Wednesday, April 29, 2015

மனத்தில் கேட்கும் மணியோசை - பாவண்ணன்


லாவண்யா சுந்தரராஜனின் இரவைப் பருகும் பறவை
பாவண்ணன்



பாப்லோ நெருதாவின் வாழ்க்கைக்கதையைப் பின்னணியாகக் கொண்டு வெளிவந்த ”போஸ்ட்மேன்” திரைப்படம் எனக்குப் பிடித்த படங்களில் ஒன்று. ஒரு காட்சியில் நெருதா கடற்கரையோரம் நடந்தபடி இருப்பார். காதலியின் பொருட்டு கவிதைவேண்டி வந்த அஞ்சல்கார இளைஞன் அவர் பின்னாலேயே நடந்துவருவான். நெருதாவின் நடையை, எதையோ அவர் தேடிக்கொண்டு நடக்கிறார் என்று புரிந்துகொள்கிறான் இளைஞன். “என்ன ஐயா தேடுகிறீர்கள்?” என்று அப்பாவியாகக் கேட்கிறான். கவிஞர் அவனை ஒருகணம் திரும்பிப் பார்த்துவிட்டு “என் கவிதைகளுக்கு படிமங்களைத் தேடுகிறேன்” என்று விடை சொல்கிறார். அந்தக் காட்சி என் மனத்தில் இன்னும் பசுமையாகப் பதிந்திருக்கிறது. காட்சிகளுக்காக உடல்முழுக்கக் கண்களாக விழித்திருக்கும் கலைஞனின் தேடலை அடையாளப்படுத்தியிருந்தது அக்காட்சி.
 
காலம்காலமாக நம் கவிஞர்கள் கண்டடைந்த காட்சிகளால் நம் இலக்கியங்கள் நிரம்பியுள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகுகூட அந்த அபூர்வமான காட்சிகளும் அபூர்வமான தற்செயல்களும் இன்றும் புதுமை நிறைந்தவையாக உள்ளன. கன்றும் உண்ணாது கலத்திலும் விழாது தரைமீது சொரிந்தோடும் பால் என்பது ஒரு காட்சி. வெள்ளிவீதியாரின் கண்கள் அதை அழகான ஒரு கவிதையாக மாற்றிவைத்துவிட்டது. முற்றா இளம்புல்லைச் சுவைக்கிற மூத்த பசு இன்னொரு காட்சி. அது மிளைப்பெருங்கந்தளின் கண்களில் பட்டு மற்றொரு கவிதையாக மாறுகிறது. எரிமுன்னர் வைத்தூறு அழிவது ஒரு காட்சி. வள்ளுவரின் கண்கள் அதைப் பொருத்தமாகப் பயன்படுத்தி மறக்கமுடியாத ஒரு கவிதையாக வடித்துவிட்டன. எல்லாக் காலங்களிலும் படைப்பின் ஆதார வலிமையாக இருப்பது இப்படிப்பட்ட காட்சிகள்
 
காட்சிகளுக்கான தேடல் லாவண்யாவிடம் இருப்பதே, அவருக்குள்ள முதல் தகுதி. அதற்கான அடையாளம் அவர் கவிதைகளில் உள்ளது. ”இலையோடு ஓடும் ஓடை” இத்தொகுதியில் முக்கியமான கவிதைகளில் ஒன்று. அடுத்தடுத்து நிகழக்கூடிய இரண்டு தற்செயல்கள் இக்கவிதையில் முன்வைக்கப்பட்டுள்ளன. மரத்திலிருந்து விழும் ஓர் இலை திக்குத் தெரியாமல் மிதந்து மரத்தடியில் ஓடிக்கொண்டிருக்கிற ஓடையொன்றில் விழுகிறது. இலைக்கு எவ்விதமான பற்றும் இல்லை. ஓடை இழுத்த இழுப்பில் ஓர் ஓடம்போல நகர்கிறது. இது ஒரு தற்செயல். அங்கே தெறித்து விழுந்த ஒரு நீர்த்துளி ஓடம்போல நகரும் இலையின்மீது தற்செயலாக விழுகிறது. இது அடுத்த தற்செயல். மிதக்கும் இலைமீது நீர்முத்து. குழந்தையைத் தாலாட்டுவதுபோல நீர்முத்தைத் தாலாட்டுகிறது இலை. இக்காட்சிமீது நாம் அர்த்தங்களின் சுமையை ஏற்றுவது எளிது. எதார்த்த வாழ்வோடு இணைத்து, அதற்கு ஒரு பொருளை நாம் வழங்கலாம். அது காற்றில் பறக்கிற ஒரு பட்டத்தை, தரையை நோக்கி இழுப்பதுபோல. நிச்சயமாக அது பார்வையின் ஒரு கோணம். காட்சியை அது வழங்கக்கூடிய பரவசத்துக்காகவே பார்க்கலாம் என்பது இன்னொரு பார்வை.

பூவொன்று” என்பது இன்னொரு கவிதை. மஞ்சள் மலர்களை உதிர்த்தபடி நிற்கிறது ஒரு மரம். நிழலுக்காக அம்மரத்தடியில் ஒதுங்கி நிற்கிறது ஒரு பேருந்து. முன்கண்ணாடியில் மலர்கள் விழுகின்றன. விழும் மலர்களை கண்ணாடியின் வைப்பர் தாங்கியிருக்கிறது. வைப்பரால் தாங்கமுடியாத மலர்கள் தரையில் உதிர்ந்துபோகின்றன. புறப்பட்ட பேருந்தில் வைப்பர் இயங்கத் தொடங்குகிறது. பூக்கள் ஒவ்வொன்றாக உதிர்கின்றன. பெண்டுலமாக ஆடுகிற வைப்பர் கம்பியில் சிக்கி சில பூக்கள் கிழிந்து சிதறுகின்றன. சிதறவும் முடியாமல் பொலிவுடன் இருக்கவும் முடியாமல் சிக்குண்டு அலைக்கழிக்கப்பட்டு கசக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன சில பூக்கள். கவிதையைப் படித்து முடித்ததும் எவ்வளவு அழகான கவனிப்பு என்று எண்ணத் தோன்றுகிறது. பெண்களா, ஏழைகளா, குழந்தைகளா, யார் அல்லது எது இந்தப் பூ என்றொரு கேள்வியை முன்வைத்து, இக்கவிதைக்கு பல தளங்களை உருவாக்க முடியும். எந்தத் தளத்தை நோக்கியும் செல்லாத நிலையில்கூட இக்காட்சியின் எளிய அழகு மனநிறைவை அளிப்பதாகவே உள்ளது. லாவண்யாவின் கவிதை இத்தோடு முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவருடைய அதீத ஆர்வத்தால் அவரும் அக்காட்சியின் ஒரு பகுதியாக மாற நினைத்துவிடுகிறார். அதன் காரணமாக, காலத்தைத் தாண்டிய சித்திரத்தன்மை உள்ள ஒரு காட்சியை, எதார்த்தத்தளத்துக்கு இசைவான ஒன்றாக மாற்றும்வகையில் நான்குவரி கூடுதலாக எழுதிவைக்கிறார்.
 
சின்னஞ்சிறு வெளிச்சமாக கிளையிடை நுழைந்து பெருமர நிழலில் இளைப்பாறும் வெயில் என்பது அவர் காட்டும் இன்னொரு காட்சி. வெயில் கடுமை தாளாமல் நிழலில் இளைப்பாறும் மனிதர்கள் உண்டு. விலங்குகளும் உண்டு. வெயிலே வந்து இளைப்பாறும் காட்சியின் சித்தரிப்பு மிகநல்ல வாசிப்பனுபவத்தைக் கொடுக்கிறது. ”அழகிய கோலங்கள் கூட வாசல் தாண்டி உள் வருவதில்லை” என்ற வரியும் படித்ததுமே மனத்தில் பதிந்துவிடுகிறது.
 
நிகழ்வின் பின்” என்னும் கவிதை சில காட்சிகளின் தொகுப்பாகவே உள்ளது. உணவருந்திய மேசைமீது கை துடைத்தெறிந்த காகிதங்கள் ரோஜாப்பூவாக மலர்ந்திருக்கின்றன என்பது ஒரு காட்சி. பெருமழை தீர்ந்த பின்பொழுதில் கண்ணாடியில் சிறிதும் பெரிதுமாக மழைத்துளிகள் பூத்திருக்கின்றன என்பது இன்னொரு காட்சி. மனசோடு தங்கியிருக்கிறது அசைந்தசைந்து மெல்லக் கடந்த யானையின் மணியோசை என்பது மற்றொரு காட்சி. முதல் இரண்டு காட்சிகளைவிட மூன்றாவதாக உள்ள யானையின் மணியோசைக்கு கூடுதல் அழுத்தம் உண்டு. பூவாக உருவகிக்கப்படுகிற காகிதமும் மழைத்துளியும் கண்முன்னால் இன்னும் உள்ளன. மணியோசைக்கு அப்படி எந்த இருப்பும் இல்லை. யானை அசைந்து அசைந்து கடந்துபோய்விட்டது. மணியோசையும் இல்லை. ஒரு பெளதிக இருப்பு சூட்சும இருப்பாக மாறி, பெளதிகத்தை மனத்தடியில் சுட்டியபடி இருக்கிறது
 
சூட்சும இருப்பை முன்வைக்கும் மற்றொரு கவிதை ”மழை சென்ற பின்னே”. மழை பொழிந்து நின்று விடுகிறது. மழையில் தெப்பமாக நனைந்த மரங்களெல்லாம் பசுமையைப் போர்த்தியிருக்கின்றன. மழையின் நினைவாக ஈரத்தை வைத்துக்கொள்கிறது காற்று. மழையின் அடையாளமாக தரையும் குளிர்ந்திருக்கிறது. மழை இல்லை. ஆனால், மழையின் அடையாளத்தை ஒவ்வொரு உயிரும் பொருளும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.

