Thursday, September 24, 2009

உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி I


ச‌ங்க‌பாட‌ல்க‌ளில் ஏனோ பெரும் ஈர்ப்பென‌க்கு. ஏன் என்று சொல்ல‌வியலாத‌ ஆவ‌ல். அவ்வ‌ப்போது சில‌ க‌விதைக‌ளை வாசிப்ப‌தும் அது சொல்ல‌ வ‌ரும் ஆழ்க‌ருத்துக்க‌ளை உள்வாங்கி அசைபோடுவ‌தும் பின் அப்ப‌டியே விட்டு விடுவ‌துமாக‌ ந‌க‌ர்ந்த‌ப‌டி இருந்த‌து என் ப‌ய‌ண‌ம்.

ச‌மீப‌ கால‌மாக‌ சில‌ பெண்க‌விஞ‌ர்க‌ளின் தொகுப்பை தொட‌ர்ந்து வாசிக்கும் போது ஆழ்ம‌ன‌தில் புதைந்து கிட‌க்கும் சில‌ ச‌ங்க‌ப்பாட‌ல்க‌ளில் சொல்ல‌ப‌டும் ஒரு சில‌ விச‌ய‌ங்க‌ள் அப்ப‌டியே ஒரு மென் அலை போல‌ க‌ண் முன் வ‌ந்து போகும்.

பசி, தூக்கம், காமம் என்ற அடிப்படை உணர்வு நிலை சங்ககாலம் முதல் இந்த காலம் வரை தொடர்வதே. உணர்வுகள் எதுவும் புதிதில்லை எல்லாமே எப்போதும் உணரப்பட்டதாகவே இருக்கின்றன். ஆனால் ஒவ்வொருவரும் அதை வெளிப்படுத்தும் விதமே வேறாகும்.

ப‌தினென்கீழ்க‌ண‌க்கு நூல்களில் கைந்நிலை, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது மேலும் குறுந்தொகை இவற்றில் இருந்து கவர்ந்த சில பாடல்களில் உணர்வு நிலை அப்படியே ஒத்தும் அல்லது அதே உணர்வை வேறு வடிவத்திலும் படம் பிடித்திருக்கும் தற்கால பெண்கவிஞர்களில் சில கவிதைகளையும் தொகுத்து வழங்க நினைத்திருந்தேன்.

இதை ஒரே க‌ட்டுரையாக்காம‌ல் ஒரு தொட‌ராக‌ வ‌ழ‌ங்க‌ நினைத்திருக்கிறேன்.
என்னை வாசிக்கும் அன்ப‌ர்க‌ள் தொட‌ர்ந்து என‌க்கு அளிக்கும் ஊக்க‌த்திற்கு என்னுடைய‌ ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றிக‌ள். அவ‌ர்க‌ள் இதையும் வாசிப்பார்க‌ள் என்ற‌ ந‌ம்பிக்கையோடு...

கைந்நிலை (பாட‌ல் 2) - உண‌ர்வுநிலை ந‌ம்பிக்கையின்மை

வெந்த புனத்துக்கு வாசம் உடைத்தாகச்
சந்தனம் ஏந்தி, அருவி கொணர்ந்திடூஉம்
வஞ்ச மலை நாடன் வாரான்கொல்? - தோழி! - என்
நெஞ்சம் நடுங்கி வரும்

வெந்த‌ காட்டிற்கு அத‌ன் வாச‌ம் மாறி சுக‌ந்த‌ம் உண்டாகும் வண்ணம் ச‌ந்த‌ன‌ம் ஏந்தி வ‌ரும் அருவியை கொண்ட‌ ம‌லைக‌ளை உடைய‌ த‌லைவ‌ன் வ‌ருவானோ அல்ல‌து ராம‌ல் போவானோ என்று என் நெஞ்ச‌ம் ந‌டுக்குகின்ற‌து என் தோழி என்ப‌தே இந்த‌ பாடலின் பொருள்.

