Friday, September 24, 2010

அழகர்சாமியின் குதிரை



பாஸ்கர் சக்தியின் அழகர்சாமியின் குதிரை எஸ்.ராமகிருஷ்ணன் சிறந்த கதைகள் என்று பட்டியலிட்ட இலக்கிய தரம் வாய்ந்த கதைகளில் ஒன்று. தன்னுடைய கரையெல்லாம் செண்பகப்பூ திரைப்படமாக எப்படி எல்லாம் சீரழிந்தது என்று சுஜாதா தன்னுடைய கட்டுரை ஒன்றில் புலம்பி இருப்பார். அப்படியில்லாமல் அழகர்சாமியின் குதிரை சிறுகதையை சிறு சிறு செழுமையூட்டல்கள் மட்டும் செய்து அதே தரத்தோடான திரைக்கதை அமைத்திருப்பதற்காக சுசீந்திரனுக்கு மிகப் பெரிய சபாஷ். பாஸ்கர் சக்தியின் சிறுகதையை ஏற்கனவே படித்திருந்ததால், அதை எப்படி திரையாக்கம் செய்திருப்பார்கள் கற்பனை செய்து வைத்திருந்தேன். அதை விட மிகச்சிறப்பாகவே செய்திருந்தார்கள்.

தேனி மாவட்டத்தை ஒட்டிய மலை கிராமங்களை மிக அழகாக கண்ணுக்கு குளுமையாக காட்டி இருக்கிறது தேனீ ஈஸ்வரின் கேமிரா. பிண்ணனி இசை மிக நேர்த்தியாக இருக்கின்றது. ராஜா ராஜா தான் எப்போதும். அதுவும் "குதிக்குது குதிக்குது" பாட்டில் என்னம்மா பாடி இருக்கிறார். இளையராஜா தமிழ்நாட்டிக்கு ஒரு பெரியவரம். மூன்று பாடல்களும் மூன்று முத்துகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசம். பாஸ்கர் சக்தியின் வசனம் பல இடங்களில் நச்சென்று இருக்கிறது. இயல்பான வசனத்திலேயே நகைச்சுவையை ஆங்காங்கே தெளித்திருக்கிறார் பாஸ்கர் சக்தி. திரைக்கதையில் சுசீந்திரன் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமென்பது என் கருத்து. ப்ளாஷ்பேக் காட்சிகள் கதையோட்டத்தோடு இல்லாமல் கொஞ்சம் தொக்கி நிற்பது போல தோன்றியது.

கிராமத்தில் மக்களுக்கு வாழ்வு எவ்வளவு எளிமையாக இருக்கிறது. அவர்களின் வெள்ளந்தி மனம், சிக்கு பிடிக்காமல் எவ்வளவு எளிதாக கையாலும் விதமிருக்கிறது. அதிகம் படித்து அதிகம் யோசித்து அதிக பைத்தியம் பிடித்து மனநோயால் வாட்டும் நகர மக்களின் வாழ்வினும், மழை பெய்ய அழகர்சாமிக்கு திருவிழா நடத்தினால் போதும் என்ற நம்பிக்கையும், அழகர் வந்து குறி சொன்னா எதுவும் நடக்கும் குருட்டு நம்பிக்கையும், அழகர்குதிரையின் விட்டை கலந்த தண்ணீரை குடித்தால் நோய் எல்லாம் போய்விடும் என்ற அசட்டு நம்பிக்கையும் கொண்டிருக்கும் கிராம வாழ்வு எவ்வளவோ மேல். அந்த கிராமிய வாழ்வு நீர்மையுடன் இருப்பதுக்கு இந்த ஏதோ ஒன்றின் மீதான நம்பிக்கை தான். நம்பிக்கை தானே எல்லாமே. ஆனால் இப்படிப்பட்ட லாகிக்லெஸ் நம்பிக்கையால் கோடாங்கிகளும், தீடிர் சாமிகளும் ஏமாற்றும் அப்பாவி மக்கள், எதாவது தில்லுமுல்லு செய்து திருவிழாவை எப்படியாவது தவிர்த்து மழை பெய்ய விடாமல் செய்யலாம் என்று எண்ணும் முன்னால் பஞ்சாயத்து தலைவர் மகன் இவர்களின் அறியாமையை நினைத்து ஆதங்கபடுவதை தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

என்ன தான் மூட நம்பிக்கை என்றாலும் கோடை திருவிழாவின் போது ஒவ்வொரு வருடமும் தவறாமல் மழை பொழிவதை எங்கள் கிராமத்தில் நானே கண்கூடாக பார்த்திருக்கிறேன். மழை பெய்ய திருவிழா, திருவிழா சமயத்தில் குதிரை காணாமல் போனால் தனக்கு வேலை கிடைக்கும் என்று தச்சனும், குதிரையை கண்டு பிடிக்க உள்ளூர் மற்றும் வெளியூர் கோடாங்கிகளும், கோடாங்கி "காக்கை அமர பழம் விழுமென்ற கதை" போல பிடித்து தந்த நிஜக்குதிரையும், அந்த நிஜக் குதிரையின் சொந்தக்காரனும், அவனுக்காக காத்திருக்கும் ஒரு பௌர்ணமி தேவதையும் என்று அழகாக வலைப்பின்னலாக நகர்ந்திருக்கிறது அழகர்சாமியின் குதிரை. எல்லாவற்றிற்கும் ஆதாரம் மழை. அதற்கென நடக்கும் திருவிழாவை நம்பி தான் எத்தனை ஜீவனம்.

