Sunday, April 24, 2005

ப‌யம் த‌ரும் வெளிச்ச‌ம்

க‌ட‌வுளும் இன்ன‌பிற‌

வெளிச்சம்
பயத்தை ஏற்படுத்த
தொடங்கும் வரை
பாதைகள் எளிமையாகவே இருந்தன
இருளின் மீதான அனுமானங்களும்
-லஷ்மணன்

வாழ்க்கை என்ப‌து முத‌ல் முறை ஒரு ந‌தி ந‌க‌ர்வ‌தை போன்ற‌து. எந்த‌ இட‌த்தில் விழ‌‌ வேண்டும் எங்கே தேங்க‌ வேண்டும் என்ப‌வை ஒரு சில‌ அனுமான‌ங்க‌ளாக‌வே இருக்கின்ற‌ன‌. சீராக‌ ந‌க‌ரும் வ‌ரை பய‌ண‌ம் எளிமையான‌தே. ஆனால் உண்மையாக‌வே வீழும் போது விழுவ‌த‌ற்குண்டான‌ அதிர்வும், தேங்கும் போது அடுத்து எப்ப‌டி ந‌க‌ர்வோம் என்ற‌ பய‌மும் தொற்றிக் கொள்வ‌து இய‌ற்கை.

ந‌ம்பிக்கை இழ‌த்த‌ல்
==================

இர‌வு மீதான‌ ந‌ம்பிக்கை விடிந்து விடும் என்ப‌து. ப‌ய‌ண‌ம் மீதான‌ ந‌ம்பிக்கை ஒரு ச‌மய‌ம் முடியும் என்ப‌து. உண‌வு உண்ப‌து கூட‌ அது செரித்துவிடும் மீண்டும் ப‌சிக்கும் என்ற‌ ந‌ம்பிக்கையில் தான். ந‌ம் எந்த‌ ஒரு செயல்பாட்டையும் ஒரு ந‌ம்பிக்கை தான் ந‌க‌ர்த்திக் கொண்டு இருக்கின்ற‌து. இந்த‌ ந‌ம்பிக்கை எல்லாமே ஒரு அனுமான‌ம் தான். அந்த‌
அனுமான‌ங்க‌ள் மாறும் போது, ந‌ம்பிக்கை இழ‌க்கும் போது ஒரு வித‌ ப‌த‌ட்ட‌ம் ஏற்ப‌டும். இதுவ‌ரை ப‌ய‌ணித்த‌து எல்லாம் பொய்யோ என்ற‌ குழ‌ப்ப‌ம் வ‌ரும். அப்ப‌டிப்ப‌ட்ட‌ அப்ப‌ட்டமான‌ ப‌ய‌த்தையும், குழ‌ப்ப‌த்தையும் உள்ள‌ட‌க்கிய‌து க‌விதையின் க‌ரு.

ந‌ம்பிக்கை இழ‌ந்தால் தானே பய‌மும் குழ‌ப்ப‌மும் அதனால் அறிவுபூர்வ‌மான‌ த‌ர்க்க‌ங்க‌ளை விடுத்து க‌ட‌வுள் அல்ல‌து இன்ன‌பிற‌ விச‌ய‌ங்க‌ளை அப்ப‌டியே ந‌ம்புவ‌து தான் உத்த‌ம‌ம். ந‌ம்பிக்கையே வாழ்க்கைய‌ன்றோ.

துரோக‌ம் அறித‌‌ல்
================

க‌விதையின் ம‌றுகுறிப்பாக‌ அர‌ங்க‌ன் மேல் ஆண்டாள் கொண்ட‌ காத‌ல் போல‌ உன்ன‌த‌மான‌ காத‌ல் கொண்ட‌ பெண்ணொருத்தியை அவ‌ள் காத‌லித்த‌வ‌ன் த‌ன் ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் "ப‌த்து நாள் பேசினாளே ப‌டுக்க‌ வ‌ந்துருவாடா அவ‌ ஒரு வேசிடா" என்ப‌தை சொல்ல‌ கேட்ப‌வ‌ளும், த‌ன் ம‌னைவியின் மேல் அதீத‌ ந‌ம்பிக்கை வைத்திருக்கும் ஒருவ‌ன்,அவ‌ள் இன்னொருவ‌னோடு உற‌வு கொண்டிருப்ப‌தை க‌ண்ட‌வ‌னும் எந்த‌ அள‌வு அதிர்வார்க‌ளோ, உட‌ம்பெங்கும் தீயிட்ட‌து போல‌ எவ்வ‌ளவு துய‌ர‌ப‌டுவார்க‌ளோ அதே அள‌வான‌ அதிர்வை,துய‌ர‌த்தை தான் இந்த‌ க‌விதையின் வெளிச்ச‌ம் த‌ரும் ப‌ய‌ம் காட்டி இருக்கின்ற‌து.

அதுவ‌ரை உல‌க‌மே தொலைந்தாலும் இவ‌ர்/ள் இருக்கின்றார்/ள் என‌க்கென‌ என்ற‌ அனுமான‌ங்க‌ள் பின் என்ன‌வாகும்?

