Sunday, February 13, 2022

பிரம்மாண்டத்தை சொல்லின் அடக்கும் வித்தை


கவிஞர் எழுத்தாளர் திரைப்பட இயக்குனர் என்று பன்முக திறமை கொண்டவர் சந்திரா. இவரை பற்றி நான் அறிமுகம் செய்வது மிளகு காட்டில் மிளகை பேனாவால் வரைந்து இது தான் மிளகு என்று சொல்வதற்கு ஒப்பானது. இவரது மிளகு தொகுப்பு கோட்டை தமிழ் முற்றம் விருது பெற்றது. வேலூர் கோட்டைக்கும் எனக்கு சில சில நினைவுகள் உண்டு. ஓரிருமுறை சென்றிருக்கிறேன். இப்போது கோட்டை தமிழ் முற்றம் விருது நிகழ்வுக்காக பேச முடியுமா என்று கயல்  என்னைக் கேட்டுக் கொண்ட போது தயக்கமேயின்றி ஒப்புக்கொண்டேன். காரணம் வேலூர் கோட்டை தமிழ் முற்றத்தின் நிறுவனர் ஒரு பெண். கயல்விழி என்ற என் அன்புதொழி. அதன் முதல் விருதை பெற்றது சந்திரா என்ற பெண் கவிஞர். இவ்விரு காரணங்களாலேயே எந்த ஒரு மறுபேச்சுமில்லாது சந்திராவின் மிளகு தொகுப்பு பற்றி நான் பேச ஒப்புக்கொண்டேன்.

 

சந்திரா இந்த தொகுப்பில் ஒரு கவிதையில் மூங்கில் மலர்கள் என்ற ஒரு பதத்தை பார்த்து ஆச்சரியப்பட்டு போனேன். திருச்சிப் போன்ற கந்தக பூமியில் பிறந்தவளுக்கு பசுமை என்பது நெற்பயிறிலும் வாழையிலும் மட்டுமே பரிச்சயம். மூங்கில்களை பார்ப்பதே அறிது. அது பூக்கவும் செய்யும் என்பது அதிசயமல்லமல் வெறென்னவாக இருக்கும்? பின்னர் இணையத்தில் தேடி மூங்கில் மலர் எப்படியிருக்குமென்று பார்த்தேன். அது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்த நடன மங்கை மயில் தோகை விரிந்தாடுவது போல  தனது நடன ஆடையின் மடிப்புகள் விரிந்து நிற்கும் ஒரு நொடி நேரத்தை உறைய வைத்து புகைப்படம் எடுத்தது போல இருந்தது. அப்படிப்பட்ட மூங்கில் மலரை அழகை தரிசிக்க காரணமான கவிதைக்கு இந்த உரையை சமர்ப்பித்து இந்த உரையை தொடங்குகிறேன்.

 

மூங்கில் மலர் மட்டுமல்ல இவரது கவிதைகள் வழியாக புதுப்புது பறவைகள், மலர்கள், செடிகள், புல்வகை, மரங்கள் பலவற்றையும் ஆவணப்படுத்தியுள்ளது என்ற விதத்தில் இந்த கவிதைத் தொகுப்பு மிக முக்கியமானது. இந்த தொகுப்பில் 100 கவிதைகள் இருக்கின்றன. இது "மலை என்பது ஒரு நீளமான மரம்", "புறக்கணிப்பின் புற்றில் வாழ்கிறேன்", "நானொரு வெட்டப்பட்ட மரம்" என்ற மூன்று கவிதை தொகுப்புகளை உள்ளடக்கிய கவிதை தொகுப்பு. இந்த தொகுப்பில் நான்கே வரிகளோடும் கவிதைகள் இருக்கின்றன. நான்கு பக்கத்துக்கு விரியும் கவிதையும் இருக்கிறது. கவிதைகள் எந்த வடிவம் கட்டுபாடும் இல்லாத free format ல் இருக்கின்றது. சில கவிதைகள் பத்திகளாக பிரியும் சாத்தியங்கள் இருந்தாலும் ஒரே பத்தியாக எழுதப்பட்டு இருக்கிறது.

 

இந்த கவிதைகளில் கவிதையை சொல்வது சிறு பெண், பதின்பருவ பெண், விடலை காதல் கொள்ளும் பெண், நடுவயது குடும்பப் பெண், கட்டுபாடுகளை துறந்த நாடோடிப் பெண், திரைத்துறையில் இயங்கும் பெண், மலையத்தி, ஒரு சில இடங்களில் கவிதை சொல்லியின் பாட்டி, அம்மா என்று எல்லா வயது பெண்களும் அவர்களோடு சில ஆண்களும் இருக்கின்றனர்.

 

சந்திராவின் கவிதையில் மலை மிளகின் வாசனை, கோடி ரோஜாக்களின் நறுமணம், ஆரெஸ்வதி தைல வாசம், தாழம்பூ நாற்றம், பவளமல்லியின் மென்மணம் என்று பலவித மணம் கவிதையிலிருந்து என்று பிரித்தறிய முடியாத அளவு வீசுகிறது. பசிய பசிய வாழும் மலை திடிரென துரத்துப்பட்ட நகரத்துக்கு வந்த திரும்ப விளைந்தும் திரும்பப் போகமுடியாமலும் வெறுப்பின் துர்நாற்றத்தையும் வீசுகிறது

 

பிரம்மாண்டத்தை சொற்றொடரில் அடக்கும் மாயவித்தையை சந்திராவின் சில கவிதைகள் செய்கின்றன. அதில் ஒன்று மலையை “பேழைக்குள் ததும்பும் நீராய்” அசைக்கிறது.  இந்த கவிதை ஒரு இன்பமான மனநிலையை குறிக்கும் சொற்களால் எழுதப்பட்ட கவிதை. அந்த கவிதையில் எழுதப்பட்ட வரிகளாலே சொல்வதென்றால் “சாய்மானம் இல்லாமல் நிலம் மேலும்புகிறது/ செம்மறி ஆடுகள் பறக்கின்றன” என்பது பரவச மனநிலையை குறிக்கிறதென்றாலும், மலையை நிலத்தை கண்ணீர் ததும்பும் விழிகளோடு பார்த்து எழுதப்பட்ட வரிகள் போலவும் தோன்றுகிறது, மன நிறையும் போதும் சில சமயம் கண்கள் நிறையும் அல்லவா அப்படி எடுத்துக்கொள்ளலாம்.

 

 அதே போல “என்னோடு வாழ்வது” என்ற கவிதையில் “அத்தனை எளிதல்ல/ஒரு மலையை பிடிங்கி/உன் வீட்டுக்குள் வைத்துகொள்வது” இவ்வரிகள் ஒரு பெண்மையின் பிரமாண்டத்தை, அவள் சக்தியை, அரூபமாய் அவளை சூழ்திருக்கும் பேருலகை பெருங்கனவை மூன்றே வரிகளில் அடக்கி அவ்வளவு கூர்மையாக சொல்லிவிடுக்கிறது.

 

“மலையை காலணியாக அணிதல்” என்ற தலைப்பிட்ட கவிதையும் உண்டு. அதன் முதல் வரி “சதா மலை மீது நடந்து கொண்டிருக்கிறேன்” என்பது ஒரு பிரம்மாண்டமான காட்சியை கண்முன் நிகழ்த்துகிறது. மலையில் நடப்பது அதாவது மலையே காலோடு எடுத்துக் கொண்டு நடப்பதும் என்பதே அந்த காட்சி. இன்னொரு கவிதையில் சிறுமியின் விளையாட்டு பொருளாகிறது மலை, அவள் விரல்களாய் அதை அசைக்கும் போது குறுமிளகாய் எம்பி குதிக்கிறது. அது ஒரு மாய எதார்த்த விளையாட்டு.

 

இந்த ஒரு கவிதையில் மட்டுமில்லாமல் பல கவிதைகளில் மாய எதார்த்தம் மிக அசாதாரணமாய் வந்து போகிறது. “மாய இழை” என்ற கவிதையில் வரும் எல்லாப் பெண்களின் ஆடைகளிலிருக்கும் பூக்கள் பறப்பது போல காட்சி இருக்கிறது. ஆனால் அந்த கவிதையில் தொடக்கம் பதின்வயதை நெருக்கும் ஒரு பெண்ணின் சோகத்தை அவமானத்தை சொல்லத் தவிக்கிறது. ரத்தக்கறையை கழுவும் பெண் ஒரு படிமம். அந்த படிமத்தை வளர்த்தெடுத்திருந்தால் கவிதை வேறு ஒரு தளத்திற்கு நகர்ந்திருக்கும்.

