம் இலக்கிய உலகிற்குள் தன் முதலடியை எடுத்து வைத்திருக்கிறார் லாவண்யா. இத்தொகுப்பின் தலைப்பின் வசீகரமே இதனை உடனே படிக்க வேண்டும் என்கிற ஆவலை என்னுள் எழச் செய்தது. இணையத்திலும் சில சிற்றிதழ்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்த லாவண்யாவின் கவிதைகளை மொத்தமாக ஒரே இடத்தில் படித்த போது முதல்தொகுப்பு என்ற எண்ணமேதும் இல்லாத வகையில் சிறப்பாகவே இருந்தன பல கவிதைகள். இயல்பான மொழியில் எழுதப்பட்டிருக்கும் கவிதைகளில் புற உலகின் மீதான நுண்ணிய கவனித்தலை அற்புதமாக பதிவு செய்திருக்கிறார் லாவண்யா.
இத்தொகுப்பின் மிகச்சிறந்த கவிதை "நீர்த்துளியும் நாய்க்குட்டியும்" என்பேன்.இக்கவிதையின் கடைசி ஆறு வரிகளில் சட்டென்று மனம் இறகாகி காற்றில் மிதக்க ஆரம்பித்துவிடுகிறது.

"உன்னைத் தெளித்த
நீர்த்துளிப்பட்டு சிலிர்த்தது
என் நினைவென்னும் நாய்க்குட்டி

உனது குடை விரிப்புகளில்
சட்டென அடங்கியது
எனக்கான வான்"

"கவிதை போலும்" என்றொரு கவிதையில் நிராகரிப்பின் வலியை,பிரிதலின் கடும்துயரத்தை,எச்சிலென தன்னை இகழ்ந்த உறவை அற்புதமாக எழுதியிருக்கிறார்.

"இறுதியில் நீ உமிழ்ந்துவிட்டு போன
எச்சில் மிதக்கும் சாக்கடையில் நிலவொன்று
கலங்கியது எனக்காக"

கடைசி மூன்று வரிகளை நான்கைந்து முறை வாசித்தேன்.எதுவும்/யாரும் நிரந்தரமற்ற இவ்வுலகில் யாரும் யாருடனும் இல்லை என்கிற நிதர்சன அவலம் கண்முன் தோன்றியது.

"கண்ணாடிக் கோப்பைகளும் சில பிரியங்களும்" கவிதை மற்ற கவிதைகளிலிருந்து வேறுபட்டு நவீனகவிதையாக அமைந்திருக்கிறது. அகத்தின் குமுறலாக இக்கவிதை பரிணமித்திருக்கிறது.

ஞாபகமீட்சி,மனம் பழகாத பயம்,தொடரும் பயணம்,பிரியங்களின் பிரியம்,என் இருப்பும் உன் இருப்பும் - இவை அனைத்தும் இத்தொகுப்பிற்கு வலுசேர்க்கும் கவிதைகள்.

தானியங்கி குழாய்களும் நானும்,கொஞ்சம் கண்ணீர் சில கவிதைகள் - இவை கவிதை தொகுப்பின் அடர்த்தியை குறைக்கும் கவிதைகள்.

லாவண்யா எழுத ஆரம்பித்த நாள் முதல் அவரது எழுத்துக்களை வாசித்து வருகிறேன். கடந்த ஓராண்டியில் இவரது மொழிவளமும்,கவிதைத்தேடலின் வளர்ச்சியும் அதீதமாகி இருப்பதை இந்தக்கவிதைகள் உணர்த்துகின்றன. தொடர்ச்சியான வாசிப்பனுபவம் மட்டுமே கவிதைகளின்
குறைகளை களைய உதவும். தேவையற்ற வார்த்தைகளை நீக்குவதும்,ஒரே வார்த்தையை அதிகம் உபயோகப்படுத்தாமலிருப்பதும் எழுத எழுதத்தான் கைக்கூடும். இனி எழுதும் கவிதைகளில் இதனை லாவண்யா நினைவில் கொள்ள வேண்டும். அப்போதுதான்
இதுவரை எழுதிய கவிதைகளை கடந்து செல்வது எளிதாகும்.
லாவண்யா மேலும் பல கவிதைகள் படைத்திட என் மனமார்ந்த வாழ்த்துகள்.



