Friday, September 24, 2010

மதராச பட்டினம் – தயிர் விட்ட பழையதும் மாவடுவும்




படத்தின் டைட்டில் கார்ட் பழைய மதராச பட்டினத்தின் வரைபடத்தின் சில ஊர்களில் எழுதப்பட்டு நேர்த்தியான பிண்ணனி இசையோடு காட்டுகின்ற கணத்திலேயே மிக நல்ல படம் என்ற உணர்வுக்கு இழுத்து சென்றது.

படம் ஒரு இரங்கல் கூட்டத்தோடு (“a wonderful husband” என்கிறார் பாதிரியார் அது எப்படி அய்யா உனக்கு தெரியுமென்று கேட்க தோன்றுகிறது) ஆரம்பித்து பின்னர் எமியின் கண்ணோட்டத்தில் தொடர்கிறது. அவருக்கு தன் உயிருக்கு ஆபத்தென்று தெரிந்ததும் தன்னிடம் இருக்கும் ஒரு தமிழ் பெண்ணின் தாலியை இது என்னுடையது அல்ல இதை உரியவரிடம் சேர்க்க வேண்டுமென்று இந்தியா செல்ல வேண்டுமென்று தன்னுடைய மகளையும் இந்தியன் எம்பசியை இதெல்லாம் இருந்தாதான் இந்தியா போகனுமா என்று தமிழ் வாக்கியத்தாலும் கன்வின்ஸ் செய்து (ஒரு தமிழ் வாக்கியத்திற்கு இந்தியாவுக்கு வர விசா கிடைத்து விடுமா?) தனது தேடுதலை தொடங்கி இந்தியா வருகிறார் எமி.

எமி இந்தியா வந்ததும் தன்னுடைய சக்கர நாற்காலியில் வரும் போதே அந்த காலத்தில் தன்னை வரவேற்ற நிகழ்ச்சியை நினைவு கூர்ந்த வண்ணம் வருகிறார். சென்னையில் டாக்ஸிகாரர் உரிமையோடு அழைக்கும் விதத்திலிருந்து வெளிநாட்டுக்காரர்கள் என்றாலே அவர்களிடம் ஏமாற்றி பணம் பறிக்கலாம் என்ற திட்டதோடு இருக்கும் சென்னைவாசிகள் சிலரையும் கனகச்சிதமாக பொருத்தி இருக்கின்றார்கள். எந்த பாத்திர அமைப்பு இது தேவையற்ற இடைச்சொருகலாக இருக்கின்றதே என்று நினைக்கும்படியில்லை. எல்லா கதாபாத்திரங்களும் ஏதாவது ஒரு விதத்தில் திரைக்கதையோட்டத்திற்கு உதவி இருக்கின்றார்கள்.

எமி தற்கால சென்னையின் மாற்றங்களை நோட்டமிட்டபடி தொடங்கும் பரிதியை தேட தொடங்கும் பயணத்தில் அவரின் பழைய நினைவுகளையும் தற்கால தேடல்களையும் சரிவிகிதமாக சேர்ந்து கொஞ்சம் கூட தொய்வு குறையாத திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குனருக்கு ஒரு சபாஷ் போடலாம். ஒவ்வொரு இடமாக தேடி ஏமாற்றம் அடையும் எமி கடைசியாக மருத்துவமனையில் காதரை அடையாளம் காணும் போது அப்படா என்ற நிம்மதி நமக்கே பிறக்கிறது. பின்னர் அவரும் இறந்து போனதும் எமியின் தவிப்பு நமக்கும் தொத்திக் கொள்வது அற்புதமான கதையமைப்பு. என்ன தான் ஏமாற்றியும் கறாராகவும் காசு கரந்தாலும் தமிழர்கள் இரக்கமுள்ளவர்கள் என்றும் ஈரமான எந்த உணர்வுக்கும் எந்த தமிழனும் உதவுவான் என்றும் பின்னர் நடக்கும் தேடலில் காட்டி இருப்பது சற்றே ஆறுதலான விசயம்.