 

மலையடிவாரமும் அடிவானமும் கலக்கும் மாய இடம் இன்னொரு கவிதையில் கவிதை சொல்லி ஏறிபார்க்க விரும்பும் மாயநிலமாகவும் அங்கிருந்து அவர் திரும்பி வர விரும்பாத மனமும் பதிவாகியிருக்கிறது. நமக்கும் அங்கிருந்து திரும்ப பிடிக்கவில்லை…

 

சந்திராவின் இன்னொரு கவிதையில் “மலையை சேர்ந்தவளின் பாதத்திலிருந்து உயர்திருக்கிறது மலை. கடல் சார்ந்தவனின் பாதங்களில் கடல் பெருகிறது.” ஒவ்வொரு பிரதேச மனிதர்களின் உடல்மொழி அவர்கள் ஊரை காட்டிக் கொடுக்கும் அந்த மாயத்தை எழுதிச் செல்லும் கவிதை “அறை காலியில்லை”

 

மலைகுடிகளை மலையின் ஆதி மைந்தர்களை அதிகாரம் அழித்தது போல வரும் கவிதைகளில் சந்திராவின் அரசியல் பார்வையும் கூடவே “மலை விழுங்குதல்” என்ற கவிதையில் கவிதைசொல்லி தன்னை தன் நிலத்திலிருந்து அப்புறபடுத்தும் அதிகாரியின் கண் முன்னே அவளுக்கு தூரத்தில் தெரியும் மலையை விழுங்குகிறாள் அன்றிலிருந்து அவள் கண்களில் மலைநதி பாய்கிறது. துயரமான தருணத்தையும் மாய எதார்த்த மொழியில் செய்து பார்க்கும் வித்தை சந்திராவுக்கு மிக அழகாக கைகூடியிருக்கிறது.

 

 சொந்த நிலத்திலிருந்து துரத்தப்படும் மக்களின் பாடுகளை பல கவிதைகளில் பதிவு செய்கிறார் சந்திரா. அவை கண்ணீர் பிழியும் கவிதைகளாக, மனதை துளைக்கும் கவிதைகளாக மட்டுமல்லாது கவிதைக்கான அழகியலோடு இருக்கின்றது. அரசியல், சோசியலிசம் சார்ந்த கவிதைகள் எழுதுவது கத்தி மேல் நடப்பது போன்றது. கொஞ்சம் பிசகினால் அவை புரட்சி கூச்சல்களாய் மாறிவிடும் அபாயம் உண்டு. அப்படியில்லாம் ஆதிகுடிகளின் நிலம் அபகரிக்கப்பட்ட அரசியல், நிறம் அரசியல் இவற்றையெல்லாம் பல பரிமாணங்களில் கவிதையாக்கியிருக்கிறார் சந்திரா.

 

வான்கோவின் ஓவியம் என்ற கவிதையில் புரட்சிக்காரர்களுக்கு அதிகாரிகளுக்கும் இடையில் ஓவியம் எல்லைகோடுகளாகி புரட்சிக்காரர்களை ஓவியத்துக்குள்ளும் கவசதொப்பிக்காரர்களை ஓவியத்துக்கு வெளியிலும் நிறுத்துகிறது. மிகமிக வித்தியாசமான கற்பனை மிக அழகான கவிதையும் கூட.. மலை நில அபகரிப்பு மட்டுமல்ல தற்கால அரசியலையும் பகடி செய்யும் கவிதைகள் சிலதும் உண்டும் “உங்கள் ரெஃப்ரி காவி உடை அணிந்திருக்கிறார்” கவிதை மாட்டிறைச்சி அரசியல், ராமஜென்ம பூமியின் அரசியல் தத்துவங்களை சார்ந்து கேள்வியெழுப்புகிறது. சந்திராவின் காதல் கவிதைகளில் கூட அரசியல் எட்டிப்பார்க்கிறது சில பெண்ணியமும் பேசுகிறது.

 

பெண்ணியம் பேசும் கவிதைகளில் இரண்டு பெண்கள் கவிதை மிக சிறப்பானது.  “ காலம் வந்தால் இலவம் காய்க்குள் அடங்குமா/அது பறந்து பறந்து எங்கு செல்லும்/எப்படியும் ஒரு மெத்தைக்குள் மூச்சு முட்டி சாகும்” வளரிளம் பெண் கன்னிமை கனவுகளோடு குடும்ப வாழ்வில் நுழைந்துவதும். நிசர்தனம் சில சமயம் அவள் கண்ட கனவுக்கு வெளியே பெரு அதிர்ச்சி தரும் வண்ணமிருக்கக்கூடும் என்பதை இவ்வளவு எளிதான வார்த்தைகளில் சொல்லிவிட முடிகிறது சந்திராவால்.

 

“என் அறை ஜன்னல் / எனக்கு எட்டாத உயரத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது” என்ற மற்றொரு கவிதையின் வரிகளில் தனக்கான கட்டுபாடுகள் கொடுக்கும் அதீத திணறலை வெளிப்படுத்தியிருக்கும் கவிதை சொல்லி “கதவைத் திறந்து வெளியேறி செல்ல/ எனக்கு எல்லா நியாயங்களும் இருக்கிறது” என்று மற்றொரு கவிதையில் குடும்ப அமைப்பிலிருக்கும் கோளாறுகளை பதிவு செய்கிறார்.  அதோடு அந்த அமைப்பை விட்டு வெளியேற முடியாத அவலத்தையும் சேர்த்தே பதிவிடுகிறார். திரைத்தொழிலில் பொருட்டு பெண் உடலை அவமானம் செய்யும் குரூரத்துக்கு மௌன சாட்சியாய் இருக்க வேண்டிய குற்ற உணர்வு பொங்கும் கவிதையையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

 

சிறுவயத்தில் பெண்கள் இயல்பாகவே நிறத்தையும் வடிவத்தை முன்னிட்ட செய்யப்படும் கேலிகளால் அடையும் தாழ்வு மனப்பான்மையை மிக அழகாக சில கவிதைக்குள் கொண்டு வந்திருக்கிறார் சந்திரா. சிறுவயதில் கறுப்பாக இருக்கிறேன் என்ற நினைக்கும் பெண் மாதளிரின் மினுமினு நிறம் அவ்வளவு அழகானதென்று உணர்வதற்கு பல வருடங்கள் எடுக்கும்.

 

 

சிறுவயதின் புறக்கணிப்புகள் என்றைக்கும் ஆராத வடுவாகிவிடுகிறது. பல வருடங்களுக்கு முன்னர் குழந்தையின் வளர்ச்சியை பார்த்தே வயது முடிவாகியது. பள்ளிக்கு சேர்க்கும் போது வலது கை தலையை சுற்றி இடது காதை தொடவில்லை என்றால் பள்ளியில் சேர்க்கமாட்டார்கள். அந்த புறக்கணிப்பு குழந்தைக்கு எந்த மனநிலையை ஏற்படுத்தும் என்பதை தனது கவிதையில் அற்புதமாக கொண்டு வந்திருப்பார் சந்திரா. ஒவ்வொரு புறக்கணிப்பும் கவிதைசொல்லியை நாய் போல் குரைக்கச் செய்தது என்பது ஒரு குறிப்பு. புறக்கணிப்பை தாங்கிக் கொள்ள கவிதை சொல்லி கவன ஈர்ப்புக்காக ஏதேனும் செய்யும் விசித்திரத்தை குறிப்பிடுகிறது. என்னருமை சிறு குருமிளகே என்று அன்று இந்த கவிதைசொல்லியை யாராவது வாரி அணைந்து ஆற்றுபடுத்தியிருந்தால் இந்த கவிதைகளை ஒருவேளை நாம் இழந்திருக்கக் கூடும். இன்னொரு கவிதையில் நீ பிறந்த போது கறுத்த எலிக்குஞ்சு போலிருந்தாய் என்று எழுதியிருக்கிறார். இந்த நிற அரசியல் காலம் காலமாய் இன்னும் தொடரும் பிரச்சனை.

 

சந்திராவின் பல கவிதைகளில், பால்யத்தை நோக்கி திரும்ப விழையும் பேரிச்சையையும் தொடர்ந்து பதிவாகிறது “தன்னை ஆளுயர கண்ணாடி நிறைத்து வைத்திருப்பதை பார்த்தவள் அதை அள்ளி அள்ளி வெளியே உற்றினாள். சிதறிய துண்டுகளிலெல்லாம் அவள் பட்டுத்துணியணிந்த அவளது பொம்மைகள் சிரித்தன.” இப்படிச் சொல்லும் வரிகளில் கவிதைச் சொல்லி பொம்மை வைத்து விளையாடும் சிறுமிக்கு திரும்ப ஏங்குவது புரிகிறது.

 

இன்னும் பல கவிதைகளில் இந்த ஏக்கம் பொதித்து வைக்கப்பட்டிருக்கிறது “கடந்தகாலத்தை நத்தையின் முதுகில் ஏற்றிவிட்டாய் அது தார்ச்சாலையில் பொசுங்கியபடி வந்து கொண்டிருக்கிறது” என்ற வரிகளில் கடந்தகாலத்தில் இழந்தவற்றை ஒரு காலஇயந்திரம் போல ஆரஞ்சு விற்கும் சிறுமியின் கூடைக்குள் ஏறி சென்று சரிசெய்ய விழைகிறது.

 

மலைக்காட்டின் வசந்தகால சிறுமியோ சந்திராவின் கவிதையில் தான் ஊதித்தள்ளிய வசந்த கால காற்று வளையத்தை பற்றிக் கொண்டு நகரத்தின் அங்காடித் தெருவில் வந்து இறங்குகிறாள் அதன் பகட்டில் மயங்கி நகரிலிலே தொலைந்து போகிறாள். அவள் வசந்தகாலம் அவளை தேடுகிறது.

 

இன்னும் பல கவிதைகளில் தொலைந்த பால்யத்தை, வேலைக்காக விட்டு பெயர்ந்த பசும் மலையை, பால்ய நினைவுகளை பதியனிடுகிறது. மிளகு தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளின் நிலம் மலையும் மலைக்காடும் அங்கேயிருக்கும் பலவித வாசனைகளும் வண்ணங்களும். சில கவிதைகள் கடலும் கடல் சார் நிலப்பரப்பின் கவிதைகள்.