-நிலாரசிகன்

Friday, May 15, 2015

க‌விஞ‌ர் ஞான‌க்கூத்த‌ன் அவ‌ர்க‌ளுக்கு எம் ந‌ன்றி

வ‌ணக்க‌ம்.

ஞான‌க்கூத்த‌ன் இற‌வைப் பருகும் ப‌ற‌வை க‌விதை நூல் பற்றி எழுதிய‌து.



http://www.gnanakoothan.com/2012/04/07/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9a%e0%af%81%e0%ae%95/


Thursday, May 14, 2015

அன்பெனும் வாசனை திரவியம் - கவிஞர் சுகுமாரன்



லாவண்யா சுந்தரராஜனுக்குக் கை கொஞ்சம் நீளம். அன்பு என்று
சொல்லப்படும் பொருள் எங்கெல்லாம் இருக்குமோ என்று சகல
திசைகளிலும் அந்தக் கை தேடுகிறது. பூமியின் எல்லா இண்டு
இடுக்குகளிலும் நுழைந்து அன்பைத் தொட எத்தனிக்கிறது.
பிரபஞ்சத்தின் அந்தரவெளியிலும் துழாவி அதை ஸ்பரிசித்துவிடத்
துடிக்கிறது. மனிதர்கள் மீதான, மனிதர்களுக்கிடையிலான அன்பை
மட்டுமல்ல இயற்கை மீதும் இயற்கைக்கு இடையிலுமான
அன்பையும் தேடுகிறது.  மனித உற்பத்திப் பொருட்களுக்கு
நடுவிலிலும் அன்பின் துகள் இருக்கக் கூடுமென்று இயங்குகிறது.
இந்தச் செயலில் அந்தக் கைக்குள் அகப்படும்  கணங்களை 'கவிதைப்
பொழுதுக'ளாக நிரந்தரப் படுத்திக் கொள்ள லாவண்யா முயல்கிறார்.
'உண்மையும் பிரியமும்/ எங்கேனும் ஓரத்தில்/
ஒளிந்திருக்கிறதாவெனத்/ துளாவுகிறேன்' என்று அவரே தன்னிலை
விளக்கமும் கொடுக்கிறார். லாவண்யாவின் கவிதைக்கான
மனநிலையைத் தீர்மானிப்பது இந்தச் செயல்பாடுதான் என்பது  என்
யூகம். இந்த மனநிலையின் விளைவுகளை  வெவ்வேறு நிறங்களில்,
வெவ்வெறு தொனிகளில் எழுதிப் பார்க்கிறார்.

'கோடிமுறை சிலிர்த்திருப்பினும்/ புதுத் தொடலின்போது/ சிலிர்த்தே
தொலைக்கிறது மனம் எப்போதும்' என்று மனிதர்கள் மீதான
அன்பையும் 'உனக்கான என்னை ஏந்திக் கொண்டாய் சிறகென' என்று
மனிதர்களுக்கிடையிலான நேசத்தையும் 'வேருக்குத்
தெரியவில்லை/வெட்டப்பட்ட மரத்தின் வலி/ விடாது தேடியது
தனக்கான நீர்மையை'  என்று இயற்கை மீதான பரிவையும்
'பிரியங்களைப் பொழிவிக்கும் மழை/ பாறையென்றும்
மண்ணென்றும் பார்ப்பதில்லை' என்று இயற்கைக்கு இடையிலான
இயல்புணர்வையும் 'உணவருந்திய மேஜைமீது/ ரோஜாப் பூவாக
மலர்ந்திருந்தன/ கை துடைத்தெறிந்த காகிதங்கள்' என்று
அஃறிணைச் சலனமின்மையையும்  லாவண்யாவின் கைவரிசை
கவிதைப் பொருள்களாக மாற்றுவது இந்த மனநிலையால்தான்.
தொகுப்பில் இடம் பெறும் கவிதைகளில் அதிகம் உபயோகிக்கப்
பட்டிருக்கும் சொல் - பிரியம்.   தன்னுடைய கவிதை மனநிலைக்கு