முய‌ற்சி த‌வ‌ற‌ல்
==============

மூன்றாம் க‌ருத்தாக‌, முய‌ன்றால் முட‌வ‌ன் கூட‌ கொம்பு தேன‌டைய‌லாம். முய‌ற்சி செய்யாம‌ல் இருக்க‌ சோம்ப‌லோ, தெளிவின்மையோ, பய‌மோ எது வேண்டுமானும் கார‌ண‌மாக‌ இருக்க‌லாம். ஆயினும் முய‌லாம‌ல் வெளிச்ச‌ம‌து ப‌ய‌ம் த‌ருமென‌வும், இருட்டை ப‌ற்றிய‌ அனுமான‌ங்க‌ளோடும் வாழ்ந்தால் அது பாதையை எளிமையாக‌ காட்டும் காட்சிப் பிழையாகும். முய‌ற்சி உடையோர் இக‌ழ்ச்சிய‌டையார். அத‌லால் அனுமான‌ங்க‌ளை ஆக்க‌ பூர்வ‌மான‌ முய‌ற்சியாக்கி வாழ்வில் மேன்மை பெற‌ முய‌ச்சிப்போம்.

ஏமாற்ற‌ம் எதிர்கொள‌ல்
=====================


திரும‌ண‌ம் நிச்ச‌ய‌க்க‌ப்ப‌ட்ட‌ பெண்ணொருத்தி த‌ன் வ‌ருங்கால‌ க‌ண‌வ‌னைப் ப‌ற்றியும் தான் வாழ‌ப்போகும் வாழ்வைப் ப‌ற்றியும் ப‌ல்வேறு க‌ன‌வுக‌ளோடு இருப்பாள். அப்படிப்பட்ட அனுமானங்களோடு இருந்தவளுக்கு மணவாழ்க்கை உட‌ல்ரீதியாக‌வோ ம‌ன‌ரீதியாக‌வோ திருப்தி கிட்டாத‌ ப‌ட்ச‌ம், எதை செய்த‌தாலும் குற்ற‌ம் குறை கூறி அடித்து துன்புறுத்த‌வோ அல்ல‌து எத‌ற்கெடுத்தாலும் ச‌ந்தேக‌மோ கொள்ளும் க‌ண‌வ‌ன் அமைந்து விட்டால் அவ‌ள்
எதிர்கொள்ளும் ஏமாற்ற‌ம் மிக‌ கொடுமையான‌து. அதுவ‌ரை அவ‌ளுக்கு இருந்த‌ அனுமான‌ங்க‌ள் உண்மை வெளிச்ச‌த்திற்கு வ‌ரும் போது ப‌ய‌ம் வ‌ருவ‌து இய‌ற்கை தானே. இதே க‌ருந்து ஆண்ம‌க‌னுக்கும் பொருந்தும்.

தெளிவின்மை த‌விர்த்த‌ல்
=======================

த‌ன‌க்கு தெரிந்த‌து போதும் என்றோ, த‌ன‌க்கு ம‌ட்டும் தான் எல்லாம் தெரியுமென்றோ அனுமான‌த்தில் இருப்ப‌ர்க‌ள், ஒரு வேளை அது த‌வ‌றென்று புரியும் போது எதிர்கொள்ளும் வெளிச்ச‌ம் மிக‌ அதிக‌மாக‌ ப‌ய‌த்தை த‌ரும். தான் என்ற‌ அக‌ந்தை அட‌க்கி தெளிவு பெற்று வாழும் வேண்டுமெனில் இருளின் மீதான‌ அனுமான‌ங்க‌ளால் வாழ்க்கையை ந‌க‌ர்த்தாம‌ல், (தெளிவு)வெளிச்ச‌ம் த‌ரும் புது பாதையில் ப‌ய‌ணித்த‌ல் எல்லாம் ந‌லம். எங்கும் ஜெய‌ம்.

2 comments:

anujanya said...

மின்னல்,

இப்போதுதான் இந்தக் கட்டுரையைப் படித்தேன். ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால் 'அபாரம்'.

அந்தக் கவிதையை வெவ்வேறு வாசகப் பிரதியாக்கி அலசியது அருமை.

"முத‌ல் முறை ஒரு ந‌தி ந‌க‌ர்வ‌தை போன்ற‌து. எந்த‌ இட‌த்தில் விழ‌‌ வேண்டும் எங்கே தேங்க‌ வேண்டும் என்ப‌வை ஒரு சில‌ அனுமான‌ங்க‌ளாக‌வே இருக்கின்ற‌ன‌."

இந்த வரிகள் நீண்ட சிந்தனையைத் தூண்டி விட்டன. வெவ்வேறு தலைப்புகள் முரணாகத் தெரிந்தாலும், வித்தியாசமான பார்வைகளில் இந்தக் கவிதையைப் பார்க்க முடியும் என்று காட்டி விட்டீர்கள். எழுதிய கவிஞருக்கு மிக்க மகிழ்வையும், ஓரளவு ஆச்சரியத்தையும் கொடுக்கும் உங்கள் எழுத்துக்கள்.

நீங்கள் ஏன் தேவதச்சன் கவிதகளைப் படித்து இந்த மாதிரி அலசக் கூடாது? மிக ஆவலாக இருக்கிறது. ப்ளீஸ்.

அனுஜன்யா

உயிரோடை said...

மிக்க‌ ந‌ன்றி அனுஜ‌ன்யா