 

ஆகவே தன்னிச்சையாக சில கவிதைகள்  சங்ககவிதையின் நீட்சியாக பரிமளிக்கின்றன. மரையா என்ற கவிதையில் பின்குறிப்பாக  திணை குறிஞ்சி என்றும் பொழுதுகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

அந்த கவிதையில் திணையில் கருபொருளான கூடலும் கூடல் நிமித்தமும் என்று தொடங்கி இடையிலேயே திணை மயக்கமாய் ஊடலும் ஊடல் நிமித்தமாய் மாறுகிறது.

 

கானவா என்று இன்னொரு கவிதையில் வேங்கை மலர் உதிரும் தருணம் கவிதை சொல்லியின் உடல் சிறுக்கிறது. இன்னொரு கவிதையில் ஜன்னலிலிருந்து பார்க்கும் துண்டு நிலம் போன்ற மலையும் அதன் உச்சியில் பூக்களை உதிர்க்கும் மஞ்சக்கடம்பமரம் அதை உணரும் மனக்கண். இவ்விரண்டு கவிதையுமே கொன் ஊர் துஞ்சுதும் யாம் துஞ்சலமே சங்க கவிதையின் தொடர்ச்சி போலவே எனக்குத் தோன்றியது. நொஞ்சி மலர் உதிரும் ஓசையை கேட்கும் தலைவியை ஒத்தவளே வேங்கை மலர் உதிர்தலை, கடம்ப மலர் உதிர்தலை உணரும் கவிதை சொல்லி.

 

மேலும் ஐந்திணையிலும் சொல்லப்படாத நம் வாழ்வு கவிதையும் சங்கத்தின் நறுமணத்தை கொஞ்சம் பூசிக் கொண்ட வருகிறது. போதை புல் மீது முல்லைப் பூவாய் மினுக்குகின்றன பனித்துளிகள் என்ற இடமும் சங்க கவிதையின் உவமை நயத்தை நினைவுக்குள் கொண்டு வருகிறது

 

வட்டார வழக்குகள், புதிய வார்த்தைகள் (காடோடி), இதுவரை நாள் கேள்விப்படாத பூக்கள் மரங்கள் பறவைகள் என்ற பல சொற்களை தேடியறிந்து கொள்ள இந்த தொகுப்பு எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது. பருப்பலகை என்பது தேனீ வட்டார வழக்காக இருக்கலாம். போதை புல் என்பது திருச்சிவாழ் மக்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.

அது மட்டுமல்ல அடைக்கலாங்குருவி, காரிகை நோன்பு, வேங்கை பூ, பீனிக்குருவி, அக்காக்கா குருவி(குயில்?), இருவாட்சி பறவை, தடிசம்பழம், இச்சிப் பழம் என்ற பலவற்றையும் இந்த தொகுப்பில் முதல் அறிமுகம் கொள்கிறேன். அதெற்கென சந்திராவுக்கு ஒரு பிரத்தியோக நன்றி.

 

சந்திராவின் கவிதைகளில் எனது தொழில்நுட்பத்தின் ஒரு கோட்பாட்டை காணும் வாய்ப்பு கிடைத்தது.

எங்கள் தொழில்நுட்பத்தில் எல்லாமே தகவல்கள் தான். சுழியமும் ஒன்றும் மட்டுமே. இந்த தகவல்களை சேமித்து வைக்க பல கட்டமைப்புகள்(data structures) உண்டு. அதில் ஒன்று stack. அந்த கட்டமைப்பை நமது டிரங்க் பெட்டிகள் போல நினைத்துக் கொள்ளலாம். அதில் நிறைய புத்தகங்களை அடுக்கி வைக்கும் போது கடைசியாக வைத்த புத்தகத்தையே முதலில் எடுக்க முடியும் முதலில் வைத்த புத்தகத்தை கடைசியாக தான் எடுக்க முடியும். Last in first out technique.

 

அப்படிப்பட்ட கட்டமைப்பில் ஒரு கவிதை “செம்பரிதியை நிறுத்துவது எளிது” கவிதையில் சூரியன் மறையவில்லை -> காட்டெருமை மரிக்கிறது -> அது கோடி ரோஜாக்களின் அழகில் மயங்கி நிற்கிறது -> அவை மழை பொழிவதால் மலர்கின்றன -> மழை மயில் ஆடுவதால் பொழிகிறது -> மழை பொழிய மயில் ஆடுகிறது -> மழை பொழிவதால் ரோஜா பூக்கிறது -> காட்டெருமை ரோஜை பார்த்தபடி சூரியனை மறைக்கிறது -> சூரியன் மறைய மருக்கிறது.

 

இத்தனை அழகான மலைக்காட்டில் கோடி ரோஜாக்களை பார்த்தபடி சூரியன் மறைய மறுப்பது நியாயம் தான். கவிதையில் எந்த பிரம்மாண்டமும் சாத்தியமே. ஒரு காட்டெருமை கொண்டு சூரியன் மறைவதை நிறுத்திவிடமுடியும்.

 

சந்திராவின் மொத்த கவிதைகளையும் இரண்டு உணர்வுதளத்தில் பிரித்துவிடலாம். innocent love, tailer made eliteness. அறியாமையும் குழந்தைமையும் நிறைந்த அன்பு. சொல்லிக்கொடுக்கப்பட்ட செய்யப்பட்ட நாகரிகம் என்ற செயற்கைத்தனம். சந்திராவின் கவிதைகள் வாழ்வது இரண்டு உலகத்தில் மலைக் காட்டாலும், உப்பங்காற்று வீசும் கடல் அருகேயும். ஆகவே பசுமையும் பனியும் நிறைந்த மலைக்காட்டிலும் அலையும் வெம்மையாலும், உப்பும் கசப்பும் நிறைந்த கடல் காற்றாலும் கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இந்த முரண்பட்ட உணர்வுகளும் நிலமும் அவரது கவிதைகளுக்கு பல்வேற வரைவுகளை தருகிறது.

 

கவிதைகளில் களமும் உணர்வும் எவ்வளவு முரணானதோ போலவே அவர் கவிதைகளில் வாழ்வதும் இருவேறு பெண்கள் ஒருத்தி பொருப்பான குடும்பத்தலைவி. இன்னொருத்தி கட்டற்ற சுதந்திரம் கொண்ட நாடோடிப் பெண். அவர் காணும் உலகில் ஆண் கடல். பெண் மலை. 

 

சந்திராவின் கவிதைகள் சமைக்கும் வாழ்க்கை இரண்டு துருவமுனைகளில் இருக்கிறது.  ஒன்று மலை வாழ் சிறுமியாக அது பன்னீர் கொய்யாகளை பந்து போல உருட்டி விளையாடுகிறது, பெட்டிகடைகளை பலூன் வாங்கி விளையாடுகிறது, மிட்டாய் கடிகாரங்களை கட்டிக் கொள்கிறது. அதே சமயம் இரன்டாவது நகரத்தில் படப்பிடிப்பில் நடிகையின் கிளிவேஜ் இன்னும் நன்றாக தெரியட்டுமென்று தனது உதவியாளரிடம் சொல்லும் மிகவும் பிராக்டிக்கலான பெண்ணாக பரிமளிக்கிறது. டார்க்கெட் முடிந்ததும் உயர்தர பப்பில் ஆட்டம் போடுகிறது. அந்த நகரத்து பெண் தனது கையில் மிளகின் மணம் மிதக்கும் கட்டங்காபியை ஏந்தியபடி  நகர வாழ்க்கையோடு பொருந்தாமல் மலையையும் காட்டையும் தேடி ஏங்குகிறது. கடலில் உப்பை கசகசப்பை பொருக்க முடியாமல் கடந்த காலமே என் அமைதி அமைதி என்று ஏங்குகிறது. இப்படியாக இருதுருவங்களின் இடையே மிகப்பெரிய கடிகார பெண்டுடல்மாகி மாறி மாறி ஊஞ்சலாடுகிறது.

 

சந்திராவின் கவிதைகள் தூது புறாப் போல எப்போதும் கடலிருந்து மலையை நோக்கியே திரும்புகிறது. மரணிக்கும் நேரத்தில் கூட மலைகாட்டின் அற்புதங்களை கண்டு அதன்பின் உலகை வெளியேற ஆசைபடுகிறது. அதன் கவிதை சொல்லும் உள் விழைவு சாகும் வரை அங்கேயே வாழ வேண்டும் அதாவது எப்போதும் அங்கேயே வாழ வேண்டும் இதற்கு காரணம் அவர் வார்த்தைகளிலேயே சொல்வதென்றால் “சொர்கத்திலிருந்து” வந்தவர்களுக்கு அங்கே திரும்பி செல்ல நினைப்பது நியாயமான ஆசை தானே?

 

கவிதைகளில் அவர் கொண்டு வந்திருக்கு பசுமையான மலைக்காடும் பனிக்காற்றும் வாசிப்பவர்களுக்கே அங்கிருக்க வேண்டுமென்ற ஆசைவரும் போது அவர் பெரும்பாலான கவிதைகள் மலையே மையம் கொள்வதில் ஆச்சரியமொன்றுமில்லை.