ஆதாரமான உணர்வை இந்தப் பிரியமான சொல்லைத் தவிர வேறு
சொற்களால் வெளிப்படுத்துவது
லாவண்யாவுக்கு அசௌகரியமாகக் கூட இருக்கும்போல.
தொகுப்புக் கவிதைகளில் எத்தனை இடங்களில் 'பிரியம்'
தென்படுகிறது என்று குதர்க்கமான ஆராய்ச்சியில் ஈடுபடலாம் என்று
தோன்ற வைக்கிறது இந்த சொற் காதல். ஆனால்
இது வெறும் சொல்லாசையல்ல; மனவமைப்பின் வெளிப்படுத்தல்
என்பதைக் கவிதைகள் அநாயாசமாக நிறுவுகின்றன. 'பெரு மழை
தீர்ந்த பின்பொழுதில் கண்ணாடியில் சிறிதும் பெரிதுமாகப்
பூத்திருக்கும் மழைத்துளிகள்' போல இந்தக் கணங்கள் கவிதைக்குள்
பத்திரமாகின்றன. மழைத் துளிகளைப் பற்றி யோசித்தால் மழையை,
அது உருவாகும் வானத்தை, விழும் நிலத்தை, நீர்மையை, ஈரத்தை,
அது ஏற்படுத்தும்  சிலிர்ப்பை, சமயங்களில் வெறுப்பையும்
உணர்ந்துகொள்ள முடியும் என்பதுபோல இந்தப் பிரிய சொற்களில்
மனவோட்டங்களின் வேறுபட்ட நிலைகளைக் கண்டடையலாம்.
'சந்தோஷ நுரைப்புகளையும் சங்கடக் கசிவுகளையும்' உணரலாம்.

லாவண்யாவின் இந்தக் கவிதை மனநிலையைக் கற்பனாவாதத்
தன்மையானது  - ரொமாண்டிக்கானது - என்ற விமர்சனக்  கலைச்
சொல்லால் எளிதாக வகைப்படுத்தி விட முடியும். நவீனக் கவிதை
ஒரு காலப் பகுதியில் மூர்க்கமாகப்
புறக்கணித்த மனநிலை இது. வாழ்வனுபவங்களை உணர்ச்சிப்
பெருக்குடன் மட்டுமே வெளிப்படுத்திய இந்தப் போக்கு அந்தக் காலப்
பகுதியில் எள்ளலுக்குரியதாக இருந்தது. கண்ணீரைப் பூவாக
உருவகப்படுத்தும் மனநிலையை அன்றைய சீரிய  புதுக் கவிதை
உதாசீனம் செய்தது இயல்பான செயல். ஆனால் கற்பனாவாதம்
உண்மையில் உணர்ச்சிப்  பெருக்கானதல்ல; தன்னெழுச்சியானது
என்ற கருத்து தொண்ணூறுகளுக்குப் பின்னர் பரவலானது.

பெண்மைய நிலையிலிருந்து பேசப்படும் கவிதைகளும்
ஒடுக்கப்பட்டவர் வாழ்வனுபவத்திலிருந்து எழும் உணர்வுக ளும்
எல்லாக் கோட்பாடுகளாலும் கைவிடப்பட்ட நவீன வாழ்வின்
பின்புலத்திலிருந்து உருவாகும் சொற்களும்  தன்னெழுச்சி
இல்லாமல் எப்படிவெளிப்படும்? முந்தைய கற்பனாவாதம் அந்தக்
காலப் பின்னணியில் செல்லுபடியாகக்  கூடிய கரிசனங்களையும் (
சமூகம் சீரழிந்து கிடக்கிறது; ஒரு புரட்சியின் மூலம் அதை
மாற்றிவிடலாம் என்பது போன்ற கருத்தையொட்டியவை),
ஆசைகளையும் ( பெண்ணும் கீழ்த்தள மக்களும் ஒடுக்கப்
பட்டிருக்கிறார்கள்; அவர்களை விழிப்படையச் செய்தால்
பொன்னுலகம் தோன்றி விடும் என்பனபோன்ற நம்பிக்கையை
யொட்டியவை ) அடிப்படையாகக் கொண்டு இயங்கியதாகக்
கணிக்கிறேன். இவற்றில் வாழ்வனுபவத்தின் லேசான சாயல்
இருந்தது. அதன் நிஜ இருப்போ, சிக்கல்களோ படைப்பாகவில்லை.
சுருக்கமாகச் சொன்னால் அவை தன்னெழுச்சியற்றவை.