இந்த‌ வெந்த‌ காடு என்ப‌து ஒரு ப‌டிம‌ம். த‌லைவ‌ன் இன்னும் தலைவியை ம‌ண‌க்க‌வில்லை அவ‌ளோடு காத‌ல் கொண்டு அல்லது அவ‌ளை காத‌ல் கொள்ள‌ செய்து பிரிந்து போய் விட்டான் என்பதையும் அவ‌ன் பிரிந்த‌ துய‌ரையே அப்ப‌டி சொல்லி இருக்கின்றாள் என்ப‌தே இந்த‌ பாட‌லின் சிற‌ப்பு. வெந்த‌ காட்டிற்கு சந்த‌ன‌மிட்டு அதன் நாற்ற‌த்தை போக்க‌ இய‌லுமா என்ன‌? காடு வெந்து கிடந்தாலென்ன‌ த‌ன் பாட்டுக்கு ச‌ந்த‌ன‌ ம‌ண‌ம் ப‌ர‌ப்பி ஓடிக் கொண்டிருக்கின்ற‌து அருவி. அது வாச‌ம் ப‌ர‌ப்புவதை போன்ற‌ ஒரு மாயை ந‌ம்பி இருப்ப‌தை போல‌வே தானும் த‌லைவ‌ன் வருவானோ என்று ந‌டுக்க‌முற்று இருப்ப‌தாக‌ குறிப்பாக‌ உணர்த்துகின்றாள்.

அவ‌ள் ப‌ச‌லையை ம‌றைத்து, திரும‌ண‌ம் த‌விர்த்து த‌லைவ‌னும் வருவானோ மாட்டானோ என்று ந‌ம்பிக்கை த‌ள‌ர்ந்து ந‌டுக்க‌முறுவ‌தாக‌ கூறும் இவ‌ள் ந‌ம்பிக்கையின்மையை ஒத்து இருக்கின்ற‌து கனிமொழியின் சிக‌ர‌ங்க‌ளில் உறைகின்ற‌து கால‌ம் என்ற தொகுதியில் இருக்கும் வில‌க‌ல் என்ற‌ க‌விதை. க‌விதையின் க‌ரு முற்றாக‌ வேறு ஆனால் இர‌ண்டுக்கும் ஆதார‌ம் இழையோடும் ந‌ம்பிக்கையின்மை

எப்ப‌டிச் சொல்வாய் என்று ஆர‌ம்பிக்கும் இக்க‌விதையில் இவ‌ரின் பிரிய‌த்துக்குரிய‌ ஒருவ‌ரை சார்ந்த விச‌ய‌மொன்று இவ‌ருக்கு தெரிந்து விட்ட‌து அந்த‌ விச‌ய‌த்தை அவ‌ர் கூறுவாரோ அல்ல‌து சொல்லாம‌லே விடுவாரோ என்ற‌ ந‌டுக்க‌ம் க‌விதை முழுவ‌தும் பரவி இருக்கின்ற‌து. அந்த‌ பிரிய‌மான‌ ந‌ப‌ருக்கு அது ச‌ந்தோச‌ம் தரும் விச‌ய‌ம் தான் இனிப்போடு வ‌ருவாயோ என்று கேள்வியூடே இதை ந‌ம‌க்கு உண‌ர்த்துகின்றார் க‌னிமொழி. ஆனால் அந்த‌ விசயத்தை இவ‌ரிட‌ம் சொல்ல‌ த‌யங்கும் அல்ல்து சொல்லி விட்டு த‌ன்னுடைய‌ உற‌வை முறித்துக் கொள்வாரோ என்ற‌ ப‌ய‌த்தை என் க‌ண்க‌ளை த‌விர்த்து கூறுவாயோ என்று கேட்டு ந‌ம் ம‌ன‌த்தையும் ஆழ‌ பாதிக்கின்றார். இவ‌ருக்கு மிக‌ நெருக்க‌மான‌வ‌ர் என்ப‌தையும் விய‌ர்வைத் துளிக‌ள் காய‌த்துவ‌ங்கும் கிற‌ங்கிய‌ த‌ருண‌த்திலா என்று கேட்டு விள‌க்குகின்றர். இவ்வ‌ள‌வு நெருக்கம் ஆயினும் ஏதோ கார‌ணத்தால் சொல்லாம‌ல் கூட‌ பிரிந்து விடுவாயோ என்ற‌ வ‌லியை அழுந்த‌ கூறி இருக்கின்றார்.