இந்த திரைப்படத்தில் நிறைய விசயங்கள் கவித்துவத்துடன் சொல்லப்பட்டிருக்கின்றது. எல்லோரும் நல்லவர்கள் போல் காட்டப்பட்டிருக்கின்றனர். அந்த காலத்தில் மழை கூட தோழமையோடு காட்டப்பட்டிருக்கின்றது. ஏதாவது சண்டை என்றால் கூட “வெயில் இருக்கும் போதே வேலை முடிப்போம் வாங்க” என்ற சமாதானம் போதுமானதாக இருந்திருக்கிறது. விமான சத்தம் குண்டு போடறாங்க ஓடி ஒளிஞ்சிக்கங்கன்னு ஒருவன் சொல்ல அனைவரும் ஓடி மறையும் வெள்ளெந்தியாக இருக்க முடிகிறது, Floating point வாய்ப்பாடு போகிற போக்கில் சொல்லி தர முடிகிறது, ஒரு மல்யுத்தத்தில் ஜெயித்தால் அரசால் ஆக்கிரமிக்க பட இருக்கும் நிலம் மீண்டும் உரியவர்க்கு கைவசமாகும் சாத்தியமிருக்கிறது. (வெள்ளையர்கள் நம் அரசியல்வாதிகளினும் நல்லவர்கள் என்றே நினைக்க தோன்றுகின்றது)

படத்தில் நகைச்சுவை திணிக்கமல் போகிற போக்கில் சொல்லி இருக்கின்றார்கள். அத்திரிபாட்சா கொழுக்கட்டை கதை கணக்கா எமிக்கு நன்றி சொல்ல பரிதியும் அவன் நண்பர்களும் தான்கூ தான்கூ என்று சொல்லிக்கொண்டே வந்து சைக்கிள் பள்ளத்தில் விழுந்தெழுந்ததும் மங்கு மங்கு என்று சொல்லிக் கொண்டே வருவதும் பின்னர் எமியே தாங்யூ பிரேவ் மேன் என்று சொன்னதும் அதான் அதே தான் தாங்யூ என்று சொல்லி முடிப்பது அழகான நகைச்சுவை. கோல்ப் விளையாட்டை கோலி குண்டு விளையாட்டா என்று என்று கேட்கும் மொழிபெயர்பாளாராக வரும் நம்பி அதையே குச்சி வைச்சி தள்ளிவிட்டு விளையாடுவது என்பதும், ஆங்கில எழுத்துகளை தமிழ் எழுத்து போல சொல்லி தர சொல்லி எ, ஏ, பி, பீ, சி, சீ என்று படிப்பது மாசற்ற நகைச்சுவை.

பிண்ணனி இசை குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய ஒன்று, கொஞ்சம் இந்தி பட சாயல்களில் வரும் பிண்ணனி இசையானாலும் இசையும் பாடல்களும் நன்றாக இருக்கின்றன. அதுவும் எமியுடன் பரிதி கற்றுக் கொண்டு வந்து பேசும் நான்கு வாக்கியங்களுக்கு தடுமாறும் போது மறந்துட்டியா என்று எமி முதல் முறையாக தமிழ் பேசும் போதும் அரும்பும் காதலுக்கு பிண்ணனியாக வந்த இசைத்துளிகள் ரம்மியமாக ரசிக்கும்படி இருக்கின்றது. வெள்ளைக்காரி என்பதால் கொஞ்சம் படித்த அறிவாளி மற்றும் கவர்னர் மகள் என்பதால் எளிதாக தானே கற்றுக் கொள்ள ஏதுவான தமிழ் புத்தகங்களை வாங்கி பயில்கிறாள். உங்களிடம் கொடுக்க இந்த தாலி இருக்கே என்று தன் காதலையும் தயக்கமின்றி அவளே தான் சொல்கிறாள்.

அந்த கால கேமிரா, டிராம், கூவம் நதி, பங்கம் கால்வாய், வால்டாக்ஸ் ரோட் மணிக்கூட்டு அந்த கால கார், ரயில் கைவண்டிகள் கட்டங்கள் என்று மொத்தத்தையும் பழைய மதராஸ் பட்டினமென்று காட்ட மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். கலை இயக்குனரை இதற்காக பாராட்டாமல் இருக்கவே முடியாது. உண்மையாகவே சிங்கார சென்னை என்பது பழைய மெட்ராஸ் தான் என்று ஒவ்வொருவரும் உணரும் வண்ணம் செய்து இருக்கின்றார்கள்.