இந்தத் தொகுப்பிலுள்ள 'பொம்மைகளின் பிரியம்' என்ற எளிய
கவிதையில் ஒரு காட்சி இடம் பெறுகிறது. முன்னால்
நின்றிருக்கும் வாகனத்தின் பின்பக்கக் கண்ணாடி வழியாக
வெளியுலகை நோட்டமிடும் மூன்று பொம்மைகள். அவற்றின்
கண்களில்  ஏதோ ஒரு மழலைப் பிரியத்தை  வீட்டோடு விட்டு வந்த
ஏக்கம் தேங்கியிருப்பதைப் பேசுகிறது கவிதை.பொம்மைகள்
குழந்தையைப் பற்றி ஏங்கும் இந்தத் தற்குறிப்பேற்றம்
ரொமாண்டிக்கானதுதான். ஆனால் தன்னெழுச்சியால் விளைந்தது.
லாவண்யா கவிதைகளின் ஆதாரமான மனநிலை அன்புக்கான இந்த
வேட்கைதான்.வசப்பட்ட அன்பைப் பேணுதலைப் பற்றியும் ( 'உனது
குடை விரிப்பில் சட்டென்று அடங்கியது எனக்கான வானம்') அன்பில்
நேரும் நெருடல்கள் பற்றியும் ( பேசித் தீர்த்த சொற்கள்/ இருப்பினும்/
பேசாத ஒன்றைப் பற்றியே/ நமது
குற்றச்சாட்டுகளும் மௌனங்களும்) மறக்கப்பட்ட அன்பையும்
மறவாத அன்பையும் பற்றியும் ( புகைப்பட ஆல்பம் கைக்குவர/
அவசரமாய்த் தேடுகிறோம்/ அக்கா அக்காவை/ தம்பி தம்பியை/ நான்
என்னை/ அம்மாவோ பொறுமையாக ஒவ்வொருவரையும்) என
அன்பையும் அன்பின்மையையும் அவற்றின் இடைவெளியில்
உள்ளவற்றையும் கவிதைப் பொருளாக்குகிறார் லாவண்யா.
அரூபனாக வரும் காதலனும் அநாமதேய வழிப்போக்கனும்
பொம்மைகளும் தொட்டி  மீனும் புறாவும் நத்தையும் எல்லாம்
அன்பின் வாசனைத் திரவியத்தைப் பூசிக் கொண்டே வருகின்றன.

இவ்வளவு அன்புக்குரியதா இந்த உலகம்? என்று லாவண்யாவிடம்
கேள்வி எழுப்பினால், 'பெருங்கருணையோடிருக்கும்
பிரியங்களுக்கும்/ பிரியத்தைத் தவிர/ காரணிகள் வேறு/ எப்போதும்
இல்லை என்று பதில் சொல்லக் கூடும்.