மீன்குட்டிகளும் பிளாஸ்டிக் பை நீரும் கவிதையும் மிக இயல்பான ஒரு காட்சியிலிருந்து கிளைத்தெழும் கவிதை. புதிதாகப் பிறந்த மீன்கள் விற்பனைக்காக பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டுள்ளன. பிறந்த இடத்தின் நினைவுகளாக பிளாஸ்டிக் பையெங்கும் உயிர்காக்கும் நீராக நிறைந்திருக்கிறது. ஆசையோடு அதை வாங்கிச் செல்கிறது ஒரு குழந்தை. பிளாஸ்டிக் பையிலிருந்து மீன்கள் தொட்டிக்கு மாற்றப்படுகின்றன. மலங்க மலங்க விழித்த மீன்குட்டி தொட்டி நீருக்கு சிறுகச்சிறுகப் பழகி, நீந்தத் தொடங்குகின்றன. பழகுவதிலும் இசைந்துபோவதிலும் வலி இல்லாமல் இருக்காது. ஆனால் நீந்துவது அல்லவா மீன் வாழ்க்கை? அது குட்டையாக இருந்தால் என்ன, தொட்டியாக இருந்தால் என்ன?

(02.01.2012 அன்று நடைபெற்ற காலச்சுவடு கவிதைநூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சியில் லாவண்யா சுந்தரராஜனின் “இரவைப் பருகும் பறவை” கவிதைத்தொகுதியை வெளியிட்டு நிகழ்த்திய உரையின் எழுத்துவடிவம்)

Saturday, January 24, 2015

நீர்க்கோல வாழ்வை நச்சி - ஒரு விம‌ர்ச‌ன‌ம்


திருமதி.லாவண்யாவிற்கு ,

தங்களின் 'நீர்க்கோல வாழ்வை நச்சி' படிக்கக் கிடைத்தது.முதலில் கவர்ந்தது அந்த தலைப்பு. படிப்பதில் சாதாரண வாசகி எனினும் தெரிவு என் பிடிவாதம் என்பதால் அதிகமாக படிக்க முடிவதில்லை. உங்கள் தொகுப்பு படித்தது பாக்கியம். மனம் சார்ந்த எழுத்துக்கள் என் இஷ்டம்.அற்புதமாக இருந்தது. ஒரு நாள் முழுவதும் மனம் அலைந்தது.

மனவெளியின் இருள் நினைவுகளை உங்கள் தொகுதியின் கடைசி கவிதையால் அனாயாசமாக கடந்தேன். அதற்காக உங்களுக்கு நன்றி. பல நூறு விஷயங்களை மனமுதிர்ச்சியால் கடந்து விடுகிறோம். கடக்க முடியாத சிலவற்றை வலி மிகுந்த தருணமாக காலம் மாற்றிவிடும். அப்படிப்பட்ட தருணங்களை உங்கள் கவிதைகள் சொல்லியது. கவிதை வாசிப்பவர்களே லாவண்யாவாக நிற்கும் தருணத்தை உணர முடிந்தது.

எழுதும்போது எழுத்துக்காரன் நிற்கிற உணர்வுபூர்வமான தளத்தில் இருந்து அவனாலேயே போற்ற முடியாத, வாசிப்பின் மூலமாக வாசகன் பெற்றுக்கொள்ளும் அபூர்வமான தளம். இதில் எழுதினவன் கூட சிலசமயம் அன்னியனே. பொது வெளியில் உணர்வு பாரம் நிறைந்த எழுத்துக்காரனோடு , அதைவிட மென் இயல்பு கொண்ட வாசகனுக்கு என்ன வேலை? ஒரு கூடல் பற்றிய கவிதை அற்புதமாக இருந்தது லாவண்யா. மனம் நிறைந்த கூடலை உங்கள் கவிதை சொல்லியது.

ஒவ்வொரு சொட்டாக அமிலம் இடப்படும் தவறான புரிதல் கொண்டுவிட்ட, நம் தரப்பு வாதங்கள் கேட்கப்படாத , நட்பின் பிரிவுக்குப்பின் , 'பறத்தல் என் சுதந்திரம்' என்று பறந்த உங்கள் கவிதை எனக்கு தந்தது ஒரு பறத்தலை. பறத்தலுக்கான சுதந்தரத்தையும் ,அதற்கான நியாயத்தையும். சொல்ல இடம் தராத, முடிந்துபோன நட்பு ஒரு கசப்பை நிரந்தரமாக நம்மீது வீசி விடுகிறது . பறப்பது என் சுதந்திரம், பறக்க வைத்ததற்கு என் நன்றி தோழி

பிரியங்களின் பிரியத்தை பிரியமாக சொல்லி இருக்கிறீர்கள். தனிமையின் வயிறு அழுந்தி படுத்துக்கிடக்கும் ஓரிரவு, கூட படிக்காமல் கிடக்கும் புத்தகம், ப்ரியம் ப்ரியத்துக்காகவே என்று வண்ணதாசன் சொல்வார். வந்துவிட்டு போகும் பிரியங்களையும், அதை கொண்டாடுவதையும் பார்த்தால் லாவண்யாவின் உறவும் , நட்பும் இன்னும் கிராமத்தின் வேர்களில் உண்டு.

வாழ்க்கையை மீள் நோக்க பயணம் ஒரு படிமம் என்று அபிலாஷ் எழுதி இருந்தார். பயணம், நெடுஞ்சாலை, ரயில் போன்றவை உங்களில் ஏற்படுத்தும் துல்லியமான அதிர்வுகள், அதுகுறித்தான பதிவுகள், பயணம் தரும் நினைவுகள்தான் நம் வரமும் , சாபமும்.

எத்தனை முறை பயந்தாலும் பயம் மட்டும் பழகுவதேயில்லை, என்று லாவண்யா சொல்வது எத்தனை பயங்கள், சடன் ப்ரேக் போடும் வாகன அதிர்வு, தானியங்கி கதவு, எப்போதும் என்னையும் பதட்ட மேற்படுத்தும் அடையாள அட்டைகள் போன்ற மெல்லிய பயங்கள் .பயம் மனம் சார்ந்தது என்று சொல்கிறபோதே, இருப்பை பதிவிக்கும் அடையாள அட்டைகள் இல்லாத பொது அமைதியின் நெற்பயிர் தானே விளைந்திடுமா என்கிறபோது , அதைத் தள்ளிநின்று பார்க்கும் எழுத்துக்காரியின் கர்வமும்.

பத்ராட்சி பூக்களை அந்த பேரில் சொல்லவேண்டும் என்று எப்படி தோன்றியது ?அந்தி மந்தாரை என்று அதன் பேரை மாடர்ன் ஆக்கி விட்டார்கள். ஊமத்தை பூக்களையும் , ஸ்ப்பீக்கர் போனையும் சேர்த்து நினைக்கிற பால்யம் உங்களுக்கும் உண்டா ? பூவரசம் பூக்களை ஏன் விட்டுவிட்டேர்கள் ? ஆரஞ்சு சுளைகளுடன், வாசனையை உள்ளே வைத்திருக்கும் ரசனையையும் ,வெள்ளையுடன் வயலட் பூக்களை கொடுக்கும் எருக்கங்செடிகளை சொல்லும் உங்களை பிடிக்கிறது.

தனிமையும் பிரியமும் சேர்ந்தது. அதீத பிரியங்களின் தடயங்கள் விலகி வெறும் ப்ரியங்களாக மாறுவது நுணுக்கமான இடம்.அதை கவனிக்கும் நுண்மனம் கொண்டவர்கள், அந்த வினாடி இறந்து போய்விடுவார்கள். அந்த மனசுதான் வார்த்தைகளில் ஆன பிரியத்தையும் மனசை தொடும்படி எழுதி இருக்கவேண்டும். மன முதிர்வு கொண்ட அறிவு சார் மனம், தினப்படி வாழ்வை திட்டமிட்டு வாழ்கிறது. அதற்கு எதிர் பக்கத்தில் உன்மத்தம் கொண்ட மனம் ஒன்று பிரியத்தின் பாற்பட்டவர்களிடம், பேசிக்கொண்டே இருக்கவும், வார்த்தைகளிலேயே மனசு நிறையவும் விழைகிறது. இந்தக்கவிதையும் முதலில் இருந்து கடைசி வரி வரை என்னை அதிர்வித்தது. லாவண்யா என் அடி மனசின் வார்த்தைகளை திருப்பிக்கேட்டால் சொல்ல வராது.

மனம் காயப்பட்டு விடும்போது பதில் சொல்லதோன்றாது. அது வேதனையின் உச்சம். உனக்கான உன் நிலையில் இருந்து கவிதையில் உனக்கான எப்போதும் கிடைக்கப்போவதில்லை பதில்கள் என்பது அற்புதமான வெளிப்பாடு லாவண்யா.
உடலோடு மறைந்திருந்த உணர்ச்சிகளை ஒவ்வொன்றாய் புரட்டினாய். பேசிக்கொண்டே வரும்போது இணையிடம் இருந்து திடீரென பெறப்படும் எதோ ஒன்றில் ,சட்டென நுணுக்கமான தள மாற்றம். உடம்பெங்கும் முத்தப்பூவை பூக்கச் செய்பவன். அந்த மாறுதலை கவனித்து கவிதையில் கொண்டு வந்த ரசனைககாரியே நீங்கள்.

