ஒரு பெண் தன் பருவத்தின் விழைவை எவரிடமும் பகிர முடியாத சிக்கலான சூழலில் தான் நம் சமூகம் இருக்கின்றது. பெண்ணுக்கே அமைந்த நாணம் தன் தாயிடம் கூட தன் பருவத்தின் உடல் மாற்றங்களையும், அதன் விழைவையும் பகிர முடியாமல் வைத்திருக்கின்றது.
பெண்ணின் காமம் பொதுவாக தவறாகவே சமூகம் பார்க்கின்றது. இத்தகைய சிக்கலான உணர்வின் போராட்டம் சங்க காலம் முதல் இந்த காலம் வரை தொடர்ந்து வருகின்றது.
கைந்நிலை (பாடல் 59) உணர்வுநிலை நாணமும் (கூறல்) துணிவின்மையும்
தாழை குருகு ஈனும் தண்ணம் துறைவனை-
மாழை மான் நோக்கின் மடமொழி! - 'நூழை
நுழையும் மட மகன் யார்கொல்?' என்று, அன்னை
புழையும் அடைத்தாள், கதவு.
வெகுளித்தனமான பேச்சினையும் மருளும் மான் போல பார்வையும் கொண்ட தலைவி, தாழை மடல்களும் நாரையும் நிறைந்த நீர் நிலை கொண்ட நெய்தல் நிலத்தின் குளுமையை தன்னுடன் கொண்ட தலைவனை, "புழக்கடை கதவின் வழி நுழைந்து செல்லும் அறிவற்றவன் யார்?" என்று புழக்கடை கதவினை அடைத்துவிட்டாள் நம் அன்னை என்றாள் தோழி.
களவொழுக்கத்தில் திளைத்திருக்கும் தலைவிக்கு அவ்விசயம் அன்னைக்கும் தெரியவந்த காரணத்தால் விரைவாக உன் தலைவனிடம் பேசி மணம் புரிவாயாக என்று குறிப்பால் உணர்த்தினாள் என்றும் இதை எடுத்துக்கொள்ளலாம்.
களவொழுக்கம் சரியா தவறா என்ற பிரச்சனையை புறந்தள்ளி வைத்துவிட்டு பார்ப்போமேயானால், நான் இன்னாரை என் வாழ்க்கை துணையென ஏற்க பிரியப்பட்டேன் என்பதை கூட சொல்ல தயக்கம் கொள்ளும் தலைவிக்கு அவள் நாணம் அல்லது இன்னபிற காரணமோ இருக்கலாம். அன்னைக்கு தன்னை தன் உள்ளம் உணர்த்தி விரும்பியவனை மணந்து கொள்ளுமாரு தோழி அறிவுருத்துவதே இதற்கு சாட்சி.
இதையே சக்தி ஜோதியின் நிலம் புகும் சொற்கள் என்ற தொகுப்பில் அறியாமை என்ற கவிதையில் சிறுவயதிலிருந்து தாயின் விரல் பற்றி நடந்த நான், இப்போது அவள் அறிந்த இவ்வுடலை அவளிடமிருந்து மறைக்கும் பருவம் அடைந்து விட்டேன் என்று வாதையில் வருந்தும் இவர் அன்பான தாயிடம் எப்படி சொல்வேன்
உன் மேல் கொண்ட
காதலையும்
என்
பருவம்
உன்னை நாடுவதையும்
என்று வினவும் இவர் மனநிலையும் உணர்வும் சங்க தலைவிக்கு சற்றும் மாறுப்பட்டதில்லை. இங்கும் நாணமே தடையாக இருக்கின்றது. ஆனால் உள்ளம் அவனையே மேலும் மேலும் உருகி உருகி நினைத்து வாடுகின்றது.
வெளிப்படையாக தனக்கு திருமணம் செய்ய சொல்லி எந்த காலத்திலும் பெண் தன் பெற்றோரிடம் கூட கேட்க இயலாது. இந்த சிக்கலையே சங்கத்தலைவியும் சக்திஜோதியும் பகிர்ந்திருக்கின்றார்கள்.
உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - பகுதி IV
தொடரும்...
7 comments:
நல்லதொரு தொடர் இது லாவண்யா.
தொடருங்கள்.
ரொம்ப அழகா எழுதிருக்கீங்க லாவண்யா .அந்த காலமோ இந்த காலமோ பெண்கள் நிலை எப்போதும் ஒரே மாதிரி தான் .
சங்க காலப் பெண்களுக்கு,தோழிகள் இருந்தார்கள், எதையும் பகிர்ந்து கொள்ள இந்த காலப் பெண்களுக்கும் தோழிகள் இருக்கிறார்கள். அவ்வளவு அனுக்கம் இருக்கிறதா என்பதே நம் கேள்வி!!!
எனது ப்ளோகின் follower பகுதியை முதலாவதாக தொடக்கி வைத்த லாவண்யா அவர்களுக்கு நன்றி.இப்போது ஐம்பது பேரை எட்டி இருக்கிறது
அன்புடன்
விஜய் மகேந்திரன்..
இந்த பகுதியில் உங்கள் எளிமையான நடை எனக்கு மிக பிடித்திருக்கிறது.
வாங்க செல்வராஜ் ஜெகதீசன். மிக்க நன்றி.
வாங்க பத்மா. மிக்க நன்றி.
வாங்க ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி. மிக்க நன்றி.
வாங்க சுகி. மிக்க நன்றி.
dear lavanya
you are doing a dood work for tamil students.
Post a Comment