Friday, September 24, 2010

வானம் - சில மின்னும் நட்சத்திரங்களும் பின் விளைவாக சில சிந்தனைகளும்


வானம் கிரிஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம். கடந்த வருடம் தெலுங்கில் வெற்றிப்படமாக ஓடிய வேதம் என்ற படத்தின் மறுபதிவே இந்த வானம். ஐந்து குறுங்கதைகளை குழப்பமும் தொய்வும் இல்லாத கலவையாக தந்திருக்கும் வித்தியாசமான முயற்சிக்காகவே இந்த திரைப்படத்தினை பாராட்டியாக வேண்டும்.

அறிமுக காட்சிகளில் சிம்பு நகைச்சுவை ததும்ப நடித்திருக்கிறார். சந்தானமும் இரட்டை அர்த்தம் தராத நல்ல நகைச்சுவையை தந்திருக்கிறார். பரத் நடிப்பும் கொஞ்சம் தேவலை ரகம் தான். ஆனால் பரத்தின் தோழியாக நடித்திருப்பவர் தமிழை ஏன் விஸ்கி அடித்து விட்டு பேசுவது போல பேசி இருக்கிறார் என்று தெரியவில்லை. சிம்புவும் தன் தோழியிடம் ஆங்கிலம் அதிகம் கலந்த தமிழிலேயே பேசுகிறார். அப்படி தமிழை கொலை செய்து பேசினால் தான் உயர் தட்டு மக்கள் என்ற காட்டுவதிலிருந்து இந்த தமிழ் திரைப்படங்கள் எப்போது தப்பிக்குமென்றே தெரியவில்லை.

சரண்யாவும் வழக்கம் போல அருமையான நடிப்பினை மிக நேர்த்தியாக செய்திருக்கிறார். அனுஷ்காவின் கதாபத்திரம் நீக்கி இருந்தாலும் இந்த படத்தில் அதிக வித்தியாசமும் இருந்திருக்காது. ஆனால் அனுஷ்கா பொதுப்படையாக தெய்வ பெண்ணாக வந்தாலும் பாலியல் தொழில் செய்பவராக வந்தாலும் கச்சிதமாக பொருந்தும் முகவட்டோடு இருக்கிறார். பிரகாஷ்ராஜ்க்கு மிக முக்கிய கதாபாத்திரம் இந்த படத்தினில்.

யுவன் சங்கரின் இசை ரசிக்கும் படி இருக்கிறது. சிம்புவின் குரலில் எவண்டி உன்னை பெத்தான் பெத்தான் பாடல் கூடவே நம்மை பாட வைக்கிறது. சிறு சிறு தொடல்களாக நாட்டின் பல முக்கிய பிரச்சனைகளை அசால்ட்டாக கையாண்டு இருக்கின்றார்கள். மக்களுக்கிடையிலிலான உட்பூசல்கள் எல்லாவற்றிக்கும் மொழி, மதம், பணம் பேதம் போன்றவையே காரணம் என்று பல முக்கிய கனமான கதைகளைக்குக்கான கருவினை போகிற போக்கில் சொல்லி போயிருக்கிறார்கள். தனித்தனியாக சொல்லி இருக்கும் ஐந்து கதைகளையும் இறுதியாக இணைப்பது மனிதநேயம். இந்தப் படத்தின் மிக பெரிய பலமாகும்.

முகமதியர் நடத்தும் புனிதபோருக்கு தீவிரவாதம் என்ற பெயரை தந்து எந்த மூஸ்லீமை பார்த்தாலும் ஏதோ அவர்கள் தீவிரவாதம் செய்யவே பிறவி எடுத்தனர் என்ற பொதுப்படையான எண்ணத்தை வளர்த்து கொள்வது தவறென்று சொல்லும் முயற்சியையும், அவர்களிலும் அப்பாவிகள் உண்டென்பதையும் அவர்கள் பிற மதத்தினரால் முக்கியமாக இந்துவாவின் மேல் தீவிரம் காட்டுவோரால் பாதிக்கப்படுகின்றனர், அவர்களுக்கான நியாயம் எளிதாக மறுக்கப்படுகிறது என்று உணர்ந்த்தும் முயற்சியையும் இந்த படத்தின் மூலம் முன் வைத்திருக்கினர்கள். அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்றிருக்கினர். பல மதத்தினை சார்ந்தவர்களை காப்பாற்ற சில முஸ்லீம்கள் கூடி குரான் ஓதும் காட்சி உச்சக்கட்ட மனிதநேய காட்சியாகும். அப்பாவிகளை கொடுமை செய்யும் எந்த விசயமும் தீவிரவாதம் என்று புது கருத்தினை முன் வைத்திருக்கின்றார்கள். இது தான் மிக முக்கியமாக உணரப்பட வேண்டிய விசயம்.

பணம் இது என்னவெல்லாம் செய்கிறது?

எப்படியாவது பணக்காரப் பெண்ணை காதல் திருமணம் செய்ய வேண்டுமென்று என்னவோ தில்லுமுல்லு வேலைகளை ஏன் திருட கூட தூண்டும் எண்ணமும் தருவது மேட்டுகுடிக்கும் குப்பத்திற்கும் இருக்கும் பணத்தால் ஆன வேறுபாடு தவிர வேறென்ன இருக்க முடியும். திருடனிடமும் பாலியல் தொழிலாளியிடமுமிருந்து கூட ஒரு காவல்துறை அதிகாரி பணத்தையையும் நகையையும் கொள்ளையடிக்க பணத்தின் மேலிருக்கும் ஆவலன்றி வேறென்னவாக இருக்க முடியும்.

வாங்கின கடனையும் கடனுக்கு இணையான வட்டியையும் திருப்பி தர மாமனார் ஒருமுறையும் மருமகள் ஒருமுறையும் தன்னுடைய கிட்னியை விற்கும் அவலத்தினும், கிட்னியை பரிவத்தனத்தில் கிடைக்கும் பணத்தில் பாதிக்கு மேல் அமுக்கிக் கொள்ள முன்பே ரூட் போடும் இடைத்தரகர், பணம் பட்டுவாடா செய்யும் போது மேலுமொரு தொகையை மேல் செலவென்று எடுத்து கொண்டு மீதியை தரும் போது பணத்தை முழுசா குடுத்துடுங்க அய்யா என்று கெஞ்சி கண்ணீர் விடும் அப்பாவி இந்திய ஏழைகளை நினைத்து கொஞ்சம் கண்ணீர் மட்டுமே சிந்த முடிகிறது. வேறென்ன செய்ய முடியும் இந்த கையாலாகாத எழுத்தினை வைத்துக் கொண்டு?

5 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வானம் வசப்படும், உங்களுக்கு படம் நல்லா பிடிச்சிருக்கு அதானே ஓகே....

Unknown said...

அருமையான விமர்சனம்..

வலிப்போக்கன் said...

வானத்தை பார்த்தால் கழுத்து வலிக்குமுங்கோ?

Anu said...

nice explanation :)

உயிரோடை said...

நாஞ்சில் மனோ, ஆறுமுகம் முருகேசன், வலிபோக்கன், அனு அனைவர்க்கும் நன்றி