Thursday, September 24, 2009

உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி II



சங்கப்பாடலில் இருக்கும் சிக்கலே அதை நாம் உள்வாங்கி கொள்ளும் விதமே. இந்த சிக்கலுக்கு பெரும் சவாலாக இருக்கின்றது இதன் மொழி. மொழி நமக்கு புரியாதவரை இப்பாடல்களுக்கு எழுதப்பட்டிக்கும் உரையையே நாம் பெரிதும் நம்ப வேண்டி இருக்கின்றது. உரை எழுதுவரின் புரிதலும், அவர் கற்பனைக்கு எட்டும் விசயங்கள் சங்கபாடல் களத்தில் எல்லையை வகுக்கின்றது. எனக்கும் அப்படி சில சங்கப்பாடல்கள் சிக்கலை வகுத்தன. அப்பாடலின் வரும் சில வார்த்தைக்கு வேறு அர்த்தம் எடுத்தால் முழுப்பாடலின் பொருளே மாறிவிடுகின்றது. அப்படி பொருள் மாறும் கூறப்பட்ட உணர்வு நிலையும் மாறிவிடுகின்றது. அப்படிப்பட்ட உணர்வு நிலையையும் முடிந்த அளவில் பொருத்தி சில கவிதைகளை எடுத்துக் காட்டியுள்ளேன்.


கைந்நிலை (பாட‌ல் 2) - உணர்வு நிலை தனிமையில் உடல் வாதை


வெந்த புனத்துக்கு வாசம் உடைத்தாகச்
சந்தனம் ஏந்தி, அருவி கொணர்ந்திடூஉம்
வஞ்ச மலை நாடன் வாரான்கொல்? - தோழி! - என்
நெஞ்சம் நடுங்கி வரும்

பகுதி ஒன்றில் சொல்லப்பட்ட கைந்நிலை பாடலின் வரும் வெந்தபுனம் என்ற வார்த்தையை வெந்த + புனம் என்று பிரிந்து பார்த்தால் அப்பாடலின் பொருளே முற்றாக மாற வாய்ப்பிருக்கின்றது வெந்த என்பது முதிர்ந்த அல்லது அடர்ந்த என்ற பொருளாக நாம் உட்கொள்ளவும் இயலும். அப்படிப்பட்ட பொருள் எடுக்கும் போது இந்தப்பாடலின் முழு பொருளும் உணர்வு நிலையும் மாறிவிடுகின்றது.


அடர்ந்து முதிர்ந்த காட்டில் மேலும் சுகந்தமாக்க சந்தன மணத்தை சுமந்து வருக்கின்றது அருவி. அப்படிப்பட்ட அடர்ந்த காட்டினை சார்ந்தவர் நம் தலைவன், அவர் வரும் வழியில் காட்டின் அடர்ந்த தன்மையாலும், அருவிக்கு நீர் வரும் மிருகங்களாலும் பல ஆபத்துகள் இருக்கலாம் அதை நினைத்தும் அதனால் அவன் வாராது போய் விடுவோனே என்று எனக்கு நடுக்கமாக இருக்கின்றது என்று தோழியிடம் கூறுகின்றாள்.


இப்படி தலைவி புலம்ப காரணம் தலைவன் மேல் கொண்ட காதலும், காதலால் தனிமையுற்ற தன் உடல் படுத்தும் பாடேயன்றி வேறென்ன காரணமாக இருக்க இயலும்.


இப்படிப்பட்ட பிரிந்த அல்லது இழந்த காதலை பற்றி அழகான பல படிமங்களை சூரியன் தனித்தலையும் பகல் கவிதை தொகுப்பில் பல இடங்களில் தொகுத்து கொடுத்திருக்கின்றார் தமிழ் ந‌தி. ஒரு நாளும் இரண்டு அறைகளும் என்ற கவிதையில் (கவிதையின் கரு வேறு ஆனால் இந்த சங்கப்பாடலுக்கு உகந்த வரிகள் என்பதால் இந்த வரிகளை இங்கே குறிப்பிடுகின்றேன்)

“நெடுநாளாய்த் தீண்டப்படாத மார்புகள்
கண்ணீர்த் துளிகளெனத் ததும்புகின்றன”


பிரிந்த தலைவனை நினைத்து புலம்பும் தலைவி தன் உடல் வாதையை இதை விட அளவாக அழகாக சொல்ல இயலுமா என்று வியக்கிறேன். இந்த தனிமையும் தவிப்பும் இன்னும் பல இடங்களில் பதியப்பட்டிருக்கின்றது. அதே தொகுதியில் வண்ணங்களாலான நீர்க்குமிழி என்ற கவிதையில்


"பூட்டப்பட்ட அறையினுள்
விலங்கென அலைகிறது வேட்கை"

தொட‌ரும்...


