Thursday, September 24, 2009

உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி VI


குறுந்தொகை (பாடல் 6) உண‌ர்வுநிலை வ‌ருத்த‌மும் கூற‌ல் இயலாமையும் ஏக்க‌மும் எதிர்நோக்க‌லும்

கழனி மாஅத்து விளைந்துகு தீங்கனி
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்மில் பெருமொழி கூறித் தம்மில்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும்தன் புதல்வன் தாய்க்கே


இந்தப் பாடல் ஒரு பரத்தை கூறுவது போல இருக்கின்றது. என் தலைவன் மகனின் தாய் அவனை வீட்டில் கண்ணாடி பிம்பம் எப்படி தன் முன் நின்பவரின் ஆட்டத்தை அப்படியே பிரதிபலிக்குமோ அப்படியே ஆட்டி வைப்பவளாம். என் தலைவன் அப்படிப்பட்ட இடத்திலிருந்து அவன் தானே வந்தான். மாமரத்தில் முதிர்ந்து உதிர்ந்த கனியானது வயலில் இருக்கும் வாளை மீன்கள் கவ்வி செல்வது போல தான் இதுவும் இதிலென்ன தவறு என்கிறாள்.


இந்த பாடலில் ஆடிப்பாவை என்பது தான் சிறப்பான திருப்புமுனையான வார்த்தை. ஆடிப்பாவை என்பது நிலைக்கண்ணாடியை படிமமாக கொண்ட விசயம். நிலைக்கண்ணாடி என்பது நம்மை மறைக்காமல் பிரதிபலிக்கும் ஒன்று. நிறைகளை குறைகளையும் சேர்த்தே ந‌ம்மை காட்டும். அப்படிப்பட்ட நிலைக்கண்ணாடியை தனது கவிதையின் அருமையாதொரு படிமமாக உபயோகித்து இருக்கின்றார். ச‌ல்மாவின் பச்சை தேவதை கவிதைத் தொகுதியில் நீக்கமுடியாத வரிகள் என்ற கவிதையில்

நீ அருகிருந்த வேளை
நிலைக்கண்ணாடி பிம்பமென
எப்படியோ வந்துவிட்டது
சில வருத்தங்களும் வலிகளும்

இவ்வ‌ரிக‌ளில் த‌தும்பும் வ‌ரிக‌ளின் வேத‌னை உற்று நோக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌து. மிகுந்த‌ துய‌ர‌மும் வேத‌னையும் வெளிக்காட்டிக்க‌வியலாத‌ அல்ல‌து காட்டிக் கொடுக்க‌ விரும்பாத‌ ஒரு உயிரின் ம‌ருக‌லும் இதில் த‌தும்பி வ‌ழிகின்ற‌ன‌. என்னதான் நான்கு சுவருக்குள் ந‌ட‌க்கும் அதிகார‌ங்க‌ளும் அடுக்கு ஆளுமுறைக‌ளுமாயினும் பெண்ணின் வருத்தங்களையும் வலிகளையும் அவ்வீட்டு நிலைக்கண்ணாடி அறியுமன்றோ?

இந்த பாடலில் மாற்று பொருளாக ஆடிப்பாவையை ஆடும் விழிப் பாவைகள் என்றும் கொள்ளலாம். அப்படி பொருள் கொள்ளும் போது இந்த பாடல் தலைவியின் கோணத்தில் சொல்லப்பட்டதாக பொருள் கொள்ளலாம். முதிர்ந்த மாங்கனியை கழனியில் வாளை மீன்கள் கவர்வதை போல பரத்தை உன்னை கவர்ந்து சென்று விட்டால் ஆயினும் என்றேனும் நீ வாருவாய் என உன் புதல்வனின் தாயாக விழிப்பாவைகள் இடையறாது ஆடிய வண்ணம் காத்திருக்கின்றேன்.

தேன்மொழி தாஸ் ஒளியறியாக் காட்டுக்குள் என்ற தன் தொகுப்பில் ஒரு கவிதையில்

எப்போதாவது உனது வருகை
கண்களுக்குள் தலைகீழாய் விரியும் காளானாய்க்
கருவிழி அசைய
கதவு திறப்பேன்.

க‌ருவிழி அசைய‌ என்ப‌தை ஆடிப்பாவை என்ப‌தோடு ஒப்பிட்டு, த‌லைம‌க‌ன் வ‌ருகைக்கு ஏங்கி காத்திருக்கும் பெண் ம‌யிலென‌ இந்த‌ க‌விதையின் உண‌ர்வுநிலையை ஒப்பீடு செய்ய‌லாம். தலைகீழாய் விரியும் காளானாய்க் இங்கே விஞ்ஞானம் பேசுகின்றது. விழிக்குள் காணும் காட்சி த‌லைகீழாக‌ தான் ப‌தியும் அதை சொல்வ‌தாக‌வும் அல்ல‌து இந்த‌ வ‌ரிக‌ளை நீ வ‌ரும் வேளை என் த‌லைகீழ் விச‌ய‌ங்க‌ள் பெரும் பிர‌ச்ச‌னைக‌ள் யாவும் நேராகி சென்றுவிடுகின்ற‌ன‌ என்று சொல்வ‌தாக‌வும் எடுத்துக் கொள்ள‌லாம். நீண்ட நாளாக்கு பின் வரும் தலைவனுக்கு காணும் இருக்கும் கண்களில் ஏக்கம் கவிதையில் சொல்லப்பட்டிருக்கின்றது.

உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி V


தொட‌ரும்...

2 comments:

Unknown said...

உங்கள் பத்தியை வாசிக்கும் பொழுது பல செறிவுமிக்க வார்த்தைகளை கிரகித்து கொண்டேன் . நன்றி
தேவராஜ் விட்டலன்
மத்திய பிரதேசம்

உயிரோடை said...

வாங்க விட்டலன். மிக்க நன்றி.