Thursday, September 24, 2009

க‌ட‌வுள‌ர் த‌வ‌றான‌ உதார‌ண‌மாக‌லாமா?

ந‌ம் க‌ட‌வுள‌ர் எல்லோரும் ஐடிய‌ல் இல்லை. ந‌ம் ந‌ம்பிக்கையின் உச்ச‌ப‌ட்ச‌ம் என்ன‌? க‌ட‌வுள் ச‌த்திய‌மா என்ப‌து தானே! கடவுள் அப்படிங்கற கருதுகோள் மூலம் தானே நாம் நம் குழந்தைகளுக்கு நல்வழியை போதித்துக் கொண்டு இருக்கின்றோம். அப்ப‌டிப்ப‌ட்ட‌ க‌ட‌வுள‌ர் த‌வ‌றான‌ உதார‌ண‌மாக‌லாமா? த‌மிழ் க‌ட‌வுள் என்ற‌ழைக்க‌ப்ப‌டும் கும‌ர‌ன் முன்கோப‌க்கார‌ன். ஒரு மாங்க‌னிக்காக‌ குடும்ப‌த்தை பிரிந்த‌வ‌ன். க‌ற்பு, க‌ள‌வு என்று இருவித‌த்திலும் ம‌ண‌ம் புரிந்த‌வ‌ன்.

அவ‌ன் த‌ந்தை ஈச‌னும் அப்ப‌டியே இரு ம‌னைவி, த‌ன்னை ம‌திக்காத‌ மாம‌னார் வீட்டுக்கு போக‌ கூடாது என்று ம‌னைவியை அந்த‌ உல‌க‌ மாதாவைச் சொன்ன‌வ‌ர். கோப‌ம் வ‌ந்தால் ம‌னைவியையும் ச‌ரி, உண்மைக்காக‌ வாதாடும் ந‌க்கீர‌னையும் ச‌ரி சுட்டெரிப்ப‌வ‌ர்.

இவ‌ர் மைத்துன‌ன் விஷ்ணுவோ ஆயிர‌ம் நாம‌ம் கொண்ட‌வ‌ன், ம‌னைவிமார்க‌ளுக்கு க‌ண‌க்கே கிடையாது. ஒரு ம‌னைவியிட‌ம் மோதிர‌த்தை கொடுத்துவிட்டு முத‌ல் ம‌னைவியிட‌ம் ம‌ண‌ல்வெளியில் தொலைத்துவிட்ட‌தாக‌க் கூறி ம‌ட்டைய‌டி வாங்குப‌வ‌ர். இவ‌ர் ஒவ்வொரு அவ‌தார‌த்திலும் முறைமீற‌ல்க‌ள் ஒன்றா இர‌ண்டா எல்லாம் சொல்ல‌வே இந்த‌ ஒரு ப‌திவு போதுமா?

பிர‌ம்ம‌னோ நான்கு முக‌ம் கொண்ட‌வ‌ர் இவ‌ருக்கும் ம‌னைவிமார் இருவ‌ருரோ மூவ‌ரோ க‌தைப்ப‌டி. சர‌ஸ்வ‌தி,சாவித்திரி,காய‌த்ரி. ஆனா கும்பிட‌ற‌ங்க‌வ‌ங்க‌ எல்லோருக்கும் போய் எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அது மெய்ப்பொருள் என்று வ‌ர‌த்தை வாரி வ‌ழ‌ங்கி பின் அடுத்த‌ க‌ட‌வுள‌ரிட‌ம் போய் நிற்ப‌து இவ‌ர் வழ‌க்க‌ம்.

ச‌ரி ச‌ரி அடிக்க‌ வ‌ராதீங்க‌ எல்லாத்தும் கார‌ண‌ம் இருக்கு. க‌ட‌வுள‌ர் யாரும் த‌வ‌றான‌ உதார‌ண‌ங்க‌ள் இல்லை அவ‌ர்க‌ள் யாவ‌ரும் ஐடிய‌ல் தான்.