குறிப்பு: இந்த‌ தொட‌ர் க‌ட்டுரையின் சில‌ ப‌குதிக‌ள் அக‌நாழிகை மார்ச் இத‌ழில் கைந்நிலை சில‌ பாட‌ல்க‌ளும் க‌னிமொழியின் அக‌த்திணையும் என்ற‌ த‌லைப்பில் க‌ட்டுரையாக‌ வெளி வ‌ந்திருக்கின்ற‌து. ச‌ங்க‌ப்பாட‌ல்க‌ளும் த‌ற்கால‌ பெண்க‌விஞ‌ர்க‌ளும் என்ற இந்த‌ ஆக்க‌ம் அக்க‌ட்டுரையின் நீட்சியே. வெளியிட்ட அக‌நாழிகைக்கு என் சிர‌ம் தாழ்ந்த‌ வ‌ந்த‌ன‌ங்க‌ளும் ந‌ன்றியும்

உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி I

உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி I


ச‌ங்க‌பாட‌ல்க‌ளில் ஏனோ பெரும் ஈர்ப்பென‌க்கு. ஏன் என்று சொல்ல‌வியலாத‌ ஆவ‌ல். அவ்வ‌ப்போது சில‌ க‌விதைக‌ளை வாசிப்ப‌தும் அது சொல்ல‌ வ‌ரும் ஆழ்க‌ருத்துக்க‌ளை உள்வாங்கி அசைபோடுவ‌தும் பின் அப்ப‌டியே விட்டு விடுவ‌துமாக‌ ந‌க‌ர்ந்த‌ப‌டி இருந்த‌து என் ப‌ய‌ண‌ம்.

ச‌மீப‌ கால‌மாக‌ சில‌ பெண்க‌விஞ‌ர்க‌ளின் தொகுப்பை தொட‌ர்ந்து வாசிக்கும் போது ஆழ்ம‌ன‌தில் புதைந்து கிட‌க்கும் சில‌ ச‌ங்க‌ப்பாட‌ல்க‌ளில் சொல்ல‌ப‌டும் ஒரு சில‌ விச‌ய‌ங்க‌ள் அப்ப‌டியே ஒரு மென் அலை போல‌ க‌ண் முன் வ‌ந்து போகும்.

பசி, தூக்கம், காமம் என்ற அடிப்படை உணர்வு நிலை சங்ககாலம் முதல் இந்த காலம் வரை தொடர்வதே. உணர்வுகள் எதுவும் புதிதில்லை எல்லாமே எப்போதும் உணரப்பட்டதாகவே இருக்கின்றன். ஆனால் ஒவ்வொருவரும் அதை வெளிப்படுத்தும் விதமே வேறாகும்.

ப‌தினென்கீழ்க‌ண‌க்கு நூல்களில் கைந்நிலை, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது மேலும் குறுந்தொகை இவற்றில் இருந்து கவர்ந்த சில பாடல்களில் உணர்வு நிலை அப்படியே ஒத்தும் அல்லது அதே உணர்வை வேறு வடிவத்திலும் படம் பிடித்திருக்கும் தற்கால பெண்கவிஞர்களில் சில கவிதைகளையும் தொகுத்து வழங்க நினைத்திருந்தேன்.

இதை ஒரே க‌ட்டுரையாக்காம‌ல் ஒரு தொட‌ராக‌ வ‌ழ‌ங்க‌ நினைத்திருக்கிறேன்.
என்னை வாசிக்கும் அன்ப‌ர்க‌ள் தொட‌ர்ந்து என‌க்கு அளிக்கும் ஊக்க‌த்திற்கு என்னுடைய‌ ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றிக‌ள். அவ‌ர்க‌ள் இதையும் வாசிப்பார்க‌ள் என்ற‌ ந‌ம்பிக்கையோடு...

கைந்நிலை (பாட‌ல் 2) - உண‌ர்வுநிலை ந‌ம்பிக்கையின்மை

வெந்த புனத்துக்கு வாசம் உடைத்தாகச்
சந்தனம் ஏந்தி, அருவி கொணர்ந்திடூஉம்
வஞ்ச மலை நாடன் வாரான்கொல்? - தோழி! - என்
நெஞ்சம் நடுங்கி வரும்

வெந்த‌ காட்டிற்கு அத‌ன் வாச‌ம் மாறி சுக‌ந்த‌ம் உண்டாகும் வண்ணம் ச‌ந்த‌ன‌ம் ஏந்தி வ‌ரும் அருவியை கொண்ட‌ ம‌லைக‌ளை உடைய‌ த‌லைவ‌ன் வ‌ருவானோ அல்ல‌து ராம‌ல் போவானோ என்று என் நெஞ்ச‌ம் ந‌டுக்குகின்ற‌து என் தோழி என்ப‌தே இந்த‌ பாடலின் பொருள்.

இந்த‌ வெந்த‌ காடு என்ப‌து ஒரு ப‌டிம‌ம். த‌லைவ‌ன் இன்னும் தலைவியை ம‌ண‌க்க‌வில்லை அவ‌ளோடு காத‌ல் கொண்டு அல்லது அவ‌ளை காத‌ல் கொள்ள‌ செய்து பிரிந்து போய் விட்டான் என்பதையும் அவ‌ன் பிரிந்த‌ துய‌ரையே அப்ப‌டி சொல்லி இருக்கின்றாள் என்ப‌தே இந்த‌ பாட‌லின் சிற‌ப்பு. வெந்த‌ காட்டிற்கு சந்த‌ன‌மிட்டு அதன் நாற்ற‌த்தை போக்க‌ இய‌லுமா என்ன‌? காடு வெந்து கிடந்தாலென்ன‌ த‌ன் பாட்டுக்கு ச‌ந்த‌ன‌ ம‌ண‌ம் ப‌ர‌ப்பி ஓடிக் கொண்டிருக்கின்ற‌து அருவி. அது வாச‌ம் ப‌ர‌ப்புவதை போன்ற‌ ஒரு மாயை ந‌ம்பி இருப்ப‌தை போல‌வே தானும் த‌லைவ‌ன் வருவானோ என்று ந‌டுக்க‌முற்று இருப்ப‌தாக‌ குறிப்பாக‌ உணர்த்துகின்றாள்.