 

இந்த தொகுப்பில் எதுவுமே குறைகளே இல்லையா, இருக்கிறது கவிதைகளில் திரும்ப திரும்ப சில உணர்வுகளும், ஒரே நிலப்பரப்பும் வருகிறது.

எவ்வளவு தான் அழகுடை நிலமாயினும் 100 கவிதைகளில் 95% கவிதைகளில் மலையும், கடலும் மட்டுமே நிறைந்திருப்பது பிற நிலங்கள் போறாமை கொள்ளும் விஷயம்.

 

சில கவிதை முடிந்த பின்னரும் தொடர்கின்றன அவை கவிதையின் அழுத்ததை கொஞ்சம் நீர்த்து போக செய்கின்றன. அதற்கு ஒரு உதாரணம் “என்னுடன் வாழ்வதென்பது” இந்த கவிதையை முதல் மூன்று வரிகளோடு முடித்திருந்தால் அதன் வீச்சு மிகப்பெரிதாகியிருக்கும். பின்வரும் மூன்று வரி கவிதையின் செறிவை முற்றிலும் குலைக்கிறது.

அதே போல மேலும் சில கவிதைகளை என்னால் இந்த தொகுப்பிலிருந்து சுட்ட முடியும். கொஞ்சமே கொஞ்சம் எடிட் செய்திருந்தால் மிக சிறப்பானதாகியிருக்கும்.

 

சிலகவிதைகள் நிகழ்வுகள் திடீர் திடீரென தொனி மாறுகிறது. பத்திகள் சரியாக பிரிக்கபட்டிருநதால் இந்த குழப்பம் கொஞ்சம் குறைந்திருக்கும். வருகின்றன. உதாரணத்துக்கு நன்னிலக் கடவுள் என்ற கவிதையில் அப்பா இறந்த தூக்கத்தை பேசும் கவிதைசொல்லி அவள் அம்மாவையும் அவர்கள் வீட்டு ஏழ்மையையும் பேசிக் கொண்டிருக்கும் போது கவிதை திடிரென “டார்கெட் முடிந்தவுடன் இருட்டில் அந்நியனோடு உயர்தர பப்பில் ஓரு ஆட்டம் போடலாம் என்று முற்றிலும் உணர்வுத்தளத்தில் மாறுகிறது. மேலும் சில கவிதையில் அடுத்தடுத்த வரிகளில் உவமை ஒன்றுக்கொன்று சம்மந்தமே இல்லாத விஷயம் வருகிறது. கவிதையில் எல்லாமே சாத்தியம் என்றாலும் வாசிக்கும் கவிமனம் லயத்தோடு மேல் செல்ல இது ஒரு தடையாக வருகிறது. அதைத் தவிர வேறு பெரிய குறைகள் எதுவுமில்லை.

 

 முன்னரே சொல்லியது போல மூங்கில் மலர்களுக்கும், தடிச்சம் பழங்களுக்கும், கோடி ரோஜாப்பூக்களுக்காக சூரியனை மறைவதை ஒத்தி வைக்கும் காட்டெருமைக்கும் இந்த உரை சமர்பணம்.

Saturday, February 5, 2022

ஜனவரி 2022 சில கதைகள் பரிந்துரை

 கதை: விளிம்பு
ஆசிரியர்: வைரவன் லெ ரா
இதழ்: ஓலைச்சுவடி
பரிந்துரை:லாவண்யா

மாய எதார்த்த கதை போல மொழியும் வடிவமும் மிக அருமையாய் குலைந்திருக்கிறது சிரஞ்சீவி மலைகள் இந்தியாவின் பலபகுதிகளில் இருப்பது போல குமரிமுனையிலும் ஒன்று அந்த மலையையும் இமயமலையையும் இணைக்கும் ஒரு சிறுபுள்ளி. நல்ல கதை.

*

கதை: யாருக்காகவும் பூக்காத பூ
ஆசிரியர்: அரவின் குமார்
இதழ்: வல்லினம்
பரிந்துரை:லாவண்யா

கதைசொல்லி ஒரு பள்ளி மாணவன் பத்துவயதுக்கு குறைவான வயதுடைய பையன் சொல்வது போன்ற கதை அதற்கே உரிய(குழப்பமான) போக்கில் இருக்கிறது. கதை சொல்லியும் அவன் நண்பர்கள் எல்லோருமே ஏழ்மை நிலையிலுள்ள பெற்றோரின் பிள்ளைகள். சிறுபிள்ளைகளிலுக்கிடையே நிகழும் சின்ன சின்ன போட்டி பொறாமைகள் மிகத்தெளிவாக பதிவாகியிருக்கிறது. அன்னையற்ற குழந்தைக்கு தராத சலுகையை அவர் கதைசொல்லிக்கு தருகிறார். இந்த இடத்தில் கதாரியர் நமக்கு ஏதோ ஒரு ஏற்றதாழ்வை உணர்த்த விரும்புகிறார் ஆனால் அது தெளிவாக உணர தேவையாக உரிபொருள் இல்லையோ என்று தோன்றுகிறது. பால்ய வயதில் நிகழும் கதைகளுக்குண்டான innocence இன்னும் கொஞ்சம் புனைப்பட்டிருந்தால் இந்த கதை எங்கோ சென்றிருக்கும். வாசிக்கலாம்.

*

ஆசிரியர்; எம்.கோபாலகிருஷ்ணன்
கதை: திரும்புதலற்ற பாதை
இதழ்: வல்லினம் இணைய இதழ
பரிந்துரை: மு. குலசேகரன்

நேர்த்தி மிகுந்த நெடுங்கதை. இதில் இந்த தனித்த வடிவத்துக்கேயுரியதான, வெவ்வேறான, ஆனால் வரையறுக்கப்பட்ட ஒரு விதத்தில், கதைமாந்தர், காலம், இடம், சிறப்பாக அமைந்துள்ளன. இந்தியாவின் இரு வேறு மூலைகளை பிணைக்கிற சாதிய சிக்கல் பின்னணியில், மிகவும் கலையமைதியுடன், சொல்லப்படாத பலவற்றை உணர வைக்கும் மொழியில் இக் கதை எழுதப்பட்டுள்ளது. நிலவுடமை முறை சரிந்து, முதலாளித்துவம் வளர்ந்த சூழலிலும் வேரோடிப்போயுள்ள, மேல்/கீழ் பிரச்சினை மாறாமலிருக்கிறது. உற்பத்தி உறவுகள் மாறினால் சாதியம், மத சிக்கல்கள் தேயும் என்பது இன்னும் கனவாகவே நின்றிருக்கிறது. குறிப்பிட்ட இருவரும் ஒத்த பொருளாதார நிலையிருந்தாலும், அந்நியமான பிரதேச அவலத்திலிருந்தாலும், ஒருவன் உயர்சாதிய மனோபாவம் கொண்டிருக்கிறான். அதுவே அவன் உடல், நடத்தை பாவனைகளாக வெளிப்படுகின்றன. அது போலவே, களமும் மாறுபட்டிருப்பதால், ஒடுக்குதலுக்குள்ளானவன் இம்முறை எதிர்த்து நிற்கிறான், காகம் வலிமையான கழுகிடம் போரிடுவது போல். இதில் ஊழ் போல் சிக்கி மரணமடைகிறான் மற்றொருவன். அவனுக்கு சாதியப் பிரச்சனைகள் இல்லை போலிருந்தாலும், குடும்ப அமைப்பை மீறிய காதல் மணம் புரிந்தவன். இறுதியில் ஆதரவற்று நிற்கும் மனம் வெதும்ப செய்யும் மனைவிகள், உற்றார்கள். சாதியம், மீறல் என்ற வெற்று உணர்வுகள் ஒரு தற்செயலான அபத்தப் புள்ளியில் வைத்து, பல நுட்பங்கள் கொண்டு விவரிக்கப்படுகின்றன.

*

கதை: பிரதி ஜெராக்ஸ்
ஆசிரியர்: சேவியர் ராஜதுரை
இதழ்: சொல்வனம்
பரிந்துரை:லாவண்யா

பிரதி எடுக்கும் கடையில் மறுபடி மறுபடி பிரதி எடுக்க எடுக்க வருவதற்கு காரணம் இதுவாக இருக்கலாம் என்று நினைக்கும் படியான கதை. கதையின் முடிவை இன்னும் இறுக்கமான, உனக்காகத் தான் வருகிறேன் என்றெல்லாம் சொல்லாமல் விட்டிருந்தால் இந்த கதை இன்னும் நன்றாக இருந்திருக்கும். எழுதுவது ஒருவிதத்தில் பிரதி எடுப்பது போன்றதே என்ற இடத்தை இந்த கதை தொட முயற்சி செய்திருக்கிறது. அந்த கோணத்தை இன்னும் வலுபடுத்தியிருந்தால் இந்த கதை இன்னும் வேறு தளத்தைத் தொட்டிருக்கும்.