படத்தில் சில விசயங்கள் நெருடாமல் இல்லை. கதை களம் நடந்த வருடம் 1945 முதல் 1947 வரை அந்த காலகட்டத்தின் சுதந்திர போராட்டம் பற்றி தொடும் தொடாத வண்ணம் காட்டி இருப்பது சுதந்திரத்திற்காக இவ்வளவு தான் போராடினார்களா என்று நினைக்க ஏதுவாக இருக்கின்றது. அதே போல் ஆர்யா வெள்ளையர்களை எதிர்ப்பது போல அதற்காக அடிக்க வரும் போது எமி அந்த இடத்தில் இருப்பதை கண்டு விட்டுவிட்டு போவதும் பின்னர் யாரை அடிக்க நினைத்தானோ அவனை அடிக்காமல் இருப்பதும் எதோ விடுப்பட்டது போல இருக்கின்றது. அதே போல ஒரு பத்து இருபது பேர் சென்று ஒரு பிரஸ் மிட் போன்ற இடத்தில் எப்போது சுதந்திரம் தேதியை இப்போதே சொல்லுங்கள் என்று கேட்டதும் கவர்னர் ஜென்ரல் சொல்வது போல காட்டி இருப்பதும் கொஞ்சம் அபத்தமாக இருக்கின்றது. லண்டனில் பிறந்து வளர்ந்திருந்தாலும் வந்த இடத்தில் யார் சம்மதமுமின்றி ஒருத்தியை மணந்து அதே கலாச்சாரத்தை பின்பற்றும் கவர்னரான எமியின் தந்தை இந்திய மனப்பான்மையுடன் உன்னை கொன்றாலும் ஒரு இந்தியனுக்கு மனம் செய்து தர மாட்டேன் என்று சொல்வது ஏற்புடையதாக தோன்றவில்லை. படத்தின் முதல் பாதி கொஞ்சம் மெதுவாக நகர்வது போல இருக்கின்றது அதற்கு இதன் நீளம் காரணமாக இருக்கலாம். மேலும் இடைவெளி முடிந்து வரும் பாடல் ஒன்று மட்டும் கொஞ்சம் இடைச் சொருகல் போல இருக்கின்றது. ஆனால் அவ்வளவு எழிலான மதராச பட்டினம் காட்டிய காரணத்திற்காக இந்த குறை அனைத்தையுமே மறந்து விடலாம்.

படத்தில் குறியீட்டு கவிதை போல பல காட்சிகள் இருக்கின்றன. கோல்ப் மைதானத்திற்காக இடத்தை பிடுங்க வரும் அதிகாரிகளிடம் பேசும் போதும் சரி அதற்காக மனு எழுதும் போதும் மற்ற எந்த விசயங்கள் பேசும் போதும் தூங்கி கொண்டே இருந்த ஒரு கதாபத்திரம் தன் இடத்தை மீட்க பரிதி மல்யுத்தம் புரியும் போது மட்டும் விழுத்து எழுந்து ஆரவாரம் செய்வது, நம் பொதுஜனத்தை குறியுட்டு சொல்லப்பட்ட கதாபத்திரம், அதே போல் நாட்டின் சுந்திரத்திற்கான பேச்சு வார்த்தை நடக்கும் அதே சமயம் எமி தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் காட்சிகளை மாறி மாறி காட்டி இருப்பதும் ஒரு அழகியல் கவிதை. இந்தியா சுதந்திரம் பெற்ற அதே நாள் கொண்டாங்கள் யாவும் எமியும் பரிதியும் காதலை கொண்டாட நடத்தப்படுவது போன்றே காட்டப்பட்டிருந்தது. சரியாக சுந்திர விடியலில் வெள்ளைக்கார ஐஜியாக வருபவனை கொன்று அவனிடமிருந்து தப்பிப்பதும் ஒரு குறியீட்டு கவிதை போன்றே இருக்கின்றது.

படத்தின் ஆரம்ப இடைப்பட்ட சில காட்சிகள், இசை டைட்டானிக், லாகான் மற்றும் 1942 ஏ லவ் ஸ்டோரி போன்ற படங்களை நினைவுக்கு கொண்டு வந்தாலும் மதராஸ பட்டினம் திரைப்படம் பார்த்துவிட்ட வந்த பொழுதில்
சிங்கார சென்னை உண்மையாகவே சிங்காரமாக இருந்த தினங்களில் வாழ்ந்து விட்ட மனம் நிறைந்த உணர்வு இருந்தது. இதை அப்பட்ட காப்பியடித்தல் என்று சொல்ல வேண்டியது இல்லை. நல்ல படத்திலிருந்து சில நல்ல விசயங்களை எடுத்து நம் காட்சிகளத்திற்கு பயன்படுத்தி கவிதை போன்ற இந்த படத்தை தந்தால் அது மிகவும் வரவேற்க்கபட வேண்டிய விசயமே.

படத்தின் இறுதிகாட்சி முற்றிலும் இருட்டாக ஆக்கப்பட்டு சில வசனங்களில் முடித்திருந்தனர். அப்படி முடிந்த பின் வரும் புகைப்படங்களில் மதராஸ பட்டினத்தின் அழகும் இவை இப்போது மாற்றப்பட்டிருக்கும் விதமும் காட்டி இருப்பது கூட ஒரு அழகியல் செயலாக இருக்கின்றது. படம் முடிந்து விட்டது என்று தெரிந்தாலும் எழுந்து நடந்த எல்லோரும் நின்ற வண்ணமே அத்தனை புகைப்படங்களையும் ரசித்து விட்டு பின்னரே சொல்கின்றார்கள். சென்னையின் அடையாளமாக எத்தனை விசயங்கள் அவற்றில் சென்ரல் மணிக்கூண்டை தவிர எல்லாவற்றையும் இழந்திருக்கிருறோம்.