அவ‌ள் ப‌ச‌லையை ம‌றைத்து, திரும‌ண‌ம் த‌விர்த்து த‌லைவ‌னும் வருவானோ மாட்டானோ என்று ந‌ம்பிக்கை த‌ள‌ர்ந்து ந‌டுக்க‌முறுவ‌தாக‌ கூறும் இவ‌ள் ந‌ம்பிக்கையின்மையை ஒத்து இருக்கின்ற‌து கனிமொழியின் சிக‌ர‌ங்க‌ளில் உறைகின்ற‌து கால‌ம் என்ற தொகுதியில் இருக்கும் வில‌க‌ல் என்ற‌ க‌விதை. க‌விதையின் க‌ரு முற்றாக‌ வேறு ஆனால் இர‌ண்டுக்கும் ஆதார‌ம் இழையோடும் ந‌ம்பிக்கையின்மை

எப்ப‌டிச் சொல்வாய் என்று ஆர‌ம்பிக்கும் இக்க‌விதையில் இவ‌ரின் பிரிய‌த்துக்குரிய‌ ஒருவ‌ரை சார்ந்த விச‌ய‌மொன்று இவ‌ருக்கு தெரிந்து விட்ட‌து அந்த‌ விச‌ய‌த்தை அவ‌ர் கூறுவாரோ அல்ல‌து சொல்லாம‌லே விடுவாரோ என்ற‌ ந‌டுக்க‌ம் க‌விதை முழுவ‌தும் பரவி இருக்கின்ற‌து. அந்த‌ பிரிய‌மான‌ ந‌ப‌ருக்கு அது ச‌ந்தோச‌ம் தரும் விச‌ய‌ம் தான் இனிப்போடு வ‌ருவாயோ என்று கேள்வியூடே இதை ந‌ம‌க்கு உண‌ர்த்துகின்றார் க‌னிமொழி. ஆனால் அந்த‌ விசயத்தை இவ‌ரிட‌ம் சொல்ல‌ த‌யங்கும் அல்ல்து சொல்லி விட்டு த‌ன்னுடைய‌ உற‌வை முறித்துக் கொள்வாரோ என்ற‌ ப‌ய‌த்தை என் க‌ண்க‌ளை த‌விர்த்து கூறுவாயோ என்று கேட்டு ந‌ம் ம‌ன‌த்தையும் ஆழ‌ பாதிக்கின்றார். இவ‌ருக்கு மிக‌ நெருக்க‌மான‌வ‌ர் என்ப‌தையும் விய‌ர்வைத் துளிக‌ள் காய‌த்துவ‌ங்கும் கிற‌ங்கிய‌ த‌ருண‌த்திலா என்று கேட்டு விள‌க்குகின்றர். இவ்வ‌ள‌வு நெருக்கம் ஆயினும் ஏதோ கார‌ணத்தால் சொல்லாம‌ல் கூட‌ பிரிந்து விடுவாயோ என்ற‌ வ‌லியை அழுந்த‌ கூறி இருக்கின்றார்.

எப்போது சொல்வாய்
என்று காத்திருக்கின்றேன்
ந‌ல்லெண்ண‌ங்க‌ளையும்
புன்ன‌கையையும்
ஒரு நேர்க்கோட்டில் குவித்து
உன் க‌ண்க‌ளைச் ச‌ந்தித்து
உறுதியான‌ கைகுலுக்க‌லுட‌ன்
வாழ்த்துச் சொல்ல‌...

வழியினுடேயும் உன்னை வாழ்த்த‌வே இருக்கும் என் அன்பை புரிந்து கொள் என்று கூறி த‌விக்கும் இந்த‌ க‌விஞ‌ரின் ம‌ன‌த்தில் இருக்கும் ந‌ம்பிக்கையின்மை ஆறுத‌ல் நாடி த‌விக்கும் இவ‌ர‌து க‌வி வ‌ரிக‌ள் ம‌ன‌திலிருந்து நீங்க‌ நீண்ட‌ நாட்க‌ள் ஆன‌து.

தொட‌ரும்....

உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி IV



கைந்நிலை (பாட‌ல் 23) உண‌ர்வு நிலை ந‌ம்பிக்கையின் ஊற்று

சிலை ஒலி வெங் கணையர், சிந்தியா நெஞ்சின்
கொலை புரி வில்லொடு கூற்றுப்போல், ஓடும்
இலை ஒலி வெங் கானத்து, இப் பருவம் சென்றார்
தொலைவு இலர்கொல் - தோழி! - நமர்?