*

ஆசிரியர்:கனகராஜ் பாலசுப்பிரமணியம்
கதை: நிலவுண்ணும் மண்
இதழ்: காலச்சுவடு
பரிந்துரை: அனோஜன் பாலகிருஷ்ணன்

சமீபத்தில் உரையாடல் ஒன்றில் நண்பர் சொன்னார், “அடிப்படைவாத இஸ்லாமியர்களிடம் இருந்து, முற்போக்கு இஸ்லாமியர்கள் தம்மைப் பாதுகாக்க இனிவரும் காலங்களில் அதிகம் கடினப்பட வேண்டியிருக்கும்…” என்று. ஏறக்குறைய அதை உணர்த்திச் செல்லும் கதை. துனேசியா நாட்டில் அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் அரசியல் புரட்சியை, குடும்ப உறவுச்சிக்கலுடன் இணைத்துக் கச்சிதமாக எழுதப்பட்டுள்ளது. பிரான்ஸில் அரேபிய பின்புலத்தில் எழுதப்பட்ட வாழ்க்கைச்சூழல், பழகிப்போன கதைக்களங்களில் இருந்து நம்பகமான வேறுப்பாட்டைத் தருகிறது; காரணம் கனகராஜின் நுண்தகவல்களும் அவதானங்களும். காலனிய காலத்தின் பின்னர் ஏற்பட்டிருக்கக்கூடிய இடம்பெயர்வுகள், குடியேற்றங்கள், அதன் அரசியல் முரண்கள் போன்றவை தமிழ் இலக்கியத்திலும் வருவது நல்ல விஷயம். சுருக்கத்திலிருந்து இன்னும் இன்னும் விரிவுக்குள் செல்ல அது உதவும். அரசியல் கதைகளில் இருக்கும் பிரச்சார நெடி அது கொண்டுசெல்லும் தீர்வில் மட்டுமல்ல; கதையைப் பிரஸ்தாபிக்கும் விதத்திலும் உண்டு. கனகராஜால் பக்குவமாக எழுதிச்செல்ல முடிகிறது. ஜனவரி காலச்சுவட்டில் இக்கதையை வாசிக்கலாம்.

*

நீண்ட நாட்களுக்கு பின்னர்

இனி எனது வலைப்பூவில் தொடர்ந்து எழுதலாம் என்ற நினைக்கிறேன். எழுதத் தொடங்கியது இங்கே தான். ஆகவே இந்த இடத்தை மறக்கக் கூடாது. இடைப்பட்ட இந்த காலத்தில் நான்காவது கவிதைத் தொகுப்பும், முதல் நாவல் காயாம்பூ என இரண்டு நூல்கள் வெளியாகியுள்ளன.






ஆகவே இன்னும் எழுத நிறைய இடமிருக்கிறது என்று மீண்டும் வந்திருக்கேன். என் படைப்புகளை வாசிக்கும் நண்பர்களும் தோழிகளுக்கும் நன்றி.



Friday, September 6, 2019

பின்னல் சித்திரங்கள்


                         






 காலச்சுவடு பதிப்பகத்தின் வெளீயிடாக தற்சமயம் நடைபெறும் மதுரை புத்தக காட்சிக்கு வெளியான எனது முதல் சிறுகதை நூல் "புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை". அதற்கு எழுத்தாளர் அசதா அவர்கள் எழுதியுள்ள முன்னுரை.   
புனைகதை என்பது தொடர்ச்சியாகப் பொய்களை நெய்து ஒரு மகத்தான உண்மையைக் கண்டடைவது. ஆப்கானிய எழுத்தாளர் கலீத் ஹொசைனியின் புனைவெழுத்துக் குறித்த இந்தப் பார்வை ஒரு செவ்வியல் வரையறை. புனைவெழுத்தாளரது நெய்யும் பாங்கில் பின்னப்படும் கற்பனைகள் ஒரு வெளிச்சத்தை வந்து சேருகின்றன. அந்த வெளிச்சம் அல்லது உண்மை ஒரு அகதரிசனமாகவோ, மனப்புரட்டலாகவோ அல்லது அதன் பின்னால் இன்னும் கூடுதல் வெளிச்சமிருக்கும் ஓர் இருண்ட வாயிலுக்கான திறப்பாகவோகூட இருக்கலாம். இறுதிச் சித்திரம் பின்னலில்தான் இருக்கிறது எனும்போது கதைகள் பின்னப்படும் விதமே பிரதானமாகிறது.

லாவண்யா சுந்தரராஜனின் பதினோரு கதைகள் அடங்கியபுறாக்களை எனக்குப் பிடிப்பதில்லைஎன்னும் இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் நகர்ப்புறம் சார்ந்த நடுத்தர அல்லது மேல் நடுத்தர குடும்பத்துப் பெண்களது அகவுலகை நமக்குக் காட்டுபவை. பூ விற்கும் பெண்ணும் கிராமத்து விவசாயக் குடும்பத்துப் பெண்ணும் மையப்பாத்திரங்களாக அமைந்த கதைகளும் உண்டு என்றபோதும் மேற்சொன்ன அடையாளமே தொகுப்புக்குப் அதிகம் பொருந்தி வருகிறது. இக்கதைகளை வாசிக்கையில்  சம்பவங்கள்  ஊற்றுப்போல பெருகியபடியிருக்க அதனிடையே கதைமாந்தர்கள் உலாவியபடியும் இடைவிடாது பேசியபடியும் இருப்பதுபோன்ற ஒரு சித்திரம் மேலெழுந்து வருகிறது. தம்போக்கிலான இம்மனிதர்களையும் சம்பவங்களையும் கதையாசிரியர் பின்னியிருக்கும் விதத்தில் இவை சமகாலத்தின் முக்கியமான சிறுகதைகளாகியிருக்கின்றன.

சப்தபர்னி மலர்கள்நுட்பமான சிறுகதை. அறிமுகமில்லாப் பெருநகரில் ஒரு பெண் சுற்றியிருக்கும் ஆண்கள் மட்டில் தன்னை மெதுவாக இயல்பாக நெகிழ்த்திக் கொள்வதை ஆர்ப்பாட்டமின்றி சொல்லும் இக்கதை ஆண் -பெண் உறவின் சூக்குமப் பரிமாணங்களைத் தொட்டுச் செல்கிறது. தான் ஏமாற்றப்பட்டதற்கு நீதிமன்றம் சென்று பரிகாரம் தேடும் சூழலில் இருந்தபடி ஒரு பெண் தன்னை சமூகம் உறவுகள் அரசு அமைப்புகள் ஆகியனவற்றுக்குள் பொருத்திப் பார்த்துக்கொள்வதாக  சில்லறைகதை அமைந்திருக்கிறது.

இளம் கைம்பெண்ணான தனது அண்ணிக்கும் திருமணமாகாத தனது தம்பிக்குமிடையேயான உறவின் அர்த்தம் புரிந்தும் புரியாமல் குழம்பி சதா குமைச்சலுறும் ஒரு பெண்ணைமுற்றத்து அணில்கதையில் திறம்படப் படைத்திருக்கிறார் லாவண்யா சுந்தரராஜன். இன்னொரு தளத்திலிருந்து பெண்ணின் அகச்சிக்கலைப் பேசும் கதையானபூமரம்”, கதையாசிரியரின் லாகவமான கூறுமுறையில் குறிப்பிடத்தக்க கதையாகிறது. எல்லாவகையிலும் வெற்றிபெற்றுவிட்ட ஒரு பெண்ணின் அகந்தை தாய்மைப்பேறின்மை என்னும் விஷயத்தின்முன் சலனமுறுவதாகச் சொல்லுமிடம் சற்று நெருடலானது என்றபோதும் இதுபோன்ற இடங்களில் சமூக வழக்கின் தாக்கம் குறைத்து மதிப்பிட இயலாதது.

தனது எளிய கனவுகளுக்குள்கூட பொருந்திடாத, எப்போதும் தன்னிலிருந்து விலகியே நிற்கும், பொதுவாழ்வின் சாமர்த்தியங்கள் ஏதுமற்ற அப்பாவை அவரது மரணத்தின்போது நினைவுகூரும் ஒரு மகளின் நினைவேக்கங்களின் தொகுப்பாய் அமைந்திருப்பதுஅப்பாசிறுகதை. தந்தைமகள் உறவின் அதிகம் அறியப்படாத ஒரு பரிமாணம் இக்கதையில் காணக்கிடைக்கிறது. வண்ணப்படத்தின் நடுவே நகரும் கறுப்பு-வெள்ளை துண்டுக்காட்சியைப்போல காலத்தாலும் பேசுபொருளாலும் தனித்து அமைந்த கதைகள்சின்ன லட்சுமிமற்றும்யூனிபார்ம்”. “விடுபூக்கள்நேரடியாகச் சொல்லப்பட்ட கதையேயானாலும் அதில் பெண்ணின் பாடுகள் அசலாகப் பதிவாகியிருக்கின்றன. “புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை”, “செண்பா சித்திஆகியன பெண் மனதின்  அக அடுக்குகளை பூடகமாகச் காட்டிச் செல்லும் கதைகள்.  துண்டுதுண்டான சம்பவங்களைத் தொகுத்தபயணங்கள்கதையும் முக்கியமானது.