விடை அறியா கேள்விகளில் இரண்டாவது பத்தி நெருடுகிறது. அதே போல காற்றும் கனமான அட்டைகளும் மூன்றாவது பத்தி.என்ன என்று சொல்ல தெரியவில்லை.

வழிபோக்குவில் ஒரு பிரிவின் துல்லியமான தருணத்தை சொல்லியுள்ளீர்கள்.ஒரு ப்ரியம் முடியும்போது ஏதோ ஒரு அசட்டு எதிர்பார்ப்பில் காத்திருப்போம். அவ்வளவுதான் என்று நாம் ஏற்றுக்கொள்ளும் தருணம் [உணரும் தருணம் வேறு ,ஏற்றுக்கொள்ளும் தருணம் வேறு] வலியை தாண்டிய வெறுமை வரும்.அந்த தருணம் அதில் பதிவாகியுள்ளது. லாவண்யா எல்லாம் தெரிந்து கொள்வது சுலபம். என்னை மாதிரி. உங்களை போல் பதிவது ,அதுவும் துல்லியமாக பதிவது கஷ்டம்.

எதிர்மறை ரசவாதம் என்ற கவிதையில் நான் புரிந்துகொண்டது ஒரு ஆளுமையை நீங்கள் சந்திகிறீர்கள். அவன் கவர்கிறான். அவனை புரிகிறது. தவறு சொல்ல முடியவில்லை.விலகவும் முடியவில்லை. ஈர்க்கிறான். அவனை அப்படியே ஏற்றுக்கொள்கிறீர்கள். நெருடவும் செய்கிறது. லாவண்யா ,என் பார்வை உங்கள் பார்வை அல்ல. தவறாய் எடுத்துகொண்டு விடாதீர்கள்.

காத்திருத்தல், அதுவும் பெண்களுக்கு எவ்வளவு தர்மசங்கடம். சிகரெட் பிடித்து, டி குடித்து, நான் காத்திருக்கிறேனாக்கும் என்று பெண்களால் காத்திருக்க முடியாது. மனம் சார்ந்த அவள் தவிப்புகளூடே கொஞ்சம் கொஞ்சமாக நெகிழ்ந்து கொண்டு வரும் தருணங்களை நீரடியில் காத்திருத்தலும், மழை தீர்ந்த பின் பொழுதில் என்று தலைப்பே கவிதை ஆனவற்றிலும் வைத்திருந்த நேசங்கள் எல்லாம் காற்று வந்து கலைத்தது போல் துடித்திருந்தேன் தூரத்தில் துயரங்கள் விழித்திருக்க.என் இருப்பை என்ற இடத்தில் காத்திருத்தல் இருப்பாகி விடுகிறது தலைவி ஏங்கி சொல்வது போல.

ஒரு வாழ்கை போல எல்லாம் இருந்தும் நகர்ந்து கொண்டு இருக்கிறது யாருமற்ற நதி. இந்த கவிதையில் வாழ்வது ,ஒரு சிநேகிதியின் மனம். சிநேகமாகவாவது நின்றிக்கலாம் என்ற ஏக்கம் , கைநழுவி போய்விட்ட நட்பு, தனிமை,குழப்பம் மனம் என்று அது ஒரு சிறுகதை.

திரும்பக்கிட்டாதவை கவிதையில் ”அவர் பிரியத்தில் மீண்டும் மீண்டும் தொலையும் நான்” அட போட வைத்த வரிகள் அவை தன்னை தொலைத்தல் என்பது சுயம் தொலைப்பது எவ்வளவு அருமையான வாழ்க்கை தத்துவமது. “எதைக்கொண்டும் நிரப்பமுடிவதில்லை யாரோவாகிப்போன நீ தந்த நிராகரிப்பின் ரணத்தை” வலி தரும் வரிகளிவை.

வரவேற்பறையே ஒரு இறுக்கமான இடம்தான். “நமதற்ற வரவேற்பறை” அழகான சொல்லாடல். உன் நான் ,என் நீ சொல்ல நினைப்பதும் சொல்வதுமாக அமைத்திருந்தது அழகு.

”பக்கத்துக்கு இருக்கையின் பார்வையை தவிர்த்திருந்தேன்”, “முத்தம் ஓசை களாய் நின்று விடுவது”, “என்னோடு பேசிக்கொண்டு இருந்தாய் துணையாக தனிமை மட்டும்” , “வாசல் தாண்டி உள் வருவதில்லை அழகிய கோலங்கள் கூட”, “கற்காலத்தில் சொல்வது கற்களையா மனிதர்களையா” போன்ற வரிகள் எல்லாம் அடிக்கோடிட்டு சொல்லப்பட வேண்டிய வரிகள். மிகவும் அனுக்கமாக உணர்ந்தேன் இந்த வரிகள் அனைத்தையும்.

வார்த்தைகளிலான ப்ரியம் ....முழுக்க பிடித்தது. என் தோழி ஒருத்தி பேசிக்கொண்டே இருப்பாள். அவள் கணவர் மௌனம். என்னுடைய மற்றுமொரு தோழியால் ,தன் கணவரின் மௌனத்தை தாங்க முடியவில்லை, மோனத்துடன் எப்படி தொடர்ந்து பேசுகிறீர்கள் என்பாள் ? அடி மனசு தெரிந்தால் போதாதா ?

உங்கள் புத்தகம் என் முன்னால் உள்ளது. நினைவில் இருந்து சொல்லவில்லை. என் நெஞ்சில் ஆடும் நினைவின் ரசனையை உங்கள் மூலமாக பார்கிறேன். மனசு கொண்டு பேசுபவரின் மொழி அது.

எல்லோரும் சொல்லிப் போவதுதான் அன்பு ,எல்லோரும் வாழ்ந்து பார்பதுதான் ப்ரியம். அதை எல்லோரும் சுமந்து திரிவதில்லை. அபூர்வமான மனிதர்களே அதை உணர்ந்தும்,தேம்பியும் திரிகிறோம். அந்த மொழியை உங்கள் தொகுப்பு பேசுகிறது. நம்மை போன்ற மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற ஆசுவாசத்தையும் தருகிறது.

ஒரு எழுத்து நல்ல எழுத்தா என்று பிரிக்க நான் இலக்கிய ஜாம்பவான் இல்லை. அது எனக்கு பிரியமாக இருக்கிறதா. பிடித்தது விலை மதிக்க முடியாதது. பிடிக்காதவையின் கூட ஒரு இலட்சம் குடுத்தாலும் வேண்டாம். மனம் பொங்கிக்கொண்டு இருக்கிறது. கண்களில் இருந்து ஒரு சொட்டு நீர் வழிந்து விட முடிந்தவர் பாக்யசாலிகள். அற்புதமான தருணம் ஒன்றை அடைந்தேன் உங்கள் கவிதைகளை வாசிக்கும் போது. லா.சா.ரா.சொல்வது போல தரிசன நிமிடம். வாழ்ந்தது போதும் என்ற நிறைவு. அந்த வினாடியின் பரவசமாக , ஒருசின்ன வெளிப்பாடு. கவிதை தொகுப்பிற்காக உங்களுக்கும் வாசிக்க அனுப்பியவர்க்கும் என் நன்றிகள்.

மிகுந்த ப்ரியங்களுடன்,
ந‌ந்தினி

நோப‌ல் ப‌ரிசு பெற்ற‌ பெண் எழுத்தாள‌ர் ஹெட்டா முல்ல‌ரின் சிறுக‌தை(உன்ன‌த‌த்தில் வெளியான‌து)