ஏதோ என‌க்கு தெரிந்த‌ விள‌க்கங்க‌ளை த‌ர‌ முய‌ல்கின்றேன். மாங்க‌னிக்காக‌ குடும்ப‌ம் பிரிந்த‌ கும‌ர‌ன் இளைஞ‌ர்க‌ள் த‌ன் பெற்றோரை சார்ந்தில்லாம‌ல் தானே த‌ன் காலில் நிற்க‌வேண்டும் என்ற‌ க‌ருத்தை எடுத்துக்காட்டுகின்றார். க‌ற்பு க‌ள‌வு ம‌ண‌ம் மேட்ட‌ருக்கு அப்புற‌ம் வ‌ருவோம்.

இறைய‌னார் ஈச‌ன் முக்கால‌மும் உண‌ர்ந்த‌வ‌ர் தாட்சாய‌ணிக்கு த‌ந்தையால் அவ‌மான‌ம் நேரும் என்று தெரிந்தே த‌டுத்தார், தானென்ற ஆண‌வ‌த்தால் அல்ல‌. இவ‌ர் கோப‌த்திற்கு பின்னால் தான் உண‌ர்த்த‌ப்ப‌ட்ட‌து ச‌க்தியும் சிவ‌னும் ஒன்றென்று. அப்ப‌டிச் சுட்டெரித்த‌ கார‌ண‌த்தால் தான் த‌ன்னில் பாதியாக‌ ச‌க்தியை கொண்டு அர்த்த‌நாரீஸ்வ‌ர‌ர் ஆனார். நக்கீர‌னுக்கு நெற்றிக்க‌ண் காட்டி த‌மிழுக்குகாக‌ அவ‌ர் த‌ன்னையும் த‌ருவார், க‌ட‌வுள் என்றாலும் த‌மிழை காக்க‌ குர‌ல் த‌ருவார் என்ற‌ பெருமையை தான் பெற்று தந்தார் அந்த‌ இறைய‌னார். இவ‌ரின் கொஞ்சு த‌மிழில் வ‌ந்த‌த‌ல்ல‌வா "கொங்குதேர்" என்ற‌ குறுந்தொகைப் பாட‌ல். இர‌ண்டு ம‌னைவி விச‌ய‌த்திற்கு அப்புற‌ம் வ‌ருவோம்.

விஷ்ணு க‌ண‌க்கிலும் ம‌னைவிமார்க‌ள் பிர‌ச்ச‌னையை பொதுவாக‌ எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு அவ‌தார‌த்திலும் ந‌ட‌ந்த‌ முறைமீற‌ல் எல்லாமே அத‌ர்ம‌த்தை அத‌ன் வழியே சென்று அட‌க்க‌ த‌ர்ம‌த்தை நிலைநாட்ட‌வே தான்.

பிர‌ம்மாவின் இள‌கிய‌ ம‌ன‌துக்கும், "உல‌கில் எங்கெல்லாம் த‌ர்ம‌ம் அழிந்து அத‌ர்ம‌ம் த‌லை தூக்குகின்ற‌தோ அங்கெல்லாம் நான் வ‌ருவேன்" என்ப‌த‌ன் ஊடுகோலே கார‌ண‌ம். "க‌ட‌வுள் ந‌ல்ல‌வ‌ர்க‌ளை சோதிப்பான் கைவிட‌மாட்டான் கேட்ட‌வ‌ர்க‌ளுக்கு வாரி வாரி வ‌ழ‌ங்கிவிட்டு, திருந்த‌ வாய்ப்ப‌ளித்து பின் திருந்தாவிட்டால் த‌ண்ட‌னை த‌ர‌வே" இவர் வ‌ர‌ம் த‌ருவார். இவ‌ர் ப‌டைக்கும் க‌ட‌வுள் ஆயிற்றே. காக்கும் ம‌ற்றும் அழிக்கும் க‌ட‌வுள‌ர் த‌ம்த‌ம் வேலையை செவ்வ‌னே செய்வ‌ர்.

ச‌ரி இப்போது க‌ட‌வுள‌ர்க்கு ப‌ல‌ ம‌னைவிக‌ள் இருப்ப‌த‌ற்கு என்ன‌ நியாய‌ம் க‌ற்பிக்க‌? அத‌ற்கும் த‌ர்ம‌ம் இருக்கின்ற‌து.