தொன்மங்கள், வரலாறு, சமகால நிர்ணயங்கள் இவற்றையொட்டி சமூகத்தில் பெண்களின் வகிபாகம் தொடர்ச்சியாக ஆய்வுக்கும் மதிப்பீட்டுக்கும் உள்ளாகும் நிலையில் அவர்களை அவர்களது அன்றாடத்தின் வெளிச்சத்திலும் இறுக்கத்திலும் பார்க்க விழைவனவாக லாவண்யா சுந்தரராஜனின் கதைகள் இருக்கின்றன. இக்கதைகளின் பெண்கள் - சப்தபர்னி மலர்கள் கதையின் நாயகியோ, செண்பா சித்தியோ, விஜயாவின் அண்ணியோ- தமது தேவைகளை அறிந்தவர்கள், குடும்பத்துள் எளிய புகார்களுடன் அல்லது புகார்களேயற்று உழல்பவர்கள்; அதேநேரம் தம்மைச் சுற்றியுள்ள தடுப்புக்களை உடைக்கிறோம் என்ற பிரக்ஞையின்றியே அவற்றை மெல்ல உடைத்து முன்னேறுபவர்கள். இந்த அன்றாடங்களின் வழியாக லாவண்யா சுந்தரராஜன் படைத்துக்காட்டும், உறவுச் சிக்கல்களும் உணர்ச்சிப் மோதல்களும் நிறைந்த பெண்கள் உலகை ஒருவர் நேசிக்காமல் இருக்க முடியாது. தொடர்ச்சியாக சம்பவங்களைப் பின்னிச் செல்வதினூடே தன் கதைகளைப் படைத்திருக்கும் லாவண்யா பெண்களின் மீறல்களை இயல்பாகக் கதைகளுள் பொதிந்திருக்கிறார். பின்னல்கள்வழி முடிச்சுக்களையல்லாமல் யதார்த்த சித்திரங்களைத் தீட்டியிருக்கிறார். சொல்லலில் முனைப்போ மொழிமீதான அதீத கவனமோ இன்றி எழுதப்பட்டிருக்கும் இக்கதைகள் யதார்த்தமாக அமைந்திருக்கும் அதேநேரம் வலுவான புனைவாக்கங்களாகவும் திரண்டு வந்திருக்கின்றன. இத்தொகுப்பு வழியாக கவிஞரான தன்னை ஒரு சிறுகதையாசிரியாக முன்வைக்கும் லாவண்யா சுந்தரராஜனின் முயற்சி வெற்றியடைந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

அசதா
20-08-19

Saturday, June 1, 2019

சொல்லிய கதையும் சொல்ல வந்த கதையும்

Image result for சிவப்பு கூடை திருடர்கள்
Image result for சிவப்பு கூடை திருடர்கள்
எஸ் செந்தில்குமாரின் "சிவப்புக் கூடை திருடர்கள்" சிறுகதைத் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. முப்பது சிறுகதைகள் அடங்கிய கனமான தொகுப்பு. ஒவ்வொரு கதைகளும் வெவ்வேறு கதைக்களம் மாய எதார்த்தம், அடித்தட்டு மக்களின் கதை, நகர்புற வாழ்வு, முகநூல் காலச்சாரம் என்று விரியும் பல்வேறு தளங்கள். உறவு சிக்கல், பெண்ணியம், உறவுகளுக்கு இடையே போலி பிணைப்பு, குரூரம் என்று பல்வேறு உணர்வுநிலைகளை தொட்டுப் பேசும் கதைகள். நாவிதர்கள், பண்டிதர்கள், பொற்கொல்லர்கள், கணனி படித்தவன், வெள்ளாடு வளர்க்கும் குடியனவன் என்று பல்வேறுதரப்பட்ட மாந்தரின் கதைகள். ஒரு கதையுள் சம்பவங்களை அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாதவை போல எண்ணற்ற கோடுகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக வரைந்து, கதையின் இறுதியில் கோட்டோவியமாக மெய்சிலிர்க்க காணத் தரும் அசோகமித்திரனுக்கு தனது புத்தகத்தை சமர்பணம் செய்திருப்பதில் ஒரு நியாயமிருக்கிறது. எஸ். செந்தில்குமார் தனது கதைகளில் சம்பவங்களை கோடுகளாக இன்றி தனித்தனி பிரதேசங்களின் எல்லைக்கோடுகாளாக வடிக்கிறார். அது இறுதியில் எல்லாம் சேர்ந்த பெரிய வரைபடமாக மாறுகிறது.  

எஸ். செந்தில்குமாரின் பெரும்பாலான கதைகள் எங்கோ தொடங்கி எங்கோ முடியும் கதைகளாக இருக்கின்றன. ஆனாலும் அதில் சித்தரிக்கப்படும் ஒவ்வொரு காட்சிகளும் ஏதேனும் ஒரு மையசரட்டில் கோர்க்கப்பட்ட மணிகள் போன்றவை. கதை முடியும் போது அது அலங்கார மாலை போலாகிவிடுகிறது. கதை தொடங்கும் முதல் வரியிலேயே கதையுள்ளே வாசகரை இழுத்துக் கொண்டு இறுதி வரை அவர்களை கவனம் சிதறி போகாமல் கதையுள்ளே உலவ விடும் நேர்த்தியான சொல்முறைஅந்த சொல்முறையே அவரின் கதைகளிலிருக்கும் பிசிறுகளை பிசிறுகளாக காட்டாமல் அவற்றை புடவையின் பூவேலைபாடுகள் போல தோற்றமளிக்க செய்கின்றன. கண்மலர் என்ற கதையில் திருவிழாவின் பல்வேறு காட்சிகளை எழுதி இருப்பார், ஆனால் கதையின் உள்நாடி வேறு. கதாசிரியரின் பெரும்பாலான கதைகள் இதே போன்றவையே. அதன் பொருட்டே எஸ். செந்தில்குமார் கதைகளை தனித்துவம் பெறுகின்றன.

மாய எதார்த்த கதைகளாக வரும் சிவப்புக் கூடை திருடர்கள், கதலி, புன்னகை, அவர்கள் சென்ற பாதை போன்ற கதைகள் சுவாரஸ்யமானவை. சிவப்புக் கூடை திருடர்கள், கதலி இரண்டிலும் மாயவித்தை நடக்கும் சமயம் ஏதேனும் வித்தியாசமான வாசனை மயக்குவது போலவும் அதுவே கண் கட்டு வித்தைக்கு காரணமானதாகவோ என்று வாசகனை நம்ப வைக்கிறார். யட்சி வரும் போது குப்பென்று மயக்கும் வாசனையடிக்கும் என்பது உண்மை தான் போலும். வாசனை குறியீடாக இருக்கும் இந்த கதைகளில் நடப்பது மாயவித்தை என்பதை நம்பவியலாத எதார்த்த நடையில் கதை சொல்லி இருப்பதே இந்த கதைகளின் சிறப்பு. திரைப்படங்களில் சிலவற்றில் மனிதர்களுக்கும் பேய், பிசாசுகளையும் வித்தியாசம் காட்டவோ அல்லது பீதியை கிளப்பவோ பேய்களுக்கு கண்களை மட்டும் வெள்ளை நிறத்தில் காட்டும் தொழில்நுட்பத்தை தனது கதையில் குறியீடாக்கி பளிக்கு கண்கள் என்று "அவர்கள் சென்ற பாதை" கதையில் சொல்கிறார் கதாசிரியர். “புன்னகை” கதையில் புகைப்படத்திலிருக்கும் பெண்ணில் புன்னகைக்கு மயங்கி வீட்டிலிருப்போர் இரவு ஊருக்கு செல்வதை அறிந்து அந்த வீட்டுக்கு வந்து இளைப்பாற நினைக்கிறான் கதை சொல்லி. அதே போலவே அவன் நண்பனும் வருகிறான். இருவரும் மிகச் சதாராணமாக இயல்பாக உரையாடிக் கொள்கின்றனர். இறுதியில் பத்தியில் "புன்னகை" என்ற மொத்த கதையும் மாய எதார்த்த கதையாகிப் போகிறது.

தமிழின் ஒற்றை எழுத்தை குறியீடாக கொண்ட இரண்டு கதைகள் உள்ளன இந்த தொகுப்பில். மாய எதார்த்த கதையான சிவப்புக்கூடை திருடர்களில் "" எழுத்தும், சிவப்பு நிறமும் மிக முக்கிய எதிர் இணைப்பு. சிவப்பு நிறம் உழைப்பை குறிக்கும் இங்கே உழைப்பின்றி கண்கட்டு வித்தையாக திருடப்படும் விஷயத்திற்கு இந்த நிறத்தையும், என்பதை கயமை, கள்ளத்தனம், களவு என்று பொருள்படும்படியும் எடுத்துக் கொள்ள ஏதுவாக இருக்கிறது. நிர்மலாவின் சைக்கிள் கதையில் சைக்கிளின் முகப்பில் குறிப்பிட்டிருக்கும் "நி" என்ற எழுத்து நிர்மலாவை குறிப்பதா அல்லது அது ஒரு நினைவு மீட்டெடுக்கும் சின்னமாக குறிப்பதா என்று யோசித்துக் கொண்டே கதையின் இறுதியை அடையும் போது அது கொண்டை ஊசி வளைவில் திரும்புவது போல அந்த எழுத்து குறிப்பது வேறொன்றாக இருக்கலாமோ என்று ஒரு சிந்தனையை விதைப்பதே எஸ்.செந்தில்குமாரின் கதை செய்யும் முறை. அந்த கதையில் சைக்கிள் நிறம் எனார்மல்(எமாரால்ட்), சீட் மெரூன் இரண்டும் ரொமான்டிச உணர்வின் நிறமாக எடுத்துக் கொள்ள வசதியாக இருக்கிறது. காதல் நிறம்(பச்சை)  நீலம் தானே. அதுவும் மேதமை பொருந்திய விலையுயர்ந்த பளபளக்கும் நீலம்(மரகத பச்சை).