எப்போது சொல்வாய்
என்று காத்திருக்கின்றேன்
ந‌ல்லெண்ண‌ங்க‌ளையும்
புன்ன‌கையையும்
ஒரு நேர்க்கோட்டில் குவித்து
உன் க‌ண்க‌ளைச் ச‌ந்தித்து
உறுதியான‌ கைகுலுக்க‌லுட‌ன்
வாழ்த்துச் சொல்ல‌...

வழியினுடேயும் உன்னை வாழ்த்த‌வே இருக்கும் என் அன்பை புரிந்து கொள் என்று கூறி த‌விக்கும் இந்த‌ க‌விஞ‌ரின் ம‌ன‌த்தில் இருக்கும் ந‌ம்பிக்கையின்மை ஆறுத‌ல் நாடி த‌விக்கும் இவ‌ர‌து க‌வி வ‌ரிக‌ள் ம‌ன‌திலிருந்து நீங்க‌ நீண்ட‌ நாட்க‌ள் ஆன‌து.

தொட‌ரும்....

9 comments:

Sugirtha said...

லாவண்யா,

ஒரு நல்ல முயற்சி எடுத்திருக்கீங்க! சொல்லவந்ததை சுவாரஸ்யமாகவும் சொல்லி இருக்கீங்க! சங்க இலக்கியங்கள் தெரியாத அல்லாது புரியாத எனக்கு அதை அறிந்து கொள்ள உங்கள் பதிவு நல்லதொரு வாய்ப்பு.

//பசி, தூக்கம், காமம் என்ற அடிப்படை உணர்வு நிலை சங்ககாலம் முதல் இந்த காலம் வரை தொடர்வதே. உணர்வுகள் எதுவும் புதிதில்லை எல்லாமே எப்போதும் உணரப்பட்டதாகவே இருக்கின்றன். ஆனால் ஒவ்வொருவரும் அதை வெளிப்படுத்தும் விதமே வேறாகும்.//

உணர்வு ஒன்றுதான்,மொழிதான் வேறு இல்லையா? அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

தொடருங்கள்...

-சுகி-

அகநாழிகை said...

தொடர வாழ்த்துகள்.

Gowripriya said...

புது முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்..

அம்பிகா said...

அருமையான பகிர்வு.
தொடருங்கள். வாழ்த்துக்கள்.

"உழவன்" "Uzhavan" said...

நல்ல ஆரம்பம். தொடருங்கள்.. வாழ்த்துகள்

காமராஜ் said...

இது போலொரு நெடுந் தொலைவு திரும்பும் முயற்சியைக் கண்டால் எனக்கு மலைப்பு வரும்.எடுத்துக் கொண்டுவந்து தந்த காரியம் மதிப்பானது.வாழ்த்துக்கள் லாவண்யா.

ச.முத்துவேல் said...

பொதுவா, கவிதையை அலசி எடுக்கிறதுல உங்களுக்கு நல்ல புலமை இருக்கு.சங்கக் கவிதைகள் பற்றி எழுதறீங்கன்னதும் ஆர்வம் அதிகமாயிருக்கு.
சங்கக் கவிதைகள் படிக்க ஆர்வமுள்ள எனக்கு பயனுள்ள தொடர். தொடருங்கள்.

உயிரோடை said...

வாங்க சுகி. கண்டிப்பா தொடர்ந்து எழுதுவேன், படிங்க. நன்றி.

வாங்க அகநாழிகை. தொடரை அகநாழிகையில் வெளியிட்டதுக்கும் எனது நன்றிகள்.

வாங்க கௌரி. தொடர்ந்து வாங்க. கருத்துக்கு நன்றி.

வாங்க அம்பிகா. நல்வரவு. கருத்துக்கு நன்றி.

வாங்க உழவன். கருத்துக்கு நன்றி.

வாங்க காமராஜ். கருத்துக்கு நன்றி.

வாங்க முத்துவேல். கருத்துக்கு நன்றி.

ரௌத்ரன் said...

இதுபோலவோ..இதையேவோ அகநாழிகையிலோ எங்ஙோ வாசிச்சுருக்கேன்...மறந்துட்டேன்.

அழகா சொல்றீங்க..நன்றி!