இது லாவண்யாவின் இரண்டாவது தொகுப்பு. முதல் தொகுப்பின்
கவிதையாக்கத்திலும் இதே மனநிலைதான் செயல்பட்டிருக்க
வேண்டும் என்பது என் யூகம். அந்தத் தொகுப்புக்குத்  தலைப்பாக
அவர் எடுத்தாண்டிருக்கும் 'நீர்க் கோல வாழ்வை நச்சி...' என்ற கம்ப
ராமாயண வரியின் பின்புலம் அதற்குச் சான்று. இராமனின்
அணியில் இணைந்து கொள்ள வீடணன் கும்பகர்ணனுக்கு அழைப்பு
விடுக்கிறான். அதற்கு மறுப்பாகக் கும்ப கர்ணன் சொல்வது இது.
நீரில் பிரதிபலிக்கும்  கோலம் போன்ற வாழ்க்கையை விரும்பி நீண்ட
நாள் இருந்து சாவதை விட இராவணனுக்காக உயிர் துறப்பது மேல்
என்கிறான். என்றைக்காவது களத்தில் பலி கொடுப்பதற்காகவே தான்
இரைபோட்டுப் பராமரிக்கப் பட்டிருக்கிறோம் என்று தெரிந்தே
கும்பகர்ணன் சொல்லும் இந்த பதிலுக்குப் 'பிரியத்தைத் தவிர வேறு
காரணமில்லை'. இந்தக் கணம் கவிதை,வாழ்க்கையைச் சந்திக்கும்
கணம். இந்தக் கணங்களையே தனது அனுபவங்களின் பின்புலத்தில்
கவிதையாக்க எத்தனிக்கிறார் லாவண்யா. அதற்கான கவிதை
மனநிலை அவருடையது. அதை இந்தத் தொகுப்பிலுள்ள
கவிதைகளை விடச் செறிவாகவும் நுட்பத்துடனும் இனி எழுதும்
கவிதைகளில் வெளிப்படுத்தக் கூடும் என்ற நம்பிக்கைக்கு இந்தத்
தொகுப்பு ஆதாரம்.

திருவனந்தபுரம்
25 மே 2011                                                                                                                                          
சுகுமாரன்

Wednesday, May 13, 2015

சிலந்திக் கூடு

சிலந்திக் கூடு : லாவண்யாவின் இரவைப் பருகும் பறவையை முன்
வைத்து:-



“நான் மிகச் சாதாரணமானவள்
என்னால் குறைந்தபட்சம்
உங்களைப் பற்றிய அவதூறுகளை
உங்களிடம் மட்டும்தான் பரப்ப முடியும்”

கவிதை வாசிப்பிற்கான மனநிலையை சமீபமாய் தொலைத்துவிட்டிருப்பதால்
சற்று அசிரத்தையான மனநிலையுடன் தான் லாவண்யா அனுப்பித் தந்த
அவர் தொகுப்பை வாசிக்க ஆரம்பித்தேன். நான்கைந்து கவிதைகளுக்குப்
பிறகு லாவண்யாவின் உலகிற்குள் எளிதாக சம்மணமிட்டு அமர்ந்து
கொள்ள முடிந்தது. சன்னமான பெண் மனதை சின்ன சின்ன நுண்
உணர்வுகளாய், அழகியல் மென் தூவலாய், சற்றே மிதக்கும் கற்பனை
நினைவுக் குவியலாய் மாற்றியிருப்பது புன்னகையை வரவழைத்தது.
எல்லாக் கவிதைகளும் வாசிக்கும்போது மனதை லேசாக்குகின்றன.
இலகுவான மனம் கொண்டு எழுதப்பட்ட இலகுவான கவிதைகள்
வாசிப்பவரை இலகுவாக்குவதில் வியப்பில்லைதானே! தொகுப்பை வாசித்து
முடித்த பின்பு ஏனோ சிலந்திக் கூடு மெல்ல நினைவில் அசைந்தது.
ஒருவேளை ஒட்டு மொத்தக் கவிதைகளும் மென் சொற்கள் கொண்டு
எழுதப்பட்டிருப்பதால் சன்னமாய் பின்னப்பட்ட இழைக்கூடு நினைவில்
வந்ததோ என்னவோ. தெரியவில்லை.

இயற்கையின் அழகை சிலாகித்தல், இயற்கையோடு தன்னைப் பொருத்திக்
கொண்டாடுதல் அல்லது வருந்துதல், இம்மூன்றும் பல கவிதைகளில்
பதிவாகி இருக்கின்றன. பெண் அடையாளம் கொண்ட தனித்தன்மையான
இருப்பு நிலைக் கவிதைகளாக சிலவற்றை வாசித்துப் பார்க்கலாம்தான்
என்றாலும் பால் நிலை கடந்த பொதுவான உணர்வுகளே பெரும்பாலான
கவிதைகளில் இடம்பெறுகின்றன. உடல் குறித்துப் பேசவேண்டிய
இடங்களில் கூட சற்று உள்ளடங்கி உடலின் பின்னான மனதை
மட்டுமே இக்கவிதைகள் பேசுகின்றன. சில கவிதைகளில் உடலைப்
பதிவு செய்ய பயம் கொள்வதாகக் கூட எனக்குத் தோன்றியது (
இக் கருத்தை படைப்பாளியை நன்கு அறிந்திருப்பதால் தோன்றும்
விமர்சகனின் குழப்பங்களாகக் கூட வாசிக்கலாம்) மற்றபடி மூளைக்கு
அதிக அழுத்தத்தைத் தரவிரும்பாத இம்மென் கவிதைகளை வாசிப்பதில்
உருவாகும் மனநிலையை நெகிழ்வு என வரையறுக்கலாம்.