ஒரு நாட்டை ஆள்ப‌வ‌ர் எல்லா துறையையும் த‌ன் கையில் வைத்துக் கொள்ள‌ இய‌லாது. அந்த‌ அந்த‌ துறைக்கு ஒரு எக்ஸ்பேர்ட்ஸ் வேண்டும். அதைப்போல்தான் ச‌ர‌ஸ்வ‌தி க‌ல்விக்கும், ம‌ந்திர‌ ச‌க்திக்கு காய்திரியும், அந்த‌ ம‌ந்திர‌ ச‌க்திக்குள் இருக்கும் ஜோதி வ‌டிவ‌ம் சாவித்ரி என்றும் வைத்த‌ன‌ர் முன்னோர். அப்ப‌டியாக‌ புத்தி ச‌ம்பந்தமான‌ ஆளுமைக்கு ச‌ர‌ஸ்வ‌தி, காய‌த்ரி, சாவித்ரி இவ‌ர்க‌ளின் க‌ண‌வ‌ர் பிர‌ம்ம‌ தேவ‌ன். ஆக ச‌ர‌ஸ்வ‌தி, சாவித்ரி, காய‌த்ரி அனைவ‌ரும் புத்தி என்ற‌ ஒரு விச‌ய‌த்திற்குள் அட‌க்க‌ம் அந்த‌ வகையில் பார்த்தால் பிர‌ம்ம‌னுக்கு ஒரே ஒரு ம‌னைவியின் ப‌ல‌ ப‌ரிமாண‌ங்க‌ளே காய‌த்ரி ம‌ற்றும் சாவித்ரி.

விஷ்ணுக்கு ப‌ல‌ ம‌னைவிய‌ர் இருப்ப‌து போல‌ தோன்றினாலும் அவ‌ர் அனைவ‌ரும் ம‌ஹால‌ஷ்மி, பூமாதேவி என்ற‌ இருவ‌ருக்குள் அட‌ங்கி விடுவ‌ர். மஹால‌ஷ்மி செல்வ‌த்திற்கு அதிப‌தி. பூமாதேவி நில‌ம் நீர் காற்று என்ற‌ ம‌ற்றை செல்வ‌ங்க‌ளுக்கு அதிப‌தி. ஆக இவ‌ர்க‌ள் எல்லாவித‌ செல்வ‌ங்க‌ளுக்கும் கொடுக்க‌ப்ப‌ட்ட‌ த‌னித்த‌னி வ‌டிவ‌ங்க‌ளே ஆயினும் ஒரே வ‌டிவ‌மே. ஆகையால் விஷ்ணுக்கும் ம‌னைவி ஒருவ‌ளே. ஏக‌ ப‌த்தினி விர‌த‌ன் ராம‌ன் ம‌ட்டும‌ல்ல எல்லா விஷ்ணு ரூப‌மும் அப்ப‌டியே.

சிவ‌ச‌க்தி வீர‌த்திற்கும் உட‌லில் அசையும் அனைத்து ச‌க்திக்கும் அதிப‌தி. க‌ங்கை உயிர்வாழ தேவையான‌ த‌ண்ணீர். த‌ண்ணீரால் ஆன‌து தானே உட‌ம்பும். உட‌ல் முழுதும் ஓடும் ர‌த்த‌மும் த‌ண்ணீர் க‌ல‌வை தாமே. ஆகையால் ச‌க்தியும் க‌ங்கையும் இருவ‌ர் போல் தெரியும் ஒருவ‌ர்.