Herta Müller (born 17 August 1953) is a Romanian-born German novelist, poet and essayist noted for her works depicting the harsh conditions of life in Communist Romania under the repressive Nicolae Ceauşescu regime, the history of the Germans in the Banat (and more broadly, Transylvania), and the persecution of Romanian ethnic Germans by Stalinist Soviet occupying forces in Romania and the Soviet-imposed communist regime of Romania. Müller has been an internationally-known author since the early 1990s, and her works have been translated into more than 20 languages. She has received over 20 awards, including the 1994 Kleist Prize, the 1995 Aristeion Prize, the 1998 International IMPAC Dublin Literary Award and the 2009 Franz Werfel Human Rights Award. On 8 October 2009 it was announced that she had been awarded the 2009 Nobel Prize in Literature.
Herta Müller On Packing
Translated from the German by Donal McLaughlin
ஹெர்டா முல்லர்
“புறப்பாட்டிற்கான ஆயத்தம்“
மொழியாக்க‌ம் : உயிரோடை லாவண்யா
என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் நான் என்னோடு எடுத்துச் செல்கிறேன் அல்லது என்னுடையவை அனைத்தையும் என் மேல் அணிந்துள்ளேன். நான் சுமந்திருக்கும் அனைத்தும் என்னிடம் இருந்தவை. ஆனால் அவை எல்லாமே என்னுடையவை அல்ல. அவை யாவும் வேறு காரணிகளுக்காக படைக்கப்பட்டவை அல்லது பிறரிடமிருந்து நான் பெற்றவை. இந்த பன்றித்தோல் பொருத்திய துணிகள் அடைக்க பயன்பெறும் பெட்டி(சூட்கேஸ்) ஒரு இசைகருவி (கிராமபோன்). குளிர் தாங்க உதவும் இந்த ஜாக்கெட் என் தந்தையுடையது. வெல்வெட்டால் ஆன கழுத்துப் பட்டை பொருத்திய இந்த கோட் என்னுடைய பாட்டனது ஆகும். குளிருக்கு அணியும் இந்த அரைக்கால் சட்டை என்னுடைய மாமா எட்வினுடையது. காலின் கீழ் பாதிக்கு அணியும் இந்த மிருகதோலால் ஆன ஆடை எங்கள் வீட்டு அருகில் வசிக்கும் உயர்திரு கார்ப் அவர்களுடையது. இந்த பச்சை வர்ண கைகவசம் என்னுடைய சித்தி பினியுடையது. இந்த ஆழ்சிவப்பு வர்ண தலைக்கு அணியும் துணியும், குளியல் பொருட்கள் வைக்கும் சிறு பையும் மட்டுமே என்னுடையவை அவை சமீபமாக வந்த கிருஸ்துமஸில் எனக்கு கிடைத்த அன்பளிப்பாகும்.
போர் தொடர்ந்து ஜனவரி 1945 வரை நடந்து கொண்டு இருக்கின்றது. இந்த கடுங்குளிர் சமயம் இந்த ரஷ்யர்களால் நான் எங்கே அழைத்து செல்லப் படுகிறேன் என்று தெரியாத அதிர்ச்சியில் இருக்கிறேன். இப்படி நான் அழைத்துச் செல்லப்படும் காரணத்தால் அனைவரும் மிக அன்போடு எனக்கு உபயோகமாக இருக்கும் என்று தையாவது தந்திருக்கின்றார்கள். அவை எதுவும் எனக்கு உதவவில்லை. உண்மையை சொல்லப்போனால் இந்த உலகத்தின் எந்த ஒரு பொருளும் எனக்கு உதவவில்லை. அது எந்த உதவியாலும் என்னை மீட்க முடியாத ஒரு நிலை. நான் ரஷ்யர்களின் பட்டியலில் இருப்பதாக அறிந்து எல்லோரும் அவரவராக ஒரு முடிவெடுத்து இந்த பொருட்களை எனக்கு தந்தனர். அப்போது எனக்கு பதினேழு வயதாகி இருந்தது. அவர்கள் அனைவரும் கொடுத்த எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு நானே அங்கிருந்து செல்ல முடிவெடுத்தேன். செல்ல அதுவே சரியான நேரம் என்று நினைத்தேன். நான் ரஷ்யர்களின் பட்டியலில் இருந்தது மட்டுமே இதற்கு காரணமல்ல. ஒருவேளை இந்த முடிவை எடுக்காமல் இருந்தால் அது இதைவிட மோசமான நிகழ்வை தந்திருக்கக் கூடும். திரும்பிய இடமெல்லாம் கண்ணாக நீண்டு நோக்கும் இந்த நகரத்திலிருந்து செல்லவே விரும்பினேன். நான் அதிகம் பயப்படவில்லை ஆயினும் பொறுமையிழந்து படபடப்பாக இருந்தேன். நான் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பது என்னுடைய சொந்தங்களிடம் பயம் கலந்த அனுதாபத்தை தந்திருப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இப்படியே இருந்தால் அடுத்த நாட்டில் எனக்கு என்ன நிகழும் என்று பயந்திருந்தேன். எனக்கே தெரியாத ஒரிடத்திற்கு நான் பயணப்பட நினைத்திருந்தேன்.
நடக்கக்கூடாத ஏதோ ஒன்று எனக்கு நடந்தது. அது வித்தியாசமா, வெட்கமற்றதாக, அருவெறுக்கத் தக்கதாக, அழகாக இருந்தது. அது பனி மரங்கள் நிறைந்த பூங்காவில், பசும்புல் நிறைந்த சிறு மலைக்கு பின் நடந்தது. நான் என் வீடு திரும்பும் முன் விடுமுறை நாட்களில் இசைவிழா நடக்கும் அந்த பூங்காவின் மையப்பகுதிக்கு சென்றிருந்தேன். சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். அழகிய வேலைபாடுகள் செய்யப்பட்ட அந்த மரப் பலகையில் நான் கண்ட மெல்லிய கயிறு வளைவுகளால் இணைக்கப்பட்ட வெற்றுச் சக்கரங்களிலும், சதுரங்களிலும், நாற்கோணங்களிலும் பயம் கலந்திருந்தது. அந்த வேலைப்பாடுகள் என்னுடைஅனைத்து மன உளைச்சலையும், என் முகத்தின் பய ரேகையையும் காட்டியபடி இருந்தது. இனி ஒரு முறை இந்த பூங்காவிற்கு வரக்கூடதென்று எனக்குள் நானே உறுதி எடுத்துக்கொண்டேன்.
எவ்வளவு அதிகமாக என்னை கட்டுப்படுத்தினேனோ அவ்வளவு அதிகமாக ஆர்வம் உந்த இரண்டு நாட்களுக்குள் அந்த இடத்திற்கு சென்றேன். நாங்கள் வழக்கமாக சந்திக்கும் இடம் அந்த பூங்காவே ஆகும். நான் இரண்டாம் முறை நாங்கள் சந்திக்கும் இடத்திற்கு சென்ற போதும் நான் முதலில் சந்தித்திருந்தவர் உடனேயே சென்றேன். அவர் பெயர் நாரை. இரண்டாமவனுக்கு பைன் என்றும், அடுத்தடுத்து வந்தவர்களுக்கு காது, கயிறு, பொன்வண்டு, தொப்பி, கங்காரு, பூனை, கடல் புறா, முத்து என்று இஷ்டப்படி பெயரிட்டு விளையாடி இருந்தோம். எங்களுக்கு மட்டும் அடையாளப்படும் அந்த பெயர் அனைத்தும். அனைவரும் வன விலங்குகளோடு விளையாடினோம். மிக மகிழ்ந்து என்னை மறந்திருந்தேன். அது வேனிற்காலமானதால் மரங்கள் எல்லாம் தம் சொந்த நிறங்களிலும், இலைகளற்ற மரங்களாகவும், மல்லிகையும் அடர்புற்களும் கூட வளர்ந்திருந்தன.
அன்புக்கும் பருவகாலமுண்டு. அந்த இலையுதிர் காலம் பூங்காவிற்கு முடிவுகட்டி இருந்தது. மரங்களை நிர்வாணமாக்கி இருந்தது. நாங்கள் சந்திக்கும் இடமும் மாறிவிட்டது. அந்த குளக்கரை பறவை இலச்சினை பொருத்திய இரும்பு கதவுடையது. ஒவ்வொரு வாரமும் நான் என்னை விட இரு மடங்கு மூத்த ஒருவரை சந்தித்தேன். அவர் ஒரு ருமேனியர். திருமணமானவர். நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்திருந்தாலும் எங்கள் பெயர்களைக்கூட கூறிக்கொள்ளவில்லை. தனித்தனியாக வந்தோம். பணம் செலுத்தும் இடத்தில் அமர்ந்திருந்த பெண், பளபளப்பக்கும் கற்கள் பொருந்திய இந்த தரை, அல்லி மலர்கள் போல் வரையப்பட்ட சுவரில் பதித்த கற்கள், அழகிய வேலைபாடு நிறைந்த இந்த மர நாற்காலிகள் இவை எதுவுமே அறிந்திருக்கவில்லை எங்களுடையது திட்டமிட்ட சந்திப்புதான் என்று. நாங்கள் இருவரும் மற்றவர்களோடு சாதாரணமாகவே நீந்தினோம். நீச்சல் குளம் இருக்கும் இடத்தில்தான் நாங்கள் கடைசியாக சந்தித்தோமா?
அதன் பின், நான் அந்த போர்க்கால அகதி முகாமிற்கு செல்லும் சிறிது காலத்திற்கு முன்பிருந்து நான் 1968ல் திரும்பும் வரை அது போல ஏதாவது சந்திப்பில் பிடிப்பட்டிருந்தால் சிறையில் தான் அடைக்கப்பட்டிருப்பேன். குறைந்தபட்சம் ஐந்தாண்டு கடுங்காவல் கிடைத்திருக்கும். அப்படி பிடிப்பட்டவர்களை டுமையான விசாரிப்புக்கு உட்படுத்தப்படுத்திய பின் சிறையில் அடைக்கப்படுகின்றார்கள். பூங்காவிலிருந்தோ அல்லது நகராட்சி குளியல் இடங்களிலிருந்தோ நேரடியாக அந்த கால்வாயை தாண்டி இருக்கும் சிறையில் அடைக்கப்படுகின்றார்கள். அந்த சிறைக்கு சென்றவர்கள் யாரும் திரும்புவதில்லை. அப்படி திரும்புவர்கள் யாரும் வாழும் அருகதையோடும், எந்த அன்பையும் ஏங்கும் நிலையிலுமில்லை.
போர் முகாமிலும் ஒருவேளை நான் பிடிப்பட்டிருந்தால் இறந்திருப்பேன்.
ஐந்து வருடம் முகாமிலிருந்து வந்த காரணத்தால், நான் வீதியில் நடக்கும் போது கூட கைதாகிவிடும் பயத்தோடும் மன உளைச்சலோடுமே நடந்து போகிறேன். கையும் களவுமாக பிடிபடுவாய் என்று குற்ற உணர்வை பெருக்கும் இந்த வாக்கியத்திற்கு எதிரான எனது எந்த வாதமோ, சட்டபூர்வமான ஆதாரங்களோ வரப்போவதில்லை. நான் எனது மௌனத்தை என்னுடன் சுமந்து செல்கிறேன். என்னை நானே ஆழ்ந்த மௌனத்துடன் புதைத்துக் கொண்டேன். அதன் பின் என்னுடைய வார்த்தை என்றும் அவிழ்த்தெடுக்க பெறவில்லை. நான் ஒவ்வொரு முறை பேசும் போது என்னை வேறு விதமாக அடைத்து வைக்கவே முயற்சிக்கிறேன்.