ஒலி எழுப்பும் அம்பேற்றிய‌ வில்லும் கொடுங்கோப‌மும் கொண்ட‌, எதை கொல்கின்றோம் என்ற‌ சிந்த‌னையோ இர‌க்க‌மோ இல்லாமல் கொல்வ‌தை ம‌ட்டுமே தொழிலாக‌ கொண்ட‌ ந‌ம‌ன் போன்ற‌ வேட‌ர்க‌ள் ஓடும் போது ச‌ருகான‌ இலைக‌ள் ஓசையெழுப்பும் மிகுந்த‌ வெப்ப‌முடைய‌ இந்த‌ கான‌த்தில் இந்த‌ வேனிற்ப‌ருவ‌த்தில் சென்ற‌ ந‌ம் த‌லைவ‌ன் ந‌ம்மை விட்டு நீங்கிய‌ சொன்ற‌ தொலைவை நினைத்து பாராம‌ல் இருக்க‌வா இய‌லும் சொல் தோழி.

இப்பாட‌லின் உட்பொருளாக‌ க‌ண்டால் தோழி த‌லைவ‌ன் மேல் கொண்டிருந்த‌ அதீத‌ காத‌ல் அவ‌ன் வ‌ழியில் அவ‌னுக்கு நேர‌ இருக்கும் துய‌ர‌ங்க‌ளை, அபாயங்க‌ளை எண்ணி அஞ்சி இருப்ப‌தாக‌ நினைக்க‌ தோன்றுகின்ற‌து. வேனிற் கால‌ம் சென்று இருக்கும் தலைவ‌னின் ப‌சி, தாக‌ம், கொலை செய்த‌ அஞ்சாத வேட‌ர் இவையல்ல‌ இப்பாட‌லில் கார‌ணி, இடையாற‌து பிரிவால் மௌனமாக‌ அர‌ற்றும் உட‌லை தான் ஓடும் இலை ஒலி வெங் கானத்து என்று கான‌த்தின் மேல் ஏற்றி விட்டு சொல்லி இருக்கின்றாள். என்னை போல‌ த‌லைவ‌னும் ஏக்க‌முற்று இருக்கின்றானோ என்ற‌ க‌வ‌லையும் வேறு சேர்ந்தே வாட்டுகின்றது அவ‌ளை. ச‌ர‌ ச‌ர‌க்கும் ச‌ருகை போலும் இவ‌ளுட‌ல், இவ‌ள் பிரிவை ஏதாவ‌து ஒரு கார‌ண‌த்தால் நினைவூட்டிய‌ப‌டியே இருக்கின்ற‌ர் உட‌னிருப்போர். பிரிவு தொலைவு த‌ன்னை த‌கிர்ப்ப‌து போல் த‌லைவ‌னைக்கும் த‌ன் நினைவினை ஏதாவ‌து ஊட்டிய‌ வண்ணிருக்கும் என்ற‌ ந‌ம்பிக்கை அவ‌ளுக்கு நிறைய‌ இருக்கின்ற‌து. இந்த‌ உண‌ர்வையே அகத்திணையில் மிச்ச‌ம் என்ற‌ க‌விதையில் கனிமொழி கூறி இருக்கின்றார்.


ந‌ட்போ காத‌லோ இர‌ண்டும் ம‌ற்ற‌ அதீத‌ பிரிய‌மோ ஏதோ ஒன்றால் பிணைந்த‌ இருவ‌ரை மென்திரை போல‌ ப‌டியும் சிறு இடைவெளி கால‌ப் பெருவெளியில் நீண்டு வ‌ள‌ர்ந்து இவ‌ரும் பிரிய‌ கார‌ண‌மாகி போகும் க‌தை அனைவ‌ரும் உண‌ர்ந்த‌தே. அப்ப‌டிப்ப‌ட்ட‌ இடைவெளியையும் பெரிவையும் பேசும் இக்க‌விதையில்

என்றேனும் ஒரு க‌ண‌ப்பொழுதில்
ந‌ம் க‌ன‌வுக‌ள் உர‌ச‌க்கூடு‌ம்
ந‌ம்பிக்கையில்
வீசியெறியாம‌ல் வைத்திருக்கின்றேன்
இவ்விருட்ச‌த்தின் விதையை

என்ன‌ ஒரு ஆதர்ச‌மான‌ ந‌ம்பிக்கை த‌ன் காத‌ல் நினைவுக‌ள் மீது. அந்த‌ நினைவுக‌ள் உனை என்னோடு சேர்க்கும் மீண்டும் ஒரு விருட்ச‌த்தை உருவாக்கும் முன்பிழுந்திருந்த‌ அவ்விருட்ச‌த்தின் விதை என்ற‌ க‌னிமொழிக்கு ச‌ங்க‌கால‌ த‌லைவியின் ம‌ன‌நிலை பெருதும் பொருத்த‌மாக‌வே இருக்கின்ற‌து.

இதே பாடலில் தலைவி தொலைவு இலர்கொல் என்று கூறுமிடத்தை மிகைப‌டுத்தி பார்க்கும் போது அவ‌ள் சிறு கவலையும் கொண்டவாளாகவும் எனக்கு தெரிகின்றாள், தான் தலைவனை பிரிந்து வாடுகின்றாள் தன் காதலை காமத்தால் தவிக்கும் உடலை மறைக்க இயலாது தவிக்கிறாள். இந்த‌ உண‌ர்வுநிலை மேல் சொல்ல‌ப்ப‌ட்ட‌திலிருந்து ச‌ற்றே மாறுபட்டதாக‌ இருந்தாலும், இதே உண‌ர்வின் நிலையை பச்சை தேவதை தொகுப்பில் சல்மாவும் கூறி இருக்கின்றார்.