மேலும் க‌ட‌வுள‌ர் க‌ண‌வ‌ன் ம‌னைவி மாம‌ன் ம‌ச்சான் என்று ம‌னித ச‌முக‌த்தில் இருக்கும் உறவுக‌ளோடான‌ ஒப்பீட்டிற்கு அப்பாற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள். க‌ட‌வுள‌ர் த‌ர்ம‌ம் வேறு. ந‌ம் ந‌டைமுறையோடு பார்த்து அறிவிய‌ல் ஆராய்ச்சி எல்லாம் செய்யின் வீண் குழ‌ப்பமும் தேவைய‌ற்ற‌ சிந்த‌னையுமே மிஞ்சும்.மீண்டும் சொல்கிறேன் கடவுள் என்கிற‌ நித‌ர்ச‌ன‌ உருவ‌க‌ங்கள் மூலமாக‌த்தான் நாம் நம் குழந்தைகளுக்கு நல்வழியை போதித்துக் கொண்டு இருக்கின்றோம். இவை க‌ட‌வுள‌ர் த‌ர்ம‌ம் என்று சொல்லி ந‌ம்பிக்கை வ‌ள‌ர்க்க‌ வேண்டும். மேலே சொன்ன‌து போல‌ புத்திப்பூர்வ‌மாக‌ என்று நினைத்து விப‌ரீத‌மாக‌ யோசித்தால் கிடைக்கும் வெளிச்ச‌ம் பய‌ம் தான் த‌ரும். பின்வ‌ரும் க‌விதை போல‌.

வெளிச்சம்
பயத்தை ஏற்படுத்த
தொடங்கும் வரை
பாதைகள் எளிமையாகவே இருந்தன
இருளின் மீதான அனுமானங்களும்

-- ல‌ஷ்ம‌ண்.

8 comments:

Vidhoosh said...

அன்பின் தோழி,
நீங்கள் கூறியது போல சிவனுக்கு இரண்டு மனைவிகள் கிடையாது. ஒரே மனைவிதான். சிவன் தலையில் வைத்துக் கொண்டு ஆடிய மனைவி கங்கை என்று பெரும்பாலானோர் குறிப்பிடுவது, தவறானது. இங்கே பாருங்கள், நான் ஏற்கனவே எழுதியது. (http://vidhoosh.blogspot.com/2009/06/blog-post_19.html).

அதே போல, அதிகாரத்தில் இருக்கும் ஆண்கள்/பெண்கள் தனக்கு இணையான, அதாவது, அறிவாற்றலில், அதிகாரத்தில், இரசனையில் இருக்கும் அடுத்தவர் (ஆண்/பெண்) மீது காதல் வயப்படுவது இன்றும் நிகழ்கின்ற ஒன்று. இது சரி என்று கூறவில்லை. ஆனால் அழகான (தோற்றம், பண்பு, திறம், அறிவு) ஒன்றை தனதாக்கி கொள்ளவேண்டும் என்ற ஆசை இன்றும் நமக்கு இருக்கிறது. அதிகாரத்தில் இருக்கும் ஒருவருக்கு அது சுலபத்தில் கிடைக்கிறது. அவ்வளவுதான்.

Vidhoosh said...

தெய்வ நிலை அடைந்து வணங்கப் பெற்று வரும் விஷ்ணு, சிவன் போன்ற பரம யோகிகள், இராவணனைப் போல பிறன் மனை நோக்காமல் இருந்து, தன்னை அந்தப் பெண் ஏற்றால் மட்டும், மணந்து கொண்டு இருக்கிறார்கள். இராமருக்கு பிறகும், பகவத் கீதை போன்ற காவியங்கள் வந்த பிறகே, சமூகம் பண்பட்டு, ஒருவனுக்கு ஒருத்தி என்ற பெரும்பான்மைச் சீரமைப்பு நிகழ்ந்தது.

கடவுள்களை ஐடியல் இல்லை, முறை மீறியவர்கள் என்று மட்டும் கூறாதீர்கள். ஏன் என்றால், தான் செய்யும் தவறுகளுக்கு சப்பை கட்டு கட்ட, காரணம் தேடும் "பிறன் மனை நோக்கிகள்" (ஆண் மற்றும் பெண் இருவரும்தான்), ஒருவேளை உங்கள் வாசகத்தையும் பயன் படுத்தலாம்.

Vidhoosh said...

ஆனால், இன்றும் நட்புக்கும் காதலுக்கும் நுண்ணிய உணர்விழையின் திரைதான் உள்ளது. மனத்தால் பண்பட்டுக் கொண்டே வரும் நாம் (நமது மற்றும் இன்றைய தலைமுறை) இந்தத் திரையை நன்றாகவே கையாளத் தெரிந்து வைத்து கொண்டு இருக்கிறோம்.