கடந்த வேனிற்கால சந்திப்பின் போது நான் வீட்டிலிருந்து பனிமரங்கள் நிறைந்த அந்த பூங்காவிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, பிரதான வளைவு சாலையில் இருக்கும் செயின்ட் டிரினிடி ஆலயத்திற்கு சென்றேன். விதியை சந்தர்ப்பவாதம் என்றும் சொல்லலாம். நான் வருங்கால நிகழ்வுகளை அப்போதே பார்த்தேன். மேடைக்கு அடுத்திருந்த தூணருகில் சாம்பல் நிற அங்கி அணிந்திருந்த பாதிரியார், ஒரு வெள்ளாட்டை கழுத்தைச் சுற்றி சுமந்திருந்தார். அந்த ஒரு அமைதியின் குறியீடு. நீங்கள் சில விசயங்களை பேசுவதில்லை. ஆனால் உங்கள் கழுத்தை சுற்றி இருக்கும் அமைதி உங்கள் வாயிலுள்ள அமைதியை போலில்லை என்று கூறும் நான் என்ன பேசுகிறேன் என்று எனக்கு முற்றிலுமாக தெரிந்தே பேசுகிறேன். முகாம் இதற்கு முன்பாக போகும் முன், அங்கே இருந்த காலம் மற்றும் அங்கிருந்து வந்து விட்ட பின்னும் ஏறத்தாழ இருபத்து ஐந்தாண்டு காலம் நான் என் குடும்பத்தாலும், நாட்டாலும் பயத்தோடு மட்டுமே வாழ்ந்திருக்கிறேன். சற்றே நிலை பிண்டிருந்தாலும் நான் ஒரு குற்றவாளியாக சிறை பிடிக்க பெற்றிருப்பேன். என் குடும்பமும் என்னை பொறுப்பேற்றிருக்காது. இந்த வளைந்து நெளிந்த தெருக்களில், விற்பனை பொருட்களை கண்காட்சிக்காக வைத்திருக்கும் பெட்டங்களும், வீடுகள் மற்றும் புகைவண்டியின் ஜன்னல்களும், நீர் ஊற்றுகளும், நீர் நிறைந்த குளங்களும் எனக்கு கண்ணாடி போலவே காட்சியளிக்கின்றன. அவை பயங்கலந்த என்னை பிரதிபலிக்கின்றன. என்னைக் கண்டே நான் பயங்கொள்ளுமளவில் நான் ஒளிக்கதிர்கள் ஓடுருவ கூடியவளாகவே இருக்கிறேன்.
என் தந்தை ஒரு ஓவிய ஆசிரியர். அவர் தன்னுடைய தொழில் சம்மந்தமான புதிய வார்த்தைளான “வாட்டர் கலர்” என்பதை உபயோகிக்கும் போது நான் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகிறேன். என் தாய் என்னை உருளை கிழகு உண்ண முள் கரண்டியை உபயோகப்படுத்த கூடாது என்கிறாள். இரைச்சி சதைகளை உணவே முள் கரண்டி உபயோகிக்க வேண்டுமென்கிறாள். முள்கரண்டியும் உருளைக்கிழங்கும் இருக்குமிடத்தில் அவள் எப்படி சதைகளை பற்றி பேசலாம்? என்ன விதமான சதைகளை பற்றி அவள் கூறினாள்? ஆனால் எங்கள் கூட்டமோ சதை என்பதற்கான பொருளை முற்றிலுமாக மாற்றி விட்டது. நானே எனக்கு எதிரியானேன். வார்த்தைகள் எதிர்பாராமல் வந்து விழுந்து என்னை காட்டிக் கொடுத்து விட்டது.
என்னுடைய தாயாருக்கும், முக்கியமாக தந்தைக்கும் நகரத்தில் இருந்த அனைத்து ஜெர்மானியர்களையும் மிகவும் பிடிக்கும். அவர்களுடைய செந்நிற முடியையும் வெள்ளையான முழங்கால் வரை அணியும் கால் மெஷ்சும் அவர்களில் நம்பகத்தன்மைக்கு உகந்தது ஆகும். ஹிட்லரின் சதுர கரும் மீசையும், ட்ரன்சில்வேனியனின் ஜெர்மனிய பகுதியும் ஆரியர்களின் இனமே. என்னுடைய ரகசியமென்று என்னுடலில் ஆராயப்பட்டது மிகவும் வெறுப்பிற்குரியது. ரூமேனியர்களின் கூற்றுப்படி நான் ஒரு ஆரியனில்லாதவனுடன் தொடர்புடையவள்.
நான் என்னுடைய குடும்பத்திலிருந்து தொலைதூரம் போக நினைத்திருந்தேன் அது முகாமென்றாலும் அங்கேயே தான் செல்ல விரும்பினேன். நான் வருந்தியதெல்லாம் என்னுடைய தாயாருக்காக மட்டுமே. என்னைப்பற்றி எவ்வளவு முழுமையாக அவளுக்கு தெரியும் என்று நான் அறியவில்லை. அவளை விட்டு அகன்றிருக்கும் போது அவள் என்னைப் பற்றி எத்தனை முறை நினைப்பாரோ அத்தனை முறை நான் அவளை பற்றி நினைப்பதில்லை.
ஆலயத்தில் அமைதி என்ற ஆட்டுக்குட்டியை தன் கழுத்தை சுற்றி அணிந்திருந்த பாதிரியார் அருகில் திறந்த அறையில் ஒரு கல்வெட்டுள் நாம் நகர்தலுக்கான நேரம் எப்போதோ இறையால் குறிக்கப்பட்டு விட்டது என்றிருந்தது. நான் என் புறப்பாட்டிற்கான ஆயத்தத்தின் போது என்னுடைய புறப்படுவதற்கான நேரம் தொடங்கி இருப்பதை அந்த கல்வெட்டின் வழி உணர்ந்தேன். நல்லவேளை நான் கடும் பனிக்கு முன்னே இருந்து நடக்கும் போரிலிருந்து வெளியே ஒன்றும் செல்லவில்லை. முட்டாள்தனமான தைரியத்தோடு மிக சிரத்தையாக என் உடைமைகளை சேகரிக்க தொடங்கினேன். நான் எதையும் வேண்டாம் என்று மறுக்கவில்லை. கையுறை, முழங்காலில் இருந்து பாதம் வரை அணியும் குளிர்க்கு அடக்கமான துணிகள், வெல்வெட்டாலான கழுத்துப் பட்டையுடைய கோட், இவற்றில் எதுவும் எனக்கு பொருத்தமானது இல்லை. ஆடைகள் உகந்தனவா இல்லை என்றெல்லாம் யோசிக்கும் அவகாசமில்லை அச்சமயம். புறப்படவேண்டும். அதற்கான நேரம் வந்தாகி விட்டது. அந்த நேரம் மட்டுமே அடுத்த கட்ட வாழ்வை தீர்மானிப்பதாக இருந்தது. ஆடைகளோ அல்லது ஏனைய பொருட்களோ இல்லாவிடிலும் நம்மை பெரியவர்கள் ஆக்கி விடுவது காலமல்லவா? இந்த உலகம் நவீன ஆடை அணிந்த பந்து அல்ல. ஆயினும் இந்த கடுங்குளிர் காலத்தில் ரஷ்யாவிற்கு போகும் யாரும் மிகுந்த முட்டாள்தனமுள்ளவர்களே ஆவர்.
இரண்டு காவல் அதிகாரிகள் ஒரு ரூமானியர் மேலும் ஒரு ரஷ்யர் வீட்டுக்கு வீடு ரொந்து சுற்றி பட்டியல் எடுத்தனர். அவர்கள் இந்த பட்டியல் முகாமிற்காக தயாரிக்கப்படுவை என்று எங்கள் இல்லங்களில் சொன்னார்களா என்பது தெரியவில்லை. ஆனால் அவர்கள் சிறுவர்களை ரஷ்யா அனுப்ப பட்டியல் எடுப்பதாக சென்னார்கள். அவர்கள் முகாமிற்கு என்று சொல்லி இருந்தால்கூட நான் என்னுடைய பிரகாசமான குழந்தை குறும்புத்தனத்தோடு கூடிய முட்டாள்தனத்தில் தானிருந்தேன். அப்போது எனக்கு பதினேழே வயதாயிற்று. வாட்டர் கலர், சதை என்ற வார்த்தைகளே என்னுள் செல்லும் அளவு புத்தியிருந்தது. முகாம் என்ற வார்த்தையின் பொருள் உணராத செவிடாக இருந்தது என்னுடைய மூளை அப்போது.
என்னுடைய தாய் உருளைக் கிழங்கு, முள்கரண்டியுடன் சேர்த்து சதை என்ற வார்த்தையையும் கற்று தந்த அந்த காலம், நான் ஒரு குழந்தை போல எங்கள் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தேன். என்னுடைய தாய் வராண்டாவிலிருந்து இப்போதே சாப்பிட வரவில்லை என்றால் நீ எங்கே வேண்டுமானாலும் சென்று தங்கிக்கொள்ளலாம் என்றாள். ஆனாலும் நான் சற்றே நேரம் தாழ்த்தி சாப்பிட சென்றதால், நீ உன்னுடைய உடமைகள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு இந்த உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் இடத்திற்கு செல்ல விருப்பு இருக்கின்றதோ அங்கேயே செல் என்றாள். சொன்னதோடு மட்டும் அல்லாமல் என்னுடைய அறை வரை என்னை தரதரவென்று இழுத்துச் சென்று என்னுடைய குளிருக்காக அணியும் தொப்பி மற்றும் என்னுடைய ஜாக்கெட் இரண்டையும் ஒரு சிறு பையில் அடைத்தாள். “நான் உங்களுடைய குழந்தை தானே நான் எங்கே செல்வேன்” என்று நான் அப்போது கேட்டேன்.
பலரும் பயணத்திற்கான பொருட்களை சேகரிப்பதும் அதை பையில் தகுந்தபடி அடைப்பதும் பாடுவதும் சாமி கும்பிடுவதும் போல தானே வரும் ஒரு விசயமென்றும் அதற்காக தனிப்பயிற்சி தேவையற்றது என்றும் நினைக்கிறார்கள். என்னுடைய தந்தை ரூமானிய படையில் பணியாற்றச் சென்ற போது எதையுமே ஆயத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. சிப்பாய்களுக்கு தேவையான அனைத்தும் அவர்களுடைய சீருடையாக அளிக்கப்பட்டதே அதன் காரணமாகும். குளிரில் மேற்கொண்ட பயணம் தவிர பித்தியேகமாக எந்த ஆயத்தமும் அவர் செய்யவில்லை. நம்மிடம் சரியான விசயங்கள் இல்லாத போது அதை அடையும் முயற்சியில் நம்மை நாமே முன்னேற்றிக் கொள்கிறோம். ஆனால் சில சமயம் முற்றிலும் தவறான விசயமே நமது தேவைக்கு அருகில் வருகின்றது. பின் அவையே நமக்கான சரியான வியங்களாகவும் ஆகின்றன. ஏனென்றால் அவை நம்முடைய வியங்களாகி விடுக்கின்றன.
என்னுடைய தாயார் கிராமபோன் இசைக்கருவியை வரவேற்பறையில் இருந்து சமையல் அறைக்கு கொண்டு வந்து சாப்பாட்டு மேசை மேல் வைத்தார். ஒரு திருப்புலியின் உதவியோடு அந்த இசைகருவியை நான் ஒரு சூட்கேஸாக மாற்றினேன். சுழலும் தட்டையும், திருப்பு பலகையையும் கழற்றிவிட்டு அந்த வெற்றிடத்தை தக்கை கொண்டு அடைத்தேன். உள்ளிருந்த சிவப்பு நிற வெல்வெட்டை அப்படியே விட்டுவிட்டேன். கூடவே முக்கோண வடிவ திருகையும் நான் அகற்றவில்லை. இந்த பெட்டியின் அடியில் நான்கு புத்தகங்களை வைத்தேன். பௌஸ்ட், தடிமனான துணியால் பைண்ட் செய்யப்பட்டது. ஜாரதுஸ்ரா மெல்லிய புத்தகம் வென்ஹெபேரால் எழுதப்பட்டது மேலும் எட்டு-நூற்றாண்டு-கவிதைகள், நாவல்கள் நான் எடுத்து செல்லவில்லை. நாவல்களை ஒரு முறையே படிக்க முடியும். அவை மீண்டும் மீண்டும் படிப்பதற்கு ஏதுவானதாக இருக்காது. அதன் மேல் என்னுடைய குளியல் பொருட்கள் அடங்கிய பையையும் வைத்தேன்.
என்னுடைய குளியல் அறை பையில் சிறிது கழிப்பறையில் உபயோகிக்கும் காகிதமும், சவரத்திற்கு பின் உபயோகிக்கும் பொருளும், சவரத்திற்க்காக உபயோகிக்கும் சௌக்கரமும், ஒரு சவரக்கத்தியும், சவரத்தின் போது உபயோக்கிக்கும் புருஸும், சில மருத்துவப் பொருட்களும், கை சௌக்காரமும், இரண்டு நகவெட்டியும் இருந்தன. இதைத்தவிர குளிருக்கான காலுறை ஒரு ஜோடியும். முழங்கால் வரை அணியும் காலுறையும். சிவப்பு வெள்ளை கட்டமிட்ட சட்டையும், இரண்டு கால் சட்டையும் வைத்தவுடன் சூட்கேஸ் நிறைந்து விட்டது.
இதைத் தவிர தனியாக ஒரு படுக்கை விரிப்பும், ஒரு ஜாக்கெட் மற்றும் முழங்காலிருந்து பாதம் வரை கட்டிக்கொள்ளும் தோலாலான இரண்டு துணிகளும் கட்டப்பட்டது.
மேலும் ஒரு சிறு பையில் பன்றியின் பின்னங்காலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகை ஒரு டின்னும், வெண்ணை தடவிய நான்கு சாண்டியா வகை ரொட்டி துண்டுகளும், சென்ற கிருஸ்துமஸில் பின் மீதமிருந்த சில பிஸ்கட் வகையும் மேலும் தண்ணீர் ஒரு பீக்கர் அளவும் இருந்தது.