பாதி இரவில் ஒரு மிருகமென
என்னை அடித்து வீழ்த்திக்கொண்டிருக்கிறது
உனக்கான இந்தக் காமம்.

தன்னருக்கில் இல்லாத தலைவனை அவன் நினைவில் வாடும் தலைவியின் மனநிலையை ஒட்டி மிக அருகில் தான் இருக்கின்றது சல்மாவின் நீங்குதலின்றி கவிதையும்.

உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி III

உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி VI


குறுந்தொகை (பாடல் 6) உண‌ர்வுநிலை வ‌ருத்த‌மும் கூற‌ல் இயலாமையும் ஏக்க‌மும் எதிர்நோக்க‌லும்

கழனி மாஅத்து விளைந்துகு தீங்கனி
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்மில் பெருமொழி கூறித் தம்மில்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும்தன் புதல்வன் தாய்க்கே


இந்தப் பாடல் ஒரு பரத்தை கூறுவது போல இருக்கின்றது. என் தலைவன் மகனின் தாய் அவனை வீட்டில் கண்ணாடி பிம்பம் எப்படி தன் முன் நின்பவரின் ஆட்டத்தை அப்படியே பிரதிபலிக்குமோ அப்படியே ஆட்டி வைப்பவளாம். என் தலைவன் அப்படிப்பட்ட இடத்திலிருந்து அவன் தானே வந்தான். மாமரத்தில் முதிர்ந்து உதிர்ந்த கனியானது வயலில் இருக்கும் வாளை மீன்கள் கவ்வி செல்வது போல தான் இதுவும் இதிலென்ன தவறு என்கிறாள்.


இந்த பாடலில் ஆடிப்பாவை என்பது தான் சிறப்பான திருப்புமுனையான வார்த்தை. ஆடிப்பாவை என்பது நிலைக்கண்ணாடியை படிமமாக கொண்ட விசயம். நிலைக்கண்ணாடி என்பது நம்மை மறைக்காமல் பிரதிபலிக்கும் ஒன்று. நிறைகளை குறைகளையும் சேர்த்தே ந‌ம்மை காட்டும். அப்படிப்பட்ட நிலைக்கண்ணாடியை தனது கவிதையின் அருமையாதொரு படிமமாக உபயோகித்து இருக்கின்றார். ச‌ல்மாவின் பச்சை தேவதை கவிதைத் தொகுதியில் நீக்கமுடியாத வரிகள் என்ற கவிதையில்

நீ அருகிருந்த வேளை
நிலைக்கண்ணாடி பிம்பமென
எப்படியோ வந்துவிட்டது
சில வருத்தங்களும் வலிகளும்

இவ்வ‌ரிக‌ளில் த‌தும்பும் வ‌ரிக‌ளின் வேத‌னை உற்று நோக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌து. மிகுந்த‌ துய‌ர‌மும் வேத‌னையும் வெளிக்காட்டிக்க‌வியலாத‌ அல்ல‌து காட்டிக் கொடுக்க‌ விரும்பாத‌ ஒரு உயிரின் ம‌ருக‌லும் இதில் த‌தும்பி வ‌ழிகின்ற‌ன‌. என்னதான் நான்கு சுவருக்குள் ந‌ட‌க்கும் அதிகார‌ங்க‌ளும் அடுக்கு ஆளுமுறைக‌ளுமாயினும் பெண்ணின் வருத்தங்களையும் வலிகளையும் அவ்வீட்டு நிலைக்கண்ணாடி அறியுமன்றோ?

இந்த பாடலில் மாற்று பொருளாக ஆடிப்பாவையை ஆடும் விழிப் பாவைகள் என்றும் கொள்ளலாம். அப்படி பொருள் கொள்ளும் போது இந்த பாடல் தலைவியின் கோணத்தில் சொல்லப்பட்டதாக பொருள் கொள்ளலாம். முதிர்ந்த மாங்கனியை கழனியில் வாளை மீன்கள் கவர்வதை போல பரத்தை உன்னை கவர்ந்து சென்று விட்டால் ஆயினும் என்றேனும் நீ வாருவாய் என உன் புதல்வனின் தாயாக விழிப்பாவைகள் இடையறாது ஆடிய வண்ணம் காத்திருக்கின்றேன்.

தேன்மொழி தாஸ் ஒளியறியாக் காட்டுக்குள் என்ற தன் தொகுப்பில் ஒரு கவிதையில்

எப்போதாவது உனது வருகை
கண்களுக்குள் தலைகீழாய் விரியும் காளானாய்க்
கருவிழி அசைய
கதவு திறப்பேன்.