அதே போல, பெண்களாக உருவகப் படுத்தியது, இன்றும் விளம்பரங்களில் ஆண்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு கூட ஒரு அழகான பெண்ணை விளம்பரமாக்குவது போல, நம் முன்னோர்களும் சில யோக நிலைகளுக்கு அப்படி பெயர் இட்டு இருக்கிறார்கள். ஏன்? சிவன் பிள்ளையார் மற்றும் விஷ்ணுவை, உருவகப் படுத்தியது கூட யோகநிலைகளையே குறிக்கிறது. இவை பற்றி நான் படித்து அறிந்தவை அனைத்தையும் இங்கு பதிவிட வேண்டும், பகிர வேண்டும் என்றே ஆசைப் படுகிறேன். ஆனால், பதிவுக்காக நான் ஒதுக்கியுள்ள காலை ஒன்றரை மணி நேரம்தான். :(

மற்றபடி, உங்கள் கருத்துக்களை பாராட்டுகிறேன். நீண்ட பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.
அன்பின்
வித்யா

உயிரோடை said...

வாங்க‌ வித்யா நீண்ட‌ க‌ருத்துக‌ளுக்கு ந‌ன்றி. ஆனா க‌ட‌வுள‌ர் யாருமே த‌வ‌றான‌ உதார‌ண‌ங்க‌ள் இல்லை முறை மீறிய‌வ‌ர்க‌ள் இல்லை என்று தானே சொல்லி இருக்கேன் வித்யா.

குடந்தை அன்புமணி said...

கடவுளை வணங்குவதோடு சரி. இப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்வதில்லை. பகிர்வுக்கு நன்றி.

அகநாழிகை said...

லாவண்யா,
பதிவை இப்போதுதான் வாசித்தேன்.
:(

முதல் விஷயம் இன்றைய நிலையில் கடவுளர்களை உதாரண புருஷர்களாக யார் எடுத்துக் கொள்கிறார்கள். அப்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. கடவுள் என்பது ஒரு நம்பிக்கை மட்டுமே. அன்பு, பாசம், பக்தி எல்லாமே பெரும்பான்மையினரால் ஆதாயத்தின் பொருட்டே மேற்கொள்ளப்படுகிறது.
அதேபோல கடவுளர்கள் மாங்கனிக்காக பிரிந்தது இன்ன பிற எல்லாம் எந்தச் சூழலில் எதற்காகப் புனையப்பட்டது என்ற ஆதாரம் இல்லை. குறிப்பிட்ட சூழல் குறித்த பரிச்சயம் இல்லாவிட்டால் நிச்சயம் பொருள் விளங்கிக் கொள்வது கடினம். அரிசியே பார்த்தறியாதவனிடம் அரிசியின் சுவை பற்றிக் கூறுவது போல. விளங்காமலே ரசிக்க வேண்டியதுதான்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

உயிரோடை said...

வாங்க‌ அன்பும‌ணி க‌ருத்துக்கு மிக்க‌ ந‌ன்றி.

வாங்க‌ அக‌நாழிகை. மாங்க‌னிக்கு குடும்ப‌த்தை பிரித்த‌வ‌ன் என்ற விச‌ய‌த்துக்கும் ஆதார‌ம் இல்லை தான். ஆனால் திருவிளையாட‌ல் என்ற‌ திரைப்ப‌ட‌த்தில் வ‌ருவ‌தை வைத்து சொல்லி இருந்தேன் அக‌நாழிகை. சொல்ல‌ வ‌ந்த‌ க‌ருத்து க‌ட‌வுளை ந‌ம்புங்க‌ள் அவ்வ‌ள‌வே.

இராஜராஜேஸ்வரி said...

"க‌ட‌வுள் ந‌ல்ல‌வ‌ர்க‌ளை சோதிப்பான் கைவிட‌மாட்டான் கேட்ட‌வ‌ர்க‌ளுக்கு வாரி வாரி வ‌ழ‌ங்கிவிட்டு, திருந்த‌ வாய்ப்ப‌ளித்து பின் திருந்தாவிட்டால் த‌ண்ட‌னை த‌ர‌வே" இவர் வ‌ர‌ம் த‌ருவார்.

நுணுக்கமான விவரிப்பு..