எஸ். செந்தில் குமார் பேசும் பெண்ணியம் வித்தியாசமானது தனது கணவனுக்கு தன்னுடம் உறவு கொள்ள பிரியம் இல்லையென்றால் கணவரின் தம்பியுடனேயே உறவு கொள்ளலாம் என்று நியாயபடுத்துகிறார். "ஆம்பளதனம் இல்லான்னா பேசாம வேலைக்கு போயிட்டு வீட்டுல முடங்கி கிட" என்று கதைசொல்லியின் தம்பி மூலமே குரூரமாக சொல்ல வைக்கும் தைரியம் கதாசிரியருக்கும் இருக்கிறது. நடைமுறையில் இது சாத்தியமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இதே கதையின் தொடர்ச்சியாக "கோகிலா என்று கோகிலாம்மாள்" என்ற கதையை வாசிக்கலாம். மணிமேகலை கதையில் நகர்புறத்தில் பணம் சம்பாதிக்க வேண்டி வரும் பெண்களில் உடலில் தீராது ஒட்டியிருக்கும் ஸ்வீட் வாசனையும்வலியை நீக்கும் தைல வாசனையும் பொருளாதாரம் சிக்கலின் குறியீடுகளாக பார்க்க முடியும். பொருளாதார சிக்கல் மக்களை எவ்வளவு இயந்திரகதிக்கும் சில்லரைதனத்துக்கும் ஆளாக்குகிறது என்பதை அந்த கதையில் கண்டிருணரலாம். மகளிர் காப்பக விடுதியில் அபலைகளில் கண்ணீர் சென்னை வெள்ளைத்தை படிமமாக கொண்டு வெளிபடும் நெடுங்கதை மணிமேகலை. ஒரே ஒரு வரலாற்று கதையாக வரும் புத்தன் சொல்லாத பதில் கதையை கூட பிண்ணனியில் யாசோதரைக்கு நியாயம் கேட்டு பெண்ணியம் பேசுவதாக கொள்ளலாம். புத்தன் பதில் சொல்ல முடியாத கேள்வி யாசோதரையுடையது. "மைதானம் அளவு உலகு" கதையில் வரும் கதை சொல்லியின் மனைவி சோகம் மிகுதியின் போது தகப்பனுடன் சேர்ந்து குடிக்கிறாள். சோக நிவாரணியாக குடிப்பதை நியாயப்படுத்தும் ஆண் மைய்ய கருத்தாகவே இதனை நான் பதிவு செய்ய முடியும். பெண்ணுக்கு குடிப்பதற்கு சம உரிமை தரும் பெண்ணிய கருத்து பதிவாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம். பெண்ணில் எளிய ஆசையான சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற ஆசை கூட பெண் உடல் வாதைகளில் குறிப்பாக கருவுற்றிருக்கும் காலம், குழந்தை பிறந்து அது சிறுகுழந்தையாக இருக்கும் போது போன்ற சில்லரை காரணங்களுக்காக தடுக்கபடுகிறாள் என்று பதிவும் எஸ். செந்தில் குமாரின் கதையில் உண்டு. பெண் பிள்ளைகள் பொருளாதார பற்றாகுறை காரணமாக படிக்க போகாமல் வீட்டின் வேலைகளை பார்க்கும் சில காட்சிகளும் ஒருசில கதைகளில் வந்திருக்கிறது.

எஸ். செந்தில்குமார் கையாண்டிருக்கும் சிறுவர் உலகம் குதூகலமானது. அவர்களின் உலகம் பட்டைபெயர்களில் நிறைந்தது. மெகபூபா என்பது பட்டைபெயர் மட்டுமல்ல, அது ஒரு உடல் மொழி. கலைக்கு கிடைத்த அங்கீகாரம். மெகபூபா என்று அடைமொழியை அடைய அத்தனை குதூகலத்தோடு எல்லா சிறுவர்களும் போட்டி போடும் போது அந்த சிறுவர்களோடு ஒருவராக கதையில் ஓடி விளையாடும் வாசக மனம். பால்யத்தை மீட்டெடுக்க உதவும் சித்திரங்கள் பல இந்த தொகுப்பில் உள்ள கதையில் காணப்படுகின்றன. குதூகல சிறுவர் உலகம்  பற்றி பேசும் கதைகள் ஒருபுறமிருக்க “உமிக்கருக்கு” போன்ற பால்யத்தை குடும்பத்தின் பொருளாராத தேவைக்காக தொலைத்து விட்டு சிறுபிள்ளைகளின் உழைப்பு சுரண்டலை காட்டும் கதை. அதில் வரும் சிறுவர்களை, சற்றே பெரிய சிறுவர்கள் படுத்தும் பாடு ஜூனியர் சீனியர் ராகிங் போலிருக்கிறது. விளையாட்டுப் பருவம் மாறாத சிறுவர்களின் உடல் உமியின் அரிப்பு போல நம்மை ஒட்டிக் கொள்கிறது இந்த கதை அந்த சிறுவர்கள் மீது உருவாக்கும் கரிசனம். நிர்மலாவின் சைக்கிள் கதையில் வரும் விடலை பருவத்துக்கு நெறுக்கும் சிறுவர்களின் கதை அந்த பருவத்துக்கே உரிய உடல் ஈர்ப்பை காதல் என்று நினைக்கத்தோன்றும் உளவியல் சிக்கலை சொல்லும் சிறப்பான கதை. “அவன் மோட்டர் சைக்கிள் ஓட்ட பழகிக் கொண்டான்” கதையிலும் முதன்முதலாக வண்டியோட்ட பழகும் சிறுவனின் மனநிலையை சரியாக பதிவு செய்கிறது. அப்பாவுக்கு மாட்டு வண்டி, மகனுக்கு மோட்டர் சைக்கிள் இருவருமே வண்டியோட்ட ஒரே நாளில் பழகுவது கற்கும் ஆசை அதிகமுள்ளவர்க்கு மட்டுமே புரியும் விஷயம்.

உலகில் மகத்தான எல்லா இலக்கியமும் உறவின் சிக்கல்களை பேசுவதாகவே இருக்கின்றன. அவ்வாறு உறவு சிக்கல்களும் அதிலுள்ள போலித்தனங்களும் பல்வேறு கதைகளில் பதிவாகி இருக்கிறது. பொருள் பொருட்டு வாய்சண்டை முதல், கொலை செய்யும் வரையிலான பெண்கள் அசாதாரண பதிவுகளாக எஸ்.செந்தில் குமார் கதைகளில் வலம் வருகின்றார்கள். உறவின் சிக்கலை மிக பூடகமாக சொல்லும் கதைமைதானம் அளவு உலகு”. எப்போதுமே தனது புடவை, நகையை விட அடுத்த வீட்டிலிருக்கும் நகையோ, புடவை அதி உன்னமாய், அழகாய் தோன்றுவது இயற்கை. இதே உணர்வை தத்தம் மனைவியினும் அடுத்தவன் மனைவியின் மீதான ஆர்வமும் அதற்கான காரண விளக்கங்களும் கதையூடே பின்னியிருந்தாலும், கதை சொல்லியின் மனைவிக்கு கதை சொல்லியின் நண்பர் மேலிருக்கும் ஈர்ப்பை தாழம்பூவை கொண்டையில் தெரிந்தும் தெரியாமலுமாய் மறைத்து வைப்பது போல கதையில் சொல்லியிருப்பார் எஸ்.செந்தில்குமார். அப்பாவுக்கும் பிள்ளைகளுக்குமான உறவின் சிக்கலையும் சொல்லும் கதைகள் இமயமலைக்கு டிக்கெட், பலி சோறு, மெகபூபா என்றொரு நண்பன், பொற்படியான் போன்றன. அதில் மிக முக்கியமானதாக சொல்வதென்றால் பொற்படியான். தன்னுடைய கனவை பிள்ளைகள் மேல் திணிக்கும் தந்தை அதன் பொருட்டு மகன்கள் படும் துயர் என்ற மெல்லிய சரடு. ஆனால் அதன் பலம் மலையை கட்டி இழுக்கவல்ல சித்தரிப்பாக முடிகிறது. அத்தனை பாரம் மிகுந்த கதை. முதலாளி, தொழிலாளி அல்லது சக தொழிலாளியிடமான சிக்கலை பேசும் கதைகள் மோட்சம், உமிக்கருக்கு போன்றவை. “காணும் முகம் தோறும்” கதையில் இரு தோழிகள் தங்களுக்குள் எப்படி உறவை பேணுகின்றார்கள் என்பதை காட்டும் முக்கியமான கதை. மேலும் எளிய மாந்தரின் கதைகள் கண்மலர், உமிக்கருக்கு, சிக்கந்தர் அப்பச்சி இன்னும் சிலமகள்களில் மேல் பாசப்பிணைப்பில் உருகும் கதைகள் வெள்ளாட்டுக் குட்டி, மண்வாகு போன்றவைவெள்ளாட்டி குட்டி திருமணம் குதிராத மகளை பற்றிய, திருமணம் முடிந்து சீர் வரிசை சரியாக செய்ய முடியாத தந்தையின் தவிப்பு மட்டுமல்ல அந்த கதையின் முக்கிய முடிச்சு பரமசிவனிம் மகள் செல்வியின் பாத்திர வார்ப்பு. சமீப காலங்களில் கிராமங்களில் பார்க்கும் இளம்பெண்களில் பிரதி. அப்பெண்கள் ஆண்களில் சட்டையை போட்டு, தலையில் உருமால் கட்டி ஆண்களை போலவே சைக்கிள்/டிவிஎஸ் 50 ஓட்டி செல்லும் காட்சி கதையினுடே ஒரு கிராமசாலையில் விரிகிறது.  “ப்ளோராவின் காதல்” கதையின் இரண்டு பெண்கள் தங்களது மகளிடம் கொண்டிருக்கும் உறவு சிக்கலை பேசும் கதை. இரண்டு பெண்களுக்கும் அவர்களில் மகள்கள் அவர்கள் பெற்ற பெண்கள் இல்லை. ஒருத்தியின் மகள் தந்து மகள். அவள் தற்செயலாக கிடைத்த மகள், இன்னொருத்தி மறுதாரம் மூத்தாள் மகள் மீது கொஞ்சமும் அக்கரையில்லாத கொடுமைக்காரி. வலுக்கட்டாயமாக அம்மா ஆனவள். மிக நுட்பமான அம்மா மகள் முரண்களையும், உள் ஒளிந்திருக்கும் பாசத்தையும் பதிவிடும் கதை 

