சங்கப்பாடலில் இருக்கும் சிக்கலே அதை நாம் உள்வாங்கி கொள்ளும் விதமே. இந்த சிக்கலுக்கு பெரும் சவாலாக இருக்கின்றது இதன் மொழி. மொழி நமக்கு புரியாதவரை இப்பாடல்களுக்கு எழுதப்பட்டிக்கும் உரையையே நாம் பெரிதும் நம்ப வேண்டி இருக்கின்றது. உரை எழுதுவரின் புரிதலும், அவர் கற்பனைக்கு எட்டும் விசயங்கள் சங்கபாடல் களத்தில் எல்லையை வகுக்கின்றது. எனக்கும் அப்படி சில சங்கப்பாடல்கள் சிக்கலை வகுத்தன. அப்பாடலின் வரும் சில வார்த்தைக்கு வேறு அர்த்தம் எடுத்தால் முழுப்பாடலின் பொருளே மாறிவிடுகின்றது. அப்படி பொருள் மாறும் கூறப்பட்ட உணர்வு நிலையும் மாறிவிடுகின்றது. அப்படிப்பட்ட உணர்வு நிலையையும் முடிந்த அளவில் பொருத்தி சில கவிதைகளை எடுத்துக் காட்டியுள்ளேன்.
கைந்நிலை (பாடல் 2) - உணர்வு நிலை தனிமையில் உடல் வாதை
வெந்த புனத்துக்கு வாசம் உடைத்தாகச்
சந்தனம் ஏந்தி, அருவி கொணர்ந்திடூஉம்
வஞ்ச மலை நாடன் வாரான்கொல்? - தோழி! - என்
நெஞ்சம் நடுங்கி வரும்
பகுதி ஒன்றில் சொல்லப்பட்ட கைந்நிலை பாடலின் வரும் வெந்தபுனம் என்ற வார்த்தையை வெந்த + புனம் என்று பிரிந்து பார்த்தால் அப்பாடலின் பொருளே முற்றாக மாற வாய்ப்பிருக்கின்றது வெந்த என்பது முதிர்ந்த அல்லது அடர்ந்த என்ற பொருளாக நாம் உட்கொள்ளவும் இயலும். அப்படிப்பட்ட பொருள் எடுக்கும் போது இந்தப்பாடலின் முழு பொருளும் உணர்வு நிலையும் மாறிவிடுகின்றது.
அடர்ந்து முதிர்ந்த காட்டில் மேலும் சுகந்தமாக்க சந்தன மணத்தை சுமந்து வருக்கின்றது அருவி. அப்படிப்பட்ட அடர்ந்த காட்டினை சார்ந்தவர் நம் தலைவன், அவர் வரும் வழியில் காட்டின் அடர்ந்த தன்மையாலும், அருவிக்கு நீர் வரும் மிருகங்களாலும் பல ஆபத்துகள் இருக்கலாம் அதை நினைத்தும் அதனால் அவன் வாராது போய் விடுவோனே என்று எனக்கு நடுக்கமாக இருக்கின்றது என்று தோழியிடம் கூறுகின்றாள்.
இப்படி தலைவி புலம்ப காரணம் தலைவன் மேல் கொண்ட காதலும், காதலால் தனிமையுற்ற தன் உடல் படுத்தும் பாடேயன்றி வேறென்ன காரணமாக இருக்க இயலும்.
இப்படிப்பட்ட பிரிந்த அல்லது இழந்த காதலை பற்றி அழகான பல படிமங்களை சூரியன் தனித்தலையும் பகல் கவிதை தொகுப்பில் பல இடங்களில் தொகுத்து கொடுத்திருக்கின்றார் தமிழ் நதி. ஒரு நாளும் இரண்டு அறைகளும் என்ற கவிதையில் (கவிதையின் கரு வேறு ஆனால் இந்த சங்கப்பாடலுக்கு உகந்த வரிகள் என்பதால் இந்த வரிகளை இங்கே குறிப்பிடுகின்றேன்)
“நெடுநாளாய்த் தீண்டப்படாத மார்புகள்
கண்ணீர்த் துளிகளெனத் ததும்புகின்றன”
பிரிந்த தலைவனை நினைத்து புலம்பும் தலைவி தன் உடல் வாதையை இதை விட அளவாக அழகாக சொல்ல இயலுமா என்று வியக்கிறேன். இந்த தனிமையும் தவிப்பும் இன்னும் பல இடங்களில் பதியப்பட்டிருக்கின்றது. அதே தொகுதியில் வண்ணங்களாலான நீர்க்குமிழி என்ற கவிதையில்
"பூட்டப்பட்ட அறையினுள்
விலங்கென அலைகிறது வேட்கை"
தொடரும்...
குறிப்பு: இந்த தொடர் கட்டுரையின் சில பகுதிகள் அகநாழிகை மார்ச் இதழில் கைந்நிலை சில பாடல்களும் கனிமொழியின் அகத்திணையும் என்ற தலைப்பில் கட்டுரையாக வெளி வந்திருக்கின்றது. சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் என்ற இந்த ஆக்கம் அக்கட்டுரையின் நீட்சியே. வெளியிட்ட அகநாழிகைக்கு என் சிரம் தாழ்ந்த வந்தனங்களும் நன்றியும்
உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - பகுதி I
6 comments:
:) வாழ்த்துக்கள்.
//வெளியிட்ட அகநாழிகைக்கு என் சிரம் தாழ்ந்த வந்தனங்களும் நன்றியும்//
:)
வாழ்த்துகள் ... தொடருங்கள் ...
nalla katturai... arumaiyana pakirvu... vaazhththukkkal... thodarungal.
அருமையான கட்டுரை... வாழ்த்துகள் ;)
வாங்க வித்யா. நன்றி.
வாங்க அகநாழிகை. நன்றி :)
வாங்க நந்தா. நன்றி.
வாங்க சே.குமார். நன்றி.
வாங்க ஆர்விசி. நன்றி.
Post a Comment