தன் குதிரையை மீட்க வேறு ஒரு கிராமத்தில் வேறு வழியின்றி தங்கி இருக்கும் நிஜக்குதிரையின் சொந்தக்காரன், அவனுக்கும் இருக்கும் மனிதநேயம், தன்னுடைய குதிரை ஒருவேளை திருவிழாவிற்கு அப்புறம் கிடைக்காமல் கூட போகலாம் என்று தெரிந்தும் கூட, தன் குதிரையோடு இரவு தப்பிக்க வழி சொல்லு ஊர் இளைஞர்களிடம் மறுப்பது நெஞ்சை நெகிழச் செய்யும் காட்சி. கோடி கோடியாக கொள்ளையடிக்கும் இந்த நாட்டில் தம் மக்கள் பசி போக்க கிணற்று மோட்டரை திருடும் வயிரொட்டிய பஞ்ச திருடன். அவனை பிடித்து அடித்து நொறுக்கும் வீர போலீஸ். என்ன செய்து தான் எம் தாய் திருநாட்டை காப்பாற்ற?

ஹாலிவுட் படங்களை போல இரண்டே மணி நேரத்தில், தமிழ் சினிமாவின் பார்முலாவிலிருந்து மாறுபட்ட தரமான ஒரு திரைப்படத்தை வெகு நாட்களுக்கு பின் கண்டு வந்த திருப்தி நீங்கவில்லை என் மனதிலிருந்து. அழகர்சாமியின் குதிரை நீண்ட நாள் வாழவிருக்கும் காவியம்.

10 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகான திரைவிமர்சனம்..

மதி said...

truly a very commendable film.. all credits to the whole team

Unknown said...

நன்றாக ஓடுகிறது...அழகர்சாமியின் குதிரை...

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது. திரைப்படத்தினையும் பார்க்கத் தூண்டுகிறது. பகிர்வுக்கு நன்றி.

rajasundararajan said...

இப் படத்தைப் பார்த்துவிட்டு அரங்கிற்கு வெளியே வந்த உடனே (அது ஆச்சு கொள்ளெ நாளு), கேபிள் சங்கரைத் தொலைவிளித்து, "படம் நல்லாத்தானே இருக்கு; ஏனுங்க இறக்கி எழுதியிருக்கீங்க?" என்றேன்.

"அது காவியமா வந்திருக்க வேண்டிய படமுங்க, திரைக்கதை இப்படி இருந்திருந்தா..." என்று அதற்கு ஒரு மாற்றுத் திரைக்கதையையும் சொன்னார். "ஆஆ, நல்லா இருக்கே!" என்று அவர் அக்கறையை மெச்சினேன். ஆனால் அவர் சொன்ன கட்டுருவை இங்கே அவிழ்ப்பதற்கில்லை. அது அவரது copy right அல்லவா?

பாரதசாரி said...

Excellent one!!
When I saw this I got reminded of the story "The man who saved Pumplesdrop".
I was not happy with the BG of IR though :-(

Unknown said...

Good review.

Advance congrats for the forthcoming book through Kalachuvadu.

Anuradhaateen said...

http://tamil.unitymedianews.com ஒரு நடை வந்து பாருங்க. சுட சுட செய்திகள் மற்றும் உலகெங்கும் உள்ள சுமார் ஒரு கோடி வேலைவைப்புகளை எமது தளம் கொண்டுள்ளது. JOBS WORLDWIDE என்ற மெனுவில் கிளிக் செய்து உள்ளே சென்று உலகின் சுமார் 50 நாடுகளை தேர்வு செய்து உங்களுக்கு ஏற்ற வேலையை தேடலாம். நண்பர்களுக்கும் சொல்லுங்க... தினமும் பல்லாயிரம் புது வேலைகள் இங்கு புதிதாக தரவேற்றம் செய்யப்படும்... எனவே மீண்டும் மீண்டும் வருக...நன்றி...

ADHI VENKAT said...

இன்றைய வலைச்சரத்தில் ”இது எங்க ஏரியா, உள்ள வாங்க!”

உங்கள் வலைப்பக்கம் பற்றி எழுதி இருக்கிறேன். முடிந்தபோது வந்து பாருங்கள்.

நட்புடன்

ஆதி வெங்கட்.

உயிரோடை said...

கவிதை வீதி சௌந்தர், மதி, கலாநேசன், வெங்கட் நாகராஜ்,ராஜ சுந்தரராஜன் சார், d, பாரதசாரி, செல்வராஜ் ஜெகதீசன் நன்றி.

அனுராதாதீன் தகவலுக்கு நன்றி.

ஆதி என்னை பற்றி எழுதியதற்கு நன்றி