மிக சமீபகாலத்தில் எழுதப்பட்ட கதை என்பதால் தொழில்நுட்ப வளர்ச்சியின் பொருட்டு பயன்பாட்டிலுள்ள செல்போன்கள், லேப்டாப், முக நூல் கலாச்சாரம் மிக சகஜமாய் எஸ்.செந்தில் குமாரின் கதையுலகில் அமைந்திருக்கிறது. "மைதானம் அளவு உலகு" கதையில் முகநூலில் நடக்கும் அலப்பறைகள் பலவும் பகடியாக பதிவாகியுள்ளனநம் சமூகத்தில் வழக்கத்திலுள்ள பல சடங்கு நிகழ்வுகள் கதாசிரியரின் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளில் பதிவாகியிருக்கிறது. கண்மலர் கதையில் மொட்டையடித்து, காது குத்தும் நிகழ்வுரசமட்டம் கதையில் தாலிக்கு பொன் உருக்கிதரும் நிகழ்வு. பலி சோறு கதையில் நீத்தாருக்கு முப்பதாம் நாள் இடுகாட்டில் நடத்தும் சடங்கு என்று பல்வேறு கலாச்சார நிகழ்வுகளை ஆவணபடுத்தும் கதைகளாக இவை இருக்கின்றன. புத்தன் சொல்லாத பதில் கதையில் பிள்ளை பெற்றவுடன் கை நிறைய கடுகை வெடிக்க செய்து அதன் நெடியை பிள்ளை பெற்றவள் நுகர செய்வது போன்ற ஒரு காட்சி பதிவாகியிருக்கிறது. இதனை சார்ந்த ஆய்வு செய்து பார்க்கும் ஆவலை இது தூண்டுகிறது.

எஸ். செந்தில் குமாரின் சில கதைகளில் பாத்திர அமைப்போ, அல்லது வரிகளோ, பெயரிடும் முறையோ வேறு சில எழுதாளர்களில் படைப்புகளை நினைவுபடுகிறது. அவ்வாறு நினைவுகளை கிளரும் படைப்புகள் ஆக சிறந்த படைப்புகளாக இருக்கும் போதே இந்த சம்மந்தம் சாத்தியப்படுகிறது. புன்னகை என்ற கதையில் புகைபடத்தில் புன்னகைக்கும் பெண்ணின் கையெழுத்து "சா" என்ற எழுத்தில் தொடங்குவதாக குறிப்பிடும் வரியின் வர்ணனை நகுலனின் "நினைவுபாதை" நாவலில் சுசீலாவின் கையெழுத்தை நகுலன் வர்ணப்பதை நினைவுபடுத்தியது. அதே போல "மோட்சம்" கதையின் பண்டரிநாதன் தேவிபாரதியின் "நிழலின் தனிமை" கருணகாரனையும், உமிக்கருக்கு கதையின் வரும் முதலாளிகளில் பெயரிடும் முறையும் "நட்ராஜ் மகாராஜ்" நாவலின் பெயரிடும் முறைகளையும் நினைவுபடுத்துகிறது. சிவப்புக்கூடை திருடர்களில் வரும் சிறுமி விமலாத்திய மாமல்லனின் "சிறுமி கொணர்ந்த மலர்" கதையில் வரும் சிறுமியை நினைவூட்டினாள். "புத்தன் சொல்லாத பதில்" கதையில் புத்தன் உண்ணும் காளான் உணவு தி.ஜாவின் கண்டாமணி மார்கத்தின் குழப்பை நினைவுபடுதியது. சில கதைகள் மட்டுமல்ல "சிக்கந்தர் அப்பச்சி" கதையில் பெத்தா சொல்லும் "மீன் எலும்பை இழுத்து செல்லும் எறும்பு" ஞானகூத்தனின் கவிதையில் வரும் "இளைத்து விட்டாய் பாட்டி என்றேன்/இளைக்கனும். பத்தே பத்து எறும்பு எடுத்துகிட்டு போக கூடியதாய்/கடைசி காலத்தில் தேகம் இளைக்கனும்" என்ற வரிகளை நினைவூட்டியதுஎஸ். செந்தில் குமாரின் மேல் சொன்ன எல்லா கதைகளும், கதைகளங்களும் வேறென்றாலும் நான் படித்த பிற படைப்புகளை நினைவில் ஆழத்திலிருந்து மீட்டெடுக்கும் போது கிடைந்த பேரானாந்தத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை

சில கதைகளில் இந்த கதாபாத்திரத்தின் இந்த கதாபாத்திரத்தின் நோக்கமென்ன என்ற குழப்பம் இருக்கிறது. "ப்ளோராவின் காதல்" கதையில் விஜயாவின் கதாபாத்திரம் கதைக்கு எந்த விதத்தில் வலு சேர்க்கிறது என்று கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. "புத்தன் சொல்லாத பதில்சாந்தினியின் ஆறு மாத கற்பத்திற்கு காரணமானவன் என்பதை தவிர எந்த பயன்பாடுமில்லாத கதாபாத்திரத்தின் சாந்தினியின் கணவன் பாத்திரம் அவன் கடைசிவரை சாந்தினி கிளம்பிய இடத்திலிருந்து சென்று சேராத கீழாமரூரிலேயே இருக்கிறான். மண்வாகு கதையில் மருதப்பனின் மகள் நெய் போளியை கொடுத்து விடும் முன்னரே அந்த போளியை நல்லம்மாள் சாப்பிடுகிறாள். அடுத்தவரியின் "அத்தா இன்னிக்கி அப்பா நெய் போளி வாங்கிட்டு வருவாரு நீங்களும் உங்க வயித்துல இருக்க பிள்ளையும் சாப்பிடுங்க" என்று சொல்கிறாள். ஆனால் அடுத்த பத்தியில் அந்த போளியை கொடுத்தும் அனுப்புகிறாள். மேல் சொன்னவை புனைவின் போது, எழுதும் போதோ ஏற்பட்ட குழப்பமாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில் மனைவி இழந்தவனை கோவில்களில் பூஜை செய்ய அனுமதிக்க மாட்டார்கள். முக்கியமாக சிறு தெய்வங்களுக்கு படையல் செய்பவர்கள் மனைவி இறந்து விட்டால் பூஜை தொடர்வதற்காகவே இரண்டாம் திருமணம் செய்வார்கள் அல்லது பங்காளிக்கோ, பிள்ளைகளுக்கோ படையலை விட்டு தருவார்கள். ஆனால் "பலி சோறு" கதையில் பூசாரியின் மனைவி இறந்த பின்னரும் மாவண்ணா கருப்பண்ணன் கோவிலில் பூஜை செய்கிறார். இது போன்ற சின்ன சின்ன பிரச்சனைகளை தவிர்த்து பெரும்பாலான கதை பல்வேறு அனுபவங்களை கடத்தும் கதைகள்.

கதைகளில் நீளம் சற்றே அதிகமென்று கருதக் கூடிய சில கதைகள் இந்த தொகுப்பில் இருந்தாலும், ஆரம்பித்த முதல் வரியில் தொடங்கி முடிக்கும் கடைசி வரி வரை வாசகரை கதையோடு கட்டு வைத்திருக்கும் மாயவித்தை எஸ். செந்தில்குமார் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. சில கதைகளை சற்றே செதுக்கி செம்மைபடுத்தியிருக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டாலும் தொகுப்பிலுள்ள எல்லா கதைகளுமே மிக முக்கியமான கதைகளாக என்னால் உறுதியாக சொல்ல முடியும். ஒவ்வொரு கதையும் வெவ்வேறானவை. எதுவுமே போல செய்த கதைகளாக இல்லாத சிறப்பான கதைகள். ஒரே கதையிலும் சொல்ல வந்த கதையும் சொல்லி முடிக்கும் கதையும் வேறு வேறு. ஆயினும் அவற்றை இணைக்கும் விதமே எஸ்.செந்தில்குமார் கையாண்டிருக்கும் சிறுகதை வடிவம். அந்த விதத்தில் இவரது கதைகள் மிக முக்கியமான இடத்தையும் பிடிக்கின்றன. அதுவே இந்த கதைகளின் தனித்துவ அடையாளமாக இருக்கிறது. அனைவரும் வாசிக்க வேண்டிய முக முக்கியமான தொகுப்பு. ஆசிரியருக்கு என் வாழ்த்துகள்.