என்னுடைய பாட்டி தந்த சூட்கேஸ், படுக்கை பொருட்களடங்கிய மூட்டை மேலும் என்னுடைய கைப்பை யாவையும் கதவருகே வைத்தார்கள். இரு காவல் அதிகாரிகள் இரவு வந்து என்னை அழைத்து செல்வதாக சொல்லி இருந்தார்கள். என்னுடைய உடைமைகள் எல்லாம் கதவருகே தயார் நிலையில் இருந்தன.
நான் இரண்டு கால்சட்டையையும், ஒரு நல்ல குளிர் தாங்கும் சட்டையையும், ஆட்டு ரோமத்தில் செய்யப்பட்ட காலுறையும், சித்தி தந்திருந்த பச்சை வண்ண கையுறையும் அணிந்தேன். என்னுடைய காலணியில் கயிறுகளை கட்டிக்கொண்டிருந்த நேரம் திடீரென எனக்கு சில வருடங்களுக்கு முன்பு ஒரு விடுமுறை நாளில் நாங்கள் ராட்சச சக்கரத்தில் சுற்றும் போது நடந்தது நினைவுக்கு வந்தது. அன்றைய தினம் என் அம்மா அவளே தயாரித்த வெள்ளி நிற உடையணிந்திருந்தாள். நகரில் நடுவில் நடந்த போது நீண்ட புல்தரையில் அவள் கீழே விழுந்து தான் இறந்து விட்டதை போல நடித்தாள். எனக்கு அப்போது எட்டு வயது. எனக்கு ஆகாயம் கீழே விழுவதை போலே எனக்கு பயமாக இருந்தது. அதில் நான் மூழ்கி விடுவேனோ என்று பயந்தேன். என் அன்னை குதித்தெழுந்து என்னை அதிர்ச்சியூட்டியபடி, என்னை உனக்கு அவ்வளவு பிடிக்குமா, நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்“ என்றாள்
என்னுடைய காலணி தற்சமயம் மிக இறுக்கமாகி விட்டது. நான் சாப்பாட்டு மேசையருகே அமர்ந்து நள்ளிரவுக்காக காத்திருந்தேன். நடு இரவைத் தாண்டி விட்து. ரோந்துப்படை வர தாமதமாகி விட்டனர். அந்த இரண்டு மூன்று மணி நேரம் கடப்பது மிக கொடுமையாக இருந்தது. என்னுடைய தாய் எனக்கான வெல்வெட் கழுத்துப்பட்டை பொருத்திய கோட்டை தாங்கி நின்றாள். நான் அதை வாங்கி மாட்டிக் கொண்டேன். அவள் அழத் தொடங்கினாள். நான் கையுறையையும் மாட்டினேன். மரங்களால் ஆன வீட்டை விட்டு வெளியே வரும் நடைபாதையில் என்னுடைய பாட்டி சொன்னாள் “நீ நிச்சயம் திரும்ப வருவாய்”
நான் இந்த வரிகளை நினைவில் கொள்ள ஒரு நாளும் த்தனித்ததில்லை. ஆனாலும் இந்த வரிகளை நான் என்னுடன் முகாமிற்கு எடுத்துச் சென்றேன். அந்த வரிகள் என்னை எப்படி தொடர்ந்தன என்று எனக்கே தெரியவில்லை. எனக்கான நான் எடுத்து சென்ற புத்தகங்களை விட இந்த வரிகளே என்னை அதிகம் வலுவாக்கியது. அந்த வரிகள் என் உணவைப் போல என் கூடவே இருந்தன. நான் திரும்பவும் வந்தேன் ஆகையால் மிக அழுத்தமாக செல்கிறேன் அந்த வரிகளே என்னை உயிர்ப்பித்தது.
ஜனவரி 14, 1945 அதிகாலை மூன்று மணிக்கு ரோந்து படையினர் வந்து என்னை அழைத்துக் கொண்டு சென்றனர். அப்போது -15C கடுங்குளிர் இருந்தது. எங்களை ஒரு கன வாகனத்தில் வெற்றாய் இருந்த நகரத்திற்குள் இருக்கும் ஒரு கண்காட்சி அரங்குக்கு அழைத்து சென்றார்கள். அது ஒரு விழாக்கால அரங்கு. முகாமிற்கு அனைவரையும் ஒருமிக்கும் பொருட்டே அந்த அரங்கில் அனைவரும் இறக்கிவிடப்பட்டோம். அரங்கில் கிட்டத்தட்ட மூன்னூறு பேர் அடைத்தாற்போல் இருந்தோம். அரங்கில் தரையில் தரை விரிப்பும் படுக்கை விரிப்பு போலும் விரிக்கப்பட்டிருந்தது. சீருந்துகள் காலை வரை அருகிலிருந்த கிராமங்களில் மக்களை பிடித்து வந்த வண்ணமிருந்தன. காலைக்குள் அந்த அரங்கில் ஐநூறுக்கும் அதிகமான மக்கள் நிறைந்தனர். இரவில் எண்ணுவது நேர விரயம் போலிருந்தது. இரவு முழுவதும் அரங்கில் விளக்குகள் எரிந்த வண்ணமிருந்தன. மக்கள் அனைவரும் அரங்கை சுற்றி சுற்றி வந்தனர் தங்களுக்கு தெரிந்த யாரேனும் இருக்கின்றார்களா என்று.
அனைவரும் அருகிருந்தவர்களிடம் மேலும் வருபவர்களை ரயில் நிலையங்களில் வைத்திருப்பதாகவும், புதிதாக படுக்கைகள் செய்ய படுவதாகவும், தரை விரிப்புகள் போடப்படுவதாகவும், ரயிலேயே உணவு தயாரிக்கும் ஏற்பாடாக அடுப்புகள் பொருந்தப்படுவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மக்கள் அமைதியாக பேசப்பேச அடுத்தவர்களின் விழிகள் விரிந்த வண்ணமிருந்தது. அவர்கள் அனைவரும் அமைதியாக அழத்தொடங்கி இருந்தனர். காற்றில் பழைய உல்லன் ஆடைகளின் வீச்சம் அடிக்கத் தொடங்கி இருந்தது. அந்த வீச்சத்தின் கூடவே பயமென்ற வியர்வையின் வாடையும் கலந்து வந்தது. கூடவே ரொட்டித் துண்டுகளை வாட்டும் வாடையும் வெண்ணிலா பிஸ்கேட்டுகளின் வாடையும் அடித்தது.
ஒரு பெண்மணி தன் தலையில் காட்டி இருந்த துணியை அவிழ்த்தாள். அவள் கிராமத்தில் வசித்தவள். நிச்சயமாக அவள் தலை முடி ஒரு பெரிய கொண்டை வைத்து அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்போது கொண்டை ஊசிகளை காணவில்லை. ஏதோ மிக சிறிய குத்தூசிகளால் அவை இறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த குத்தூசிகளால் அவள் அடர்ந்த முடிகளை சரிவர படிவிக்க முடியாது அவள் தலைமுடி ஒரு படுக்கை போல் காட்சியளித்தது.
நான் ஒரு பார்வையாளர் போல் என் கால்களை மடித்து என்னுடைய உடமைகளோடு அமர்ந்திருந்தேன். சற்று நேரத்தில் எல்லாம் என்னை உறக்கம் ஆட்கொண்டது. அதில் நானொரு கனவைக் கண்டேன்.
நானும் என்னுடைய தாயும் ஒரு சுடுகாட்டில் புதிதாக கட்டப்பட்ட ஒரு கல்லறை அருகில் நின்றுகொண்டிருக்கிறோம். நாங்கள் நிற்குமிடத்தில் நடுவில் ஒரு வெண் சாமரம் போன்ற கதிர்களைக் கொண்ட செடியொன்று என்னில் பாதி உயரமுள்ளது வளர ஆரம்பிக்கிறது. அதன் தண்டில் ஒரு கைப்பிடி மற்றும் சிமிழியோடு கூடிய சிறிய சூட்கேஸ் இருக்கின்றது. அதன் சிமிழியை திறந்தால் விரல் அகலம் கொண்ட ஆழ் சிவப்பு நிற வெல்வெட் தெரிகின்றது. யார் இறந்து விட்டார்கள் என்று தெரியவில்லை. என்னுடைய அன்னை என் கோட் பையில் இருந்து சாக்கட்டியை எடுக்கச் சொன்னாள். என்னிடம் இல்லை என்று சொன்னேன். ஆனால் என்னுடைய பையில் தேடிய போது தையற்காரர் உபயோகிக்கும் சாக்கட்டி இருந்தது. அந்த சூட்கேஸில் ஒரு சிறிய பெயர் எழுத வேண்டும் என்றாள். “ருஹ்ட்” என்று எழுத சொன்னாள். இங்கே யாரும் “ருஹ்ட்” என்ற பெயரில் இல்லை. நானும் “ருஹ்ட்” என்று பொய் எழுதினேன்.
என்னுடைய கனவில் இருந்து இறந்தது நான் தான் என்று எனக்கு தெளிவாக தெரிகின்றது ஆனால் அதை நான் என் அன்னைக்கு இன்னும் சொல்லவில்லை. நான் கிளம்ப ஆயத்தமாக இருந்தேன் அந்த சமயம் குடை வைத்திருந்த ஒரு வயதானவர் என்னருகே அமர்ந்து மிக அருகில் வந்து காதோடு “ என்னுடைய மைத்துனன் வர ஆவலோடு இருக்கின்றான் ஆனால் அரங்கின் காவலாளிகள் எல்லாபுரம் இருந்து கொண்டு அவனை வரவிடாமல் தடுக்கின்றனர் என்றார்.
நாங்கள் நகரத்தை விட்டு இன்னும் கிளம்பவில்லை. அவன் இங்கே வர இயலாது. நானும் வீடு திரும்ப முடியாது. அவருடைய வெள்ளி பொத்தான்களில் இருந்து ஒரு பறவை பறந்து கொண்டிருந்தது. அந்த பறவை பார்க்க காட்டு வாத்து போலவோ அல்லது கடல்புறாவையோ ஒத்திருந்தது.
இதை நான் கவனித்தற்கு அவருடைய உடையில் மேல் பரப்பிலிருந்த அலங்காரமே காரணியாயிற்று. நானும் மேலும் குனிந்த போது நங்கூரம் போல் ஆனேன். அவர் கையில் இருந்த குடை எங்களுக்கு இடையே ஒரு முதியவர்க்கு உதவும் நடைபயற்சி குச்சியை ஒத்திருந்து. “இதை நீங்கள் உங்களுடன் எடுத்துவரப் போகிறீர்களா“ என்றேன் நான். “நிச்சயமாக.. அங்கிருக்கும்போதும் இங்கேயிருப்பதாக உணரச் செய்ய உதவும் இது“ என்றான் அவன்.
நாங்கள் இங்கிருந்து எங்கே, எப்போது அரங்கிலிருந்து புகைவண்டி நிலையம் செல்வோம் என்று சொல்லப்படவில்லை. நாங்கள் செல்ல அனுமதிக்கப்படுவோமா? அது எப்படிப்பட்ட இருப்பிடமாக இருந்தாலும் ஒரு கன வாகனத்தினுள் இருந்தாலும் அங்கே என்னுடைய கிராமபோன், வெல்வெட் கழுத்து பட்டையுடைய கோட் இவற்றோடு ரஷ்யாவிற்கு நான் செல்ல வேண்டும். நாங்கள் புகைவண்டி நிலையத்தை எப்போது அடைந்தோம் என்று தெரியவில்லை. எங்களை அழைத்து சென்ற கனரக வாகனம் மிக பெரியதாக இருந்தது. அதில் ஏறி இறங்கும் முறை கூட எனக்கு மறந்திருந்தது. அந்த கனரக வாகனத்தில் நாங்கள் நீண்ட இரவுகளையும் பகலையும் கடந்திருந்தோம். எங்கள் பயணத்தை முற்றிலுமாக அந்த கனரக வாகனத்திலேயே கழித்தது போலும் இருந்தது. எங்களில் யாருக்கும் எவ்வளவு நேரம் பயணித்தோம் என்பது தெரியாது. இவ்வளவு நேரம் பயணக்கிறோம் என்றால் எங்கோ மிக தொலை தூரம் பயணிக்கிறோம். எவ்வளவு நேரம் பயணிக்கிறோமே அவ்வளவு நேரம் நமக்கு ஒன்றும் நேரப்போவது இல்லை. பயணித்துக் கொண்டே இருக்கும் வரை எல்லாம் நல்லவையே.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர் அனைவரும் அவரவர் உடமைகளை தங்கள் தலைக்கடியில் வைத்திருக்கின்றார்கள். பேசியபடியும் பேசாமலும், உண்டும் உறங்கியபடியும் இருக்கின்றார்கள். ஸ்னாப் திரவமும் பாட்டில் பாட்டிலாக தரப்படுகின்றது. இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் நாங்கள் பயணிக்க பழக்கப்பட்டோம். ஒருவருக்கொருவர் பாசமாக இருக்க தொடங்கினோம். ஒருவர் கண்களை ஒருவர் பார்த்தபடியும், வெளியே பார்த்தபடியும் எங்களது காலம் கழிந்தது.
000