க‌ருவிழி அசைய‌ என்ப‌தை ஆடிப்பாவை என்ப‌தோடு ஒப்பிட்டு, த‌லைம‌க‌ன் வ‌ருகைக்கு ஏங்கி காத்திருக்கும் பெண் ம‌யிலென‌ இந்த‌ க‌விதையின் உண‌ர்வுநிலையை ஒப்பீடு செய்ய‌லாம். தலைகீழாய் விரியும் காளானாய்க் இங்கே விஞ்ஞானம் பேசுகின்றது. விழிக்குள் காணும் காட்சி த‌லைகீழாக‌ தான் ப‌தியும் அதை சொல்வ‌தாக‌வும் அல்ல‌து இந்த‌ வ‌ரிக‌ளை நீ வ‌ரும் வேளை என் த‌லைகீழ் விச‌ய‌ங்க‌ள் பெரும் பிர‌ச்ச‌னைக‌ள் யாவும் நேராகி சென்றுவிடுகின்ற‌ன‌ என்று சொல்வ‌தாக‌வும் எடுத்துக் கொள்ள‌லாம். நீண்ட நாளாக்கு பின் வரும் தலைவனுக்கு காணும் இருக்கும் கண்களில் ஏக்கம் கவிதையில் சொல்லப்பட்டிருக்கின்றது.

உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி V


தொட‌ரும்...

உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி V



ஒரு பெண் த‌ன் ப‌ருவ‌த்தின் விழைவை எவ‌ரிட‌மும் ப‌கிர‌ முடியாத‌ சிக்க‌லான‌ சூழ‌லில் தான் ந‌ம் ச‌மூக‌ம் இருக்கின்ற‌து. பெண்ணுக்கே அமைந்த‌ நாண‌ம் த‌ன் தாயிட‌ம் கூட‌ த‌ன் ப‌ருவ‌த்தின் உட‌ல் மாற்ற‌ங்க‌ளையும், அத‌ன் விழைவையும் ப‌கிர‌ முடியாம‌ல் வைத்திருக்கின்ற‌து.

பெண்ணின் காம‌ம் பொதுவாக தவறாகவே சமூகம் பார்க்கின்றது. இத்த‌கைய‌ சிக்க‌லான‌ உண‌ர்வின் போராட்டம் ச‌ங்க கால‌ம் முத‌ல் இந்த‌ கால‌ம் வ‌ரை தொட‌ர்ந்து வ‌ருகின்ற‌து.

கைந்நிலை (பாட‌ல் 59) உண‌ர்வுநிலை நாண‌மும் (கூற‌ல்) துணிவின்மையும்

தாழை குருகு ஈனும் தண்ணம் துறைவனை-
மாழை மான் நோக்கின் மடமொழி! - 'நூழை
நுழையும் மட மகன் யார்கொல்?' என்று, அன்னை
புழையும் அடைத்தாள், கதவு.

வெகுளித்த‌ன‌மான‌ பேச்சினையும் ம‌ருளும் மான் போல‌ பார்வையும் கொண்ட‌ த‌லைவி, தாழை ம‌ட‌ல்க‌ளும் நாரையும் நிறைந்த‌ நீர் நிலை கொண்ட‌ நெய்த‌ல் நில‌த்தின் குளுமையை தன்னுட‌ன் கொண்ட‌ த‌லைவ‌னை, "புழ‌க்க‌டை க‌த‌வின் வ‌ழி நுழைந்து செல்லும் அறிவ‌ற்ற‌வ‌ன் யார்?" என்று புழ‌க்க‌டை கதவினை அடைத்துவிட்டாள் ந‌ம் அன்னை என்றாள் தோழி.

க‌ள‌வொழுக்க‌த்தில் திளைத்திருக்கும் த‌லைவிக்கு அவ்விச‌ய‌ம் அன்னைக்கும் தெரிய‌வ‌ந்த‌ கார‌ண‌த்தால் விரைவாக‌ உன் தலைவனிட‌ம் பேசி ம‌ண‌ம் புரிவாயாக‌ என்று குறிப்பால் உணர்த்தினாள் என்றும் இதை எடுத்துக்கொள்ள‌லாம்.

களவொழுக்கம் சரியா தவறா என்ற பிரச்சனையை புறந்தள்ளி வைத்துவிட்டு பார்ப்போமேயானால், நான் இன்னாரை என் வாழ்க்கை துணையென ஏற்க பிரியப்பட்டேன் என்பதை கூட சொல்ல தயக்கம் கொள்ளும் தலைவிக்கு அவள் நாணம் அல்லது இன்னபிற காரணமோ இருக்கலாம். அன்னைக்கு தன்னை தன் உள்ளம் உணர்த்தி விரும்பியவனை மணந்து கொள்ளுமாரு தோழி அறிவுருத்துவதே இதற்கு சாட்சி.

இதையே சக்தி ஜோதியின் நிலம் புகும் சொற்கள் என்ற தொகுப்பில் அறியாமை என்ற கவிதையில் சிறுவயதிலிருந்து தாயின் விரல் பற்றி நடந்த நான், இப்போது அவள் அறிந்த இவ்வுடலை அவளிடமிருந்து மறைக்கும் பருவம் அடைந்து விட்டேன் என்று வாதையில் வருந்தும் இவர் அன்பான தாயிடம் எப்படி சொல்வேன்

உன் மேல் கொண்ட
காதலையும்
என்
பருவம்
உன்னை நாடுவதையும்

என்று வினவும் இவர் மனநிலையும் உணர்வும் சங்க தலைவிக்கு சற்றும் மாறுப்பட்டதில்லை. இங்கும் நாணமே தடையாக இருக்கின்றது. ஆனால் உள்ளம் அவனையே மேலும் மேலும் உருகி உருகி நினைத்து வாடுகின்றது.