தொகுப்பிலிருக்கும் மொத்தக் கவிதைகளிலேயுமே இந்த நெகிழ்வு
பதிவாகியிருக்கிறது. எதிர்ப்பை/கோபத்தைக் கூட மென்மையாக பதிவு
செய்யும் பெண் மனம் மீதான கற்பனை வாசிப்பவர்களை ‘ரொமாண்டிச’ மன
நிலைக்குத் தள்ளுகிறது. கவிதைகளில் பதிவாகி இருக்கும் பெரும்பாலான
காட்சிகள் ரசனை மிகுந்ததவையாக உள்ளன. யாரையும் பழித்துப் பேசாது,
எதனையும் குறை சொல்லாது வெறும் பார்வையாய் காட்சியாய் மட்டுமே
கவிதைகள் நிகழ்ந்துள்ளன.

“பெருமழை தீர்ந்த பின்பொழுதில்
கண்ணாடியில்
சிறிதும் பெரியதுமாகப்
பூத்திருந்தன மழைத்துளிகள்

சென்ற பின்னும்
மனசோடு தங்கியிருக்கிறது
அசைந்தசைந்து மெல்லக் கடந்த
யானையின் மணியோசை”

ஒரு கறாரான விமர்சகனாய் இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை ஆரம்ப
நிலை நவீனக் கவிதைகள் என வரையறுத்துவிட முடியும். ஆனாலும்
இக் கவிதைகளில் பதிவாகி இருப்பவை அந்த அளவில் நேர்மையானவை
என்பது ஆசுவாசமாக இருக்கிறது. போலச் செய்தலையோ,மிகையையோ,
பாசாங்கையோ இக்கவிதைகளில் உணரமுடியாது. வேறு யாரையும் போல
இருக்க விரும்பாத, பிடிவாதமில்லாத குழந்தையின் புன்முறுவலான
சிறு நடை தான் இத்தொகுப்பு. மற்றபடி ப்ரியம், வாஞ்சை, அப்படியே
ஏற்றுக்கொள்ளுதல், ஏக்கம், கரைவு, தண்மை, மன்னித்தல், இயலாமை
என மனதின் மேல் நிலையில் நின்று, பார்த்து எழுதப்பட்ட பல நிலைகள்
வாசிப்போருக்கு இணக்கத்தையும் நிம்மதியையும் தருகின்றன.

கவிதைத் தொகுப்பை வாசித்து முடித்தவுடன் ப்ரியம் என்ற சொல்
நாவில் ஒட்டிக் கொண்டது. ப்ரியங்கள் சொற்களாய் மட்டுமே நின்றுபோன
என்னுலகில் இந்தப் ப்ரியம் என்ற சொல் ஏற்கனவே தன் நிறத்தை
இழந்துவிட்டிருக்கிறது. தவறான முகவரி எனச் சொல்லி அப் ப்ரியத்தை
லாவண்யாவிடமே கொடுத்துவிடுகிறேன். இத்தொகுப்பிற்கு என்னைப்
போய் விமர்சனம் எழுதக் கேட்டுக் கொண்டதற்கான தண்டனையாய்
அவருக்கு ஒரு இலவச அறிவுரையையும் தராமல் முடிப்பது இச்சிறு
பகிர்வுக்கு அழகில்லைதானே? அது இப்படியாகிறது

“ப்ரியங்களால் நிறைந்த ப்ரியமுள்ள லாவண்யா உங்களின் அடுத்த கவிதைத் தொகுப்பில் இந்தப் ப்ரியம் என்ற சொல்லைப் பார்க்க நான் விரும்பவில்லை”

அய்யனார் விஸ்வநாத்