உன்னதம் – நவம்பர் 2009 இதழில் வெளியானது.

Sunday, September 14, 2014

புகையும் ப‌ட‌ங்க‌ளிர‌ண்டு



நினைவின் புகைப்ப‌ட‌ங்க‌ள்
நேற்றின் ஒன்று
நாளையின் ம‌ற்றொன்று

இருக்கைக‌ள் சில‌
இட‌ம் மாறியும்
ஒன்றிர‌ண்டு காணாமலும்
இர‌ண்டேனும் புதிதாக‌வும்
இருக்கின்ற‌ன‌
புகையும் ப‌ட‌ங்க‌ளில்

இப்ப‌டியாக‌
க‌ட‌க்கிற‌து
வாழ்க்கை

Tuesday, September 2, 2014

லஷ்மண ராஜா மேனகா கல்யாண வைபோகமே....

சில பொழுதுகள் விடியும் போதே இனிய நிகழ்வுகளைக் கொண்டு வரும். அப்படிப்பட்ட ஒரு தினமே 31.8.2014. அது லஷ்மணராஜா என்கிற இரவணன் தன்னுடைய நீண்ட நாள் சகியுடன் கரம் கோர்த்த நற்தினம். அன்று அதிகாலை முதல் இரவு கருமையை போர்த்திக் கொள்ளும் வரை பல்வேறு மகிழ் தருணங்கள் என்னிடம் வந்து சேர்ந்தது. எனது நாத்தனாரின் புதுமனையில் தொடங்கியது அன்றைய தினம். அங்கிருந்து காலை 7 மணிக்கெல்லாம் கள்ளக்குறிச்சி கிளம்பினோம். ரம்யமான காலைப் பொழுதில், காற்று கடலலை போல் அடித்து கூந்தல் கலைக்க, "சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது" போன்ற சுந்தர கானங்களை கேட்டுக் கொண்டு, தம்மப்பட்டிக்கு சற்று முன்னர் தொடங்கி ஆத்தூர் வரை நானே சிற்றுந்தை ஓட்டி சென்றது என் வாழ்வில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத மிக மகிழ்வான தருணம். பக்கத்து இருக்கையில் ஒருவேளை அவர் பயந்து கொண்டே வந்திருக்கலாம். 