வெளிப்படையாக தனக்கு திருமணம் செய்ய சொல்லி எந்த காலத்திலும் பெண் தன் பெற்றோரிடம் கூட கேட்க இயலாது. இந்த சிக்கலையே சங்கத்தலைவியும் சக்திஜோதியும் பகிர்ந்திருக்கின்றார்கள்.

உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி IV

தொட‌ரும்...

உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி III



கைந்நிலை (பாடல் 26) - உணர்வு நிலை காட்சிப் பிழை போல மனப்பிறழ்ச்சி

இந்த‌ பாட‌லின் ஓரிரு வார்த்தை சிதைந்து போயிருக்கின்ற‌ன‌.

குருதி மலர்த் தோன்றி கூர் முகை ஈன,
.... .... சேவல் எனப் பிடவம் ஏறி,
பொரு தீ என வெருளும்; - பொன் நேர் நிறத்தாய்! -
அரிது, அவர் வாராவிடல்.

செந்காந்த‌ள் ம‌ல‌ர் க‌ண்ட‌ சேவ‌ல் த‌ன்னோடு ச‌ண்டையிடும் மற்றுமொரு சேவ‌ல் என்றெண்ணி பிட‌வ‌ம் கொடுமேலேறி நின்ற‌ சேவ‌ல் பின் அதை பொருந்தீ என்று அஞ்சி அங்கிருந்து அக‌ன்று சென்று விட்ட‌து. பொன்னை போல் மின்னும் நிற‌த்தை உடையவளே அவ‌ர் வாராம‌ல் போனால் ந‌ம் வாழ்வ‌து அரிதாகிவிடும்.

செந்நிற‌ காந்த‌ள் ம‌ல‌ர்க‌ள் க‌ண்ப‌தற்கு எரியும் நெருப்பென‌ இருக்கும், அதை தொலைவிருந்து க‌ண்ட‌ சேவ‌ல் தோற்ற‌ மயக்கத்தில் அது ஒரு சேவ‌லென்றும் பின் அதையே தெளிவாக‌ காணும் போது நெருப்பென்று அஞ்சுவ‌தாக‌ வ‌ரும் இந்த‌ பாட‌லில் உட்க‌ருத்தாக‌ த‌லைவ‌ன் மேல் த‌லைவி கொண்ட‌ அவ‌ந‌ம்பிக்கை நன்கு புல‌ப்ப‌டுகின்ற‌து, கான‌ல் நீரை காத‌லென்று எண்ணி ஏமார்ந்த‌ விச‌ய‌த்தை சூச‌க‌மாக‌ சொல்லி இருக்கின்றாள் த‌லைவி மேலும் அவ‌ன் திரும்பி வார‌விடில் அரிது என்று சொல்லுமிடத்தில் அவ‌ளுடைய‌ ம‌ன‌வ‌லியை வெளிப்ப‌டுத்தி இருக்கின்றாள். இந்த‌ பாட‌லை அக‌த்திணையின் மாறும் உன் முகம் என்ற‌ க‌விதையோடு ஒப்பிட‌லாம்.

மிக‌ அசாதார‌ண‌மான‌ மொழியில் காத‌ல் க‌ண‌வ‌னின் காத‌ல் மற்றும் க‌ல்யாண‌ம் அல்ல‌து அதை போன்ற‌தொரு பிணைக்கப்பட்ட‌ சூழ‌லின் போது நிக‌ழும் ஏமாற்ற‌ங்க‌ளை அழ‌காக‌ பேசியுள்ளார் இக்க‌விதையில். க‌விதை ஆர‌ம்பிக்கும் போது அவ‌ன் காத‌லின் க‌ட்டுண்டு கிட‌க்கும் த‌ன்னிலையை மென்மையாக‌ தெரிவித்துள்ளார். அத்த‌னை காத‌லும் ஆண்மைச் செருக்கும் வெற்றியின் வெறியும் என்னை த‌கிக்கின்ற‌ன‌ என்று சொல்லுமிடம் த‌ள‌ர்ந்து போகிறார்.

விளிம்புக‌ள் சிவ‌ந்த‌ விழிக‌ளின்
இருளில் த‌ட‌ம் தெரியாது த‌டுமாறுகிறேன்
நீ யாரென்று அறியாது

என்ற‌ வ‌ரிக‌ளில் க‌னிமொழியின் உயிர்வ‌லி உர‌க்க‌ ஒலிக்கின்ற‌து. நெரும்பை செந்காந்த‌ள் ம‌ல‌ரே நினைத்து ர‌சித்து நுக‌ர்ந்து பின் வெதும்பிய‌ நிலை புரிகின்ற‌து. இதையே தமிழ்நதியின் சூரிய‌ன் த‌னித்த‌லையும் ப‌க‌ல் தொகுதியில் பிள்ளைகள் தூங்கும் பகற்பொழுது என்ற கவிதையில்

படகேறி வந்தபோது பார்த்த கடல்
இளம்பச்சை என்றான்
பின் தயங்கி இரத்தம் என்றான்


என்ற வரிகளை படிக்கும் போது பதறுகிறது. அந்த அளவு வன்முறை வாட்டிய மனிதர்களுக்கு இயற்கை கூட வேறு வடிவமாக தெரிகின்றது. வேதனை தான்.