எமி கூவம் நதிக்கரையை பார்த்து, அதன் பழைய அழகை உணர்ந்தும் பின் தற்சமயம் சிறுவர் தங்கள் காலைக்கடனை அங்கே முடிந்து கொண்டிருப்பதை கண்டு முகம் சுளிப்பார். அந்த சமயம் நிச்சயமாக நம் நெஞ்சை ஏதோ செய்வது போல இருப்பது மிகவும் உண்மை. இன்று கொசுக்களில் உற்பத்தி பண்ணையாக இருக்கும் பங்கிம் கால்வாய் அந்த காலத்தில் அத்தனை எழிலோடு இருந்ததா? 1942களில் அத்தனை எழிலோடு திகழ்ந்த சென்னை மாபட்டினம் இத்தனை எழில் குறைந்து போக நாடாள்வோரை தவிர வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது. மக்களில் வாழ்வாதாரத்திற்கு சென்னை தவிர வேறு இடமே இல்லை என்று மொத்த தமிழ்நாட்டின் முக்கால் பாகம் சென்னையில் இருந்தால் சிங்காரம் எங்கிருக்கும்? கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் சிலர் தங்கள் கொள்ளையடித்ததில் கொஞ்சத்தை செலவளித்தாலே சென்னை சிங்காரம் பெறும். யோசிப்பார்களா? மதராஸ பட்டினம் படம் இந்த கேள்வியை என் மனதில் வைத்தது. சென்னை நேசிக்கும் இன்னும் பல கோடி மக்களிடம் இதே எண்ணத்தையே விதைக்கும்.

9 comments:

Mohan said...

மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் விமர்சனம்!

rajasundararajan said...

மிகவும் நல்லதொரு நேர்த்தியான படம். உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

ஜில்தண்ணி said...

விமர்சனம் நிதர்சனமாய் அருமைய

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு விமர்சனம். படம் இன்னும் பார்க்கவில்லை. வேலைப்பளு - பார்க்கலாம் - வரும் ஞாயிறு வரை படம் இருந்தால்.

Unknown said...

நல்லதொரு விமர்சனம்.

'பரிவை' சே.குமார் said...

விமர்சனம் அருமை.

Joe said...

மிக அருமையான விமர்சனம். விரைவில் திரையரங்கில் பார்க்கத் தூண்டுகிறது.

உயிரோடை said...

வாங்க மோகன் நன்றி,

வாங்க ராஜசுந்தரராஜன் நன்றி.

வாங்க ஜில்தண்ணி-யோகேஷ் நன்றி.

வாங்க வெங்கட் நாகராஜ். நன்றி.

வாங்க செல்வராஜ் ஜெகதீசன். நன்றி.

வாங்க சே.குமார். நன்றி.

வாங்க Joe நன்றி

Unknown said...

"ஒரு பத்து இருபது பேர் சென்று ஒரு பிரஸ் மிட் போன்ற இடத்தில் எப்போது சுதந்திரம் தேதியை இப்போதே சொல்லுங்கள் என்று கேட்டதும் கவர்னர் ஜென்ரல் சொல்வது போல காட்டி இருப்பதும் கொஞ்சம் அபத்தமாக இருக்கின்றது" ---அதுதான் உண்மையில் நடந்த விஷயம் ... சுதந்திரத்துக்கான தேதி அறிவித்த பொழுது அவர்கள் முன்பே முடிவு செய்த தேதி அல்ல நம் சுதந்திரதினம். வேறு வழி இல்லாமல் அவசரத்தில் அந்த கூட்டத்தில் அறிவிக்க வேண்டிய நிலை. தேதி அறிவித்துவிட்ட பிறகு மிகவும் சிரமப்பட்டு செய்துமுடித்தார்கள் ... அதிலும் இந்திய - பாகிஸ்தான் பிரிவினை மிகவும் கடினமான செயல்.... சொத்து பிரிப்பதை போன்றது .. அதனால் சில தவறுகளும் நடந்தன ...ஆனாலும் இதை வெற்றிகரமாக பிரித்த அந்த ஆங்கிலேய அதிகாரிக்கு அசாத்திய திறமையும் இருந்திருக்கவேண்டும் ..