தற்சமயம் நினைத்துப் பார்க்கிறேன், நான் விழியன் திருமணத்திற்கும் 7 மணிக்கு தான் கிளம்பினேன். வேலூரில் 9 மணி திருமணத்திற்கு காலையில் 7 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பினேன். (ரசிகவ் அதனை மிகுந்த நகைச்சுவையோடு தனது பதிவில் கூட எழுதி இருந்தார்). அன்று மணமகளும் மணமகனும் திருமண மண்டபத்திலிருந்து கிளம்பி வீட்டுக்கு செல்ல வெளியில் வந்த தருணம், வாழ்த்தி விட்டு திரும்பினேன். தற்சமயம் அப்படியில்லாமல் இந்த திருமண வரவேற்ப்பில் முன்னரே சென்ற காரணத்தால், மணம் முடிந்து வந்த மணமகனையும் மணமகளையும் மணக்கோலத்தில் மண்டபத்தின் வாயிலில் வரவேற்க்க முடிந்தது.





   லஷ்மண் பெரும்பாலும் பெயர் மாற்றி அழைக்கும் வரம் பெற்றிருந்தார். அவருடைய திரைக்கதையை வடிவமைக்கும் போது என்னை தொலைபேசியில் அழைப்பார், சில பல சந்தேகங்கள் என்பார், இடைஇடை கேள்வி நடுவில் என்னை அனிதா(ஆம் அதே அனிதா ஜெயகுமார் தான்) என்று அழைப்பார். அனிதா லஷ்மணின் சிறந்த தோழி, லஷ்மண் அனிதாவை பற்றி அடிக்கடி சொல்லி இருந்தார். பெங்களூர் வந்ததும் நான் முதலில் சந்திக்க நினைத்தது அனிதாவை தான். (லஷ்மணின் திருமண வரவேற்பில் தான் அனிதாவை சந்திக்க கிடைத்தது. அது எனக்கு பேரானந்தம், இன்னும் சற்று முன்னரே இந்த வரவேற்ப்பை நடத்தி இருக்கலாம்). அதே போல் திருமண பத்திரிக்கையை எங்கள் இல்லத்தில் வந்து கொடுத்த தினம் தொலைபேசியில் அனிதா அழைத்த போது, இடையில் இல்லை லாவண்யா என்றார். :)

  மேலும் பத்திரிக்கையை நேரில் தர வேண்டும் என்று பெங்களூரின் மூம்முனைகளில் இருக்கும் லாவண்யா, கார்த்திகா மற்றும் முகுந்த் மேலும் அனிதா என்று சிரமம் பாராமல் வந்த போது, லஷ்மனுடன் சற்று அளவளாவ நேரம் கிடைக்குமென்று, அவருடன் சென்ற காரணத்தால் கார்த்திக்கா, முகுந்த் மற்றும் நேயமுகிலையும் சந்திக்க முடிந்தது. இதையே லஷ்மண் தனது திருமண வரவேற்ப்பு பாதாகையில் "மரம் அழைக்கிறது, மரத்தடியில் கூடும் அனைவரும் தோழமை பூண்கிறோம்" என்று எழுதி வைத்திருந்தார் போலும். அவருடைய திருமணத்தில் சொந்தங்களுக்கு இணையான எண்ணிக்கையில் தோழர்/தோழியர் வந்திருந்தது அவரின் உன்னதமான நட்புக்கு சாட்சி.



  லஷ்மணின் அனைத்து படைப்புகளும் மிக நேர்த்தியான, வித்தியாமான மற்றும் அழமான சிந்தனை பின்புலங்களை கொண்டது. "வெளிச்சம் பயத்தை ஏற்படுத்த தொடங்கும் முன்பு, இருளில் செய்த அனுமானமும் பாதையும் எளிதாக இருந்தது"  போன்ற கவிதையும், "நீர்வழி படூம்" போன்ற குறும்படமும் இவரின் நெடும் தேடல்களின் அடையாளம். அத்தகைய தேடல் அவருடைய திருமண அழைப்பிலும் இருந்தது. சங்க காலத்தில் திணை கடந்த காதல் உண்டா என்று தேடித் தேடி, திணை தாண்டிய காதல் சங்கத்தில் இல்லை என்று "மலையும் குகையும் அவள் கனவு, கடல் பார்த்தல் அவன் கொள்ளை ஆசை" என்று தனது சொந்த வரிகளில் வடிவமைத்திந்தார், (அனிதா தன் அழைப்பிதழில் குறுந்தொகை பாடலை தந்தது போல நினைவு. good friends think alike). லஷ்மணின் தேடலுக்கு மற்றுமொரு உதாரணம் திருமண வரவேற்பிலிருந்த மற்றுமொரு பாதகை. பாரதியின் பாடல் அது. அப்படி ஒரு பாடலை பாரதியார் கவிதைகளில் கேட்டு அறிந்தது இல்லை. இவருடைய கூழாங்கற்கள் நிறுவனம் மற்றுமொரு கலை நேர்த்திக்கான உதாரணம்.



  குறிக்கோளுக்கென்றும், எளிமைக்கென்றும், தன் சிந்தனை சரியென்றால் அதனை செயல்படுத்த பிறர் என்ன நினைக்ககூடும் என்ற தயக்கமற்ற பாசாங்கற்ற தெளிவே லஷ்மணின் தொடர் வெற்றிகளுக்கு காரணமென்று நினைக்கிறேன்.  புகைப்பட கலையில் கொண்ட பெரும் ஈடுபாடுகெனவும், சினிமா மேல் கொண்ட கொள்ளை கனவுக்கெனவும், ஒரு மென்பொருள் நிறுவனத்தில் இருந்து வெளியேறி, திருமண நிகழ்வுகளை சந்தோச தருணங்களை பதிவு செய்யும் வேலையை செய்ய எத்தனை அசாத்திய துணிவு வேண்டுமோ, அதே அளவிற்கான துணிவினை கொண்டிருந்தது லஷ்மணின் திருமண வரவேற்ப்பு. இத்தனை எளிமையான மிக அழகான ஒரு மணமேடையை சமீபமாய் எந்த திருமணத்திலும் நான் பார்க்கவில்லை. 



அதே போன்ற மற்றுமொரு முயற்சி தான், முற்றிலும் இயற்கை உணவுமுறை சிறுதனிய உணவு விருந்து. எல்லா நிகழ்வுகளிலும் அவர் தனித்துவம் மிளிர்ந்து கொண்டிருந்தது. ஓவியர் ஒருவர், வந்திருந்த அனைத்து குழந்தைகளில் ஒவியத்தை வரைந்து தந்த வண்ணமிருந்தார். பின்னர் குழந்தைகளுக்கு பனை ஓலையில் பின்னப்பட்ட கிலுகிலுப்பை கொடுக்கப்பட்டது. பாரம்பரிய முறையில் திருமணம், வரவேற்ப்பு மேடையில் திருப்பாவை என்று மொத்தத்தில் மிக நிறைவான நெகிழ்வான நிகழ்வு லஷ்மணராஜா மற்றும் மேனகாவின் திருமணமும் அவர்களது வரவேற்ப்பும். அவர் இருவரும் சுவாதிக்கா சொல்வது போல சின்ன சின்ன சண்டைகள் போட்டு உடனுக்குடன் பெரிய சமாதானம் ஆகி சந்தோகம் பொங்க வாழ வாழ்த்துகிறேன்.




பின்னர் இணைக்கப்பட்ட அறிமுகம்:
லஷ்மணராஜா 2006 முதல் தெரியும். முத்தமிழ் என்ற இணைய குழுமத்திலிருந்து அறிமுகம். விழியன், நிலாரசிகன், ப்ரியா, ரசிகவ், ஷைலஜாக்கா, மஞ்சூர் அண்ணா என்று எம் நட்பு குழுவில் என்றைக்கும் எந்த போட்டி பொறாமை வெட்டி பேச்சுக்கு  இடமில்லை. முதன்முதல் லஷ்மணை சந்தித்தது இந்திரா நகர் பறக்கும் ரயிலில். அந்த சந்திப்பு நான், லஷ்மண், நிலாரசிகன் அனைவரும் ஷைலஜா அக்கா வீட்டுக்கு சென்னையிலிருந்து பெங்களூருக்கு சென்ற போது நடந்தது. பார்த்ததும் மனவெளியின் ஆழத்திற்குள் வந்தமரும் ஒரு சிலரில் லஷ்மனும் ஒருவர். இந்த நேர்மையான நட்பை விவரிக்க தமிழில் வார்த்தைகள் குறைவு. சகதோழனாக என் வாழ்வில் துன்பமிக நாட்களையும், மிக இன்பம் தோய்ந்த நாட்களையும் கவனித்தவர் இவர். லஷ்மன் இல்லத்திற்கு பணி நிமித்தம் ப்ரிதாபாத்திலிருந்து வந்திருந்த சமயம் லஷ்மணின் அம்மாவின் கையால் ஒரு நாள் முழுதும் மூன்றுவேளையும் உண்டிருக்கிறேன். இந்த திருமணத்திலும் என்னை லஷ்மணின் அன்னை என்னை அன்புடன் கண்ணு என்று அழைக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன்.