(தொடரும்...)

உணர்வு நிலை சங்கப்பாடல்களும் தற்கால பெண்கவிஞர்களும் - ப‌குதி II

Wednesday, June 24, 2009

அம்மாவுக்கு

"நலம் தானா நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா"

அட கொடுமையே இந்த பாட்டையுமா ரிமிக்ஸ் பண்ணீட்டாங்க. நல்லவேளை சிவாஜி, பத்மினி இரண்டு பேருமே போய் சேர்ந்துட்டாங்க. இல்லாட்டி இந்த பாட்டை பார்த்து ஹார்ட் அட்டாக் வந்திருக்கும் என்று தோன்றியது. அம்மா ஞாபகம் வந்தது. அம்மாவுக்கு நாதஸ்வரம் என்றால் ரொம்ப பிடிக்கும். சின்ன வயதில் கேட்கும் எல்லா நாதஸ்வர இசையும் ஒன்று போலத் தான் தெரியும் எனக்கு ஆனால் அம்மா அது என்ன பாடல் அது என்ன ராகம் எல்லாம் சொல்வார்கள். நகுமோமோ அவர்களுக்கு மிக பிடித்தமான பாடல். அம்மா ரொம்ப சார்ப். எந்த விசயம் என்றாலும் உடனடியாக கற்று கொள்வார்கள் அம்மாவிற்கு தெரியாத விசயமே கிடையாதோ என்று தோன்றும்.

தொலைபேசியில் அழைத்தேன். அம்மா ஹலோ சொல்லும் விதமே அழகாய் இருக்கும்.

"ஹலோஓஒ"

"ஹலோ அம்மா எப்படி இருக்கீங்க"

"நான் நல்லா இருக்கேன்ம்மா நீ எப்படி இருக்கே"

"நல்லா இருக்கேன்ம்மா சும்மா பேசலாம்ன்னு போன் பண்ணேன். உடம்பெல்லாம் நல்லா இருக்கா கால் வலி இருக்கா?"

"ம்ம் உடம்பெல்லாம் நல்லா இருக்கும்மா கால் வலி பரவாயில்லை அடுத்த வாரம் டாக்டரிடம் போகனும்"

"காலையில் என்ன சாப்பிட்டீங்க?"

"தட்டபயிரு துவையல் அரைச்சி சோறு பொங்கினேன் நீ என்ன செய்தே"

"நேத்து ரசம் இருந்துச்சி, அதோட வெண்டைக்காய் வறுத்து, கொடமுளக காயும் செய்து சாப்பாடு வைச்சி இருக்கேன்"

"கொடமுகளாவா நான் இதுவரை செய்தது இல்லை எப்படி செய்யறது?"

"ரொம்ப ஈசி தான்ம்மா பச்சைமிளகாய்,வெங்காயம்,தக்காளி எல்லாம் லைட்டா வதக்கிட்டு, கொடமிளகாயையும் வதக்கிட்டு உப்பு,சாப்பார் பொடி, மஞ்சள் பொடி எல்லாம் போட்டு வேக வைக்கணும் அவ்வளவு தான் 10 நிமிசத்துல செய்துடலாம்"

"சாப்பாட்டோட கலந்து சாப்பிடலாமா?"

"ம்ம் சாப்பாட்டோடயும் சாப்பிடலாம், சப்பாத்தியோடும் சாப்பிடலாம்"

"சரி செய்து பார்க்கறேன். வேறென்ன விசயம் சொல்லும்மா"

"வேறொன்னுமில்லம்மா உடம்பை பார்த்துக்கோங்க எதாவது விசயம்ன்னா போன் பண்ணுங்க"

"சரிம்மா வைக்கிறேன்."

எனக்கு பழைய நாட்கள் ஞாபகம் வந்தது. தினம் திட்டு விழும். காலையில இவ்வளவு நேரம் தூங்கற, ஒருவேலையும் உருப்படியா பண்ண தெரியலை. ஒருநாளாவது வந்து சமையல் செய்ய துப்பில்லை. எங்கே போய் என் பேரை கெடுக்க இருக்கியோ. என்ன வளர்ப்பு வளர்த்திருக்கான்னு என்னைதான்டி சொல்லுவாங்க.... இப்படி தினம் ஒரு முறையாவது அர்ச்சனை கிடைக்காத நாளே இருக்காது. இன்று சமையலில் டிப்ஸ் அவர்களுக்கே தருவதை நினைத்தால் சிரிப்பு தான் வருகின்றது. இன்று இருக்குமிடத்தில் எவ்வளவு மரியாதை எனக்கு. ஏகப்பட்ட நல்லபேர். அம்மா எல்லாம் நீங்கள் கற்று தந்தது தான் அம்மா. உங்கள் நல்ல குணத்தில் 10% தான் என்னிடம் உண்டு அதற்கே இவ்வளவு நல்ல பெயர் எனக்கு.

I LOVE YOU அம்மா. உங்களை போல உலகில் யாருமே இல்லைம்மா.